கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாக முத்து மாவட்டம் ஆப்’பில் தன்னார்வலராக பணி செய்ய பெயர் பதிவு செய்தோம்.

தேவைப்படும்போது அழைப்பதாக அதில் பதில் வந்தது. பதிவு செய்ததற்கான வரிசை எண்ணும் தரப்படவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, தூத்துக்குடி தாலுகா அலுவலகம் சென்று “தன்னார்வலராக மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பணி செய்ய விருப்பம், இதனால் ஆன்லைனில் பதிவு செய்தோம், ஆனால் எந்த ஒரு தகவலும் இல்லை” என்றோம். அங்கு இருந்த பணி அலுவலர்கள் “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தான் ஒரு பெயர் பட்டியல் வந்தது அதில் உங்கள் பெயர் இல்லை, தேவைப்பட்டால் கூப்பிடுவோம்” என்றனர். “அப்படியானால் எங்கள் பெயர் மற்றும் செல்போன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” என்றோம். அவர்கள் “இல்லை நாங்களே கூப்பிடுகிறோம்” என்றனர்.

“எங்கள் பெயர், செல்போன் எண் இல்லாமல் எங்களை எப்படி நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்?, எங்கள் அமைப்பின் சார்பில் தான் அரசு, தன்னார்வலர்களை  நிவாரணப் பணிகளில் இணைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம், அதனால் நாங்களும் நிவாரணப் பணி செய்ய விரும்புகிறோம்”  என்று தெரிவித்தோம்.

அதன்பிறகு “பலர் பெயர் பதிவு செய்கிறார்கள், கூப்பிட்டால் வர மறுக்கிறார்கள், சார்” என்று கூறியவாறு அவர்களின் பராமரிப்பில் இருந்த ஒரு நோட்டில் எனது பெயரையும் PRPC செயற்குழு உறுப்பினர் மைக்கேல் பெயரையும் பதிவு செய்தனர்.

11-04-2020 அன்று மதியம் 12.00 மணிக்கு “இரண்டு போட்டோக்களை எடுத்துக் கொண்டு  தாலுகா அலுவலகத்திற்கு உடனே வாங்க”என்று தாலுகா அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள். அங்கு சென்ற நாங்கள் தலா இரண்டு போட்டோக்கள் கொடுத்ததும் ஐந்து நிமிட நேரத்தில் தன்னார்வலர் அடையாள அட்டை கொடுத்தார்கள்.

அடையாள அட்டை பெற்ற பிறகு நாங்கள், எங்கே போகவேண்டும்?, என்ன வேலை? சார்… என்று கேட்டோம்.

“போல்டன்புரம் போனும்”,

“அங்க உள்ள ரேஷன் கடை பொருட்களை பொதுமக்களுக்கு வீடு வீடாக போய் கொடுக்கனும்” என்றனர்.

போல்டன்புரம் பகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதி. மாநகரத்தின் கிட்டத்தட்ட மையப் பகுதி. அந்தோணியம்மாள் என்ற 65 வயது பெண்மணி இறந்து இதற்கு முந்தைய நாள் தான் அடக்கம் செய்யப்பட்டார். மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பலமான போலீஸ் பந்தோபஸ்து. வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத அளவில் பாதுகாப்பாக இருந்தது.

