பேச்சு, கருத்துச் சுதந்திரத்துடன் பெரும் மதிப்பை கொண்டவர்களிடையே உற்சாகமான உணர்வு காணப்படுகிறது. இது நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் ‘பிரசாந்த் பூஷண் தருணம்’ என்று அழைக்கப்படுவதால் உந்தப்பட்டதாகும்.

பூஷனுக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்த முடியவில்லை என குடிமக்கள் கருதுகின்றனர்.

‘மக்களின் ஆட்சியை, மக்களுக்காக மக்களால்’ நிறுவுவதற்கான அரசியலமைப்பை ‘மக்களாகிய நாம், நமக்குக் கொடுத்தோம்’ என்பதை பெருமையுடன் நினைவு கூர்கிறோம் என்ற உணர்வு இருக்கிறது.

சிறிது நேரம் இடைநிறுத்தி, இந்த காவியப் போருக்கு அப்பாற்பட்ட அடிப்படைகளைப் பார்ப்போம். சிலர் இதை கோலியாத்துக்கு (பெரும் அரக்கனுக்கு) எதிரான டேவிட்டின் (தீரமிகு சிறுவனின்) போர் என்று அழைக்கிறார்கள்.

நான் மரியாதையுடன் அதில் உடன்படவில்லை. பிரஷாந்த் சட்டத் துறையில் ஒரு டேவிட் ஆவார், அவர் நீதிமன்றங்களில் பல போர்களில் தனது உயரத்தையும் சிறப்பையும் நிலைநாட்டியுள்ளார். அவரது பெயர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். பேச்சு சுதந்திரத்திற்கான தடை மீது அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இது அனைத்து குடிமக்களுக்கும் நேரடியாக அதிகாரமாக மொழிபெயர்க்கப்படாது.

நீதிமன்றங்களின் திருப்தியற்ற செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்துக்களைக் கூறும் குடிமக்கள் மீது, நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முடக்க வைக்கும் என்பதை நம்மில் பலர் சரியாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

பல நாடுகளில், நீதிமன்றங்கள் விமர்சனங்களை முன்னேற்றத்துக்குரியதாக எடுத்துக்கொள்கின்றன; குற்றவியல் அவமதிப்பு அதிகாரங்களை அரிதாகவே பயன்படுத்துகின்றன. 2016-17 ஆம் ஆண்டில், உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் சேர்ந்து 169 வழக்குகளை விசாரித்தன். இங்கிலாந்தில், கடந்த நூற்றாண்டில் ‘நீதிமன்றத்தை அவதூறு செய்வது’ தொடர்பாக ஒரே ஒரு வழக்கு மட்டுமே இருந்தது.

படிக்க:
கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

பிரிவு 2 (சி) குற்றவியல் அவமதிப்பை இவ்வாறு வரையறுக்கிறது :

“(சி) குற்றவியல் அவமதிப்பு என்பது எந்தவொரு விஷயத்தையும் வெளியிடுவது (சொற்களால், பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட, அல்லது சமிக்ஞைகளால், அல்லது புலப்படும் பிரதிநிதித்துவத்தால், அல்லது வேறுவிதமாக) அல்லது வேறு எந்த செயலையும் செய்வது.

(i) எந்தவொரு நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் அவதூறு செய்வது அல்லது அவதூறு செய்ய முனைவது, அல்லது குறைப்பது அல்லது குறைக்க முனைவது; அல்லது

(ii) எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளின் சரியான போக்கில் தப்பெண்ணங்கள் உருவாக்குவது, அல்லது தலையிட முனைவது; அல்லது

(iii) வேறு எந்த வகையிலும் நீதியின் நிர்வாகத்தில் தலையிடுவது அல்லது தலையிட முனைவது, அல்லது தடுப்பது அல்லது தடுக்க முனைவது ”

அவமதிப்பு சட்டத்தின் பிரிவு 2 (சி) 2018 ஆம் ஆண்டில் “நீதிமன்றத்தின் அவமதிப்பு என நீதிமன்றத்தின் தீர்ப்புகள் / தீர்ப்பை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை” என்பதற்கு மட்டுமே கட்டுப்படுத்த வேண்டுமா என இந்திய அரசு, சட்ட ஆணையத்திற்கு ஒரு குறிப்பை வெளியிட்டது என்பது சுவாரஸ்யமானது. துரதிர்ஷ்டவசமாக அதன் அறிக்கை எண் 274 இல் இவ்வாறு கூறி இந்த ஆலோசனையுடன் உடன்படவில்லை:

“மேலும், அவமதிப்பு கூறுகளுக்கு எதிராக தொடர்ந்து தடுப்பு தேவைப்படுவதால்,‘உத்தரவுகளை வேண்டுமென்றே கீழ்ப்படியாமை / நீதிமன்றத்தின் தீர்ப்பை ’மட்டுமே உள்ளடக்குவதற்கான அவமதிப்பு வரம்பைக் குறைப்பது விரும்பத்தகாததாகத் தெரிகிறது. விதி வரம்பில் மிகவும் குறுகிவிட்டால், பாதிப்பிலும் தாக்கம் குறையும். அவமதிப்பு சட்டத்தில் இத்தகைய மாற்றம் நீதிமன்றங்கள், அவற்றின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகள் மீதான மரியாதை அல்லது பயத்தை குறைக்கக்கூடும்; மேலும், இது நீதிமன்றங்களை வேண்டுமென்றே மறுப்பது, அவதூறு செய்வது போன்ற நிகழ்வுகளில் விரும்பத்தகாத அதிகரிப்புக்கு வழிவகுக்கும் வாய்ப்பும் உள்ளது.”

