ண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி எல்&டி துறைமுகத்தை  2018 ஆண்டு ஜூனில் அதானி குழுமம் கையகப்படுத்தியது. 330 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இத்துறைமுகத்தை சுமார் 53 ஆயிரம் கோடி செலவில் 6200 ஏக்கர் பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யவும், தொழிற்பூங்கா அமைக்கவும் திட்டமிட்டுள்ளது அதானி குழுமம். இத்திட்டத்துக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்கு குறிப்பாணை கேட்டு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் 2018  நவம்பரில் துறைமுக நிர்வாகம் விண்ணப்பித்திருந்த நிலையில், சென்னை மாநகருக்கும், எண்ணூர் முதல் பழவேற்காடு ஏரி வரையிலான பகுதிகளுக்கும் சூழலியல் பேரழிவை உருவாக்கவல்ல இத்திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான குறிப்பாணையை சமீபத்தில் வழங்கியுள்ளது மோடி அரசு.

பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த பகுதியாகவும் பறவைகள் சரணாலயமாகவும் விளங்கும் பழவேற்காடு ஏரி, சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில்  அமைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்புநீர் ஏரியாக விளங்கும் இந்த ஏரி, 250 ச.கி.மீ முதல் 450 ச.கி.மீ வரையிலான பரப்பளவுடன், பழவேற்காடு முதல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் வரை பரவிக் கிடக்கிறது. இதில் தமிழகத்தின் கொசஸ்தலை, ஆரணி; ஆந்திராவின் சொர்ணமுகி, காளங்கி ஆகிய ஆறுகளும் பல ஓடைகளும் கலக்கின்றன. ஏரியும் வங்கக்கடலும் இணையும் முகத்துவாரப் பகுதியில் ஆறு மணிநேரத்துக்கு ஒருமுறை கடல்நீர் ஏரிக்கும், ஏரிநீர் கடலுக்கும் சுழற்சி முறையில் வந்து செல்கிறது. பழவேற்காடு முகத்துவாரப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபம் நடந்துள்ளது என்பதற்கு வரலாற்றுக் குறிப்புகள் சான்று பகர்கின்றன.

பழவேற்காடு ஏரியில் கலக்கும் கொசஸ்தலையாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியும் எண்ணூர் சதுப்புநிலப் பகுதியும் சுற்றுசூழல் நுண்தன்மை வாய்ந்தவையாக வரையறுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற இயற்கையான சேற்றுத்திட்டுகள் கடலையொட்டி அமைந்துள்ளன. இவை கடல் அரிப்பைத் தடுத்து, கடல் சீற்றத்தைத் தணிப்பதோடு பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் பெரிதும் துணைபுரிகின்றன.

நன்னீரும், உப்புநீரும் கலக்கும் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்திலும், எண்ணூர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் அரிய வகை சிங்க இறால்கள், பச்சைக்கல் நண்டுகள் உள்ளிட்ட 15 வகையான இறால் மற்றும் நண்டு இனங்களும், சிப்பிகளும், 50 வகையான மீன் இனங்களும் உயிர்வாழ்கின்றன. கடல் நீரோடு சேர்ந்து இறால்கள் ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்து பின் வெளியேறுவதும் காலங்காலமாக நடந்துவருகிறது. மேலும், 10 வகையான பாசிகள், 50- மேற்பட்ட நீர்ப்பறவை இனங்கள், பாம்புகள், சிறு கடல் ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக இப்பகுதியிலுள்ள மாங்குரோவ் காடுகள் திகழ்கின்றன.

பழவேற்காடு ஏரியைச் சுற்றியுள்ள 50- மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. எண்ணூர்  காட்டுப்பள்ளி சுற்றுவட்டாரத்திலுள்ள பல கிராம மக்களும் மீன்பிடித்தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், கைவினைஞர்கள், வியாபாரிகள் என பலதரப்பு மக்களின் வாழ்க்கையும் கொசஸ்தலை ஆற்றோடும், பழவேற்காடு ஏரியோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பழவேற்காடு பகுதி மீனவர்கள் நடத்திய பேரணி.