நாங்கள் போலீசாரிடம் விவரம் தெரிவித்து, ரேஷன் பொருள் விநியோகிக்கும் பகுதிக்கு சென்று விட்டோம். ரேஷன் கடை ஊழியர் பில் போடும் முனீஸ் என்பவரிடம் “எங்களை தாசில்தார் ஆபீஸிலிருந்து அனுப்பியுள்ளார்கள், நாங்கள் தன்னார்வலர்கள்” என்ற விவரம் கூறி அறிமுகப்படுத்தினோம். “என்ன வேலை எங்களுக்கு”? என்றோம். அவர் “இப்பகுதியில்  ரேஷன் கடைக்கு மக்கள் வந்தால் கூட்டமாகிவிடும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், நாமே ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொருட்களை விநியோகிக்க வேண்டும், நீங்கள் மக்களை கூட்டமாக  சேராமல் ஒழுங்குபடுத்துங்கள்” என்றார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நமக்கு முன்பாகவே ராஜுவ் நகரை சேர்ந்த ராஜா (தி.மு.கவை சேர்ந்தவர்) டூவிபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் மற்றும் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பவர் ராஜேந்திரன் தன்னார்வலராக பணியை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சேர்ந்து “ரேஷன்கடை ஜாமான் வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கொஞ்சம் சத்தமாக ஒவ்வொரு வீட்டு முன்பும், காம்பவுண்ட் முன்பும் தகவலை தெரியப்படுத்தினோம். குரலை கேட்டு வெளியே மக்கள் வந்தனர். போல்டன்புரம் பகுதி அதிமுக பிரமுகர் இளையராஜாவும் எங்களுடன் வந்து உதவி செய்தார்.

நாங்கள் இந்த (ஏப்ரல்) மாதம் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்களிடம் அவர்களின் கார்டை வாங்கி என்ன வேண்டும்? என்று கேட்டு, பில் போடும் முனீஸிடம் கொடுத்து பதிவு செய்து, பதிவு செய்த ரேசன் பொருட்களை எடை போட்ட பின்பு ஊழியர்கள் வீட்டின் முன்பு தூக்கிக் கொண்டு போய் சேர்த்தோம். சிலர் எங்களுக்கு சிரமம் என்று கருதி, லோடு ஆட்டோவில் எடைபோட்ட இடத்திற்கு வந்து சமூக விலகளை  கடைப்பிடித்து அமைதியாக, பொறுமையுடன் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

“இதோ… அந்த வீடுதான் கொரோனாவில் இறந்த பெண்ணின் வீடு என்று ஒருவித அச்சத்தோடு சிலர் எங்களிடம் காண்பித்தனர். அந்தத் தெருவில் தான் முதல் நாள் நாங்கள் விநியோகித்தோம். நாங்கள் அந்த தெருவில் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்த ஒரு சில மணி நேரங்களில் இருமுறை மாநகராட்சி வாகனத்தில் கிருமிநாசினி தெளித்துச் சென்றார்கள் சுகாதாரப் பணியாளர்கள்.

எங்களுடன் வந்த இளையராஜா (அ.தி.மு.க பிரமுகர்) என்பவர் தான் நாங்கள் கையுறை இல்லாமல் இருப்பதை பார்த்து அவர் வீட்டிலிருந்து எனக்கும், மைக்கேலுக்கும் மற்ற தன்னார்வலர்களுக்கும் எடுத்துத் தந்தார். மாஸ்க் நாங்களே கொண்டுவந்திருந்தோம். ஏற்கனவே 15 ரூபாய்க்கு வாங்கினோம். அது பாதுகாப்பான மாஸ்க் இல்லை என்பது தெரியும். ஆனால் மருந்துக் கடைகளில் போதுமான அளவு உயர்தர பாதுகாப்பான மாஸ்க்குகள் ஸ்டாக் இல்லை.

படிக்க:
♦ பொது சுகாதாரம் : பிகாரைவிட மோசமான நிலையில் குஜராத் !
♦ தன்னார்வலர்களுக்கான தடையை உடனே நீக்கு ! தமிழக தலைமை செயலாளருக்கு PRPC யின் மனு !

ரேஷன் கடை ஊழியரும், எடை போடுபவருமான தமிழ் என்பவருக்கு வயது சுமார் 56க்கு மேல் இருக்கும். அரிசியை அள்ளுவது, நிறுத்தி எடை போடுவது, குனிந்து பையில் தட்டுவதும் என நூற்றுக்கணக்கான முறை குனிந்தும், நிமிர்ந்தும் ஒரு நொடி கூட வீணாக்காமல் வெயிலில் வியர்வை சிந்தி, சிரித்தபடியும், நகைச்சுவை உணர்வுடனும் மக்கள் பணி செய்தார்.

