பொ. வேல்சாமியுடன் ஓர் நேர்காணல் | பாகம் – 03

இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத்
தமிழகத்தில் மட்டுமே காணமுடியும் !

♦ தருக்கத்தின் பிற்கால வளர்ச்சி என்னவாக இருந்தது?

ங்குத் தருக்கம் முறையாக வளர்ச்சி அடைந்திருந்தால் ஐரோப்பிய மறுமலர்ச்சி நிலை போன்ற ஒரு நிலையை நாம் எட்டியிருப்போம். தருக்கம் வளர்ச்சி அடையவில்லை; வளர்ச்சி அடையவும் விடவில்லை. தருக்கவாதிகளை வேதநெறியாளர்கள் எவ்வாறு இழிவுபடுத்தினார்கள்; ஒடுக்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சட்டோபாத்யாயா எழுதியுள்ளார். இங்குத் தருக்க முறைகூட சமயம் சார்ந்த விசயங்களை விவாதிப்பதற்குத் தானே தவிர, சமயத்திலிருந்து விடுபட்ட விஷயங்களை விவாதிப்பதற்கு அல்ல.

மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகர் படித்து, தருக்கம் செய்கிறவர்களுடன் சேரக் கூடாது; விலகி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். தருக்கம் செய்தால், படித்தால் சந்தேகம் வரும், சந்தேகம் வந்தால் கடவுள் மீதான முழு நம்பிக்கையில் குறைவு ஏற்படும் என்று மாணிக்கவாசகர் கருதுகின்றார். வடமொழி வேதநெறியாளர்கள் போன்றே இங்கும் தருக்கம் அருவருப்பாகப் பார்க்கப்பட்டது; கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாகப் பார்க்கப்பட்டது.

இதன் விளைவாக, மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றில் காணப்பட்டதைப் போன்ற வளர்ச்சியடைந்த தருக்கத்தைப் பிற்காலங்களில் காண முடியவில்லை. பிற்காலத்தில் சிவஞான சித்தியார் பரபக்கம் பிற மதங்களை மறுத்துப் பேசுகிறது. ஆனால் சிவஞான சித்தியாரில் உள்ளதைத் தருக்கம் என்று சொல்வது சற்று சிரமமானது. ஏனென்றால் சித்தியார் தனக்கு எதிரான கொள்கைகளை அதுவே கட்டுரைத்து மறுக்கின்றது. அப்படிப் பிற கொள்கைகளைக் கட்டுரைக்கும்போது தனக்கு வசதியாக இருக்கும்படியே கட்டுரைக்கின்றது. மணிமேகலையிலும், நீலகேசியிலும் உள்ள தெளிவு, நுணுக்கம் சித்தியாரில் இல்லை. ஓர் உதாரணம். அஜீவகர்களைச் சித்தியார் சமணர்களுடன் சேர்த்துக் குழப்புகிறது. சமணம் பற்றிக் கூடத் தெளிவில்லை. அக்காலத்தில் தருக்கம் எதார்த்தமான நடைமுறையில் இங்கு இல்லை என்பது நமக்குத் தெரிகின்றது.

முன்பே கூறியபடி தருக்கம் இறையியல் சார்ந்ததாகவே இருந்தது. தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவியலை நோக்கி நாம் முன்னேறவில்லை. தருக்கம் இங்கு நம்பிக்கையை வலியுறுத்தியதே தவிர, ஆராய்ச்சியை வலியுறுத்தவில்லை. அதனால் இந்தியாவின் சிறந்த தருக்கவாதியான தர்மகீர்த்தி தமிழர் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், அதே நேரத்தில் தருக்க வளர்ச்சியின் வரலாற்றுப் பயனைத் தமிழர்கள் அடையவில்லை என்பதும் உண்மை.

♦ தருக்கத்தை மறுத்த பக்தி இயக்கம் எதனை முன்வைத்தது?

‘பக்தி இயக்கம்’ என்பது இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் வைத்த பெயர். அதனை ஓர் இயக்கமாக நாம் பார்க்க முடியாது. அது சிவன் அல்லது திருமாலைப் போற்றிப் பரவிய இசைப்பாடல் மரபு மட்டுமே. இந்த இசைப்பாடல் மரபை ஓர் இயக்கமாக, அதாவது ஒரு‘movement’ ஆகக் கருதமுடியாது. இந்த இசைப் பாடல் மரபு நம்பிக்கையை வலி யுறுத்தியது; உணர்ச்சிமயமான பரவச நிலையை உருவாக்கியது.

சிவஞான சித்தியார்.

