ங்கை நதி சுகாதாரக் கேடடைந்து வருவதால், அதனைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற முயற்சி இன்று, நேற்றல்ல நூற்றாண்டைக் கடந்து நீடிக்கும் பிரச்சினை.

கங்கை நதியின் புனிதம், தூய்மை எல்லாம் புராணங்களில்தான் புகழ் பெற்றிருக்கிறது. ஆனால், கங்கைநதி ஒரு சாக்கடையாக ஓடுவதால் ஏற்படும் நாற்றமோ இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் ‘பிரசித்தி’ பெற்றிருக்கிறது. சுமார் 50 கோடி மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரமாக இருக்கும் கங்கை, உலகத்தில் அதிக சீர்கேடடைந்த நதிகளில் 6-வது இடத்தை வகிக்கிறது.

கங்கை நதியின் சுகாதார சீர்கேட்டுக்கான காரணங்களில் முதன்மையாதாக, கான்பூர், வாரணாசி, பிரக்யாராஜ் (லக்னோ), பாட்னா போன்ற நகரங்களில் உள்ள எண்ணற்ற சாயத் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக நிலக்கரியைக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய அனல் மின்நிலையம் கான்பூருக்கு அருகில் கங்கையின் துணைநதி பாண்டுவின் கரையில் அமைந்துள்ளது. இவ்வாலையில் ஓராண்டுக்கு ஆறு இலட்சம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இதனால் உருவாகும் 2.1 இலட்சம் டன் சாம்பல் மழைக்காலங்களில் கரைந்து ஆற்றில் கலந்து வருகிறது. இந்தச் சாம்பலில் மிகவும் நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருட்களும், தனிமங்களும் கலந்துள்ளன.

அடுத்து, கங்கை நதியின் கரையில் 48 சிறிய நகரங்களும், ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்களும் அமைந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கங்கையில்தான் கலக்கின்றன.

மேலும், ‘கங்கையில் குளித்தால் பாவம் தீரும்’ என்ற பார்ப்பனப் புரட்டை நம்பி விழாக்காலங்களில் மட்டும் சுமார் 7 கோடி பேர் கங்கையில் குளிக்கின்றனர். வெறும் குளியலாக மட்டும் அது அமைந்து விடவில்லை. சடங்கு என்ற பெயரில் ஊரில் உள்ள குப்பைகளை எல்லாம் சேர்த்து வைத்தும் பூசை புனஸ்காரம் என்ற பெயரில் பல பொருட்களையும் ஆற்றோடு விட்டு வருகின்றனர்.  இவை மிகப்பெரும் சுகாதாரக்கேடாக அமைந்துள்ளன.

இதனைவிட மோசமானது என்னவெனில், இறந்தவர்களின் பிணத்தை ஆற்றில் விட்டுவிடுவது என்ற பிற்போக்குத்தனம்தான். பாதி எரிந்த நிலையில் பிணங்களை ஆற்றில் தூக்கிப் போட்டுவிடுவது என்பதையும் ஒரு மரபாகத் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலை கங்கையில் சென்று கரைப்பது என்ற பார்ப்பன சடங்கு காசியில் மட்டும் ஆண்டுக்கு 40,000 பேருக்கு செய்யப்படுகிறது.

கங்கை நதியை சீர்கேடடையச் செய்பவை இவை மட்டும்தான் என்று கருதிவிட வேண்டாம். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான நீரேற்று நிலையங்கள் (பம்பிங் ஸ்டேசன்) நதியின் நீரோட்டத்தைத் தடுப்பதில், கழிவுகள் தேங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இப்படி முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காகவும் பார்ப்பன மூடநம்பிக்கைகளாலும் கங்கை நதி சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?
♦ கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !

***

ங்கை நதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டீஷ் ஆட்சியிலேயே எழுப்பப்பட்டிருந்தாலும் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில்தான் முதல்முதலாக இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் “தூய கங்கைக்கான தேசிய மிஷன்” என்ற ஒரு துறை நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

1986-ம் ஆண்டில் “கங்கை நடவடிக்கை திட்டம் 1” தொடங்கியது முதல் வாஜ்பாய் ஆட்சியில் “கங்கைத் தாய் தூய்மை செய்யும் திட்டம்” அதன் பின்னர் “கங்கை தூய்மைப் பணிகள்” என 2014-ம் ஆண்டு வரை ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால் கங்கை நீர் மாசுபடுவது தடுக்கப்படவில்லை. மாறாக, மேற்கண்ட காரணங்களால் அசுத்தமாவது அதிகரித்தது.

