ன்று (பெப்ரவரி 21) அனைத்துலகத் தாய் மொழி நாள் (International Mother Language Day (IMLD)) என உலகளவில் கொண்டாடப்படுகின்றது. எமது தாய்மொழியின் பெயர் ‘தமிழ்’ என்பது எல்லோரிற்கும் தெரிந்ததே, ஆனால் எமது மொழி அவ்வாறு ஏன் பெயர் பெற்றது? என்பது பலரிற்கும் தெரிந்திருக்காது.

கார்ல்டுவெல் (Robert Caldwell)  என்ற அறிஞரே முதன் முதலில் தமிழ் மொழிப் பெயரிற்கான காரணத்தை பொது வெளியில் முன்வைத்தவர். அவர் ‘திராவிட’ என்ற சொல்லே தமிழாகியது என்ற வாதத்தினை முன்வைத்திருந்தார். பின்னர் அக் கருத்துத் தவறானது என்றும், மறுபுறமாக தமிழ் என்ற சொல்லிற்கான திசைச்சொல்லே (Exonym) திராவிடம் என்றும் பாவாணர் முதற்கொண்டு பல அறிஞர்கள் நிறுவியுள்ளார்கள்.

எனவே ‘தமிழ்’ என்ற பெயர் எவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதனை ஆராய வேண்டியுள்ளது. ‘எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பிய விதியானது பழந் தமிழ்ப் பெயர்களிற்குக் கூடப் பொருந்தும். தமிழ் என்பதற்கான பொருளினை நிகண்டில் பார்த்தால் இனிமை / நீர்மை என்று காணப்படுகின்றது.  இதனையும் கவனத்திற்கொண்டு எமது மொழிக்கான பெயர்க் காரணத்தினை ஆராய்வோம்.

தமிழ் மொழிக்கான பெயர்க் காரணத்தினை பல்வேறு அறிஞர்கள்  பல்வேறு வகைகளில்  கூறியிருக்கின்றார்கள்.  தம் மொழியே தமிழானது  என்றொரு கருத்துண்டு.

தம் + மொழி = தம்மொழி  -> தமிழி  -> தமிழ்.

அதாவது,  எவ்வாறு ‘தம் + ஆய் = தாய்’ , ‘தம் + ஐயன் = தமையன்’ ஆகினவோ, அவ்வாறு தமது (தம்) மொழி தமிழாகியது என்பது ஒரு கருத்தாகும். ‘மொழிதல்’ என்றால் சொல்லுதல் / பேசுதல் எனப் பொருள்படும். அந்த வகையில் தமது மொழிக்கு இட்ட பெயர் தமிழ் என்பது இக் கருத்தாகும்.  அதே போன்று  தம்+இல் (குடி) = தமில் > தமிழ்  ஆனது என்று இன்னொரு கருத்துமுண்டு.

முதுமுனைவர் இரா. இளங்குமரனார்

இவ்வாறு பல கருத்துகளிலிருந்தாலும், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கூறியதொரு கருத்தே ஏற்புடையதாக எனக்குத் தோன்றுகின்றது. அவரது விளக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது. “ஒரு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் குடிக்கமுனையும் போது  “அம்மு, அம்மு” என ஓசை எழுப்புவதால் அம்மா என்ற சொல் பிறந்தது; அதிலிருந்தே அமிழ்தம் (தாய்ப்பால்) என்ற சொல் பிறந்தது. அமிழ்து என்ற சொல் தோன்றியதைப் பார்த்தோம். இப்போது அமிழ்து என்ற சொல்லை இடைவிடாமல் விரைவாக மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். என்ன? தமிழ், தமிழ் ஓசை வருகின்றதா. அதுதான் “தமிழ்” என்ற சொல் தோன்றிய வரலாறு”.

அவரது கூற்றுச் சரியானதா எனப் பார்ப்போம். அமிழ்தல் என்றால் உள்ளிறங்குதல் என்பது பொருளாகும் {எ.கா: இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78)}. நாம்  இன்றும் பேச்சு வழக்கில் கூட ‘கடலில் அமிழ்ந்து போனான்’ என்கின்றோம் அல்லவா!. அவ்வாறுதான் ‘அமிழ்தல்’ என்பது உள்ளிறங்குதல் என்ற பொருள் பெறும். இவ்வாறு உள்ளிறங்கி சுவையீட்டுவதால் தாய்ப்பாலானது அமிழ்து (அமிழ்தம்) எனப்படும்.

அம்+இழ் = அமிழ் (அம்மாவிலிருந்து மலர்வது).

