ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த உட்கட்டமைப்பு நிதி மூலதன நிறுவனமான ப்ரூக்ஃபோர்ஸ் நிறுவனம் செய்யவிருக்கும் ரூ.25,215 கோடி அந்நிய நேரடி முதலீட்டிற்கு கடந்த ஒன்பது மாதங்களாக ஒப்புதல் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.

அம்பானியின் நெருங்கிய நண்பரான மோடி ஆட்சியில் இருக்கும் போது, இப்படி எல்லாம் நடப்பது சாத்தியமா என்ற சந்தேகம் வரலாம். அதுவும் சுமார் 25,000 கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மோடி அரசு எப்படி ஒப்புதல் கொடுக்காமல் மறுத்திருக்கும் ?

இது குறித்து தி வயர் இணையதளம் உள்துறை அமைச்சகம் மற்றும் தொலை தொடர்புத்துறையைச் சார்ந்த அதிகாரிகளிடமிருந்து பல்வேறு தகவல்களைத் திரட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ டிஜிட்டல் பைபர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) என இரு உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனங்களை உருவாக்கியது.
இதில் அலைபேசி கோபுரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பது RJIPL நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக தற்போது 1,06,000 கோபுரங்கள் இருக்கின்றன. தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 39, 920 கோடி ரூபாயாகும். மேலும் சுமார் 68,000 கோபுரங்கள் கட்டப்படவுள்ளன. அதன் பின்னர் இந்நிறுவனத்தின் மதிப்பு சுமார் 60,600 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் மற்றொரு துணை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட் (RIIHL) எனும் நிதி மூலதன நிறுவனம், டவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ட்ரஸ்ட் (TIT) எனும் உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்தைத் துவக்குகிறது.

இந்த TIT நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃப்ராடெல் பிரைவேட் லிமிடெட் (RJIPL) நிறுவனத்தின் பங்குகளில் சுமார் 51% பங்குகளை வாங்குகிறது. அதாவது தனது துணை நிறுவனத்தைக் கொண்டே மற்றொரு துணை நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குகுறது. இந்த நிறுவனத்திலிருந்து (TIT) தனக்கான கோபுரங்களை வாடகைக்குப் பெற்றுக் கொள்ள 30 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை ஜியோ நிறுவனம் போட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2019, ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கனடாவைச் சேர்ந்த ப்ரூக்ஃபீல்ட் என்ற உட்கட்டமைப்பு முதலீட்டு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.

படிக்க:
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
♦ ரேபிட் கிட் : வெறும் ஊழல் அல்ல மக்களின் உயிரோடு விளையாடும் விளையாட்டு !

இந்த ஒப்பந்தத்தின் படி TIT நிறுவனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீயல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (RIIHL) நிறுவனத்தோடு கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் நிறுவனத்தின் துணைநிறுவனமான BIF IV Jarvis India Pvt. Ltd என்ற நிறுவனமும் பங்குதாரராக இணைந்து கொள்ளும். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு நிறுவனமான செபி (SEBI), நிறுவனப் போட்டி கட்டுப்பாட்டு நிறுவனமான CIC, மற்றும் உள்துறை அமைச்சகம், தொலைதொடர்பு ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்த பின்னர், TIT நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை BIF IV Jarvis நிறுவனம் ரூ. 25,215 கோடி கொடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொள்ளும். இதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாரம்.

செபி (SEBI) வழிகாட்டுதல்களின்படி தனியார் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து நேரடி முதலீட்டாளர்களோ அல்லது பங்குதாரர்களோ தேவை. அந்த வகையில், ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் கனடியன் பென்சன் ஃபண்ட், பிரிட்டிஷ் கொலம்பியா இன்வெஸ்ட்மெண்ட் மெனேஜ்மெண்ட் கார்ப்பரேசன், பப்ளிக் இன்வஸ்ட்மெண்ட் ஃபண்ட் ஆஃப் சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஜி.ஐ.சி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தனியார் உட்கட்டமைப்பு அறக்கட்டளையில் முதலீடு செய்துள்ளது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் செபி (SEBI) இதற்கான ஒப்புதலை அளித்துவிட்டது. ஜனவரி 2020-ல் CIC-யும் இந்த இணைப்பிற்கான ஒப்புதலை வழங்கிவிட்டது. இறுதியாக தொலைதொடர்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்து நிற்கிறது. இந்த ஒப்புதல் கிடைக்கப்பெற்றதும் மொத்த தொகையான ரூ. 25,215 கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்குக் கிடைக்கப் பெறும்.

