நாள் : 09.06.2020

10 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து!
அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு!

வென்றது பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,
மாணவர் அமைப்பினரின் போராட்டம்!

கொரானா பெருந்தொற்று பரவலும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் சூழலில் சுமார் 10 லட்சம் மாணவர்கள், 3 லட்சம் ஆசிரியர்கள், அலுவலர்கள் கூடும் பொதுத்தேர்வை நடத்துவது மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்பினர் என ஒட்டுமொத்த தமிழகமும் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய் என்று நடத்திய நீண்ட நெடிய போராட்டம் வென்றது. மாணவர்களின் உயிரை விட தனியார்பள்ளிகளின் கொள்ளைக்கான தேர்வுதான் முக்கியம் என்று செயல்பட்ட தமிழக அரசின் மாணவர் விரோத ஆணவப்போக்கு தகர்ந்தது.

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது போல, கொரானா பரவலின் தீவிரம் நன்கு தெரிந்தும் ’’பொதுத்தேர்வை நடத்த இதுதான் சரியான தருணம்’’ என்று நீதிமன்றத்தில் வாதாடியது தமிழக அரசு. சி.பி.எஸ்.சி க்கான தேர்வை ஜூலையில் நடத்தலாம் என மத்திய பாடத்திட்ட வாரிய அமைப்பு அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ஆகஸ்டில் நடத்தலாம் என யூ.ஜி.சி அறிவித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுக்கே இவ்வளவு யோசிக்கும்போது சமூக இடைவெளி பற்றிய போதிய புரிதல், அச்சம் இல்லாத பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவு யோசித்திருக்க வேண்டும். கொரானா பாதிப்பால் யாரும் வரக்கூடாது என உயர் நீதிமன்றமும், தலைமைச்செயலகமும் மூடப்பட்டுவிட்டன. ஆனால், மாணவர்களுக்கு மட்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து சொல்லி வந்தது ஆணவத்தின் உச்சம்.

தொடர்ச்சியான ஊரடங்கினால், அனைத்து மாணவர்களின் குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக வேலை வருமானம் இழந்துள்ள நகர்ப்புற, கிராமப்புற ஏழைக் குடும்பத்து மாணவர்கள் தேர்வு எழுதும் நிலையில் இருப்பார்களா என்று சிந்திக்க வேண்டாமா? ஒருபுறம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சொல்லிக்கொண்டே மாணவர்களை நீண்டதூரம் பேருந்துகளில் அழைத்து வருவதும், ஒரே இடத்தில் குவிப்பதும், காய்ச்சல் இருந்தால் தனிமைப்படுத்துவோம் என்று சொல்வதும், 6 மணிநேரம் தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வதும், மாணவர் விடுதிகளில் அடைப்பதும் அறிவியல்பூர்வமானதா? மனித அறிவுக்கு உகந்ததா? பொதுத்தேர்வு என்றாலே மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்களை கொரானா சூழலில் தேர்வு எழுதச் சொல்வது அவர்கள் மீதான வன்முறையில்லையா?

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சாதாரண பாமரனுக்கும் புரியும் இந்த விசயங்கள் தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும், மெத்தப்படித்த கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஏன் புரியாமல் இருந்தது.

பெரும்பான்மை மாணவர்கள் நலன், அவர்களின் எதிர்காலம் பற்றி கவலைப்படாத அதிகாரவர்க்க ஆணவ மனப்போக்கும், தனியார்பள்ளிகளின் நலனும்தான் என்பது முன்னெப்போதையும்விட இப்போது பளிச்சென்று அம்பலமாகியுள்ளது.

கொரானா தீவிரத்திலும் 10 வகுப்பு பொதுத்தேர்வு என்று மாணவர்கள் மீது திணிக்கப்படவிருந்த வன்முறையிலிருந்து 10 லட்சம் மாணவர்களை காப்பற்றியுள்ளோம்.

இதுவொரு போராட்டத்தின் வெற்றிதான் என்றாலும், சற்று ஆறுதலடையலாமேயொழிய மகிழ்வதற்கு ஒன்றும் இல்லை.

ஏனென்றால், கல்வியில் இருந்து வந்த வர்க்க ஏற்றத்தாழ்வு கொரானாவுக்குப்பின் மென்மேலும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் தனியார்பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இப்போதும் இல்லை, எப்போதும் கிடைக்குமா என்றும் தெரியவில்லை.
அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

ஆன் – லைன் வகுப்புகளைக் காட்டி தனியார்பள்ளிகள் கட்டணக் கொள்ளையை படுவேகமாக நடத்துகின்றன.

கொரானாவினால் வேலை, வருமானம் இழந்துள்ள பெற்றோர்களிடமிருந்து கட்டணத்தை கறாராக வசூலிக்க தனியார் பைனான்ஸ் கம்பெனிகளில் மாணவர்களை அடகுவைக்கும் ’சிறப்புத் திட்டத்திற்கும் (கொத்தடிமைத் திட்டத்திற்கும்)’ தனியார்பள்ளிகளே ஏற்பாடு செய்கின்றன. இதெல்லாம் அரசின் துணையின்றி நடப்பதும் இல்லை.

இத்தகைய தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த கொட்டத்திற்கும் முடிவுகட்டும் அடுத்தக்கட்ட போராட்டத்திற்கும் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க