ன்று இந்து மதத்தின் விழாக்களாகக் காணப்படும் பல விழாக்களும் முன்னர் பழங்குடி மக்களிடமிருந்தோ அல்லது சமண-பவுத்த-ஆசீவக மதங்களிலிருந்தோ களவாடப்பட்டவையேயாகும்.

எடுத்துக்காட்டாக;  விளக்கீடு என்பதனை எடுத்துக்கொண்டால், அது தமிழர்களின் விழா, இன்று மதத்தின் பிடிக்குள் சென்றுவிட்டது. அதே போன்று சங்ககாலப் பாடல்கள் குறிப்பிடும் ‘பாவை நோன்பு’ எனும் இயற்கையினைப் போற்றும் விழா, இன்று ‘திருவம்பாவை’ என்றாகிவிட்டது. இவ்வாறு களவாடப்பட்ட விழாக்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள்.

இவ்வளவு ஏன்? மத அடையாளமாகக் கருதப்படும் திருநீற்றினையே பார்ப்போம். ‘சமயத்திலுள்ளது நீறு’ என்று தேவாரமேயுள்ளது. எந்தச் சமயத்திலுள்ளது? என எண்ணிப் பாருங்கள். சைவசமயம் எனக் கொண்டால் கூட, வட இந்தியாவிலுள்ள சிவன் கோயில்களில் எங்காவது திருநீறு கொடுக்கின்றார்களா? இல்லையே. தமிழர் உட்பட்ட பழங்குடி மக்களின் அடையாளமாகவிருந்ததே இந்தத் திருநீறு. பின்னரான காலப்பகுதியில் இந்தப் பழங்குடி அடையாளமும் ஒரு மத அடையாளமாக மாற்றப்பட்டது.

ஏற்கனவே இங்கிருந்த மக்களிடமுள்ள இந்தப் பழக்கத்தினை, வடக்கே கொண்டு செல்ல மதத்தால் முடியவில்லை/முனையவில்லை. மதமானது திருநீற்றினை வடக்கே கொண்டுபோய்ச் சேர்க்கவிட்டாலும், அங்கிருந்து ‘விபூதி’ என்ற வடமொழிப் பெயரினை இங்கு கொண்டு வந்துசேர்த்துவிட்டது. இவ்வாறு அடையாளங்களையே ஆட்டை போடும்போது, விழாக்களை மட்டும் எவ்வாறு விட்டுவிடுவார்கள். பலவற்றையும்  விழுங்கிவிட்டார்கள்.

இன்றும் மதத்தினால் விழுங்கமுடியாத ஒரு தொடர் விழாவாகவே (தைப்பொங்கலையும் உள்ளடக்கிய) ‘தை மரபுத் திங்கள் விழா’ காணப்படுகின்றது.  இதற்கும்  மதச் சாயம் பூசும் வேலையினை அண்மைக் காலத்தில் காணக்கூடியதாகவுள்ளது. அந்த வகையில் பொங்கலிற்கு எனப் ‘புராணப் புருடா’ ஒன்று வெளிவந்துள்ளது.

மகர சங்கராந்திதான் தைப் பொங்கல் என்பது ஏற்கனவே அவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு விளக்கம். கதிரவனின் வட செலவு (வடக்கு நோக்கிய நகர்வு) என்பதற்கான ஒரு வடமொழிப் பெயராக ‘சங்கராந்தி’ என்பதனைக் கொண்டு வந்துபார்த்தார்கள். அதில் வடமொழிப் பெயரினை மட்டும் நீக்கிவிட்டால், அது ஒரு இயற்கை சார் நிகழ்வே. எனவே பொங்கலினை மத மயமாக்குவதற்கு இன்னொரு புராணக்கதை அவர்களிற்குத் தேவைப்பட்டது.

படிக்க :
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்
எடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் !

பொங்கலிற்கான  புராணக்கதை :

தமிழர்களின் இயற்கைசார் விழாவான பொங்கலிற்கு ஒரு புதிய மத விளக்கம் கொடுப்பதற்கென ‘கோவர்த்தன மலைக் கதை’ இன்று கூறப்படுகின்றது. இக் கதையின் படி, இந்திராவினை (இந்திரனை) வணங்காமல் மக்கள் புறக்கணித்தமையால், இந்திரா சினமுற்றார். இதனால் மழை, மின்னல் போன்றவற்றை மக்கள் மீது ஏவினார். அதனால் அச்சமுற்ற மக்கள் கிருசுணரிடம் முறையிட, அவர் கோவர்த்தன மலையினைத் தூக்கிக் குடையாகப் பிடித்து, மக்களை காப்பாற்றினார் (‘மழைக்கு நல்ல குடை என மலை பிடித்த கண்ணனாம்’ பாடல் நினைவிருக்கின்றதா, அதே தான்). பின்னர் இந்திரா தவறினை உணர்ந்தமையால், அவரிற்குப் பொங்கி மகிழ்ந்தார்கள். அதுதான் பொங்கல் ஆயிற்று. இவ்வாறு செல்கின்றது அந்தக் கதை.