பில் போடும் முனீஸ், யாராவது ஒருவர் பொருள் வாங்காமல் கால தாமதமாக வந்தாலும், அந்த ஒருவருக்காக தனது டூவீலரை திருப்பி கொண்டு போய் பில் போட்டு வருவார். கொரோணா நிதி வாங்காத கார்டுதாரர்களை, அவர்களே மறந்தாலும் இவர் நினைவுபடுத்தி ரூ. 1000/- வழங்கிக் கொண்டும் வந்தார். “அரசு ஊழியர்கள் ஒழுங்காக வேலையை செய்ய மாட்டார்கள், ஒப்பேத்துவார்கள்” என்ற பொதுக்கருத்தை இந்த கடைநிலை ஊழிர்கள் இருவரும் உடைத்துக் கொண்டே வந்தனர்.

போல்டன் புரம், ஒடுக்கப்பட்ட மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் அநேக குடும்பங்கள் உள்ள பகுதியானாலும், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வழக்கறிஞர்கள் எனவும் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர். பல குடும்பத்தினர்கள் சுய தொழில் செய்தும் பெரிய காங்கிரீட் வீட்டில் வசித்து வருகின்றனர். இது ஒரு கலவையான பகுதி.

“போல்டன்புரம் சொன்னா கேட்க மாட்டாங்க, ரப்சர் பண்ணுவாங்க” இப்படி ஒரு பிம்பம் உள்ள பகுதி. ஆனால் நாங்கள் ஒழுங்குபடுத்தாமல் அவர்களே பெரும்பாலும் சமூக இடைவெளியை கடைபிடித்தார்கள். முகக்கவசம் அணிந்து வந்து வாங்கினார்கள். ஒரு சிலர் அணியாமல் அப்படியே வந்தாலும் நாங்கள் சுட்டிக்காட்டியபிறகு உடனே அணிந்து வருவார்கள்.

வீட்டிற்கு முன்பு ரேஷன் பொருட்களை நாங்கள் சுமந்து இறக்கி வைத்தால் வாஞ்சையோடு நன்றி கூறுகிறார்கள். “தண்ணீர் குடிக்கிறீர்களா?” என்று பாசம் காட்டுகிறார்கள். இறந்த அந்தோணியம்மாள் வீட்டில் அருகே வசிக்கும் நடுத்தர வயதை சேர்ந்த ஆண்கள் சிலர் “ரெட் அலர்ட் பகுதி என்று தெரிந்தும் எங்க மக்களுக்கு வீடுவீடாக பொருட்கள் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி” என்று கூறி இரு கைகளை கூப்பி நன்றி தெரிவிக்கிறார்கள்.

11, 12-ம் தேதிகளில் அரிசி கோதுமை, பாமாயில், சீனி பருப்பு விநியோகிக்கப்பட்டது. இதில்லாமல் பிற பொருட்கள் கேட்டு வரும் பொதுமக்களிடம் “மற்ற பொருட்கள் இருப்பில் இல்லை” என்று ரேஷன் ஊழியர்கள் கூறுகிறார்கள். “சரி வந்தால் போடுங்கள்”, என்று கூறி மக்கள் நகருகின்றனர். யாரும் கோபப்படவில்லை. காரணம் அந்த ரேஷன் கடை எழுத்தர் மீதிருந்த நம்பிக்கைதான். அரசு பணியாளர்கள் நேர்மையாக இருந்தால் மக்கள் ஒத்துழைக்கின்றனர் என்பதை காண முடிந்தது.

