“ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலை அகற்றும் வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போர் ஓயாது” என்பதை நிரூபித்த தியாகிகளின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் 22-05-2020 அன்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராமங்களிலும், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் படங்களை வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகள், திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, அமமுக, விசிக, தமிழ் புலிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பலரும் நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு (2019) மே-22 முதலாமாண்டு நினைவு தினம் நெருங்குகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம பிரதிநிதிகள், மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு-107 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட சார்பு ஆட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். மேலும் காவல்துறையால் இளைஞர்கள்-மாணவர்களின் முகநூல், வாட்ஸ்அப் கண்காணிக்கப்பட்டு அவர்கள் சட்டவிரோத விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். உளவுத்துறை மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டனர். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த நீதிமன்றத்தை நாடியவர்கள் மீதும் குவி.மு.ச பிரிவு 107-ன் படி பெண்களென்றும் பாராமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கும், அமைப்புக்களுக்கும், கட்சிகளுக்கும் ‘சட்டம் ஒழுங்கு கெடும், என்ற பொய்யான காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாண்டில் நினைவு தினம் வருவதை ஒட்டி நினைவு தினத்தை அனுசரிக்கவிடாமல் நெருக்கடிகள் முன்னணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் எதிர்ப்பில் தொடர்ந்து உறுதியுடன் உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் வெள்ளையம்மாள், பண்டாரம்பட்டியில் கிராம நாட்டாமைகள், சகாயம், சந்தோஷ், கன்னியம்மாள், சுதா, மாரியம்மாள் உள்ளிட்டோர் மீது பெண்களென்றும் பாராமல் ஸ்டெர்லைட் கைக்கூலிகளிடமிருந்து புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீளவிட்டானைச் சேர்ந்த A.S.முத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த காவல்துறை ஒடுக்குமுறையின் பின்னணியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது இங்கு கவனிக்கவேண்டியது.

ஆனாலும் இந்த பொய் வழக்குகளும் கைதுகளுகம் இவர்களின் உறுதியை அசைத்துக் கூட பார்க்கவில்லை. “துப்பாக்கி குண்டுகளை சந்தித்தவர்கள் இந்த பேப்பர் குண்டுகளுக்கு பயந்து விடுவோமா” என்கிறார்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சட்டப்படியான விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி கேட்டும் காவல்துறை கொரானோவை காரணம் காட்டி மறுத்தது. ஆனாலும் இந்தாண்டு இத்தனை ஒடுக்குமுறைகளையும் தாண்டி இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என பல்வேறு பிரிவினரும் நினைவஞ்சலி செலுத்தியதோடு, நினைவு தினத்தை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் நினைவஞ்சலி செய்திகளை பதிவு செய்தனர். கடந்தாண்டை விடக்கூடுதலாக பல இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நினைவஞ்சலியை சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் பகிர்ந்தனர்.

காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட அச்சத்தை தகர்த்து இந்த ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?

இன்னும் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் விடாப்பிடியாக உள்ள கிராம – மாநகர பகுதி மக்களும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உறுதியாக களத்தில் நிற்கும் இளைஞர்களும் ஆவார்கள்.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

காவல்துறை மற்றும் அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறை, ஸ்டெர்லைட்டின் பணபட்டுவாடா, ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி உட்பட இவற்றையெல்லாம் இடைவிடாமல் எதிர்கொண்டு, புறமுதுகு காட்டாமல் இறந்த போராளிகளை நெஞ்சிலேந்தி வழக்கு-கைதுக்கு அஞ்சாமல் எதிர்வினையாற்றும் சாதாரண பாமர மக்கள்தான், அவர்களுடைய போராட்டம்தான், நிரந்தரமாக மூடாமல் ஓயமாட்டோம் என்று ஒலிக்கும் அவர்களுடைய குரல்கள் தான் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களின் அச்சத்தை தகர்த்துள்ளது.

தனி ஒரு கிராமமாக பகுதியாக போராடி சோர்வு கொள்ளாமல், தங்களுக்குள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பு முறையில்தான், ஒரு கூட்டமைப்பு முறையில்தான் மத்திய-மாநில, சர்வதேச அரசுகளின் ஆசி பெற்ற பெரும் வேதாந்தாவை உறுதியோடு எதிர்கொண்டு போராடி வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9443584049, 7811940678, 8122275718,
7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க