சரி, இந்தக் கதை உண்மையென்றால் பொங்கலன்று இந்திராவிற்கு அல்லவா படைத்து வணங்குவார்கள். ஏன் கதிரவனையே வணங்குகின்றார்கள் எனக் கேளுங்கள். பதிலிருக்காது. ஏனெனில், இன்றைய பொங்கலுடன், பழங்கால (சிலப்பதிகாரம் குறிப்பிடும்) இந்திர விழாவினையும் சேர்த்துக் களவாட முனைந்து, இரண்டையுமே கோட்டை விட்ட புராணக்கதைதான் இந்தக் கோவர்த்தன மலைக் கதை. (இப் புராணக்கதையினை அணுகி நுணுக்கமாகப் பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். அதாவது, ரிக் வேதத்தால் பெரிதும் பாடப்பட்ட இந்திராவினை மக்கள் ஏற்றுக்கொள்ளாமையால், பார்ப்பனியமானது தொல்குடி மக்களின் நிறத்திலேயே (கறுப்பு) ஒரு கடவுளை உருவாக்கி, மக்களைக் கவர்ந்திழுத்தமையே அந்த உட்கிடை).

தைப் பொங்கலிற்கு ஒரு புராணக்கதை கட்டியவர்கள் மாட்டுப் பொங்கலை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன? அதற்கும் ஒரு புராணக் கதை. ஒரு முறை சிவன், நந்தியிடம் பூமியிலிலுள்ள மக்களிடம் சென்று ‘மாதமொரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்து, மாதமொருமுறை உண்ணுமாறு’ சொல்லச் சொல்லிக் கேட்கின்றார். நந்தி தவறுதலாக ஒவ்வொரு நாளும் உண்ணுமாறு கூறிவிடுகின்றது (நல்லவேளை நந்தி மாறிக் கூறியிருக்காவிடின், இன்றைக்கு எமக்கு மாதத்திற்கொருமுறைதான் உணவு).

இவ்வாறு பொய் சொன்னதற்காகச் சாபம் பெற்ற நந்திதான் பின்னர் மாடுகளாக உலகில் பிறந்தது எனவும், அதனால் மாடுகளாகப் பிறந்த நந்திக்காகவே மாட்டுப் பொங்கல் பொங்கப்படுகின்றது எனச் செல்கின்றது அந்தப் புராணக்கதை. சரி இந்தப் புராணக்கதை உண்மையென்றால், வேதங்களில் எல்லாம் பசுக்களைக் கொன்று யாகங்களில் போட்டுக் கொல்லுமாறு கூறப்படுகின்றதே, அவ்வாறு கொல்லப்பட்டவையும் நந்திதானா! எனக் கேளுங்கள் பதிலிருக்காது (அஷ்டதச பசுவிதானம் – 18 பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம்,  ஏகாதசீன பசுவிதானம் – 11 பசுக்களை கொல்லும் யாகம், வாயவீயஸ் வேதபசு – வாயு தேவதைகளுக்காக வெள்ளை பசுவை கொல்லுவது, ஆதித்ய வேதபசு – சூரிய தேவனுக்கு பசு யாகம்,…).

படிக்க :
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்

ஏறு தழுவலிற்கான புராணக்கதை:

இவ்வாறு தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலிற்கு எல்லாம் புராணக்கதை இருக்கும்போது, ‘ஏறு தழுவல்’ (சல்லிக்கட்டு) மட்டும் என்ன பாவம் செய்தது என நினைத்த தமிழக பாரதீய சனதா கட்சியினர், அதற்கும் ஒரு புராணக்கதையினை ருவீட்டரில்(டிவிட்டரில்) தட்டிவிட்டுள்ளார்கள்.

அதில் அர்ச்சுணன் சிவனிடம் வரம் வேண்டித் தவமிருந்தபோது காளை ஒன்று அர்ச்சுணனைக் கொல்ல வரச் சிவன் அதனைத் தழுவியதே ‘ஏறுதழுவல்’ என்று அப் பதிவு செல்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சிவ புராணத்திலும், மகா பாரதத்திலும் சொல்லப்பட்ட இக் கதையில் சிவனிற்கும் அர்ச்சுணனிற்குமிடையே வந்த மிருகமாக பன்றியே (வராஹம் ) குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லப்போனால், முகாசுரன் என்ற அசுரனே முள்ளம்பன்றி வடிவம் கொண்டு வந்ததாக சிவ புராண / மகாபாரத புராணக்கதை சொல்லுகின்றது. இன்று ஏறு தழுவலைத் தழுவிக் கொள்ளும் நோக்கில்,  இந்தப் பன்றியினையே இப்போது காளை என மாற்றியுள்ளார்கள். பாரதீய சனதா கட்சியினர் ஏறு தழுவலைக் களவாடப் போய், மகாபாரத – சிவ புராணத்தையே மாற்றியுள்ளார்கள்.

