வேண்டாமே ஆப்பிரிக்க கெளுத்தி மீன் !

மிழகம், கேரளம் போன்ற மாநிலங்களில் இந்த வகை மீன்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இவை இந்தியாவில் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்டு விட்டன. ஏன் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் தடை செய்யப்பட்டன?

ஆப்பிரிக்க கெளுத்தி மீனின் விலங்கியல் பெயர் ” Clarias gariepinus ” ஆகும்

இந்த வகை மீன்கள் “ஏலியன்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
இவை உள்ளூர் நீர் நிலைகளில் கலந்து நதிகள், குளம் குட்டைகளில் வியாபித்து தற்போது நமது மாநிலத்தில் இருக்கும் உள்ளூர் மீன் வகைகளை கொன்றொழித்து விடுகின்றன.

இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள், தான் வாழ பிற மீன்களை கொன்று திண்ணும் தன்மை கொண்டவை. மேலும் மீன்கள் கிடைக்காவிட்டால் பாசி போன்ற நீர்நிலைகளில் இருக்கும் தாவரங்களை உண்டும் பிழைக்கும் எனவே இவை carnivorous மற்றும் omnivorous ஆக மாறும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

பல நேரங்களில் தன் இனத்தையே வேட்டையாடி உண்ணும் ‘நரபலி’ உண்ணும் முறையையும் கடைபிடிக்கின்றன (cannibalism). இது போன்று தான் வாழ பிற மீன்களையும் தன் இன மீன்களையும் கொல்லும் மீன்கள் நமது நீர்நிலைகளில் இல்லை.

அடுத்து, இவ்வகை கெளுத்தி மீன் ஒரு சீசனுக்கு நான்கு லட்சம் முட்டைகள் போடும். ஆனால், நம் நீர்நிலைகளில் உள்ள கெளுத்தி வெறும் 7000 முதல் 15000 முட்டைகளை மட்டுமே போடுகின்றன.

மேலும் இவ்வகை மீன்கள் குறைவான ஆழத்தில் சேற்றில் கூட வளரும் தன்மை கொண்டவை. ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும் தண்ணீரில் கூட பல நாட்கள் உயிர் வாழும். வறண்டு போன நிலத்தில் கூட காற்றைக்குடித்து உயிர் வாழும் தன்மை கொண்டது. சாக்கடையில் கூட வாழும் தன்மை இதற்கு உண்டு.

இத்தகைய பல அசாதாரண விசயங்கள் இதற்கு இருப்பதால் இயற்கையாகவே பிற வகை மீன்களை கொன்றொழித்து இவை மட்டும் அதிகம் வளர்ந்து நமது நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும்.

தற்போது கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் வண்டிப் பெரியார் அணையில் இந்த வகை மீன்கள் அதிகம் காணப்படுகின்றன.

இது நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து; இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்து விடும்.

இது ஒருபுறம் இருக்க, இந்த வகை மீன்கள் தண்ணீரில் இருக்கும் உலோகங்களை தன்னகத்தே சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

படிக்க :
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !

தண்ணீர் உலோகங்களால் மாசுபடுவதை அறிவதற்காக இந்த வகை மீன்கள் தான் பரிசோதனை விலங்குகளாக உபயோகிக்கப்படுகின்றன.

பொதுவாக நமது நாட்டில் நீர்நிலைகளின் மாசுத்தன்மை நாம் அறிந்ததே.
அவற்றில் பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகின்றன என்பதும் அறிந்தவையே. எனவே இவ்வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களில் ஈயம், அலுமினியம், இரும்பு போன்ற உலோகங்கள் மிக அதிகமான அளவில் அபாயகரமான அளவில் இருக்கின்றன.

இவற்றை உண்ணும் நமக்கு உலோகங்கள் ரத்தத்தில் சேர்ந்து அதனால் கேன்சர் / உடல் உபாதைகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

இனி ரத்தத்தில் உலோகங்கள் அதிகமாக இருக்கும் நோயர்களைக் கண்டால் இந்த வகை மீன்களை உண்பார்களா என்று கேட்க வேண்டும்.

இத்தனை ரிஸ்க்குகள் இருக்கும் இந்த வகை ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் சீக்கிரம் வளர்கிறது, நல்ல விலைக்கு விற்கிறது என்ற காரணத்திற்காக மக்கள் குட்டைகளில் வளர்க்கிறார்கள். இது தவறானது என்று மீனவப் பெருமக்கள் உணர வேண்டும்.
மேலும், இந்த வகை மீன்களை விற்பதும் வாங்குவதும் நமது ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் செயலாக அமையலாம்.

இந்த வகை மீன்கள் மட்டும் தான் ஒரு இடத்தில் கிடைக்கின்றன என்றால்
புரதச்சத்து எடுக்கும் நோக்கில் இவற்றை நன்றாக அவித்து உண்பது இவற்றில் இருக்கும் உலோகங்களை பெரும்பான்மை நீக்கி விடுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன

முடிவுரை : ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை தவிர்ப்பது சிறந்தது. அவை உள்ளூர் பிற மீன்களுக்கும் நமது உள்ளுறுப்புகளுக்கும் ஊறு செய்வதால் இந்த வகை மீன்களை விற்பவர்களும் வாங்குபவர்களும் உண்பவர்களும் தவிர்ப்பது சிறந்தது. அரசாங்கமும் கடும்போக்குடன் இந்த மீனை தடை செய்வது சிறந்தது.

References
1. Action to be taken against those rearing African catfish
2. Catfish farming banned, but stocks pose danger
3. Concentrations and Risk Evaluation of Selected Heavy Metals in Water and African Catfish Clarias gariepinus in River Kaduna, Nigeria
4. Lead and Cadmium Levels of African Catfish (Clarias gariepinus) and the Effect of Cooking Methods on their Concentrations

5. Heavy Metals Contamination in the Tissues of Clarias gariepinus (Burchell,
1822) Obtained from Two Earthen Dams (Asa and University of Ilorin Dams)
in Kwara State of Nigeria

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS., MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

1 மறுமொழி

  1. வண்ண மீன்களில் cat fish என்று வளர்க்கப்படுவதும் இதைப் போன்றே இருக்கும். அதையும் தடை செய்ய வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க