பல்லுயிர்ப் பெருக்கத்திற்கும் பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படையாக விளங்குகின்ற, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்ததொரு நுட்பமான இப்பகுதியில்தான் துறைமுக விரிவாக்கம் செய்ய திட்டமிடுகிறது அதானி குழுமம். ஏரியையும், கழிமுகத்தையும், கடலையுமே நம்பி காலங்காலமாக இப்பகுதியில் வசித்துவரும் மக்களின் கருத்தைக் கேட்காமல், குரலுக்கு செவிசாய்க்காமல், இத்திட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கான குறிப்பாணையை அரசு வழங்கியிருப்பது, மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவாக்கத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் 6200 ஏக்கரில் ஆற்று வடிநிலப்பகுதி, கரைக்கடல் பகுதிகள், தனியார் நிலங்கள் ஆகியவை அடங்கும். குறிப்பாக 7 கி.மீ நீளம் மற்றும் 1.5 கி.மீ அகலத்திற்கு, சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில், மணல் மற்றும் சேற்றுத் திட்டுக்கள் நிறைந்த கரைக்கடல் பகுதியைத் தூர்த்து மேடாக்குவது இத்திட்டத்தின் ஒருபகுதியாக உள்ளது. இதற்காக கடலில் இருந்து அகழ்ந்தெடுத்தும் பிற பகுதிகளில் இருந்தும் மணலைக் கொண்டுவந்து கொட்டி நிரப்புவர். தூர்த்து மேடாக்கப்பட்ட இப்பகுதியில் துறைமுகக் கட்டுமானப் பணிகள், அதற்கான மின் உற்பத்தி, பெட்ரோலிய, கனிம மற்றும் வேதிப் பொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளும், அதிநவீன குளிர்சாதன அமைப்புகளும் நிர்மாணிக்கப்பட இருக்கின்றன. சுனாமி போன்ற கடல்சீற்றங்களின் போது கரையோரப் பகுதிகளுக்கு அதிக சேதாரம் ஏற்படாமல் தடுத்துக் காத்து வருபவை கரைக்கடலில் இயற்கையாகவே உருவாகியிருக்கும் மணல்திட்டுகளும், சேற்றுத்திட்டுகளும்தான். சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களால் உருவான கடல் அரிப்பின் தாக்கத்தை இப்பகுதியில் தடுத்து நிறுத்தியதும் இத்திட்டுகள்தான். அவற்றை முற்றிலுமாக அழித்து இயற்கையின் நில அமைப்பையே மாற்றும் சூழலியல் பேரழிவைத்தான் விரிவாக்கத்தின் பெயரால் அதானி உருவாக்கவிருக்கிறார்.

அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராக பழவேற்காடு பகுதி மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த 2015 ஆண்டு சென்னையைப் பெருவெள்ளம் சூழ்ந்தபோது, ஒரு இலட்சம் கனஅடிக்கும் அதிகமான வெள்ளநீரைக் கடலில் கொண்டு சேர்த்தது கொசஸ்தலையாறு. இவ்வாற்றின் வடிநிலப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால், பெருமழைக் காலங்களில் ஆற்றின் நீரோட்டம் தடுக்கப்பட்டு வெள்ளநீர் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குள்ளும் மேய்ச்சல் நிலங்களுக்குள்ளும் புகுந்துவிடும். இதனால், வடசென்னையும், பொன்னேரி வரையிலான ஏராளமான கிராமங்களும் வெள்ளப்பெருக்கில் மூழ்கடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்ளும்.