பாரதீய கட்சியினர் ஒழுங்காக யோசித்திருந்தால் இவ்வாறு மகாபாரதத்தை எல்லாம் சிதைக்காமலேயே ஒரு கதை பிடித்திருக்கமுடியும். அதாவது, மகாபாரதத்திலேயே ஒரீடத்தில் கிருசுணர் மாட்டுடன் சண்டையிடுவதாகக் கதை வருகின்றது. அதனைக் கூடப் பொருத்தமாகப் பிடிக்கத் தெரியாமல், பன்றியினை காளையாக மாற்றிவிட்டார்கள்.

சிந்துவெளி முத்திரை.

ஆனால், அக் கதையிலுள்ள சிக்கல் என்னவென்றால், கிருசுணர் காளையுடன் போரிட்டுக்  காளையினைக் கொல்வதாகவே  பாரதக் கதை செல்கின்றது.  அது காளையினைக் கொல்லலே தவிர,  ஏறுதழுவல் அல்ல. இந்தப் புராணக்கதையில் ஒரு மறைமுகச் செய்தி உண்டு. ஆரியர்கள் நாடோடிகளாகக்  கைபர் கணவாய் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தபோது, இங்கிருந்த  பழங்குடியினர் இங்கு உழவினை மேற்கொண்டிருந்தனர். அந்த உழவுத் தொழிலின் ஒரு கூறாகவும், குறியீடாகவுமே காளை பாரதக்கதையில் காணப்பட, அதனைக் கிருசுணர் கொல்வதன் மூலம் சொல்லப்படும் செய்தியானது ஆரியர்கள்,  தமிழர் உட்பட்ட தொல் குடிகளையும் அவர்களது உழவுத் தொழிலினையும் அழிப்பதையுமே, அக் கதை குறிக்கிறது.

முடிவாக,  இவர்கள் என்னதான் முயன்றாலும், இன்று வரை இவர்களால் கைப்பற்றப்பட முடியாத ஒரே விழாவாக இந்தத் தைத்திருநாள் தொடர் விழாக் கொண்டாட்டமே காணப்படுகின்றது. இத் தை மரபுத் திங்களானது அவர்களது இந்து ராஸ்டிர கனவிற்குத் தொண்டையில் சிக்கிய ஒரு முள்ளாகவும், மறுபுறத்தே  எமக்கு  எமது பண்பாட்டினைக் கட்டிக்காக்கும் ஒரே பற்றுக்கோடாகவும் உள்ளது.

வி.இ.  குகநாதன்

8 மறுமொழிகள்

 1. “இந்தப் புராணக்கதையில் ஒரு மறைமுகச் செய்தி உண்டு. ஆரியர்கள் நாடோடிகளாகக் கைபர் கணவாய் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்தபோது, இங்கிருந்த பழங்குடியினர் இங்கு உழவினை மேற்கொண்டிருந்தனர். அந்த உழவுத் தொழிலின் ஒரு கூறாகவும், குறியீடாகவுமே காளை பாரதக்கதையில் காணப்பட, அதனைக் கிருசுணர் கொல்வதன் மூலம் சொல்லப்படும் செய்தியானது ஆரியர்கள், தமிழர் உட்பட்ட தொல் குடிகளையும் அவர்களது உழவுத் தொழிலினையும் அழிப்பதையுமே, அக் கதை குறிக்கிறது.”

  மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடியினர் உழவுத் தொழில் செய்த கதையெல்லாம் குகநாதன் மாதிரியான கோமாளிகள் தான் யோசிப்பார்கள்.

