நெய்வேலி என்.எல்.சி.யின் இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5 வது யூனிட்டில் பாய்லர் வெடித்து ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள். 17 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விபத்து நடைபெற்ற இடத்திற்கு செல்லவிடாமல் என்.எல்.சி. நிர்வாகம் தங்களைத் தடுத்துவருவதாகவும், மின்உற்பத்தி நிலையத்திற்குள்ளேயே இன்னும் பல தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்திருக்கும் வாய்ப்பிருப்பதாகவும் குமுறுகிறார்கள், சக தொழிலாளர்கள்.

”பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுப் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போது, கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டது.” என்று பச்சையாக புளுகுகிறது, என்.எல்.சி. நிர்வாகம். காலாவதியாகிப்போன மின் நிலைய பாய்லர்களைப் புதுப்பிக்காமலேயே தொடர்ந்து இயக்கிவருவதே இந்த விபத்திற்கான காரணம் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், என்.எல்.சி. தொழிலாளர்கள்.

”வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் பாய்லர்கள் வெடித்ததாக நிர்வாகம் கூறுவது கேலிக்கூத்தாகும். வெப்பத்தையும் அழுத்தத்தையும் தாங்குவது தான் பாய்லரின் பணியாகும். அதைச் செய்ய இயலாத அளவுக்கு பாய்லர் பலவீனம் அடைந்த பின்பும், தொடர்ந்து இயக்கி விபத்தை ஏற்படுத்தியதற்கும், தொழிலாளர்களின் உயிரைப் பலி கொடுத்ததற்கும், என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியமே முழுவதும் காரணமாகும்.” எனக் கண்டித்திருக்கிறது, ஏஐடியூசி  தொழிற்சங்கம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இது எதிர்பாராமல் ஏற்பட்டுவிட்ட விபத்து அல்ல; நிர்வாகத்தின் கவனக்குறைவு மட்டுமே காரணமும் அல்ல. என்.எல்.சி. நிர்வாகம் நடத்திய படுகொலை என்று சொல்வதற்குரிய எல்லாவிதமான முகாந்திரங்களும் இருக்கவே செய்கின்றன.

கடந்த இரண்டு மாதத்தில் நடைபெற்றுள்ள மூன்றாவது விபத்து இது. இதே இரண்டாவது அனல்மின் நிலையத்தின் கடந்த மே-7 அன்று நடைபெற்ற விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இரண்டுநாள் இடைவெளியில் மே- 9 அன்று நடைபெற்ற விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழக்க மற்றொரு தொழிலாளி ஒருவரின் கண் பார்வை பறிபோயிருக்கிறது. இந்த மூன்று விபத்துக்களும் இரண்டாவது அனமில்மின் நிலையத்திலேயே அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கிறது என்பதிலிருந்தே, தொழிலாளர்களின் உயிர் பறிபோவது குறித்த கவலை என்.எல்.சி. நிர்வாகத்திற்கு கடுகளவும் இல்லையென்பதை உணர்த்துகின்றன.

இவ்வளவுக்குப் பின்னரும், இதனை தனிநபரின் அலட்சியத்தால் நேர்ந்துவிட்ட விபத்து என்பதைப்போல, அமுக்கப் பார்க்கிறது என்.எல்.சி. நிர்வாகம். விபத்து நடைபெற்ற இரண்டாவது அனல்மின் நிலையத்தின் முதன்மை மேலாளர் கோதண்டம் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதோடு, ஓய்வுபெற்ற தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் மோகபத்ரா தலைமையில் உயர்மட்டக்குழு விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறது என்.எல்.சி. நிர்வாகம்.

படிக்க:
என்.எல்.சி. விபத்தல்ல, படுகொலை !
♦ கொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் ! கேலிச்சித்திரம்

”இழப்பீடாக சில இலட்ச ரூபாய்களை அள்ளிவீசியெறிந்து விடலாம்; கண்துடைப்பு நடவடிக்கைகளை செய்து தொழிலாளர்களை சரிகட்டிக்கொள்ளலாம்” என்ற ஆணவமும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

முப்பது ஆண்டுகள் பழமையான தொழில்நுட்ப ரீதியிலும் காலாவதியாகிப்போன அனல்மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க அனுமதித்ததும்; ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகளை முறையாகச் செய்யமால் புறக்கணித்ததுமே இவ்விபத்திற்கான பிரதான காரணம் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், தொழிலாளர்கள்.

அதிலும் குறிப்பாக, உலகிற்கே பாய்லர்களை சப்ளை செய்துவரும் பாய்லர் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகளை ஒப்படைக்காமல், போதிய அனுபவமே இல்லாத தனியார் நிறுவனத்திடம் பராமரிப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதையும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

அனல்மின்நிலையத்தின் நேரடி உற்பத்தி சார்ந்த பல்வேறு பணிகளும்கூட ஒப்பந்த அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களோ, போதிய பயிற்சியும் முன் அனுபவமும் இல்லாத தொழிலாளர்களை குறிப்பாக வடமாநிலத் தொழிலாளர்களை போதிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், அபாயம் மிகுந்த வேலைகளில் அவர்களை ஈடுபட கட்டாயப்படப்படுத்துகின்றன.

இவையெல்லாம், கவனக்குறைவோ, ஒப்பந்தங்களை முடிவெடுக்கும் அதிகாரங்களை கொண்ட உயரதிகாரிகளின் ஊழல் சம்பந்தபட்ட பிரச்சினையோ மட்டுமல்ல; பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யை தனியார்மயமாக்கும் அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்ட சூழலிலும், காலாவதியான அனல்மின் நிலையத்தை தொடர்ந்து இயக்க உத்தரவிட்ட என்.எல்.சி.யின் உயர்மட்ட அதிகாரிகள்; இதனைக் கண்காணித்து முறைபடுத்தத் தவறிய சம்பந்தபட்ட அரசுத்துறை அதிகாரிகள்; தொழிலாளர்களை பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தத்தவறிய – ஒப்பந்தத்தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற அரசின் உத்தரவை அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி.யே மீறி செயல்படுவதற்குத் துணைபோன தொழிலாளர்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரையும் இப்படுகொலையில் கூட்டுப் பொறுப்பாக்க வேண்டும்.