இதற்கு (கொரோனாவுக்கு) முன்பு ரேஷன் அரிசி வாங்காத பல நடுத்தர குடும்பங்கள் ரேஷன் அரிசி வாங்குவதை அறியமுடிந்தது. அவர்களை மாடியிலிருந்து கீழே இறங்கியுள்ளது ஊரடங்கு. மக்களை சுகாதார பாதுகாப்பு கருதி கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அதே வேளையில், அரசாங்கம் அவர்கள் பசியை போக்க வேண்டும். ஏனைய நாடுகளைப் போல கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

பல குடும்பங்கள் எங்களிடம் “கொரோனா கூட எங்களை கொல்லாது, பசியில தான் நாங்க செத்துப் போவோம்” என்று ஒட்டிய வயிறை மறைத்து நிற்கிறார்கள்.
கண் கலங்கினால் கையறு நிலைமை வெளியில் தெரியும் எனக் கருதி வழக்கம்போல் இயல்பாய் இருக்க முயற்சி செய்கிறார்கள்.

முதல் நாளில் மாலை 6.00 மணிக்கு பணி முடிந்தது. லோடு ஆட்டோவில் இருப்பு உள்ள அரிசி மூட்டைகளையும், பருப்பு பைகளையும் ரேஷன் கடையில் இறக்கி வைத்து விட்டுத்தான் வீடு திரும்பினோம்.

வீடு கிளம்ப தயாரானபோது எங்களை ரேஷன் கடை ஊழியர் முனீஸ் அழைத்து, லோஷன் கொடுத்து கைகளை கழுவ சொன்னார். அதற்கு முன்பாகவே நாங்கள் அணிந்திருந்த பாலித்தின் கையுறை கிழிந்து தொங்கி விரல் வழி வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

2ம் நாளான 12-04-2020 அன்று KSPS ரோடு, கக்கன் பூங்காவிற்கு வடக்கு பக்க தெருவில் உள்ள வீடுகளில் மதியம் சுமார் 1.45 மணிக்குள் ரேடின் பொருள் கொடுத்து முடித்து விட்டோம். ரேஷன் பொருட்களை லோடு ஆட்டோவில் ஓட்டி வந்த அதன் டிரைவர்கள் பரமசிவன் (அ.ம.மு.கவைச் சேர்ந்தவர்) இன்னொருவர் பெயர் நினைவில் இல்லை. சலிப்புத் தட்டாமல் வண்டியை நிறுத்த, திருப்ப, மூவ் செய்யவும், ஓட்டுநர் பணி போக அரிசி, சீனி மூட்டைகளை நகர்த்துவது, ரேஷன் பொருட்களை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பது என பணி செய்தனர்.

ஆனால் 2ம் நாள் நாங்கள் மூடைகளைத் தூக்கவில்லை. கான்ட்ராக் வேலையில் லோடுமேனாக வந்த  பார்ப்பதற்கு படித்த இளைஞரைப்போல இருந்தவர் எங்களை மூடைகளைத் தூக்க விடாமல் அவரே எல்லா வேலைகளையும் சுறு சுறுப்புடனும் செய்தார்.

விநியோகம் முடிந்து, ரேஷன் கடைக்கு வந்து, உடன் பணி செய்த ரேஷன் கடை ஊழியர்களிடம்  விடை பெறும் போது தான்,  நான் ஒரு வழக்கறிஞர் என்றும், மைக்கேல் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் எனது ஜூனியர் என்றும், எனது அலுவலகமும் போல்டன் புரத்தில் தான் இருக்கிறது என்றும், அவர்களுடன் பணிபுரிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் நான் கூறி எனது விசிட்டிங் கார்டு ஒன்றை எடுத்து முனீஸிடம் கொடுத்து வந்தோம். அதுவரை எங்களை நாங்கள் சுய அறிமுகம் ரேஷன் கடை ஊழியர்களிடம் செய்யவில்லை. ஒருவேளை வழக்கறிஞர் என்று முன்பே தெரிந்தால் அவர்கள் எங்களை எப்படி வேலை வாங்குவதென்று யோசிப்பார்கள், வேலை செய்ய சொல்ல கூச்சப்படுவார்கள் என்றும் கருதியதால் விடைபெறும்போது தெரிவித்து, வேறு வேலை ஏதும் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி விடை பெற்றோம்..

