கொரோனா பாதிப்பு பரவத் தொடங்கிய பின்னர் கடந்த மார்ச் 24-ம் தேதி மோடி அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியது. கோடிக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்புவதற்கு அவகாசம் கொடுக்காமல் அவர்கள் பட்டினிக்கு தள்ளிவிடப்பட்டனர். இதற்கு எதிராக கண்டனக் குரல்கள் நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்கின; மக்களின் அவலக்குரல் ஊடங்களில் வெளிவந்த பின்னரே மோடி அரசு அவசர அவசரமாக மக்களுக்கு உதவித் திட்டத்தை அறிவித்தது.

ஒரு இலட்சத்து 75 ஆயிரம் கோடியில் மக்களுக்கு உதவிகள் வழங்குவது; வீட்டிற்கு ஒரு கிலோ பருப்பு; 20 கிலோ அரிசி, ஒரு குடும்பத்திற்கு ரூ.1000; கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 என பலவிதமான அறிவிப்புகள் வெளிவந்தன. இந்த திட்டங்கள் உண்மையில் மக்களுக்கு பலனளித்ததா?

சான்றாக ஒரு ரேசன் கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு என்று நிர்மலா சீத்தாராமன் அறிவித்த திட்டம்த்தை பார்க்கலாம்.

மார்ச் 26-ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பருப்பு மாதத் தொடக்கத்தில் வழங்குவதாக உறுதியளித்தார். இது பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் ஒரு அங்கம் என்றார். ஏப்ரல் 20ம் தேதி மீண்டும் மத்திய அரசாங்கம் இதை உறுதிப்படுத்தியது. இதில் 1,07,077 மெட்ரிக் டன் பருப்பு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியது.

நமது நாட்டில் 23.6 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன. ஒரு கார்டுக்கு ஒரு கிலோ ஒரு மாதத்திற்கு வழங்க வேண்டும் என்றால் 2,36,000 டன்கள் பருப்பு ஒரு மாதத்திற்கு மட்டும் தேவைப்படுகின்றது. ஆனால் மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தின்படி தேவையான பருப்பில் சுமார் 21 சதவீதம் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதாவது, இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 25-ம் தேதி வரை மாநிலங்களுக்கு 44,932 டன் பருப்பு மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பருப்பில் இந்த நாள் வரை 8.2 சதவீதமே வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தத் திட்டம் அமுலுக்குச் சென்ற யோக்கியதை.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், இது கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சமயத்தில் கொடுப்பதற்கானது மட்டுமே. அதாவது, இதனை ஒரு வாரத்திற்குள் மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதுதான் மக்களுக்கு பயனளிக்கும். ஆனால், ஒரு மாத காலமாகியும் இந்த வினியோகம் 8.2 சதவீதம் என்றால் மத்தியில் ஆளும் மோடி ஆட்சியின் யோக்கியதையை என்னவென்று சொல்வது?

இந்தியாவில் 95 கோடி மக்கள் சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும்பட்டினியால் பாதிக்கப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 95-வது இடத்தில் இருந்து 102-வது இடத்திற்கு சென்றுள்ளது. இது மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி.

படிக்க:
♦ விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !
♦ ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

நிர்மலாவின் “ஒரு கார்டுக்கு ஒரு கிலோ பருப்பு” என்ற திட்டம் எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பதை பாருங்கள். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தை ஒரு பொதுவான அளவீடாக எடுத்துக் கொண்டால், ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு வழங்குவதன் மூலம் ஒரு நபருக்கு 200 கிராம் பருப்பு தான் கிடைக்கும். இதுவும் ஒரு மாதத்திற்கான அளவு. ஆக, இந்தத் திட்டம் என்பது பட்டினியிலும் சத்துக் குறைபாட்டிலும் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்கு ‘ஒரு சோளப்பொறி’ அளவிற்குதான் பயனளிக்கும்.

அப்படி ஒரு சிறிய உதவியில்தான் 8.2 சதவீதத்தை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது.

ஆக, இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதற்கும் பொது வினியோக முறையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற இந்த வாக்குறுதி முற்றிலும் தோல்வியடைந்து விட்டது.

***

நிர்மலா சீத்தாராமன் மெத்தப் படித்தவர்; பார்ப்பன சமூகத்தில் இருந்து வந்தவர்; அவர் அமெரிக்காவில் இருந்தவர்; சிந்தனைக் குழாம் போன்றவற்றில் எல்லாம் பங்குவகித்தவர் என்று அவரது பெருமைகளை பார்ப்பன ஊடகங்கள்  ஊதிப் பெருக்கலாம். ஆனால், தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (NAFED) அதிகாரிகள் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி சொன்னால், நிர்மலாவைப் பற்றிய பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கும் பிம்பம் காற்றில் கூட நிற்காது.

