கொரோனா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீள, இந்திய அளவில் நிதியைத் திரட்ட “பிரதம மந்திரி – அவசரகால நிலைமைகளுக்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (Prime Minster Citizens Assistance and Relief in Emergency Situations fund – PM CARES)” எனும் தனியார் அறக்கட்டளையை மத்திய அமைச்சரவை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள், பெரும் முதலாளிகள், நடிகர் – நடிகைகள் பொதுமக்கள் என பல தரப்பினரிடமிருந்து பணம் பெறும் இந்த அறக்கட்டளை மத்திய தலைமைக் கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் வராது என்று தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் இத்தகைய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தனியார் அறக்கட்டளைகள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வருமா என்பதும் தீர்க்கப்படாத பிரச்சினையாக நீதிமன்றத்தில் தேங்கி நிற்கிறது.

PM CARES திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிமுகப்படுத்தி, கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் தாராளமாக நிதி உதவி செய்து துணை நிற்குமாறு கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள், முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை அனைவரும் வாரி வழங்கினர். பே-டிஎம் போன்ற செயலிகளின் வழியே சிறிய அளவிலான தொகைகளையும் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதுபோக அனைத்து அரசு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்தும் இந்த நிதிக்கு பெரும் தொகைகள் செலுத்தப்பட்டன. பல இடங்களில் இது நிர்பந்திக்கப்பட்டும் மிரட்டியும் பெறப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில், மார்ச் 2020 ஊதியத்தில் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) வழங்குமாறு கோரி அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் என அனைவரின் ஒருநாள் ஊதியம் சேர்ந்து ரூ. 4 கோடி திரட்டப்பட்டது. ஆனால் PMNRF திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியை பல்கலைகழக துணைவேந்தர் PMCARES திட்டத்திற்கு திருப்பிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திலிருந்து வந்த நெருக்குதலின் பெயரிலேயே PMNRF-க்கு ஒதுக்கப்பட்ட பணம் PM-CARES திட்டத்திற்கு திருப்பிவிடப்பட்டது என தி ஹிந்து நாளிதழுக்கு அடையாளத்தை தெரிவிக்க விரும்பாத டெல்லி பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போல டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பயிற்சி மருத்துவர்களின் ஒருநாள் சம்பளத்தை கட்டாயப் பிடித்தம் செய்து பிரதமரின் PM CARES நிதிக்கு அளிக்கும்படி சுற்றறிக்கை அனுப்பியதை பயிற்சி மருத்துவர் சங்கம் நிராகரித்துள்ளது. மேலும் இந்த நிதிக்குத்தான் நன்கொடை வழங்க வேண்டும் என்று வற்புறுத்துவது தவறானது என்பதையும், ஏற்கெனவே மருத்துவர்கள் பலரும் தாமாகவே பல்வேறு அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் PMNRF ஆகியவற்றின் மூலம் நன்கொடை வழங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

படிக்க:
♦ உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !
♦ ஜியோ நிறுவனம் செல்பேசி கோபுரங்களை விற்கத் தடை – ஏன் ?

ஆகையால் தானாக முன் வந்து யாரேனும் கொடுக்க விரும்பினால் மட்டுமே கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிவாரண நிதி பங்களிப்பை யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் தங்களது உரிமையை பறிக்கக் கூடாது என்றும் பயிற்சி மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலை, எய்ம்ஸ் மருத்துவமனை வரிசையில் வருவாய்த்துறை ஒரு படி மேலே சென்றிருக்கிறது. இங்கு பணிபுரியும், அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், ஏப்ர்ல 2020-லிருந்து மார்ச் 2021 வரை ஒவ்வொரு மாதமும் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து 1 நாள் ஊதியத்தை PM-CARES திட்டத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 17 அன்று வருவாய்த்துறையின் இயக்குனர் மற்றும் தலைவரிடமிருந்து அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில் முன் வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு ஆட்சேபணை ஏதும் இருந்தால் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் அதனை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதாவது அந்த சுற்றறிக்கையைப் படித்துவிட்டு அமைதியாக இருந்தால், PMCARES நிதிக்கு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதாமாதம் நிதி தானாக எடுத்துக் கொள்ளப்படும். மறுப்பு இருந்தால், தனிக் கடிதத்தில் பெயரையும் பணியாளர் அடையாள எண்ணையும் சேர்த்து எழுதித் தர வேண்டும்.