இவைபோன்று, என்.எல்.சி.யில் என்னவெல்லாம் விதிமீறல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதையும் இதுவரை தனியார் நிறுவனங்களுடன் என்.எல்.சி. போட்டுக்கொண்டுள்ள ஒப்பந்தங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். இவை உள்ளிட்டு, தொடர்விபத்துக்களுக்கான காரணங்கள் குறித்து ஆராய, சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக, இந்த விபத்தில் உயிரிழந்துள்ள தொழிலாளர்கள் 6 பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். என்.எல்.சி.யில் பணியாற்றும் தொழிலாளர்களுள் சரிபாதிக்கும் மேலானோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். பணிநிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பல ஆண்டுகளாக போராடிவரும் இவர்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்.எல்.சி. நிர்வாகம். ஒப்பந்தத்தொழிலாளர்களை பிரதான உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்ற சட்டவரையறைகளையெல்லாம் மீறி அவர்களை அப்பணிகளில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வருகிறது. குறிப்பாக, அபாயம் நிறைந்த பணிகளில் ஈடுபடுத்தப்படும் ஆகப்பெரும்பான்மையோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான்.

ஒப்பந்தத் தொழிலாளர்களைவிட, கூடுதலாக சில உரிமைகளையும், கூடுதலான சம்பளமும் பெற்றிருக்கிறார்கள் என்பதைத் தாண்டி நிரந்தரத் தொழிலாளர்களின் நிலையும் சற்றேறக்குறைய ஒன்றுதான். சட்டப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக்கூட பல ஆண்டுகளாக போடாமல் அடாவடி செய்வது உள்ளிட்டு நிரந்தரத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளைப் போலத்தான் நடத்தி வருகிறது என்.எல்.சி. நிர்வாகம்.

கொள்ளைவிலை அடிப்படையில் தனியார் மின்உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை அரசுக்கு விற்றுவரும் நிலையில், அவற்றோடு ஒப்பிடுகையில் மிகவும் சொற்பமான விலையில் மின்உற்பத்தியை நடத்திவரும் நிறுவனம் என்.எல்.சி. ஆண்டிற்கு 1500 கோடி ரூபாய்க்கு மேல் இலாபத்தை ஈட்டித்தரும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்று என்.எல்.சி. இந்தப் பெருமைகளுக்குப் பின்னே, எவ்வித உரிமைகளுமற்ற அத்துக்கூலிகளைப்போல மாடாய் உழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உதிரம் சிந்தா உழைப்புச் சுரண்டலும், உதிரம் சிந்தும் உயிரிழப்புகளும்தான் அடிநாதமாய் அமைந்திருக்கின்றன.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணிநிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருபவர்கள் என்பது மட்டுமல்ல; இவர்களுள் பெரும்பாலோனார் என்.எல்.சி. சுரங்கத்திற்காக தங்களது விவசாய நிலங்களையும் வீடு உடமைகளையும் பறிகொடுத்தவர்கள். வயிற்றுப்பாட்டுக்காக எஞ்சிய உயிரையும் பறிகொடுக்கத் துணிந்த துர்பாக்கியசாலிகளும்கூட.

”அரசின் பொதுத்துறை நிறுவனத்திலேயே, தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பும் இல்லை; உயிருக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை” என்பதுதான் சமூக யதார்த்தம் என்றிருக்கும் இச்சூழலில், குறிப்பாக கொரோனா ஊரடங்கு நிலையைக்காட்டி தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தும் மோடி அரசின் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமல்ல அவர்களின் உயிரையும் காவு வாங்கக்கூடியது என்பதற்கு என்.எல்.சி.யே இரத்த சாட்சி.

இளங்கதிர்

2 மறுமொழிகள்

  1. இந்தக் கட்டுரை இரண்டு விடயங்களைப் பற்றிப் பேசுகிறது. ஒன்று, பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. உரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் இயங்கி வருவது குறித்து. அயல்பணி ஒப்படைப்பு மூலம் தொழிலாளர்கள் பணிப் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவது மற்றொன்று. எனினும், கட்டுரை இவ்விரு விடயங்களைத் தனித்தனியாகப் பார்ப்பதாக அமைந்துவிட்டது. எங்கு தொழிலாளர்களின் பாதுகாப்பு ஒழிக்கப்படுகிறதோ, அங்கு நிறுவனங்கள் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயங்குவது அனுமதிக்கப்படுகிறது. கரோனாவால் தேக்கமடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பது என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டிருப்பதும், முதலீட்டை ஈர்ப்பது என்ற பெயரில் சுற்றுப்புறச் சூழல் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதும் இரண்டும் வேறுவேறானவை அல்ல. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.

  2. ( CISF)மத்திய தொழில் பாதுகாப்பு படை கண்காணிப்பில் இயங்கும் என்.எல்.சி, இவர்களின் 24 மணிநேர ஜெனரல் டைரியை துப்புத்துலங்கினால்…மேலும் பல விபரங்கள் வெளியாகும்… காலங்காலமாக பல சுரங்க சரிவு விபத்துகளில் வெளிமாநில தொழிலாளர் உள்பட பல உயிர்கள் மண்ணோடு மண்ணாக சமைந்துள்ளது…அரசு பவழத்தில் தொடரும் அவலங்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க