  இந்திய துணைக்கண்டத்தில் உள் நுழைந்த ஆரியர்கள் கூட்டம் பெரும்பாலும் ஆண்களை மட்டுமே கொண்டது. இந்த ஆரிய ஆண்கள் சிந்து சமவெளி நாகரீக பெண்களுடன் இனக்கலப்பு செய்து உருவாக்கிய சந்ததியினரே பிராமணர், சத்திரியர், பூமிகர் உள்ளிட்ட வட இந்தியாவின் உயர் சாதியினர் என டிஎன்ஏ ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் ஆரியர்கள் நுழைந்த பின்னர் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு தங்குதடை இல்லாமல் இந்திய துணைக்கண்டத்தில் சர்வ சாதாரணமாக இனக்கலப்பு நடந்ததாகவும் சாதி அமைப்பும் அகமண முறையும் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு பின்னர்தான் உருவாகியிருக்க வேண்டும் என ஆராய்ச்சி கூறுகிறது மத்திய ஆசியாவிலிருந்து நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு போன ஒரு நாடோடி கூட்டத்தை திட்டுவதில் என்ன பலன் இருக்கிறதோ? இந்த குகநாதன் மாதிரியானவர்கள் தமிழ் படித்ததால் கோமாளி ஆனார்களா இல்லை கோமாளியாக இருப்பதால் தமிழ் பிடித்தார்களா என அஞ்சும் நிலை இருக்கிறது. வேறு எந்த மொழிக்கும் இப்படிப்பட்ட துரதிஷ்டம் கிடையாது.
  இவர்களுக்கெல்லாம் சம்பளம் என்னும் பெயரில் மக்களின் வரிப்பணம் பாழாகிறது.

  • பார்ப்பனர்கள் என்பவர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தேறிகள் என ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. பார்ப்பனர்கள் கலந்து காணமற் போக எல்லாமில்லை. இன்றும் பூநூலுடன் தாம் பார்ப்பனர்கள் எனத் தம்மை இனங்காட்டித் திரிவார்கள். ஊரெல்லாம் வட்டார வழக்கில் பேசினாலும், இவர்கள் மட்டும் அவாளிற்கு என்றொரு `பாசை` வைத்திருப்பார்கள். தமிழில் குடமுழுக்கு என்றால் பதறுவார்கள். அவர்கள்தான் இன்றும் பார்ப்பனர்கள்.
   ஆமா, வினவிற்கும் வரிப் பணத்தில் சம்பளம் கொடுக்கிறாங்களா! இது என்ன கொமெடி.

   • “பார்ப்பனர்கள் என்பவர்கள் கைபர் கணவாய் வழியாக வந்தேறிகள் என ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. ”

    உங்கள் மூளையை கொண்டுபோய் சூலையிலே தான் வைக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் தான். அதுபோல்தான் ஆரியர்களும் வந்து மற்றவர்களோடு இனக்கலப்பு நடத்தி புதிய மக்கள் சந்ததிகளை உருவாக்கினார்கள். இந்தியாவில் பார்ப்பனர் உள்ளிட்ட சாதிகள் மிகவும் பிற்காலத்தில்தான் உருவாகின. ஆரியர்களும் பார்ப்பனர்களும் ஒன்று அல்ல. இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான சாதிகளில் ஆரிய மரபணுவின் எச்சம் உண்டு. வட இந்திய உயர்சாதியினரிடத்தில் அது அதிகம். 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் துணைக் கண்டத்துக்கு வந்து உள்ளூர் மக்களோடு இனக்கலப்பு நடத்தி காலப்போக்கில் கரைந்து போன ஆரியர்களுக்கும் மிகவும் பிற்பாடு உருவான பார்ப்பனர் சாதியினரின் அராஜகத்துக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? பார்ப்பனர்களை விமர்சனம் செய்வது சரி. அதற்கு ஏன் ஆரியர்களை பழிக்கிறீர்கள் அவர்களா சாதியை கொண்டு வந்தார்கள்? ஒட்டு மொத்த மனித இனமே ஆப்பிரிக்காவில் இருந்து பரவியதாக அறிவியல் கூறுகிறது

  • பெரியஸ்வாமிகளின் அறிவுக்கூர்மையை அங்கீகரிக்க மனமில்லாத இரக்கமற்ற தமிழர்கள்..!
   வழிந்தோடும் மூளை கழிவின் பின்புலத்தில் சுக்ரீவ விபிஷணர்களை கண்டார்களோ என்னவோ..!

   • அறிவியல் மனப்பான்மை சிறிதும் இல்லாத பேடித்தனத்தின் உறைவிடமான உங்களை மாதிரியான மூளை மழுங்கிகளின் பாராட்டு எமக்கு தேவையில்லை.

    • திராவிட இயக்கத்தின் போராட்டங்களின் விளைவான இட ஒதுக்கீடு மூலம் படித்து உயர் பதவியில் அமர்ந்து கோடாறிக் காம்புகளாக ஆனவர்களல்ல நாங்கள்..!
     சீமானைப் பற்றிய பிறிதொரு பதிவில் அவருக்கு அருள்பாலித்து எழுதிய தங்களின் மறுமொழிகளின் ஊடாக நண்பர் c.nepolian அவர்களின் உங்கள் அரசியல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்காமல் ஓடியவர்தானே நீர்..!

 2. புராண புருடாக்களிற்கான சிறந்த விளக்கம் . கோவர்த்தன மலைக் கதை உண்மை எனின் ஏன் அங்கு (உத்திரப் பிரதேசத்தில்) பொங்கல் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க