உட்கட்டமைப்புத் துறையில் ஒரே நிறுவனத்தின் மூலம் வரும் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு இது. அப்படியிருக்கையில் தொலை தொடர்புத்துறையும் உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்க தயக்கம் காட்டுவது ஏன் ?

ப்ரூக்ஃபீல்ட் நிறுவனம் தனது மூலதனத்தைக் கொண்டு வரும் வழிமுறையும், அம்மூலதனத்திற்கான வட்டியாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாட்டில் இருந்து வெளியேற்றப்படப் போகும் அந்நியச் செலாவணியும்தான் இந்த தயக்கத்துக்குக் காரணம் என்கிறது தி வயர் இணையதளம்.

முதல் விசயம், இந்த முதலீடு சிங்கப்பூர், பெர்முடா போன்ற வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் கொண்டு வரப்படுகிறது. சிங்கப்பூரில் மட்டும் மூன்று அடுக்குகளாக கைமாறி இந்த மூலதனம் கொண்டு வரப்படுகிறது. அந்நிய மூலதனம் வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் வருவது இந்தியாவில் சட்டப்படியாக செல்லுபடியாகும் என்ற போதிலும், இந்த பணப் பரிவர்த்தனையில், பணம் எங்கிருந்து உள்ளே நுழைகிறது என்பது குறித்து துளியும் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்தால் தொலைதொடர்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கத் தயங்குவதாகத் தெரிவிக்கிறது வயர் இணையதளம்.

மேலும் இந்தியாவிற்குள் இம்மூலதனம் வந்த பின்னர், இந்த நிறுவனத்தின் (TIT) நிர்வாகம் சிங்கப்பூருக்கு மாற்றப்படவிருப்பதால், வழக்குகள் அனைத்தும் சிங்கப்பூர் நீதிமன்றத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும்.

இரண்டாவது விசயம், உள்ளே கொண்டு வரப்படும் மூலதனமான ரூ.25,215 கோடியில் பெரும்பகுதி 15% வட்டிக்குப் பெறப்பட்ட கடனாகக் காட்டப்பட்டு உள்ளே கொண்டு வரப்படுகிறது. இந்தக் கடனுக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டி இந்தியாவில் இருந்து அந்நியச் செலாவணியாக வெளியேறும். இந்த வட்டி விகிதமும் வரம்புமீறி இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடன் மற்றும் வட்டி விகிதம் குறித்து தொலைதொடர்புத்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல், நிர்வாக அமைச்சக அதிகாரிகளும் தயக்கம் காட்டியுள்ளனர். நிதியமைச்சகத்தின் ஒரு பிரிவாகிய வெளி வர்த்தகக் கடன் குழுவால் இந்தக் கடன் விவகாரம் பரிசீலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நிர்வாக அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

தொலை தொடர்புத்துறை மற்றும் நிர்வாகத்துறை அமைச்சகம் ஆகியவை முன்வைத்த விவகாரங்களை உள்துறை அமைச்சகமும் சுட்டிக் காட்டியுள்ளது. அதன் பின்னரே ரிலையன்ஸ் நிர்வாகம் இந்த வட்டிவிகிதத்தை 15%-லிருந்து 9%-மாக குறைத்து தனது முன்மொழிதலை வைத்துள்ளது என்கிறது தி வயர் இணையதளம்.
அந்நிய நேரடி முதலீடு எனும் பெயரில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் வரியில்லாச் சொர்க்கங்களின் மூலம் பணப் பரிமாற்றம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? ப்ரூக்ஃபோர்ஸ் நிறுவனம் செய்யப் போகும் முதலீட்டிற்கான கடனுக்கான வட்டியாக 15%-ஐ முதலில் தெரிவித்துவிட்டு, பின்னர் 9%-மாக மாற்றியதன் பின்னனி என்ன ?
இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் கேட்டுள்ளது தி வயர் இணையதளம். ஆனால் அதற்கும் அவர்கள் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

எது எப்படி இருந்தாலும், விரைவில் அதிகாரிகளோ, சட்ட வரம்புகளோ மாற்றப்பட்டு அந்த அந்நிய முதலீடு உள்ளே வந்துவிடும் என்பது உறுதிதான். ஆனால் இது போன்ற சிறிதளவு கேள்விகளும், கட்டுப்பாடுகளும் கூட இருக்கக்கூடாது என்பதுதான் அம்பானிகளின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. ‘ஆப் கி பார்’ மோடி சர்க்கார் அதனையும் நிறைவேற்றும்.


நந்தன்

நன்றி :  எக்கனாமிக் டைம்ஸ்,  த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க