பருப்பு வினியோகத்தை இரண்டு வகையில் செய்யலாம். அதில் ஒரு வகை, அரசு நேரடியாக விவசாயிகள் இடம் இருந்து பருப்பு தானியங்களை (பதப்படுத்தப்படாதவை) அரசு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து, அவற்றை அரசு மற்றும் தனியார் பதப்படுத்தும் ஆலைகள் (மில்கள்) மூலம் பதப்படுத்தி, அவற்றை லாரிகள், இரயில் மூலமாக மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து, அங்கிருந்து மாவட்டங்களுக்கு தேவையான அளவு பிரித்துக் கொடுத்து, அவற்றை ரேசன் கடைகள் மூலமாக வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு வினியோகம் செய்வதற்கு அந்தந்த மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை ஏற்றுக்கொண்டு உடனடியாக தங்களது மாநிலத்திற்கு தேவையான பருப்பின் அளவை மத்திய அரசுக்கு சொல்ல வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்த விவசாயிகளிடமிருந்து பருப்பு கொள்முதல் செய்யாமல் தனியார் நிறுவனங்கள்  கையிருப்பாக வைத்துள்ள தானியங்களை வாங்கி வினியோகம் செய்யலாம். இதுதான் அவசர காலத்தில் சாத்தியமான எளிய வழி. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி பதுக்கி வைத்துள்ள பருப்புகளை அரசுக்கு வழங்க அவை தயாராக இல்லை. அரசுக்கும் தனியார் நிறுவனங்களை நிர்பந்திக்கவில்லை. இந்த நிலையில் தான் முதல் வழிமுறையை அமுல்படுத்த முடிவு செய்துள்ளது.

***

NAFED அதிகாரிகள் தெரிவிப்பதைப் பாருங்கள்: ஊரடங்கு நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த பருப்பு வினியோகம் என்பது பெரிய வேலை. இந்திய உணவுக் கழகத்தில் (FCI) உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் வேலையுடன் இந்த பருப்பு வினியோகம் செய்யும் வேலையை ஒப்பிடக்கூடாது.

இந்தியாவில் உ.பி., ம.பி., இராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் சில மாவட்டங்களில்தான் பருப்பு வகைகள் அதிகமாக விளைகின்றன. அதனால், அந்த குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்துதான் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. பருப்பு பதப்படுத்தும் ஆலைகளும் அந்தப் பகுதிகளில்தான் இருக்கின்றன.

படிக்க:
♦ நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
♦ அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

இராஜஸ்தானுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் 11,000 டன் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால் அது மத்திய அரசிடம் இருந்து பெற்றது 2,000 டன் பருப்புதான். அதேபோல, உ.பி. தேவை 35,000 டன் பருப்பு. பெற்ற பருப்பின் அளவோ வெறும் 10 சதவீதம்தான்.

பருப்பு விளையும் முதன்மையான இந்த மாநிலங்களேயே இன்னமும் பருப்பு வினியோகத்தைத் தொடங்கவில்லை என்றால் மற்ற மாநிலங்களில் என்ன நிலைமை என்பது தனிக்கதை. பருப்பு விளையும் மாநிலத்திலேயே அந்த மாநில அரசுகளுக்கு முழுமையாக பருப்பு சென்று சேராததற்கு காரணம் என்ன? மக்களுக்கு எதிராக கட்டியமைக்கப்பட்டிருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பின் அதிகார வர்க்கத் தடைகளான இலஞ்சம், ஊழல், கமிசனும் மக்களுக்கு எதிரான அதிகார வர்க்க மனோபாவமும் தான் இதற்கு காரணம்.

***

மேலே சொன்னபடி பருப்பு விளையும் மாநிலங்கள் என்பது குறிப்பிட்ட சில வடமாநிலங்களில் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் தான். இங்குதான் பதப்படுத்தும் ஆலைகளும் உள்ளன. இந்த மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து விளைவித்த பருப்பு கொட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த தானியங்களை ஆலை மில்களில் அறைக்க வேண்டும். இங்கிருந்து பதப்படுத்தப்பட்ட (உடைக்கப்பட்ட) பருப்புகளை மாநிலங்களுக்கு லாரி மற்றும் இரயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இது மிகவும் சுருக்கமாக சொல்லப்பட்ட வினியோகச் சங்கிலி.