நிந்தனை என்பதை கடவுள் அல்லது மதத்தை அவமதிப்பதை காட்டுவதாக அனைத்து அகராதிகளும் அங்கீகரிக்கின்றன.

இப்போது மூன்று இணை அரசு ஊழியர்களை ஒரு உதாரணமாகப் பார்ப்போம், குடிமக்களுக்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுக்குத் தேவையான மரியாதை மற்றும் பாதுகாப்பின் கொள்கையை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் நீதிபதிகளை வைத்து இந்தக் கொள்கைகளை சோதிப்போம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மிக உயர்ந்த நியாயத்தன்மையைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் குடிமக்களின் நேரடி ஒப்புதலுக்கு உட்படுவார்கள். குடிமக்களிடமிருந்து மரியாதைக்குரிய கட்டளையை அவர்கள் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடலாம், அது இல்லாமல் அவர்கள் வடிவமைக்கும் சட்டங்கள் மதிக்கப்படாது. அவை கொள்கைகளை வடிவமைக்கின்றன, இந்த கொள்கைகள் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர்கள் கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் நேரத்திலும் மக்களை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும், மேலும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அல்லது விமர்சனங்களுக்கு எதிரான பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், அவர்களால் அவர்களின் செயல்பாடுகளை நிறைவேற்ற முடியாது.

சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு காவலரை இப்போது சித்தரிப்போம். அவர் மீண்டும் குடிமக்களை எதிர்கொள்கிறார் – கோபமடைந்த அல்லது மோசமான கும்பல்களும் கூட – சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து அழுக்குகள் மற்றும் கொடூரங்களுக்கிடையில் செயல்பட வேண்டும். குடிமக்கள் அவரை மதிக்கவில்லை என்றால் – அல்லது அவர் ஊழல் நிறைந்தவர் மற்றும் அவரே ஒரு குற்றவாளி என்று நம்பினால் – அவர் தனது சட்ட நடைமுறையாக்கல் செயல்பாட்டை பொதுமக்களுக்கு வழங்க முடியுமா?

மறுபுறம், ஒரு நீதிபதி ஒரு மூடிய மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் அமர்ந்து சட்டத்தை நிலைநிறுத்துவதாகக் கூறப்படும் நீதியை வழங்குகிறார். அவர் மிகவும் பாதுகாப்பாகவும் பாதுகாப்பான சூழலிலும் இருக்கிறார்; வசதியாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தனது செயல்பாடுகளை தனது சொந்த வேகத்தில் செய்கிறார்.

ஆனாலும்கூட, பிரபுக்களுக்கு குற்றவியல் அவமதிப்பு விதிகளின் கதகதப்பான பாதுகாப்பு தேவை என்று வாதிடப்படுகிறது.

சட்ட ஆணைய அறிக்கையை புறக்கணிக்கவும், சட்ட ஆணையத்திற்கு அதன் குறிப்பின்படி சட்டத்தை திருத்தவும் அரசாங்கத்தை நிர்பந்திக்க, குடிமக்கள் இந்த மாபெரும் பிரசாந்த் பூஷண் தருணத்தைப் பயன்படுத்த வேண்டும். இந்த வாய்ப்பை நாம் இழந்தால், சாதாரண குடிமக்களின் பேச்சு சுதந்திரம் தடைசெய்யப்படும்.

சாமானியர்களுக்காகப் பேசும்போது, பிரஷாந்த் பூஷண் போன்ற ஒரு சட்ட ஜாம்பவானுக்கு மட்டுமே நீதித்துறையை விமர்சிக்கும் உரிமை இருக்கும் சூழ்நிலையை நாம் அறியாமல் உருவாக்கியிருப்போம். இது ஜனநாயகத்திற்கான அவரது துணிச்சலான, தைரியமான நிலைப்பாட்டின் பொருத்தமான விளைவாக இருக்காது. குடிமக்களின் உரிமைகளை மேம்படுத்த இந்த தருணத்தை நாம் கைப்பற்ற வேண்டும்.


கட்டுரையாளர் : சைலேஷ் காந்தி, முன்னாள் மத்திய தகவல் ஆணையர்.

மொழிபெயர்ப்பு :  கலைமதி
நன்றி: த வயர்.