பிற அரசாங்க நிறுவனத்தின் மூலமோ, லாக்டவுன் சமயத்தில் தொண்டு செய்யும் வேறு ஒரு தன்னார்வ நிறுவனத்தின் மூலமோ கொடுக்க வழியிருக்கும் போது, PM-CARES-க்கு ஏன் நன்கொடை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில் நன்கொடையே அதிகாரத் தொனியில்தான் கேட்கப்பட்டிருப்பதாகவும், நன்கொடை தராதவர்களை மறைமுகமாக மிரட்டும் தொனியிலும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
இங்கு மட்டுமல்ல, பல இடங்களில் நீதிமன்றங்களே இது போன்று PM CARES நிதிக்கு ஆள் சேர்த்துவிடும் வேலையைச் செய்திருக்கின்றன. ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் பிணை வழங்குவதற்கான நிபந்தனையில் PM-CARES நிறுவனத்திற்கு ரூ.35,000 வழங்க வேண்டும் என்றும் அரசின் ஆரோக்ய சேது நிரலை கைபேசியில் தரவிறக்கம் செய்து அதற்கு ஆதாரம் காட்டிய பின்னரே பிணை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஒரு நீதிபதி.

அரசாங்கம் இவ்வாறான சூழலில் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாகக் கேட்கலாம். அதில் தவறில்லை. ஆனால் இந்த நிதி பொதுத் தணிக்கைக்கு உட்படுத்தப்படாது என்பதுதான் பிரச்சினையே! PMCARES பொதுத்துறை நிதி அல்ல என்பதை இதுகுறித்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை
♦ விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தோள் கொடுங்கள் !

இதற்கு முன்னர், இயற்கைப் பேரிடர் காலங்களில் நன்கொடை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட PMNRF பணத்தை இயற்கைப் பேரிடருக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், PMCARES என்ற தனியார் அறக்கட்டளை துவங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது அரசு. ஆனால், PMNRF உருவாக்கபட்ட நோக்கம் அதுவாக இருந்தாலும், “மருத்துவ ரீதியான அவசரத் தேவைகளுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது. அந்த விதியைப் பயன்படுத்தியோ, அல்லது அதன் விதிகளில் கொள்ளை நோய்க் காலங்களிலும் இந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம் என்று மாற்றம் செய்வதன் மூலமோ அப்பணத்தைப் பயன்படுத்த முடியும். அப்படி செய்யாமல் PMCARES என்ற புதிய நிதி அறக்கட்டளையை மோடி அரசு துவங்கியிருப்பதன் பின்னணி என்ன ?

இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக உருவாக்கப்பட்ட PMNRF மூலம் வரும் பணமும் கூட பொதுப்பணக் கணக்கில் வருமா வராதா என்பது குறித்த வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள சமயத்தின் போது தொடுக்கப்பட்டது. அதே போல, அதன் கணக்கு வழக்குகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு 2018 முதல் இப்போது வரை தீர்வு காணப்படாமல் நீதிமன்றத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள PM CARES திட்டமும் இது போன்று எதற்குக் கீழும் வராத போது, வெளிப்படைத்தன்மை என்பது இங்கு எவ்விதத்திலும் உறுதி செய்யப்படவில்லை. தனியார் அறக்கட்டளைகளை தணிக்கை செய்ய தமக்கு அதிகாரம் இல்லை என மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான தொகையை நன்கொடையாகப் பெறும் PM-CARES அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கும் மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் யாரைக் கை காட்டுகிறார்களோ அவர்கள்தான் தணிக்கை செய்ய முடியும்.