முதல் நாள் (11.04.2020) மதிய சாப்பாடு ஓய்வில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் எங்களுக்கு அறிமுகமான சமூக அக்கறையுள்ள ஒரு சில நண்பர்களிடம் “தன்னார்வலராக பணி செய்ய நீங்கள் ஏன் வரவில்லை?, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணி செய்யலாமே?” என்று கேட்டோம். “கண்டிப்பாக செய்யலாம். இப்பொழுதும் உணவு தயார் செய்து தாசில்தாரிடம் கொடுத்து விநியோகம் செய்து வருகிறோம். ஃபீல்ட் ஒர்க் வேலைக்கு வந்தால் கை – முகக்கவசங்கள், மருத்துவ பரிசோதனை உட்பட எந்தவித பாதுகாப்பும் இல்லாத நிலையை உணர்கிறோம். அதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. வர்ற பசங்க குடும்பத்துக்கும் நம்ம ரெஸ்பான்ஸா இருக்கணும் சார்… ஏதாவது ஒண்ணுன்னா அவங்க பேரண்ட் நம்ம கிட்ட தான் கேப்பாங்க” என்றனர். அவர்கள் சொன்னது சரிதான். நாம் தன்னார்வலராக பணி செய்வதால் இதை உணர்ந்து கொண்டுள்ளோம்.

இதை  மனதில் வைத்து இரண்டாவது நாளான 12-04-2020 அன்று மதியம் சுமார் 2.00 மணிக்கு தன்னார்வலர் வேலை முடிந்த பின்பு தாசில்தார் செல்வகுமார் அவர்களை தாலுகா அலுவலகத்தில் சந்தித்தோம். தன்னார்வலராக வந்து வேலை செய்யும் இளைஞர்களின் பாதுகாப்பிற்காக தாங்கள் பாதுகாப்பு கவசங்கள்- மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர் கண்டிப்பாக இதை சரி செய்வதாக கூறினார். தொடர்ந்து நாங்கள் வேலை செய்ய எங்களுக்கு கையுறை முக கவசம் கிருமிநாசினி கொடுத்ததோடு நாங்கள் பசியில் இருந்ததை பார்த்து கடலை பாக்கெட்டுகள் கொடுத்தார். வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக்கொண்டு நன்றி கூறி வந்தோம்.

வரும் வழியில் தன்னார்வலராக பதிவு செய்து தொடர்ந்து 10 நாட்களாக  SFI பொறுப்பாளர் ஜாய்சன், கரிக்களம் காலனி மாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் பலர் மாவட்ட சொஸைட்டி தலைமை அலுவலகத்தில் காய்கறி எடை போட்டு – பேக்கிங் வேலை செய்து கொண்டிருக்கின்றவர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்தி பேசினோம். இப்படி பணி செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என அவர்களின் பணிச்சுமையால் ஏற்பட்ட முதுகுவலியை கூட வெளிக்காட்டாமல் புன்முறுவலித்தனர்.
இப்படி காணும் இளைஞர்கள் அனைவரும் தன்னார்வலராக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

மாவட்ட – மாநகர நிர்வாகம் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் மருத்துவ உதவிகளும் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கையை ஏற்படுத்தினால் ஏராளமான இளைஞர்கள்  கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துடன் பயமின்றி கரம் கோர்த்து துணை நிற்பார்கள்.

கெ. அரிராகவன், (வழக்கறிஞர்)
13-04-2020
செயலாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC)
தூத்துக்குடி மாவட்டக் கிளை.


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தொடர்புக்கு : 99623 66320.