இதன் பின்னர் 2014-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க.-மோடி அரசாங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.28,970 கோடி ரூபாய் நிதியை கங்கை தூய்மைப்படுத்துவதற்கு ஒதுக்கியது. கங்கை நதியைத் தூய்மைப்படுத்த ஒதுக்கப்பட்ட இவ்வளவு பெரிய தொகையும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்பட்டது தானே தவிர, கங்கைக் கரையிலுள்ள ஆலை முதலாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி அல்ல.

2019-ம் ஆண்டுக்குள் கங்கையை முழுமையாக சுத்தம் செய்யப்படும் என உறுதி கூறப்பட்டது. பிரதமர் மோடியோ இது தனது சொந்தத் திட்டம் என்று வேறு கூறினார். ஆனால், 2019-ல் சிறிதளவு கூட முன்னேற்றமில்லாததால் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

கான்பூர் முதல் காசி வரையிலான நதியின் பகுதியில் (அழுகிய நலிந்த தண்டு என்று அழைக்கப்படும் பகுதி) ஓரிடத்தில் கூட குளிக்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் மோடி அரசின் மிகப்பெரும் பொருட்செலவு, ‘கடும்’ முயற்சிகளின் விளைவாக, முக்கியமான 70 இடங்களில் 5 இடங்களில் மட்டும்தான் குடிப்பதற்கும் 7 இடங்களில் ஓடும் நீரில்தான் குளிப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்ற அளவிற்குதான் ‘முன்னேற்றம்’ இருந்தது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கங்கை தேசிய மிசன், தேசிய கங்கை நதிப் படுகை ஆணையம், தேசிய கங்கா கவுன்சில் போன்ற பல மத்திய அமைப்புகளும், இவற்றின் ஒவ்வொன்றின் கீழே உள்ள மாநில அளவிலான பிரிவுகள் மற்றும் கங்கை நதிக்காக மாநில அளவில் தனிப்பிரிவுகள், கும்பமேளாவை நடத்துவதற்கான அரசின் பிரிவு, தனியார் தொண்டு நிறுவனங்கள், கங்கைக் கரையில் அமைந்துள்ள கோவில்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைத்துள்ள தொண்டு நிறுவனங்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் என பெரிதும் சிறிதுமான பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன.

மேலும், கங்கையைப் புனித நதியென்றும், கங்கைத் தாய் என்றும் போற்றுகின்ற பார்ப்பன சனாதனத்தைக் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க. மோடி அரசாங்கமும், உ.பி.யில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசாங்கமும் அதிகாரத்தில் இருந்தும் என்ன பயன்? அரசு அதிகாரத்தின் எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகள் புகுத்தப்பட்டிருந்தும், கங்கை இயற்கை அதிரடிப் படையில் (Ganga EcoTask Force) நான்கு பட்டாலியன் வீரர்கள் இருந்தும், ஐ.ஐ.டி.யில் படித்த அறிவாளிகளைக் கொண்டு சுத்தமான கங்கைக்கான விதிமுறைகளை வகுத்து, அவற்றை மீறுவோரை தண்டிப்பது, தண்டம் வசூலிப்பது, சிறையில் அடைப்பது போன்ற சட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தும் பலனேதுமில்லை. கங்கை புத்துணர்ச்சி படுகை மேலாண்மைத் திட்டம் (Ganga Rejuvenation Basin Management Programme) வகுக்கப்பட்டிருந்தும், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் நிறைவேறியது என்னவென்றால், 7 இடங்களில் குளிக்கலாம், 5 இடங்களில் நீரைக் குடிக்கலாம் என்பதுதான்.

இன்னும் குறிப்பாக, கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஒதுக்கிய தொகை மட்டுமின்றி மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் இதைவிட பல மடங்கு பொருட்செலவு செய்யப்பட்டிருக்கும். இவற்றில், பக்தி என்ற பெயரில் மக்கள் கொடுத்த ‘காணிக்கை’கள்தான் பெரும்பாலானவை. இவையன்றி, கங்கையைச் சுத்தம் செய்வதற்கு என தனியாகத் திரட்டப்பட்ட நிதிகளும் இவற்றில் அடங்கும்.