கார்கில் போரில் மரணமடைந்த இராணுவ வீரர்களின் சவப்பெட்டி தொடங்கி ரஃபேல் உள்ளிட்ட இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் வரை அனைத்திலும் ஊழல் செய்த ஒரு கட்சியின் அமைச்சர்களின் கீழ் செயல்படும் இந்த PMCARES அறக்கட்டளைக்கு மக்கள் வழங்கும் கோடிக்கணக்கான நன்கொடைத் தொகை, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கவும், மருத்துவ சேவையை செழுமைப்படுத்தவும் பயன்படுமா? அல்லது கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப் பயன்படுமா?

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளைக் கையாளும் PM-CARES அறக்கட்டளை, அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அல்லது குறைந்தபட்சம், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு அமைக்கப்பட்டு அவர்களின் கண்காணிப்பிலாவது கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் இவை எதற்கும் மோடி அரசு தயாராக இல்லை. கடந்த ஏப்ரல் 21 அன்று விக்ராந்த் தொகாட் என்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, சப்பைக் காரணங்களைக் கூறி அந்த விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

வெளிப்படைத்தன்மை என்றால் கிலோ என்னவிலை எனக் கேட்கும் மோடி அரசு, நிதி கையாளுதலில் மட்டும் கண்காணிப்புக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளுமா என்ன ?


நந்தன்

செய்தி ஆதாரம் :
♦ DU Teachers Allege VC Diverted Rs 4-Crore Staff Donations From PMNRF to PM CARES, 
♦ FinMin Tells All Staff, Officers to Donate One Day’s Salary Per Month to PM-CARES.
 

2 மறுமொழிகள்

  1. கொரோனாவும், பிரதமர் நிதியும் !

    கொரோனா தொற்றுக்கு நிதி சேமிப்பதற்காக ‘PM Cares’ என்ற புதிய அமைப்பை மார்ச் 28ம் தேதி தொடங்கினார் மோடி.

    ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. இது 1948ல் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த பேரிடர் வந்தாலும், அமைப்பாக, தனி நபராக யார் ஒருவரும் இதற்கு நிதி அளிக்கலாம். 2011 முதல் வெளிநாட்டவரும் நிதி வழங்கலாம்.

    ஆண்டுதோறும் சில நூறுகோடிகள் இதில் பணம் சேர்கிறது. 2018-19ல் வந்த நிதி 783 கோடி. செலவு செய்யப்பட்டது 212 கோடி.

    2019, மார்ச் 31ம் தேதி தணிக்கை செய்யப்பட்ட கணக்கின்படி, இந்த அமைப்பில் சுமார் 3800 கோடி நிதி கையிருப்பு இருக்கிறது. கொரோனாவுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய மொத்தத்தொகையைவிட சில கோடிகள் அதிகம்.

    இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் நிதிக்கு, வருமான வரி விதி 80G ன் கீழ் 100% வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

    கையிருப்பில் சில ஆயிரம் கோடி நிதியோடு, 73 ஆண்டுகால பாரம்பரியத்துடன் இப்படி ஒரு அமைப்பு இருக்கும்போது, அவசர அவசரமாக திடீரென PM Cares என்ற ஒரு திட்டத்தை அறிவித்தார் மோடி.

    ஏன்?

    புதிதாக அறிவிக்கப்பட்ட PM cares Fund-க்கு வழங்கப்படும் நிதிக்கும் 100% வருமான வரி விலக்கு உண்டு. மேலும், CSR எனப்படும் corporate social responsiblity நிதியாகவும் இது ஏற்றுக்கொள்ளப்படும்.

    அது என்ன CSR?

    கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் கடந்த 3 ஆண்டு நிகர லாபத்தின் கூட்டுசராசரியாக, குறைந்தபட்சம் 2% தொகையை சமூக நலப்பணிகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் செலவிட வேண்டும்.

    2014 ஏப்ரல் 1ம் தேதி முதல் இது கட்டாயமானது. இந்த நிதியை நேரடியாகவோ, அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளை ஏற்படுத்தியோ, அல்லது ஏற்கனவே உள்ள அறக்கட்டளைகள், முகவர் அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மூலமாகவோ செலவிடலாம்.