இந்த இசைப்பாடல் மரபின் தொடக்க காலம் மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றின் காலம். மணி மேகலை, நீலகேசி ஆகியவற்றில் ஒரு வளர்ச்சி யடைந்த தருக்கமுறையைப் பார்க்கிறோம். இந்தக் கேள்வி கேட்கும் தருக்கமுறையை மறுத்து நம்பிக் கையை முன்வைக்கிறது. வேறு மாதிரியாகச் சொன்னால் மக்கள் தன்னிலை ஆட்களாக இல்லாமல்,உணர்ச்சிப் பிரவாக நிலையில் பிறருடைய பேச்சுகளுக்குக் கீழ்ப்படும் தன்னிலை இழந்த ஆட்களாக மாறுகிறார்கள். தன்னிலை இழந்த உணர்ச்சிப் பிரவாக நிலையை உருவாக்கு வதற்கு இசைப்பாடல் முக்கியமாகப் பங்கு ஆற்று கின்றது. பரவசப்பட்ட மனிதர்களை உருவாக்கு கின்றது.

பரவசப்பட்ட மனிதர்கள் தமக்கு முன்னால் இருக்கும் மனிதர்கள் கூறுவதையெல்லாம் நம்பினார்கள்; அவர்களைத் தெய்வப் பிறவிகளாகக் கருதினார்கள். உதாரணமாக, திருஞான சம்பந்தர்தான் அம்மையின் முலைப்பால் அருந்தியதால் ஞானசம்பந்தன் என்று பெயர் பெற்றதாகக் கூறுகிறார். இந்தக் காலத்திற்கு முன் ஒரு மனிதரைப் பற்றிய அதீதக் கதைகளைப் பிறர் கூறக் கேட்கிறோம். இங்குக் கதையோடு சம்பந்தமுடைய மனிதரே கூறுகின்றார். இதைப் பற்றி வெள்ளைவாரணர் ஐயாவிடம் கேட்டேன். ”ஆமாம் தம்பி இதிலெல்லாம் ஏதோ பிரச்சினை இருக்கு” என்று அவர் கூறினார்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களுக்கு வேதநெறிதான் அடிப்படை. அவர்கள் பல்லாயிரம் முறை வேதங்களைப் போற்றுகிறார்கள். நால்வருணக் கோட்பாட்டைப் போற்றுகிறார்கள். இதைப் பற்றியெல்லாம் “தேவார ஒளிநெறி” என்னும் நூலில் செங்கல்வராயப் பிள்ளை தெளிவாகக் கூறியுள்ளார். இப்படி இருக்கும்போது நமக்கு அடிப்படையான கேள்வியொன்று எழுகிறது. இந்த இசைப் பாடல் மரபு தமிழர்களைச் சைவர்களாக, வைணவர்களாக ஒன்றுதிரட்டியதா? இல்லை என்னும்போது எப்படி அதை ஓர் இயக்கமாகக் கருத முடியும். இயக்கம் என்பது முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்குவது. புதிய நிலைமைகளை உருவாக்குவது.

செங்கல்வராயப் பிள்ளை.

இந்த இசைப் பாடல் மரபு பற்றிச் சரியான புரிதலுக்குத் தேவையான ஆய்வுகளைச் செய்தவர்கள் ஸ்பென்சர் முதலான சில வெளிநாட்டவர்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய தலங்களை எல்லாம் காட்டும் ஒரு வரைபடம் தயாரித்தனர். அப்படிப் பார்க்கும்போது இந்த ஊர்கள் எல்லாம் நன்செய் ஊர்கள்; அதிக நெல் விளைச்சல் தருபவை. இப்போது ஒரு விசயம் தெளிவாகிறது. உபரி உற்பத்தி கிடைக்கும் பகுதிகளில் இருந்த கோயில் தலங்களைப் புனிதப்படுத்தவும், வலுவாக்கவுமே இந்த இசைப் பாடல் மரபு நடைபெற்றிருக்கிறது. நன்செய் நிலங்கள் எல்லாம் கோயில்களுடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற செய்தியும் முக்கியமானது. இன்னொரு வகையில் கோயில்கள் நிர்வாகத் தலங்களாகவும், நியாயத் தலங்களாகவும் விளங்கின என்பதும் முக்கியமானது. தமிழ் நாட்டில் வேளாண் வளர்ச்சியின் போது கிடைத்த உபரியைப் பகிர்ந்து கொண்ட வர்க்கங்களின் / சாதிகளின் இலக்கிய நடவடிக்கையே பக்தி இசைப் பாடல் மரபு.

♦ பக்தி இசைப் பாடல் மரபை அடிப்படையாகக் கொண்டெழுந்த விசிஷ்டாத்வைதம், சைவசித்தாந்தம் ஆகியவை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு செயல்பட்டன?