எண்ணூர்  பழவேற்காடு சதுப்புநிலத்தின் மேற்குவெளிப்பகுதி 3,4 மாதங்கள் வரை மழைநீரை உள்வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளும் இயல்புடையது. இங்கிருந்து சென்னை மாநகருக்கு தினசரி பத்துகோடி லிட்டருக்கு மேல் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில், 6078 கோடி செலவில் பேரூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. பல ஆயிரம் கோடி செலவுசெய்து கடல்நீரை சுத்திகரிப்பதாக சொல்லும் அரசு, இயற்கையான நீராதாரமாக விளங்கும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளைப் பாதுக்காக்க வேண்டும் என்ற மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை. மாறாக அதானி, காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் சதுப்புநில ஆக்கிரமிப்புக்கு தாராளமாக அனுமதியளிக்கிறது. நன்னீர் சேமிப்புப்பகுதிகள் செயற்கையாகத் தூர்க்கப்படுவதன் காரணமாக நிலத்தடியில் கடல்நீர் ஊடுருவி, நிலத்தடிநீர் உவர்நீராக மாறும். இதனால் குடிநீர் ஆதாரங்கள் முற்றாகப் பயனற்றுப் போவதோடு, விவசாயமும் தரிசாகிப் போகும்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்படும் சதுப்பு நிலங்கள்.

கரைக்கடலைத் தூர்த்து மேடாக்குவதோடு, கடல் அலையைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவரையும் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் கட்டவிருக்கிறது அதானி துறைமுக நிர்வாகம். ஏற்கனவே சென்னைத் துறைமுகம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள அலைத் தடுப்புச்சுவர்கள், அலைகளின் இயற்கையான போக்கினைத் தடுக்கின்றன. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு, சாத்தான் குப்பம் போன்ற கடலோர பகுதிகளை கடல் விழுங்கிவிட்டதை நினைவுகூர்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். இப்போது வரவிருக்கும் அதானி துறைமுக விரிவாக்கம், கொசஸ்தலையாற்றின் குறுகிய கரையும், பழவேற்காடு ஏரியின் கரைப்பகுதியும் அரிக்கப்பட்டு கடலோடு இணைந்துவிடும் அபாயத்தைக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென போராடி வருகின்றனர்.

ஏற்கனவே, எண்ணூர் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும், பாதரசம், காட்மியம் உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் நிரம்பிய சாம்பல் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியே கொசஸ்தலையாற்றில் கலந்து ஆற்றின் ஆழத்தைக் குறைத்து சாம்பல் மேடுகளை உருவாக்கியிருக்கின்றன. இச்சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலையற்றிலும், அதன் வடிநிலப் பகுதிகளிலும் வாழ்ந்து பெருகிய இறால்களும் நண்டுகளும் மீன்களும் அழிந்தன. இவற்றை நம்பி வாழ்ந்த மீனவர், இருளர் மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள். அதானி துறைமுக விரிவாக்கமோ இப்பாதிப்புகளை பழவேற்காடு வரையிலும் நீட்டிக்கவிருக்கிறது. எத்தனை கோடிகள் கொடுத்தாலும் மீட்க முடியாத சதுப்புநிலங்களையும், கரைக்கடலையும், முகத்துவாரங்களையும், விவசாய நிலங்களையும், பல்லுயிர்ப் பெருக்கத்தையும் அழித்து அதானியின் சொத்தைப் பெருக்குவதையே நோக்கமாகக் கொண்ட இத்திட்டத்தை மத்திய –  மாநில அரசுகள் சத்தமின்றி அனுமதித்து வருகின்றன. இதன் பாதிப்புகளை நேரடியாக உணர்ந்திருக்கும் மீனவ மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

படிக்க:
ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்தியர்கள் பொறுப்புணர்வுடன் இருக்கிறார்கள்”, சுற்றுச்சூழலைப் பாதுகாக்காத கலாச்சாரத்தால், பேரழிவை சந்திப்பதைத் தவிர்க்க முடியாது” என்று வீரவசனம் பேசுகிறார் அதானியின் நெருங்கிய கூட்டாளியான மோடி. ஆனால் நடைமுறையிலோ, சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திய ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும், மக்களிடம் கருத்துகூட கேட்காமல் அதானியின் துறைமுக விரிவாக்கம் என்னும் நாசகரத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதும் மோடியின் ஆட்சியில்தான். அணுவுலைகள் – அணுக்கழிவு மையம், எட்டுவழிச்சாலை, மீத்தேன்  ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் உருவாக்கும் சுற்றுச்சூழல் – இயற்கைவள அழிவுகள் யாவும் வளர்ச்சியின் பெயராலேயே நியாயப்படுத்தப்படுகின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத் திட்டம்.

பூங்குழலி

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க