    இந்த CSR திட்டத்தின் கீழ் இந்தியாவில் 16,000 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    2014-19 வரையிலான 5 ஆண்டுகளில், இந்தியாவில் CSRன் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள கம்பெனிகள் மொத்தமாக சுமார் 1.03 லட்சம் கோடி ரூபாயை சமூக நலப்பணிகளுக்காக ஒதுக்கியுள்ளன. இதில், 69,800 கோடி செலவிடப்பட்டுள்ளது. 33,200 கோடி செலவிடப்பட்டவில்லை.

    கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் செலவிடப்பட்ட தொகை, ‘Health care’-க்காகத்தான்.
    சுமார் 9,020 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை சொல்கிறது.

    இந்தியா முழுவதும் ‘கார்ப்பரேட்டுகள்’ செலவிட்டதாக சொல்லப்படும் இந்த 69,800 கோடியில் பெரும்பங்கு பொதுத்துறை நிறுவனங்களுடையது. ஆம். பாரத் பெட்ரோலியம், AIR India, ONGC, BSNL, IRCTC, NLC உட்பட, இந்தியாவின் ‘மகாராத்னா’ நிறுவனங்கள் அடங்கலாக, சுமார் 152 பொதுத்துறை நிறுவனங்கள் CSRன் கீழ் வருகின்றன.

    இந்த 152 நிறுவனங்கள் மட்டும் சுமார் 12,842.77 கோடி நிதியை கடந்த 5 ஆண்டுகளில் CSR நிதியாக செலவு செய்துள்ளன. அதாவது மொத்த செலவில் 18.6%.

    ஆனால், இந்த செலவு என்பது அந்த பொதுத்துறை நிறுவனங்கள் உண்மையில் ஒதுக்கிய மொத்த தொகையில் 50% மட்டுமே. ஏனெனில், பல பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கள் CSR-ன் கீழ் ஒதுக்கிய முழு நிதியையும் செலவிடுவதில்லை. உதாரணமாக, ONGC நிறுவனம் 2017-18 ஆண்டுக்கு 2017 கோடி நிதி ஒதுக்கியது. அதில் சுமார் 503 கோடி மட்டுமே செலவு செய்தது. அதாவது 25%.

    எனவே, ஒட்டுமொத்தமாக பொதுத்துறை நிறுவனங்கள் செய்த CSR ஒதுக்கீடு என மதிப்பிட்டால், கடந்த 5 ஆண்டுகளுக்கு சுமார் 30,000 கோடி. அதாவது, இந்தியா முழுவதும், கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ஒட்டுமொத்த கார்ப்பரேட் சமூக பங்களிப்பு நிதியில் சுமார் 30%.

    CSR-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட 16000 நிறுவனங்களில் 71% நிறுவனங்கள் 50 லட்சத்துக்கும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யும் தகுதி உடைய ‘சிறிய நிறுவனங்களே’. 10 கோடி ரூபாய்க்கு மேல் CSR செலவு நிதியாக ஒதுக்கக்கூடிய திறன் உள்ள ‘பெரிய நிறுவனங்கள்’ வெறும் 1.35% மட்டுமே. அதாவது அதிகபட்சம் 250 கம்பெனிகள்.

    ஆனால், இந்த 1.35% கம்பெனிகள் தான் இந்தியாவின் மொத்த CSR செலவினத்தில் 53% வரை பங்களிப்பு செய்துள்ளன. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட 69,800 கோடியில், சுமார் 36,994 கோடி ரூபாய், சராசரியாக 250 நிறுவனங்களால் மட்டும் செலவிடப்பட்டவை.

    இந்த 250 கம்பெனிகளுக்குள் குறைந்தது 50 அரசு பொதுத்துறை நிறுவனங்கள் வந்துவிடும். ஏனெனில், மேலே குறிப்பிட்டபடி பொதுத்துறை நிறுவனங்கள் பல ஒவ்வொரு ஆண்டும் சில நூறு கோடி நிதியை CSR நிதியாக ஒதுக்குகின்றன.

    எனவே, 10 கோடிக்கு மேல் CSR நிதி ஒதுக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் என பார்த்தால் அதிகபட்சம் 180-200 கம்பெனிகள் வரும். இவை அதிகபட்சமாக சுமார் 24000 கோடி ரூபாயை CSR நிதியாக செலவிட்டுள்ளன.