இராமானுசர் ஆழ்வார்கள் பாடல்களைக் கொண்டே விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கினார். இராமானுசர் பற்றிய மரபுக் கதைகளிலிருந்து நமக்கு ஒரு விசயம் தெரியவருகிறது. அவர் சாதி, வருண முறையை எதிர்த்ததாகவும், அதனால் சோழப் பேரரசின் சினத்திற்காளாகி கர்நாடகத்திற்கு ஓடி விட்டதாகவும் அந்தக் கதை சொல்லுகிறது. தமிழக வரலாற்றில் முதன்முதலாக சாதி கடந்த மதரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்த இராமானுசர் முயன்று உள்ளார் என்று தெரிய வருகிறது. இராமானுசரைத்தொடர்ந்து சைவத்திலிருந்து சாதிப் படிநிலையை எதிர்த்து வீர சைவம் கிளைத்து எழுகிறது.

இராமானுஜர்.

இந்தியாவிலேயே சாதி கடந்த மதம் சார்ந்த மக்களை ஒருங்கிணைக்க முயன்ற முதல் மனிதராக இராமானுசர் திகழ்கின்றார். இராமானுசர், வீர சைவத்தை நிறுவிய வசவர் பற்றிய கதைகளெல்லாம் நமக்கு ஒரு விஷயத்தைக் காட்டுகின்றன. அப்போது சாதி கடந்த ஒருங்கிணைப்பை வன்மையாக எதிர்த்த அரசுகள் இருந்திருக்கின்றன; ஆளுங்குழுக்கள் இருந்திருக்கின்றன. அரசுகளும், ஆளும் குழுக்களும் அவற்றை வன்முறையில் ஒடுக்கியிருக்கின்றன. அதனால் சாதி, வருண முறையை எதிர்த்த சித்தாந்தங்கள் சமரசம் செய்து கொண்டன. தமிழ் நாட்டில் நடந்த குகை இடி கலகங்கள் கூட இதையே நமக்குச் சொல்கின்றன. குகைகள் சைவ சூத்திரர்களின் சமயம் சார்ந்த இடங்கள் ஆகும். விசிஷ்டாத்வைதம் உருவான இருநூறு ஆண்டு களுக்குப் பின்புதான் சைவ சித்தாந்தம் உருவா கின்றது. சைவ சித்தாந்தம் பார்ப்பனர்களுக்குக் கிடைத்த சமயத் தலைமை சூத்திரர்களான வேளாளர்களுக்கு வேண்டுமென்று கோருகின்றது. இந்தப் பின்னணியில் சைவ, வைணவ நடைமுறைகளில் உள்ள சாதி, வருண நெகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம் இவ்வாறு எதிர்ப்புக்கு ஆளான போது,அவர்கள் சில சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது. அவர்கள் சொன்னார்கள் நாங்கள் பேசுவதும் வேதாந்தம் தான். சைவ சித்தாந்திகள் தாங்கள் சொல்வதே சுத்த வேதாந்தம் என்று சொன்னார்கள். அதனால் இக்காலத்தில் வேதாந்தம் பற்றித் தமிழில் ஏராள மான நூல்கள் வெளிவந்தன. கீதை மொழிபெயர்க்கப் பட்டது. ரிபுகீதை என்ற வேதாந்த நூல் 18-ஆம் நூற்றாண்டு வரை அதிகமான தமிழ் மாணவர் களால் பயிலப்பட்டது. கைவல்ய நவநீதம் சங்கர வேதாந்தத்திற்குப் பொழிவான மொழிபெயர்ப்பு. மறைமலையடிகள் வேதாந்தம் எங்கள் சொத்து என்றார். பார்ப்பனர்கள் சைவ சித்தாந்தத்தைச் சூத்திர வேதாந்தம் என்றார்கள்.

♦ இந்திய மெய்யியல் மரபுகளின் மையப் போக்குகளிலிருந்து விலகி நிற்கின்ற தமிழ்ச் சித்தர்கள் பற்றிக் கூறுங்கள்?

சித்தர்கள் தமிழ்ப் புலமை மரபில் அண்மைக் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்கள் மரபில்தான் சித்தர்கள் பற்றிய செய்திகள் இருக்கின்றன. சித்தர் பாடல்களுக்கு நல்ல பதிப்புகள் எவையும் இல்லை. சித்தர்கள் பற்றிய பேச்சே இன்றைக்கும் நாட்டுப்புறக் கதைகள் போலத்தான் இருக்கின்றது.

(இடமிருந்து) திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர்.

