வினவு குறிப்பு: சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், அரசு நிர்ணயத்திருக்கும் கட்டணத்தை தாண்டி (அதுவே அதிகம்) எப்படி அதிகம் சுருட்டுகிறார்கள் என்பதை திரு. சரவணனது கீழ்க்கண்ட அனுபவம் காட்டுகிறது. ஒரு தொலைபேசி அழைப்புக்கே இப்படி அதிரடியாக கொள்ளைக் கட்டணத்தை சொல்லும் மருத்துவமனைகள் நேரில் சென்றால் எப்படி நடத்தும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு எந்த கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆகவே கொரோனா பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளை முழுமையாகவோ, பகுதியளவிலோ அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத்தை கீழ்க்கண்ட அனுபவம் பளிச்சென சொல்கிறது.

னியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணையை கடந்த ஜூன் 6-ம் தேதியன்று வெளியிட்டது.

Grade- A1 மற்றும் A2ல் (பொது வார்டு) அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.7,500 ரூபாய் என்றும்…

Grade – A3 மற்றும் A4 அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் கூடிய நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.5,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Grade- A1 மற்றும் A2, Grade – A3 மற்றும் A4ல் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகப்பட்ச கட்டணமாக ரூ.15,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க கூடாது…” என்றும் எச்சரித்தது தமிழக அரசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆனால் இப்போது சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தொகையையா வசூலிக்கிறார்கள்..?

ஒருவேளை அந்த பாழாய்ப் போன வைரஸ் எனக்கு வந்து தொலைந்துவிட்டால் எந்த ஆஸ்பத்திரிக்கு போய் படுப்பது என்று யோசித்துப் பார்த்தேன்.

வருடத்திற்கு 7000 ரூபாய்க்கு மெடிக்கல் பாலிஸி போட்டிருக்கிறேன். அதையும் வீணாக்கக் கூடாது. இந்தக் கொரோனா காலத்திலாவது அதனைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன்.

இதனால் முன்கூட்டியே ஒவ்வொரு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான கட்டணத்தைத் தெரிந்து வைத்துக் கொள்ளுவோம் என்றெண்ணி சென்னை மாநகரின் சில முக்கிய மருத்துவமனைகளுக்கு டயல் செய்து விசாரித்தேன்.

அதில் கிடைத்தத் தகவல்கள் இங்கே :

1. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நோயாளியின் நோயின் தீவிரத்தைப் பொறுத்துதான் சொல்ல முடியும். ஆனால் துவக்க நிலை தினமும் 10,000 ரூபாய்க்குள்தான் இருக்கும் என்றார்கள்.

2. வடபழனி சூர்யா மருத்துவமனையில் ஒரு நாள் வாடகை 30,000 ரூபாய், ஐ.சி.யூ,வில் இருந்தால் 50,000 ரூபாய் என்று அடித்துச் சொன்னார் ஒருவர். “அரசு ஒரு தொகையை நிர்ணயம் செய்துள்ளதே ஸார்…?” என்று கேட்டேன். “அது எவ்வளவுன்னு எனக்குத் தெரியாது. நீங்கதான் சொல்லணும்…” என்றார்.

3. வடபழனி விஜயா மருத்துவமனையிலும் இதே அளவு தொகையைத்தான் சொன்னார்கள். 30,000 ரூபாயில் 50,000 ரூபாய்வரையிலும் ஆகும் என்றார்கள். “அரசு சொன்ன தொகை” என்றவுடன்.. “அதெல்லாம் இங்க இல்லை ஸார்…” என்று சொல்லி பட்டென்று போனை வைத்துவிட்டார்கள்.

4. வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் ஒரு நாள் வாடகையாக 40,000 ரூபாய்தான் குறைந்தபட்சமாம். ஐ.சி.யூ.வில் இருந்தால் 50000 ரூபாயாம்.