    இந்த கம்பெனிகள், இப்போது மோடி உருவாக்கியுள்ள PM Cares-க்கு அளிக்கும் நிதியை, இந்த CSR-ன் கீழ் கணக்கு காட்டிக்கொள்ளாலாம்.

    சிறப்பு என்ன தெரியுமா?

    PM Care-க்கு அளித்தால் ‘மட்டும் தான்’ CSR நிதியாக கணக்கு காட்ட முடியும். மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கினால், அதை CSR நிதியாக கணக்குக்காட்ட முடியாது.

    கேட்டால், மாநிலத்துக்கு நிதி வழங்கி CSR ஒதுக்கீட்டில் கணக்கு காட்ட வேண்டுமா?

    ‘மாநில பேரிடர் மேலாண்மை ஆணையருக்கு நிதி வழங்குங்கள்’ என்கிறது மத்திய அரசு.

    தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையத்தின் இணையதளத்துக்கு சென்று பார்த்தால், பேரிடர் நிதி கொடுக்க வேண்டுமானால், ‘முதலமைச்சர் நிவாரண நிதிக்குத்தான் கொடுக்கும் வசதியுள்ளது’. மாநில பேரிடர் ஆணையருக்கு என்று தனியாக இல்லை.

    ஏன் இவ்வளவு குழப்பம்? மாநில முதலமைச்சர் நிதி திரட்டலையும் CSRன் கீழ் கொண்டு வந்தால் என்ன?

    கேட்டால், காங்கிரஸ் கொண்டு வந்த 2013 கம்பெனிகள் சட்டம் தான் காரணம் என்கிறார்கள் பாஜகவின் ஊடக வாய்மூலங்கள்.

    அந்தச்சட்டப்படி, மத்திய அரசு நிர்ணயித்திருக்கும், ‘2% குறைந்தபட்ச செலவு’ என்கிற அளவுக்கு உட்பட்டு,
    மாநில முதலமைச்சர் நிதிக்கு கொடுத்தால், அந்தத்தொகை CSR-ன் கீழ் வராது. மாறாக 2% செலவுக்கு மேல், அதைத்தாண்டி, கூடுதல் நிதியை, ஒரு நிறுவனம் CSR நிதி ஒதுக்கினால், அதை மாநில முதலமைச்சர் நிதிக்கு வழங்கலாம். அந்த நிதியை CSR கணக்கில் காட்டலாம்.

    இவ்வளவு எல்லாம் ஏன், 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு,
    ஸ்வட்ச் பாரத், கங்கை தூய்மைத்திட்டம் போன்றவற்றுக்கு நிதி வழங்கினாலும், அதை 2% தொகைக்கு உட்பட்டே CSR நிதியாக ஏற்றுக்கொள்ளலாம் என கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் சாதாரண அறிவிப்பாணை மூலம் எளிமையாக அறிவித்தது.

    அப்படி ஏன் இப்போது, மாநில முதலமைச்சர் நிதி விவகாரத்திலும் அறிவிக்கக்கூடாது?

    மத்திய அரசிடம் பதில் இல்லை.

    மாறாக, ஒட்டுமொத்த CSR- சட்டத்தையும் மாற்றப்போவதாக அறிவித்து மக்களிடம் கருத்து கேட்க தொடங்கியுள்ளது மோடி அரசு.

    இப்போது இதைக்குறிவைத்தே பல நிறுவனங்களும், மோடியின் PM cares-க்கு நிதி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில், கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு பேரழிவுகளும், பேரிடர்களும் வந்துள்ளன. அப்போதெல்லாம், நேரு உருவாக்கிய பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் கொடுக்காதவர்கள், மோடி அறிவித்த அடுத்த சில நாட்களுக்குள் அள்ளிக்கொடுத்துள்ளார்கள்.

    கடந்த 5 ஆண்டுகளில், CSR நிதியிலிருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு வந்த தொகை 757 கோடி. ஆனால், மோடி அறிவித்த PM care-க்கு ஒரே வாரத்தில் 6500 கோடி வசூலானது. இவற்றில் மிகப்பெரும்பான்மையான பணம், தனியார் கார்ப்பரேட்டுகளுடையது.