சித்தர்கள் பாடல்கள் சமயத்திற்கு எதிரானதாக இருக்கின்றது. சாதிக்கு எதிரானதாக இருக்கின்றது. சமூக அவலங்கள் பற்றிய பேச்சாக இருக்கின்றது. நிறுவனமயப்பட்ட சமயங்கள், கொள்கைகள் போன்று சித்தர்கள் தம்மை நிறுவனமயப்படுத்திக் கொள்ளவில்லை. சித்தர்கள் பலர் ஒன்றுசேர்ந்து வேலைகள் செய்ததாகச் செய்திகள் இல்லை. சித்தர்கள் இன்னார் என்று இன்று வரை நம்மால் வரையறுக்க முடியவில்லை. சித்தர்களுடைய கொள்கைகளுக்கு இந்திய மெய்யியல் போக்குகளுக்கு உள்ள, குறிப்பாகத் தாந்திரிகத்திற்கும், சாங்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு நமக்குப் போதுமான ஆய்வுகள் இன்னும் செய்யப்படவில்லை; பாடல்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இவையெல்லாம் செய்தால் பேச முடியும். அதற்கு முன் சொல்லப்படுவதெல்லாம் வெறும் அபிப்பிராயங்களாக மட்டுமே இருக்கும்.

♦ மையப் போக்கிற்கு முற்றிலும் எதிரான பூத வாதிகள் / உலகாயதர்கள் தமிழ் மரபில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறார்கள்?

பூதவாதிகள் / உலகாயதர்கள் எழுதிய நூல்கள் தமிழிலும் இல்லை. இவர்கள் பற்றிய முதல் குறிப்பு மணிமேகலையில் கிடைக்கிறது. அடுத்து நீலகேசியிலும் வருகின்றது. உலகாயதர்கள் பற்றித் தமிழ் மரபில் ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. கடவுள் பேரில் மக்களை மோசடி செய்தவர்களைத் தாக்குவதற்கு, தோலுரித்துக் காட்டுவதற்கு பூதவாதிகள் / உலகாயதர்கள் கடவுளையே மறுத்தார்கள். அவர்கள் பெரும்பாலும் திதி சடங்கைக் கிண்டல் செய்தார்கள். கடவுள் இருக்கிறது என்று சொல்பவர்கள் ஏராளமாகப் பொய் சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டினார்கள். கடவுள் இருக்கிறது என்பதையும் மெய்ப்பிக்க முடியாது என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் செய்யும் மோசடிகளைத் தோலுரித்துக் காட்டினார்கள்.

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

ஆனால் கடவுள் பற்றிய கருத்து உலகளாவியதாக இருக்கின்றது. பழங்குடி மக்களிடமும் கடவுள் உண்டு. ஆனால் நிறுவனமயப்பட்ட கடவுள்கள் போன்று இல்லை. அந்தக் கடவுள்கள் பழங்குடி மக்களுடன் வாழ்ந்தும், இணைந்து போராடியும், அவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவை. இன்னும் கூடத் தமிழக மக்களிடம் குலதெய்வ வழிபாடே மேலோங்கி இருக்கிறது.

தமிழக மக்கள் தம் வேண்டுதல்களைக் குல தெய்வங்களிடம்தான் கேட்பார்கள். அதற்கப்புறம் அம்மன்கள்; அதற்கப்புறம் முருகன். தமிழ்நாட்டின் பெருந்தெய்வங்களான சிவன், விஷ்ணு கோயில்களில் தம் வேண்டுதல்களைக் கேட்க மாட்டார்கள். இப்போது திருப்பதிக்குச் சென்று வேண்டும் பழக்கம் இங்கு உண்டு. இது அந்தக் காலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா பண்டைய இந்தியாவில் உலகாயதம் என்பது தொல்-தாந்திரிகம்தான் என்று கூறியுள்ளார். இன்றும் கூட இவ்வுலக வாழ்வு நலன் சார்ந்த சடங்குகள்,நடைமுறைகள் குல தெய்வ வழிபாட்டில்தான் இருக்கின்றன. அங்கு தான் கள், மாமிசம், ஆண்-பெண் இன்ப நுகர்வு எல்லாம் ஏற்கப்படுகின்றன.

படிக்க:
காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !
தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

ஒரு மெய்யியல் முறையாக இல்லையென்றாலும் தமிழக மக்களிடையே இவ்வுலகு சார்ந்த சிந்தனை குலதெய்வ வழிபாட்டில் வலிமையாக இடம்பெறுகிறது. சிவஞான சித்தியார் 26-ம் பாட்டில் உலகாயதத்தையும்,வாமத் தந்திரியையும் இணைத்துப் பார்க்கிறார் அருள் நந்தி சிவாச்சாரியார். இந்தப் பழங்குடிச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டதுதான் சாங்கியம். உலகாயதர்கள், சாங்கியர்கள் அமைப்பாகச் செயல்பட்டதாக எங்கும் செய்திகள் இல்லை. கடவுள் மறுப்பு என்னும் விஷயத்தை முதன்முதலாக அமைப்புரீதியாக மக்களிடையே எடுத்துச் சென்றவர் பெரியார் மட்டுமே.

உரையாடியவர் : க.காமராசன்
நன்றி : (உங்கள் நூலகம், Friday, June 10, 2011)

(முற்றும்)

« முந்தைய பாகம்