இந்த சங்கிலி இயங்க வேண்டும் என்றால் தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும் வேலை செய்ய வேண்டும். லாரிகள் இயங்க வேண்டும். சுமார் 2,46.000 டன் பருப்பு வினியோகம் என்றால் இதனைவிட அதிக எடை கொண்ட பருப்புகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இவை குறைந்தபட்சம் 6 பிரதானமான பரிமாற்றங்கள் நடத்தப்பட வேண்டும். (விவசாயி – கொள்முதல் நிலையம் – ஆலைகள் – மாநில அரசுகள் – ரேசன் கடைகள் – மக்கள்) அதாவது இந்த கொள்முதல் செய்யப்படும் தானியங்களைப் போன்று ஐந்து மடங்கு எடுத்துச் செல்லும் வகையில் லாரிகள் தேவை; அதற்கு தேவையான தொழிலாளர்கள்; லாரி சர்வீஸ் தொழில்கள் போன்றவை கணிசமாக இயங்க வேண்டும்.

நாடுதழுவிய ஊரடங்கினால் நிலைமை என்ன? தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். லாரி ஓட்டுனர்களில் கணிசமான பேர் தொடர்ந்து லாரி ஓட்டும் வேலைக்கே வருவார்கள் என்று சொல்ல முடியாது. மில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை ஆலை முதலாளிகள் கிராமங்களில் இருந்து அழைத்து வர முடியாது. இது மிகப்பெரிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்காமல் கொள்முதலோ வினியோகமோ முற்றிலும் சாத்தியமில்லை.

ஆனால், விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து செல்ல இயலாமல் தவிக்கின்றனர். சில இடங்களில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாலும் கொண்டு செல்ல முடியவில்லை.

இத்தனையையும் மீறி கொள்முதல் செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்றால் அதுவும் இல்லை. கொள்முதல் செய்த தானியங்களை பதப்படுத்தும் ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். திடீரென இத்தனை லட்சம் டன் பதப்படுத்துவதை ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் அளவிற்கு நமது நாட்டில தனியார் ஆலைகள் தயார் நிலையில் இல்லை.

கொள்முதல் செய்து, ஒப்பந்தங்களும் போட்டு தொழிலாளர்களும் கிடைத்தாலும் இவ்வளவு பருப்புகளை பதப்படுத்த குறைந்தது சில வாரங்கள் ஆகும்.

இந்த வினியோக சங்கிலியை உயிரூட்டுவதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று அரசு தரப்பில் செய்ய வேண்டிய பணிகள், மற்றொன்று தேவைக்கேற்ப மக்களை (தொழிலாளர்களை) ஈடுபடுத்துவது. இந்த இரண்டில் பிரதானமானது அனைத்து மட்டத்திலும் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான். இதற்கு, நாடு தழுவிய அளவில் குறைந்தபட்சக் கொள்கை முடிவு தேவை.

***

ரு கொள்கை முடிவு இல்லாமல் பருப்புகளை எடுத்து வருவதும், பருப்பு ஆலைகளை இயக்குவதும் சாத்தியமில்லை என்று அகில இந்திய பருப்பு ஆலை சங்கத்தின் தலைவர் சுரேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒரு பதப்படுத்தும் ஆலைகள் கூட கிடையாது. அங்கு பருப்பு வகைகள் உற்பத்தியும் கிடையாது. அங்கு இருக்கும் ஆலைகள் எல்லாம் கொல்கத்தாவில் தான் உள்ளன. அந்த மாநிலங்கள் ரோஸ் பருப்புகளைக் மக்களுக்கு கொடுக்கின்றன. அந்தப் பருப்புகள் உ.பி. அல்லது ம.பி.யில் இருந்து செல்ல வேண்டும். இது மிகப்பெரிய சவாலான திட்டம். இதற்கான கட்டமைப்பு நடைமுறையில் கிடையாது என்று NAFED (தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனம்) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“நிர்மலா சீத்தாராமன் சொல்வது போல செய்ய முடியாது. தானியங்களை முதல்நாள் இரவு ஊறவைத்து காலையில் விதவிதமாக சமைத்துவிட முடியாது. பதப்படுத்தப்படாத பருப்புகளை வாங்குவதற்கு எந்த மாநிலங்களும் தயாராக இல்லை” இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கிறார். “பருப்புகளை வாங்கிக் கொள்வதாக சொன்ன மாநிலங்கள் பதப்படுத்தப்பட்ட பருப்புகளைத்தான் கேட்கின்றன. சாதாரண சூழல்களிலேயே பருப்புகளைப் பதப்படுத்த 10 நாட்கள் தேவைப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்கின்றனர் அந்த அதிகாரிகள்.