இவ் வேளையில் சமற்கிரதத்திலும் ‘அம்மிருத்’ என்றொரு சொல் உண்டு. அது மிருத்தியு (இறப்பு) என்பதன் எதிர்ச்சொல்லாகும் (அ+மிருத்தியு = இறப்பற்ற ). ‘அம்மிருத்’ என்ற சொல்லே அமிர்தம் ஆகி, அமிழ்தம் ஆயிற்று என்று வடமொழித் தாங்கலாளர்கள் கதை விடுவார்கள். அது முற்றிலும் தவறு.  இரண்டும் வெவ்வேறான வேர்ச் சொல் விளக்கங்கள் கொண்டவை. ஒலிப்பதிலுள்ள சிறு ஒற்றுமை, இரண்டையும் ஒன்றாக்காது (தமிழில் ‘அமிர்தம்’ என எழுதாதீர்கள், அமிழ்து அமிழ்தம் எனத் தமிழ்ச்சொல்லையும், பாற்கடல் கடைந்தபோது வந்த அறிவிற்கொவ்வா வடமொழிச் சொல்லை ‘அம்மிருத்’ எனவும் எழுதுங்கள்).

படிக்க :
சோழர் ஆட்சியில் மக்கள் நிகழ்த்திய அறப் போர்கள் !
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்

மீண்டும் அமிழ்து என்ற சொல்லிற்கு வந்தால், தாய்ப் பாலினையே அமிழ்து என அழைப்போம் என்று மேலே பார்த்தோம். தேவைகருதிப் பிறபொருளிலும் அமிழ்து என்ற சொல் இடம்பெறும் (எ.கா: ‘அமிழ்தம் = மழை’ என குறளில் வரும்). இப்போது ‘அமிழ்து’ என்ற சொல்லினை இடைவிடாமல் மீண்டும் மீண்டும் விரைவாகச் சொல்லிப் பார்ப்போம்.

அமிழ்து, அமிழ்து, அமிழ்து >>>தமிழ்,தமிழ், தமிழ்.

இதுவே ‘தமிழ்’ என்ற சொல் பிறந்த கதையாகும். இவ் விளக்கத்திலுள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால்; மேலுள்ள ஏனைய தமிழ் மொழிப் பெயர் விளக்கங்களும், இந்த விளக்கத்துடன் பொருந்திப் போகின்றது. அம்மாவிலிருந்து மலர்வது எவ்வாறு அமிழ் (அம்+இழ் = அமிழ்), ஆகின்றதோ, அவ்வாறு தம்மிலிருந்து மலர்வது தமிழ் (தம்+இழ் = தமிழ்) எனப்படும். அதே போன்று தமிழிற்கு நிகண்டு கூறும் பொருளான இனிமை / நீர்மை என்பதும் அமிழ்து (தாய்ப்பால்) என்பதுடன் பொருந்திப் போகின்றது. இவற்றினைக் கருத்திற்கொண்டே ஐயா இளங்குமரனாரின் தமிழ் மொழிக்கான பெயர் விளக்கம் ஏற்புடையது என்கின்றேன். பாவேந்தர் பாரதிதாசனின் பின்வரும் பாடலைப் பாருங்கள்.

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்
தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!”

மேலுள்ள பாடலில் “தமிழுக்கும் அமுதென்றுபேர்”  என்று கூறியது மட்டுமன்றி,  “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றும் பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ளதனைக் காணுங்கள்.  இப் பாடலானது அமிழ்து என்ற சொல்தான்  தமிழ்  என்றானது என்ற எமது நிலைப்பாட்டினை மேலும் வலுப்படுத்தும்.

தமிழ் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என மேலே பார்த்தோம். இப்போது எப்போது முதல் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்று எனப் பார்ப்போம். மொழிதல் என்ற சொல்லின் பொருளே பேசுதல் என்பதே, எனவே மொழியானது பேச்சு வழக்கிலேயே முதலில் தோன்றும்.  இந்த வகையில் ‘தமிழ்’ என்ற சொல்லும் பேச்சு வழக்கிலேயே முதலில் தோன்றியிருக்கும். இந்த செய்முறை ஒரு படிமலர்ச்சி முறையிலேயே இடம்பெற்றிருக்கும். அதாவது குழந்தை முதன்முதலில் பால் குடிக்கும்போது ஏற்பட்ட ‘அம்’ / ‘அம்மு’ என்ற ஒலியானது, அமிழ்து ஆகிப் பின்பு தமிழாகிய செயற்பாடனது  ஒரு நீண்டகாலத்தில் படிமுறை, படிமுறையாக  ஏற்பட்டிருக்கும். இங்கு பேச்சு வழக்கிற்குச் சான்றுகளைக் காட்டமுடியாது, என்பதனால் எழுத்து வடிவிற்கே நேரில் வருவோம். தமிழ் என்ற சொல் தமிழில் இன்று கிடைக்கும் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றது.

தமிழென் கிளவியு மதனோ ரற்றே” : (புள்ளி மயங்கியல் 90).

இங்கு தொல்காப்பியத்தின் காலம் தொடர்பாகச் சில வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. பொதுக் கருத்தாக தொல்காப்பியக் காலம் BCE 500 எனக் கணிக்கப்படுகின்றது. தொல்காப்பியருக்குச் சமகாலத்தவராகக் கருதப்படும் பனம்பாரனார் என்பவரும் ‘தமிழ்’ என்ற சொல்லினை கையாண்டுள்ளார்.