    இந்த பணம் அனைத்துக்கும் 100% வருமான வரி விலக்கும் உண்டு. வருமான வரித்துறையின் 80G பிரிவு இவ்விலக்கை அங்கீகரிக்கிறது.

    ஆனால், பிரிவு 80G – ன் படி, ‘பணமாக’ கொடுத்தால் மட்டும் தான் வரிவிலக்கு. பொருளாக கொடுத்தால் விலக்கு கிடையாது. அதனால் தான், பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பணமாக கொடுக்கின்றன.

    காங்கிரஸ் ஆட்சியில், 2014ல் இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டபோதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது கார்ப்பரேட்கள் நிதி மோசடி செய்யவே வழிவகுக்கும் என கண்டனங்கள் எழுந்தன.
    இப்போது, PM Cares-க்கு கீழே வழங்கப்படும் நிதிகளின் தன்மை இன்னமும் சந்தேகங்களை எழுப்புகிறது.

    ஏனெனில், CSR விதி, குறைந்தபட்சம் 2% தொகையை செலவிட வேண்டும் என்று மட்டும் தான் சொல்கிறது. அதிகபட்சம் எவ்வளவு என கணக்கு கிடையாது. உணவு, உடை, பாதுகாப்பு என பல்வேறு வடிவங்களில்
    நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்; எனில், எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கு காட்டலாம். அதற்கு உதாரணம் தான், 2%க்கு மேல் செலவு செய்தால், மாநில முதலமைச்சர் நிதியும் CSR-ல் சேர்க்கப்படும் என்கிற சரத்து.

    தனியார் ஏஜென்சி அல்லது அறக்கட்டளை மூலம் உதவுவதை CSR விதிகள் அங்கீகரிக்கிறது. இதைப்பயன்படுத்தி நடக்கும் இடைத்தரகர் வியாபாரம், மோசடிகள் மிக மிக அதிகம் என இந்திய கார்ப்பரேட் விவகார நிறுவனம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது.

    இப்போது, மோடியின் PM cares பெயரில், ஒரு பேரழிவுக்கு மத்தியில், அரசாங்கத்தின் மூலமாகவே கூச்சமில்லாமல் அப்படியான தவறுகள் நடக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

    பிரதமர் பேரிடர் நிதியை காங். தலைமை கையாள முடியுமென ஒரு ஷரத்து உள்ளதாகவும், எனவேதான் பிரதமர் PM Cares கணக்கை ஆரம்பித்தாகவும் வாட்ஸ்அப்பில் செய்தி உலா வருவதுண்மையா?

    PMNRF என்பது ஜன. 1948ல், பாக். பிரிவினை கலவரங்களுக்கு மத்தியில், அகதிகளுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. அதன் பயன் பின்னாளில் பல்கியது. எனவே, அமைப்பு தொடங்கப்பட்டபோது நிதி திரட்டலை எளிமைப்படுத்த காங். தலைவர், டாடா அறக்கட்டளை போன்றவை உறுப்பினராக்கப்பட்டனர். அதில் தவறில்லை.

    1948, ஜன 24 வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தியிலேயே, அமைப்பைத் தொடங்கும்போதே வெளிப்படையாக யார் யார் உறுப்பினர், ஏன் இந்த அமைப்பு என தெளிவாக அறிவித்துள்ளனர். இப்போதுபோல தொடங்கிவிட்டு, கேள்வி கேட்பதால் விளக்கம் சொல்லவில்லை.

    அன்றைக்கு காங் தலைவர் பட்டாபி சீத்தராமையா. நேருவோ, அவர் குடும்பமோ அல்ல.

    இன்றைக்கும் PMNRF-க்கு தலைவர் பிரதமர் தான். அவர் வழிகாட்டல் இல்லாமல் நிதியை கையாள முடியாது.

    ஆனால், பிரதமர் எப்படி கையாள்கிறார் என உறுப்பினர்களுக்குத் தெரியும். அது இன்றைய பிரதமருக்கு இடைஞ்சலாக இருக்கலாம். அதனால்தான், தன் அமைச்சரவை சகாக்களை மட்டும் அவர் உறுப்பினராக்கியுள்ளார்.