அகர்வாலோ, “சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அவர்கள் ஏதோ சொல்கிறார்கள் ஏதோ செய்கிறார்கள். எந்த ஆலைகளும் அவர்களுடன் இணைந்து வேலையில் இறங்க தயாராக இல்லை. அரசு தரப்பில் ஆயிரக்கணக்கான கட்டுப்பாடுகளை சொல்கின்றனர், இதுபோன்ற காலங்களில் அதிகாரிகள் மிகவும் அதிகாரத்துவப் போக்கு கொண்டவர்களாக உள்ளனர். எங்களை அவர்கள் திருடர்கள் போல நடத்துகின்றனர். 20 சதவீத ஆலை முதலாளிகள் மட்டுமே அவர்கள் கொடுத்த வேலையைச் செய்கின்றனர்” என்கிறார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சிரஜ் ஹூசைன், “நிர்மலா சீத்தாராமன் சொல்கின்ற திட்டத்தை நிறைவேற்றும் கட்டமைப்பு நமது நஃபீட்-இடம் இல்லை. குறைந்தப் பட்ச ஆதார விலையில் அடிப்படையில் தான் மாநிலங்கள் பருப்பு வகை தானியங்களை விவசாயிகள் இடமிருந்து கொள்முதல் செய்கின்றன. இவற்றை நஃபீட் மில்களுக்கு அனுப்பி பதப்படுத்த வேண்டும் என்றால் அதற்காக அந்த ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். மூலப் பருப்புகள் கொள்முதல் நிலையங்களில் இருந்து அரவை மில்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் பின்னர் அங்கிருந்து அரைக்கப்பட்ட பருப்புகள் மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்புக் கழகத்தைப் போன்று இந்த ஒப்பந்தங்களையும் கட்டமைப்புகளும் நஃபீட்-இடம் இல்லை” என்கிறார்.

இந்தத் திட்டத்தை முறையான காலங்களில் அமுல்படுத்த வேண்டும் என்றால் ஒரு மாதத்தில் கூட முடியாது. அதற்கு முக்கியமான காரணம் இவ்வளவு வேகமாக பதப்படுத்தும் திறன் நம்மிடம் இல்லை என்கிறார்.

அரசுக்கு உண்மையிலேயே வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், இந்நேரத்தில் வெளிச்சந்தையில் இருந்து பருப்புகளை வாங்கி வினியோகம் செய்திருக்க முடியும். அப்படி ஒரு விருப்பம் அரசுக்கு இல்லை என்கின்றார் அதிகாரிகள்.

தேசிய அவசர நிலையை அறிவித்துவிட்டு, எங்களிடம் அது இல்லை, இது இல்லை என்று சொல்வதன் பொருள் என்ன? அரசிடம் எந்தக் கட்டமைப்பும் இல்லை. இருப்பதையும் செயல்படுத்தும் வகையில் அரசு கட்டமைப்பும் இல்லை. எல்லாம் செயலிழந்து நிற்கின்றன. இதுதான் இன்றைய நிலைமை.

இந்த உண்மையை மறைப்பதில் மட்டும் தீவிரமாக செயல்படுகிறது மோடி அரசு. ஆந்திரா, சட்டிஸ்கர், குஜராத் ஆகிய  மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் பருப்பு வினியோகம் முழு வீச்சில் நடப்பதாக தெரிவித்தது. ஆனால், அந்த மாநிலங்கள் பருப்பு வகைகளை சொந்தமாக வாங்கி வினியோகம் செய்து வருகின்றன என்று மத்திய அரசு அதிகாரிகள் அறிவிக்கின்றனர். உண்மையில் அந்த மாநில அரசுகள் ஏற்கெனவே வினியோகம் செய்து வந்த பருப்புகளைத் தான் தற்போது இலவசமாக வினியோகம் செய்துள்ளன. இதனையும் மத்திய அரசின் திட்டத்தில் கீழ் செயல்படுத்தியதாக சொல்கின்றர் மத்திய அரசின் அதிகாரிகள்.

மக்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும் போது இந்த அரசும் அதன் கட்டமைப்பும் தோல்வியுற்று நிற்பதையும் பாஜக அரசு அதனை மூடி மறைத்து மோசடிகள் செய்வது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பாசிச கும்பல் தனது செயலின்மையை ஒப்புக்கொள்ளாது; இதனை நாம்தான் அம்பலப்படுத்த வேண்டும்.

– புதியவன்


செய்தி ஆதாரம் :
Why Sitharaman’s ‘Pulses For All’ Promise Still Hasn’t Been Implemented

Sitharaman’s Promise of Pulses Through PDS Unlikely to See Fruition Anytime Soon 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க