படிக்க :
RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !
♦ மோடி ஆட்சியில் பத்தாண்டுகளில் இல்லாத ஊதிய உயர்வு வீழ்ச்சி !

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து

(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

சங்க இலக்கியங்களிலும் தமிழ் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

வில்லலைத் துண்ணும் வல்லாண் வாழ்க்கைத்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை யிறந்தே.” : (அகம்.31)

இப் பாடலைப் (அகம்.31) பாடியவர் மாமூலனார் எனும் புலவராவார். மாமூலனார் நந்தர்களையும் மெளரியர்களையும் பற்றிப் பாடுவதால், இவர் பொ.ஆ. மு. 320 க்கு (BCE320) முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது . இப் பாடல் நீங்கலாக மேலும் பல சங்ககாலப் பாடல்களில் ‘தமிழ்’ என்ற சொல் காணக்கிடைக்கின்றது .

தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை”  :  {அகநானூறு 227-18}

நளி இரு முந்நீர் ஏணி ஆக, வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்”  { புறநானூறு 35}

இவ்வாறு ‘தமிழ்’ என்ற சொல் இடம்பெறும் சங்ககாலப் பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலக்கியச் சான்றுகளைப் பார்த்தோம். இப்போது கல்வெட்டுச் சான்றைப் பார்ப்போம். அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, “யானைக்குகை” கல்வெட்டு) என்பது புவனேசுவரம் (ஒரிசா) அருகே உதயகிரி, அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொது ஆண்டிற்கு முந்திய இரண்டாம் நூற்றாண்டில் (BCE 2nd cent) பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். இக் கல்வெட்டின் 11 வது வரியில் கூறப்பட்டுள்ளவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வடிவம் வருமாறு.

மாதிரிப் படம்

“……And the market-town(?) Pithumda founded by the Ava king he ploughs down with a plough of asses; and (he) thoyoughy breaks up the confederacy of the T(r)amira (Dramira) countries of one hundred and thirteen years ( or 1300 years), which has been a source of danger to (his) Country (Janapada)…….”

இங்கு காணப்படும் பிராகிருத மொழிச் சொல் “திராமிர சங்காத்தம்” (T(r)amira (Dramira) என்பதாகும். “திராமிர சங்காத்தம்” என்பது தமிழர் கூட்டணி (தமிழ் மூவேந்தர்) என்பதன் பிராகிரதச் சொல் வடிவமாகும் [தமிழை ஆங்கிலத்தில்  ரமில்=Tamil என அழைப்பது போன்று].  மேலே வரும் கல்வெட்டு வாக்கியத்தில் “113” ஆண்டுகளா / “1300”ஆண்டுகளா என்ற குழப்பம் அறிஞர்களிடையே உண்டு. 113 ஆண்டுகள் எனக்கொண்டால், தமிழர் கூட்டணியின் காலம் மேலும் ஒரு நூற்றாண்டு பின்நோக்கிச் செல்லும் {BCE 3rd cent}. மாறாக, 1300 ஆண்டுகள் எனில், தமிழர் கூட்டணியின் காலம் BCE 15th cent என ஆகும். இதுவே தமிழ் என்றசொல்லின் திசைச்சொல்லிற்கான காலத்தால் முந்திய கல்வெட்டுச் சான்றாகும்.

இவ்வாறு எழுத்து மூலமான சான்றுகளினடிப்படையில் எமது மொழியானது சங்ககாலத்திலேயே ‘தமிழ்’ என்ற பெயர் பெற்றுவிட்டது என்பது தெளிவாகின்றது.  ஆனால், பேச்சு வழக்கில் அதற்கு முந்தியே அப் பெயர் பெற்றிருக்கும். பாரதியார் நாடு குறித்துப் பாடிய பாடலொன்று, இங்கு எமக்கு தமிழ் மொழி குறித்து மிகப் பொருத்தமாக அமைகின்றது.

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்
சூழ்கலை வாணர்களும்இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்

பொருள் – முற்காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தையும் நன்கு உணரும் பல கல்வி கற்றவர்களும் இவள் என்று தோன்றியவள் என்று சொல்ல இயலாத இயல்பை உடையவள் எங்கள் தாய்.

முடிவாக, மேற்கூறிய தமிழ்மொழிக்கான பெயர்க் காரணத்தினைக் கொண்டு பார்க்கையில் (அமிழ்து – தாய்ப்பால் – தமிழ்), தாய்மொழி என அழைப்பதற்குப் பொருத்தமான மொழியாக ‘தமிழ்’ மொழியினை விட எந்த மொழி அமையும்? இத்தகைய ஒரு சிறப்பான மொழியினை எமது அடுத்தடுத்த தலைமுறைகளிற்கும் கடத்துவோம் என இன்றைய தாய்மொழி நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

வி.இ.  குகநாதன்