    ‘மோடியின் இந்தத்திட்டம் என்பது முழுக்க முழுக்க கொரோனா எதிர்ப்புக்கானது. தனித்துவமானது. இந்த நிதியை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. ஆனால், நேருவின் நிவாரண நிதி திட்டம் அனைத்து பேரிடர்களுக்குமானது. எனவே, தனித்துவமான இந்த நிதி சரியாக செலவழிக்கப்படும்’ என்கிறார்கள் இந்துத்துவர்கள்.

    நேரு கொண்டு வந்த பிரதமர் நிவாரண நிதி அனைத்து பேரிடர்களுக்குமானது என்பது உண்மை. பேரிடர் மட்டுமல்ல, இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, ஆசிட் வீச்சு போன்றவற்றுக்காகக் கூட நேருவின் பிரதமர் நிவாரண நிதியை பயன்படுத்தலாம். ஆனால், மோடி அறிவித்திருக்கும் PM Cares தன்னுடைய நோக்கமாக, ‘Health emergency or any other kind of emergency’ என்கிறது. இந்த ‘Any’, ‘Other’, ‘Kind’ மூன்று வார்த்தைகளுமே குழப்பமானவை. சொல்லப்போனால் நேர்மையற்றவை; வெளிப்படைத்தன்மையற்றவை; எப்படி வேண்டுமானாலும் திரித்துக்கொள்ளப்படக்கூடிய அபாயமுள்ளவை. Simply, Non- Specified words.

    ‘இந்தியாவின் எந்த ஒரு Consolidated Fund-யும்’ நிர்வகிக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவை. ஆனால், மோடியின் PM cares – நிதியை பயன்படுத்த அப்படி அனுமதி தேவையில்லை. எனவே, இதுபோன்ற அவசர காலத்தில் ‘சிக்கல்’ இல்லாமல் உடனடியாக பணம் வழங்கலாம் – அதற்காக திடீரென PM Cares உருவாக்கப்பட்டது’ என்கிறார்கள் முட்டுக்கொடுப்பாளர்கள்.

    தவறு.

    நேரு கொண்டு வந்த PM Relief Fund நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்டதல்ல. நேருவால் உருவாக்கப்பட்டது. PM relief Fund நேரடியாக பிரதமரின் வழிகாட்டுதல் படி இயங்கக்கூடியது. பிரதமரின் Joint – Secretary தான், பிரதமர் நிவாரண நிதிக்குச் செயலாளர். அவர் மூலமாகத்தான் நிதி ஒதுக்கீடு நடக்கும். எனவே, நேரு கொண்டு வந்த திட்டத்துக்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவை என்பது பொய்.
    எனில், முறையான கணக்கு வழக்குகளும், பாரம்பரியமும் கொண்ட பிரதமர் நிவாரண நிதியை புறந்தள்ளி, புதிய திட்டம் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?

    சரி. Health Emergency-க்கான சிறப்பு நிதி என்றே வைத்துக்கொள்வோம். அந்த Healthக்கு ஆதாரம் என்ன? மருத்துவமனைகள்.

    நேருவின் பிரதமர் நிவாரண நிதியோடு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய – மாநில அரசு மருத்துவமனைகளும், நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

    ஆனால், மோடியின் Health emergency’-க்கான ‘Special’ PM Cares-ல் எதாவது மருத்துவமனை இணைக்கப்பட்டுள்ளதா?

    கிடையாது.

    சரி. ஏற்கனவே, நேருவின் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை, மோடியின் திட்டம் அங்கீரித்து நிதி வழங்குமா?

    தெரியாது.

    ஒரு மருத்துவ பேரழிவு நேரத்தில், மருத்துமனைகளைப் பற்றி சிந்திக்கும் இந்த அடிப்படை அம்சத்தைக்கூட செய்யாமல் பிறகு என்ன தனித்துவமான சுகாதார நிதி திரட்டல்?

    பணமதிப்பிழப்பு குறித்த தன்னுடைய நாடாளுமன்ற உரையில், முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய ‘organized loot, legalised plunder’ என்ற வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

    – விவேக் கணநாதன் facebook

Leave a Reply to harinivas பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க