படிக்க:
♦ ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !
♦ தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

***

மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரங்களும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சிகளும் அவற்றின் விளைவுகளும் மேற்கண்டவாறு இருக்க, மார்ச் 24-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் ஒரு வாரத்திலேயே கங்கை நீரில் மாசு குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. அடுத்து வந்த ஏப்ரல் மாதத்தில் கங்கை நீரின் மாசு மிகபெரும் அளவில் குறைந்துவிட்டது. பெரும்பாலான பல இடங்களில் மக்கள் குளிப்பதற்கு ஏற்றவகையில் அமைந்திருப்பதாகவும், குடிக்கத்தக்கதாக இருப்பதாகவும் பலரும் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றனர். ஆற்று நீரில் இருந்து வரும் சாக்கடை நாற்றம் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இத்தனைக் காலம் கங்கையில் மிதந்து வந்த அழுக்கும் நுரையும், எங்கும் காணப்பட்ட கருநிற நீரும் மறைந்து தெளிவான நீரோட்டமும் மீன்கள் விளையாடுவதும் கண்டு பலரும் மகிழ்கின்றனர்.

சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசாலும் அதிகார வர்க்கத்தாலும் பக்தியின் பெயரில் மக்களைக் கொள்ளையடித்த கும்பல்களாலும் செய்ய முடியாததை, கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி அமலாக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு செய்துள்ளது என்றால், இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

இந்த ஊரடங்கு காலத்தில் கங்கை நதிக் கரையில் இருந்த ஆயிரக்கணக்கான சாயத் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகள் இயங்கவில்லை. இதனால், ஆலைக்கழிவுகள் கங்கையில் கலப்பது 90% தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுதான் முதன்மையான காரணம்.

இரண்டாவது, இந்தக் காலத்தில் கோவில்களில் பண்டிகைகள் கொண்டாடுவது அறவே நிறுத்தப்பட்டது. பிணங்களை ஆற்றில் மிதக்கவிடுவது, சாம்பலைக் கரைப்பது போன்றவை இல்லை என்று சொல்லும் அளவிற்கு குறைந்து விட்டன.

இவையன்றி, பெருநகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் கங்கையில் கலந்து வருகின்றன. இருந்தாலும், இந்தக் கழிவுகளின் அளவும் வழக்கத்தைவிட சரிபாதியாக குறைந்து விட்டன. காரணம், நகரங்களில் கேளிக்கை மையங்கள், தங்கும் விடுதிகள், உல்லாச ஹோட்டல்கள், அன்றாட தேவைக்கான உணவகங்கள் போன்றவை இயங்காமல் இருந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலாளித்துவ இலாப நோக்கத்தில் அமைக்கப்பட்ட ஆலைக்கழிவுகளும், பொறுப்பற்ற முறையில் சுத்திகரிக்கப்பட்டாத நகரக் கழிவுநீரை ஆற்றில் கலப்பதும் குறைந்து விட்டதுதான் கங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற தூய்மைக்கு முக்கியமான காரணம்.

***

இதேபோல டெல்லி, மும்பை, சென்னை போன்ற பல பெருநகரங்களில் காற்று மாசு பெருமளவு குறைந்துவிட்டது. முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்த கார்களின் ஓட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் குறைந்தள்ள வாகனப்புகையும், ஆலைகள் மூடப்பட்டதால் குறைந்துள்ள நச்சுப்புகைகளின் வெளியேற்றமும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

சாக்கடையாகிப் போயிருந்த கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஆலைகளின் கழிவுகளும், நகரங்களின் கழிவுகளும் நேரடியாக கங்கையில் கலப்பது தடுக்கப்பட வேண்டும். இதனை இந்தக் கட்டமைப்பிற்குள் செய்ய முடியாது. இந்த அரசுக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மடாதிபதிகளுக்கும்தான் சேவை செய்கிறதே ஒழிய, மக்களுக்கு சேவை செய்ய வக்கற்றதாக போய்விட்டன.

குறிப்பு : கங்கை நதிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. உலகத்தின் அரிய உயிரினங்களில் ஒன்றான நன்னீர்வாழ் டால்பின்கள் கங்கையில் வாழ்கின்றன. மற்றொரு அரிய உரியினமான மெல்லோட்டு ஆமைகளும் கங்கையில் வாழ்கின்றன. இந்த வகை ஆமைகள் கங்கையின் அடி ஆழப்பகுதியில் வாழ்பவை. கங்கையின் சுகாதாரக் கேட்டின் காரணமாக இவை அழிந்து வருகின்றன.

– புதியவன்