அமெரிக்கா கிட்டத்தட்ட பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை ஒரு போலீஸ் காரணமே இல்லாமல் கழுத்தில் மிதித்தபடி எட்டு நிமிடம் அமுக்கி மூச்சுத் திணற வைத்து துள்ளத் துடிக்க கொலை செய்திருக்கிறது.

ஒட்டு மொத்த அமெரிக்க சமூகமும் கொதித்தெழுந்திருக்கிறது.

அமெரிக்க சமூகம் என்று பொதுவாக ஏன் சொல்கிறோம் என்றால் கொதித்தெழுந்திருப்பது வெறும் கறுப்பினத்தவர் மட்டுமல்ல.. வெள்ளை, பழுப்பு, மஞ்சள், கறுப்பு கலந்த ஒட்டுமொத்த அமெரிக்க சமூகமும்தான் கொதித்தெழுந்திருக்கிறது. நம் ஊரில் சிஏஏவுக்கு எதிராக மத வேறுபாடு இல்லாமல் முஸ்லிம்களோடு அனைவரும் கை கோர்த்தோமே.. அந்த மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விதவிதமான போராட்ட வடிவங்களை கையில் எடுத்திருக்கிறார்கள்.. அதில் முக்கியமான வடிவம் மண்டியிட்டு குரல் கொடுத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வது.. (Kneel down) ஆச்சரியகரமாக அதில் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல.. சில போலீசாரே பங்கெடுத்து அரசுக்கு எதிராக மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கைகள் பின்னால் கட்டப்பட்டு கழுத்தின் மீது முழங்கால் அழுத்தப்பட்டு உயிர் போய்க் கொண்டிருந்த கடைசி நிமிடத்தில் ஃப்ளாய்டு மறுபடி மறுபடி சொன்னது ஒன்றே ஒன்றுதான்.. : I can’t breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை.. அல்லது மூச்சுத் திணறுகிறது.

இதுவே எதிர்ப்பாளர்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. அனைவரும் இந்த I can’t breath என்ற வாசகங்களை கையிலேந்தி போராடிக் கொண்டிருககிறார்கள்.

பல்வேறு நகரங்களில் நடக்கும் எதிர்ப்புப் பேரணிகள் கலவரங்களாக மாறி பல கார்கள் எரிக்கப்படுகின்றன.. போலீஸ் நிலையங்கள் முற்று முழுக்க எரிக்கப்படுகின்றன.. கலவரக்காரர்களை அடக்க ரப்பர் குண்டுகளால்தான் சுட்டோம் என்று போலீஸ் சொல்லுகிறது. ஆனாலும் துப்பாக்கிச் சூட்டில் ஓர் இளைஞர் பலியாகி இருக்கிறார்.

போலீஸ் தரப்பிலும் பலர் காயம்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்..

ட்ரம்ப்புக்கு சொந்தமான ட்ரம்ப் டவர் கட்டிடங்களின் முன்புதான் இந்த ஆவேசப் போராட்டங்கள் உச்சமாக நடந்து வருகின்றன.

உங்களது தகவலுக்காக சொல்கிறேன். இந்த ட்ரம்ப் டவர் வணிகக் கட்டிடங்கள் உலகெங்கும் உள்ளன.. இந்தியாவிலும் ட்ரம்ப் டவர்கள் உள்ளன.. சமீபத்திய ட்ரம்ப்பின் இந்திய விசிட்டின் முக்கிய காரணங்களில் ஒன்று இந்த ட்ரம்ப் டவர்கள் என்கிறார்கள். இந்தியாவில் கொரோனா பேரிடருக்கு முன்பே ரியல் எஸ்டேட் துறையின் பெரும் வீழ்ச்சி துவங்கிவிட்டது. அதன் காரணமாக இந்த ட்ரம்ப் டவர்களின் பெரும்பான்மை வணிக மையங்கள் விற்பனையாகாமல் இருந்தன.. அந்த நஷ்டங்களைத் தவிர்க்க தனக்கு பல சலுகைகள் வேண்டும் என்று நம்ம மோடியிடம் அதட்டிப் பெற்றிருக்கிறார் டொனால்டு டிரம்ப்.

இந்த எதிர்ப்புகள் இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் துவங்கி இருக்கின்றன.. அனைத்து நாடுகளின் அமெரிக்கத் தூதரகங்கள் முன்பும் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை காட்டத் துவங்கி இருக்கின்றனர்.

டிரம்ப் அரசுக்கு இது மாபெரும் தலைவலியாக மாறி வருகிறது. அடக்க அடக்க போராட்டங்கள் அமெரிக்கா முழுக்கப் பரவி வருகின்றன..

டிரம்ப் கோபமாக அடங்கவில்லை என்றால் சுடப்படுவீர்கள் என்று ட்வீட் செய்திருந்தார்..

படிக்க:
♦ செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

இந்த ட்வீட் சமூக விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று ட்விட்டர் நிர்வாகமே ட்வீட்டை ரிமூவ் செய்திருக்கிறது. ட்ரம்ப் கொதித்துப் போயிருக்கிறார்.