5. தி.நகர் பாரதிராஜா மருத்துவமனையில் கேட்டபோது “நோயாளியைப் பார்த்த பின்புதான் ஸார் சொல்ல முடியும். இப்போதைக்கு போனில் பீஸையெல்லாம் சொல்வதற்கில்லை…” என்றார்கள்.

6. மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் கேட்டபோது அரசு நிர்ணயித்த அதே தொகையைத்தான் வசூலிப்பதாகச் சொன்னார்கள். துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு 7500 ரூபாய்தானாம். ஐ.சி.யூ.வில் இருப்பவர்களுக்கு 15,000 ரூபாய்தானாம்..

7. செட்டிநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேட்டபோதும் “அரசு நிர்ணயித்துள்ள அதே தொகையைத்தான் ஸார் வசூல் பண்றோம்….” என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக் கொண்டார் ஒருவர்.

8. மயிலாப்பூர் சி.எஸ்.ஐ.கல்யாணி மருத்துவமனையில் 7,500 மற்றும் 20,000 ரூபாய் வசூலிப்பதாகச் சொன்னார்கள்.

8. அடையாறு மலர் மருத்துவமனையில் 5,800 ரூபாயில் இருந்து பல்வேறு பேக்கேஜ்களில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகும், “நோயாளியைப் பார்த்த பின்புதான் அது பற்றி சொல்ல முடியும்” என்றார்கள்.

9. நந்தனம் வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் பல பேக்கேஜ்கள் இருப்பதால் “நோயாளியைப் பார்த்த பின்புதான் சொல்ல முடியும்…” என்றார்கள்.

10. சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெறும் 4,000 ரூபாய்தான் வசூலிப்பதாக காத்து வாக்கில் செய்தி காதில் வந்து விழுந்தது. பல முறை போனில் தொடர்பு கொண்டும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை..!

ஆக, மொத்தம் நாம் விசாரித்தவரையில் இரண்டே இரண்டு மருத்துவமனைகள்தான் அரசு நிர்ணயித்த அதே தொகையை வசூலிப்பதாக சொல்கின்றன.

படிக்க:
கொரோனா பரவ துணை போகும் ரேசன் நிர்வாகம் !
♦ சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

மீதியுள்ள மருத்துவமனைகள் வைரஸ் சிகிச்சைக்கான கட்டணத்தை அவர்கள் போக்கில்தான் வசூலிக்கிறார்கள்..!

நான் வைத்திருக்கும் HDFC ERGO Policy எல்லா இடங்களிலும் ஏற்கப்படுகின்றன என்றாலும் “கூடுதலாக கொஞ்சம் தொகையை நீங்க கைக்காசாகக் கொடுத்தாக வேண்டும்…” என்கிறார்கள்.

தி.நகர் பாரதிராஜா மருத்துவமனையில் “எந்த மெடிக்கல் பாலிஸியையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ரெடி கேஷ்தான் ஸார். நீங்க அதுக்கப்புறம் பாலிஸிக்கு அப்ளை செஞ்சு அவங்ககிட்ட வாங்கிக்குங்க…” என்று வித்தியாசமான ஒரு விஷயத்தைச் சொன்னார். இது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை.

இந்தத் தொல்லையே வேண்டாம்டா சாமி.. பேசாமல் ஏதாவது ஒரு அரசு மருத்துவமனைக்கு போய் படுத்துக் கொள்ளலாம். அல்லது அரசு வைத்திருக்கும் முகாம்களில் ஐக்கியமாகிவிடுவோம் என்று நினைப்பவர்கள் அதையே செய்யலாம்.

ஏனெனில் வரக் கூடிய காலங்களில் சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை. எனவே வெட்டியாக காசை செலவழிக்காமல் காசை சேமித்து வைக்கப் பழகுங்கள் தோழர்களே..!

பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அள்ளிக் கொடுக்கலாம்..

இல்லாதவர்களுக்கு இப்போதைக்கு அரசு மருத்துவமனைகள்தான் கண் கண்ட தெய்வங்கள்..!

நன்றி : ஃபேஸ்புக்கில் Saravanan Savadamuthu