மூத்த எழுத்தாளரும் மக்கள் கவிஞருமான மல்லிகை சி.குமாருக்கு செவ்வஞ்சலிகள்!

லையக மண்வாசனை சொட்ட அம்மக்களின் வாழ்வியலை தன் படைப்பிலக்கியத்தின் ஊடாக பறைசாற்றி நின்ற கவிஞர், சிறுகதையாசிரியர், ஓவியர் என பல்பரிமாணம் கொண்ட மூத்த இலக்கியவாதி, மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமார் அவர்களின் மறைவுக்கு எமது புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மலையக மண் இன்று மூத்த எழுத்தாளரை, எப்போதும் சலனமில்லாத, எந்த வேளையும் சமரசம் செய்து கொள்ளாத, இறுதி வரை மக்கள் விடுதலையின்பால் தீரமுடன் எழுதி வந்த படைப்பிலக்கியவாதியை இழந்து நிற்கிறது.

கவிஞர் மல்லிகை குமார்.

புகழுக்கும் பகட்டுக்கும் பின்னால் பலர் ஒடுகையில் கடின உழைப்பை வாழ்க்கைக்கு ஆதாரமாகக் கொண்டு, தன் பேனா முனையில் மலையக மக்களின் வாழ்வையும் அவர் தம் விடுதலையையும் நெஞ்சுரத்துடன் பேசியவர் கவிஞர் மல்லிகை சி.குமார்.

புன்முறுவல் பூத்த முகத்துடன் எப்போதும் அன்பாய் ஆராதிக்கும் அவர் குணம், நகைச்சுவையாய் நையாண்டியாய் அவரது எழுத்துகளில் மாத்திரமன்றி ஓவியங்களிலும் வெளிப்பட்டு நிற்பதை கண்டிருக்கின்றோம். நேரடி அரசியல் செயற்பாட்டாளராக இல்லாதபோதும் தன் படைபிலக்கியத்தின் ஊடாக சோரம் போகாத அரசியல் அறப்போர் புரிந்தவர் மக்கள் கவிஞர் மல்லிகை சி. குமார்.

அவரது எழுத்துக்கள் மலையக மண்வாசனையுடன் சமூக உணர்வையும் வெளிப்படுத்துவனவாகவே இருந்து வந்திருக்கின்றன. மேல் கொத்மலை திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்க செயற்பாடுகளின் போது களத்தில் அவர் வாசித்த கவிதைகள் மலையக மண் மீது அவர் கொண்டிருந்த பற்றுக்கு இன்னுமொரு சான்றாகும்.

தனது சிறுகதைகள் கவிதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கையை பதிவு செய்தது மட்டுமின்றி பிழைப்புவாத அரசியலை எள்ளி நகையாடி சமூக விடுதலையை வலியுறுத்தி வந்துள்ளார். அன்னாரின் திடீர் இழப்பு இலக்கியத் தளத்தில் மாத்திரமன்றி சமூக அரங்கிலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

படிக்க:
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

இந்த வேளையில் அன்னாரின் இழப்பில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடனும் கலை இலக்கிய நண்பர்களுடனும் எமது கட்சி துயரைப் பகிர்ந்து கொள்கிறது.

எந்த மக்கள் விடுதலைக்காக மல்லிகை சி. குமார் தன் பேனா முனையை போர்வாளாய் தூக்கிப் பிடித்தாரோ. அந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்த உழைப்பதே அன்னாருக்கு நாம் செய்யும் உண்மையான, நேர்மையான அஞ்சலியாகும்.

V.மகேந்திரன்,
தேசிய அமைப்பாளர்,
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி.

நன்றி : முகநூலில் புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிச கட்சி

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க