இந்தப் போராட்டங்களுக்கு யாரும் தலைமை ஏற்கவில்லை.. நம் நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் மாதிரி, தூத்துக்குடி போராட்டம் மாதிரி மக்கள் தன்னெழுச்சியாக புறப்பட்டு வீதிக்கு வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலை மீறி தெருவுக்கு வந்து ஆக்ரோஷமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ட்ரம்ப் அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் ட்ரம்ப்பின் உளவுத்துறை ஒரு விஷயத்தை கண்டுபிடித்து சொல்லி இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு சமூகம் இருக்கிறது. அதை ஏன் சமூகம் என்று சொல்கிறோம் என்றால் அது ஓர் அரசியல் அமைப்பு அல்ல.. கட்சியும் அல்ல. ஏன் இயக்கம் கூட இல்லை.. அதற்கு தலைவர்கள் என்று யாரும் இல்லை.. ஒருங்கிணைப்போர் என்றும் யாரும் இல்லை. பொதுவாக கார்ப்பரேட்டுகளிடமும் பெரும் செல்வந்தர்களிடமும் பணம் குவிவதையும் சாதாரண குடிமக்கள் வரி என்கிற பெயரில் வஞ்சிக்கப்படுவதையும் எதிர்ப்பவர்கள் இவர்கள்.. தங்களது நம்பிக்கைக்கு Antifa என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் விரிவாக்கம் Anti-fascist (பாசிச எதிர்ப்பு) என்பதாகும்.

இது ஒரு பொதுவான நம்பிக்கையாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பொதுவாகவே கம்யூனிசம் என்றாலே முதலாளித்துவத்துக்கு பற்றிக் கொண்டு வரும்.. இவர்கள் பேசுவது கிட்டத்தட்ட கம்யூனிசம் மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.. இதை extreme and far left movements என்று brand செய்ய ட்ரம்ப் அரசு முயன்று வருகிறது.

இதை ஓர் இயக்கம் என்றும் இந்த இயக்கம்தான் இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது என்றும் டிரம்ப் அரசு நினைக்கிறது.

இன்று டிரம்ப் கடும் கோபத்துடன் ட்வீட் செய்திருக்கிறார் : ஆன்ட்டிஃபா மாதிரியான இயக்கங்கள் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது அந்த வலதுசாரி அரசு.

இவர்கள் யாரை இதன் காரணம் என்று தடை செய்யப் போகிறார்கள்.. யாரை கைது செய்யப் போகிறார்கள் என்றுதெரியவில்லை.. சட்ட வல்லுனர்கள் இந்த மாதிரி செய்ய அமெரிக்க அரசியல் அமைப்பிலேயே வழியில்லை என்று கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் ட்ரம்ப்போ தனது அமைச்சரவை சகாக்கள், தீவிரவாதத் தடுப்புத் துறை என்று அனைவரோடும் ஆலோசனைகளைத் துவங்கிவிட்டார்.

டிரம்ப்பின் கையில் ஃபாக்ஸ் நியூஸ் போன்ற பெரும் கார்ப்பரேட் செய்தி சேனல்களும் உள்ளன.. அந்த சேனல்களைப் பயன்படுத்தி பொய் செய்திகளைப் பரப்பி எப்படியாவது இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிவிட டிரம்ப் அரசு துடிதுடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட இயக்கம் என்றால் அதன் தலைமைகளை கைது செய்து போராட்டங்களை அடக்கி விடலாம். ஆனால் இது போன்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை ஒடுக்க அரசுகள் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் படுகொலைகள்தான்.

தூத்துக் குடியில் நடந்ததை நம்மால் மறக்க முடியுமா என்ன..?

ஆக பிணங்களின் மீது அரசியல் செய்யும் மோடி, எடப்பாடியின் அரசியலை டிரம்ப்பும் கையில் எடுக்கக் கூடும் என்று பரவலாக அரசியல் வல்லுனர்கள் கணித்தபடி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இதே போலதான் march towards wall street என்றொரு இயக்கம் 2010 வாக்கில் அமெரிக்காவில் பரவியது. அதே கார்ப்பரேட் எதிர்ப்பு மற்றும் செல்வந்தர்களிடமே செல்வக்குவிப்பு நடப்பதை எதிர்த்துதான் இது துவங்கியது.

இப்போது அந்த இயக்கம் இருந்த இடமே தெரியாமல் சுவடற்றுப் போய்விட்டது. இப்போது மறுபடி ஓர் இடதுசாரிப் பார்வையுடனான போராட்டம் புறப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கப் போகிறது என்பதில்தான் ஒட்டுமொத்த முதலாளித்துவ நாடுகளின் எதிர்காலமும் அடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்தப் போராட்டம் வெற்றிபெற்றால் உலக அளவில் பெரும் அரசியல் மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கலாம்..

தோல்வியுற்றால்..?

சில பிணங்களை கையில் வத்துக் கொண்டு நாம் கொஞ்ச காலம் அழுதுகொண்டிருப்போம்.. அவ்வளவுதான்..

நன்றி : ஃபேஸ்புக்கில் நந்தன் ஸ்ரீதரன்