ழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அவர் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விமர்சனக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கை தாமாக எடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

சமூகச் செயல்பாட்டாளரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், தொடர்ந்து பல ஆண்டுகளாக ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அரசின் வன்முறைகளுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவும், மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றத்திலும், பொதுவெளியிலும் குரல் கொடுத்து வருபவர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றம் குறித்து சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துக் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்.

ஹார்லி டேவிசன் பைக் ஓட்டும் உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே.

கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதியன்று தனது டிவிட்டர் பதிவில், நாக்பூரில் உள்ள ஒரு பாஜக தலைவருக்கு சொந்தமான 50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை முகத்தில் மாஸ்க் மற்றும் தலையில் ஹெல்மெட் ஏதும் இல்லாமல் ஓட்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேயை விமர்சித்தார். அதில் ஊரடங்கைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தை மூடி குடிமக்கள் தங்களுக்கான அடிப்படை உரிமையான நீதியைப் பெற மறுத்திருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதே போல ஜூன் 27 அன்று மற்றொரு டிவிட்டர் பதிவில், “எதிர்காலத்தில் வரலாற்றாளர்கள் கடந்த ஆறு ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் முறையான அவசரநிலை அமல்படுத்தப்படாமலேயே எப்படி ஜனநாயகம் அழிக்கப்பட்டது என்பதைத் திரும்பிப் பார்க்கும் போது இந்த அழிப்பில் குறிப்பாக உச்சநீதிமன்றத்தின் பங்கையும் இன்னும் குறிப்பாக நான்கு தலைமை நீதிபதிகளின் (எஸ்.ஏ.பாப்டே, ரஞ்சன் கொகோய், தீபக் மிஸ்ரா, ஜே.எஸ். கெஹர்) பங்கையும் அவர்கள் தனிச்சிறப்பாக குறித்துக் கொள்வார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 9-ம் தேதி அன்று, மஹேக் மகேஸ்வரி என்பவர் பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் பிரசாந்த் பூஷனின் மேற்கூறிய இரண்டு டிவிட்டுகள் குறித்து குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 21-07-2020 அன்று உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. குறிப்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் பதிவு எழுதியதாகக் கூறி இந்த வழக்கை எடுத்துள்ளது. ஆனால் குறிப்பாக எந்த டிவிட்டர் பதிவுக்காக இவ்வழக்கு பதியப்பட்டது என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷனுக்கு மட்டுமல்லாமல் டிவிட்டர் இந்தியா நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியது.

படிக்க:
திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம் !
குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

இந்த வழக்கு கடந்த புதன் கிழமை (22-07-2020) அன்று அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த அமர்வு இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் இந்த சுவோ மோட்டோ வழக்கில் டிவிட்டர் இந்தியாவை விலக்கிவிட்டு அமெரிக்காவில் இயங்கும் டிவிட்டர் தலைமையகத்தை இந்த சேர்த்துள்ளது.

உச்சநீதிமன்றம் அந்த டிவிட்டுகளை நீக்கும்படி உத்தரவிட்டால், நீக்குவதற்குத் தயாராக இருப்பதாக டிவிட்டர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அருண் மிஸ்ரா அமர்வு, “ஏன் நீங்களாக சொந்தமாக நீக்க மாட்டீர்களா ? நாங்கள் அவமதிப்பு வழக்கை எடுத்த பின்னரும் முறையான ஆணைக்காக நீங்கள் காத்திருப்பீர்களா ? நாங்கள் எந்த ஒரு ஆணையையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றே நாங்கள் எண்ணுகிறோம். அதை உங்கள் அறிவுக்கே விட்டுவிடப் போகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.

குறிப்பறிந்து செயல்படத் தவறிய டிவிட்டர் நிறுவனத்தை கடிந்து கொண்டுள்ளது உச்சநீதிமன்றம். அதாவது எஜமானர்கள் கையில் சவுக்கெடுத்தாலே நாய் வாலை ஆட்டிக் கொண்டு முன் வந்து நிற்க வேண்டுமாம். மாறாக சவுக்கைச் சுழற்றினால்தான் வாலை ஆட்டுவேன் என்று சொல்வது எஜமானனுக்கு இழைக்கப்படும் அவமானம் என்று கருதுகிறது உச்சநீதிமன்றம். மேலும், இந்த வழக்கு விவகாரத்தில் தமக்கு உதவுமாறு அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலை கேட்டுக் கொண்டதோடு இந்த வழக்கை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது அருண்மிஸ்ரா அமர்வு.

பெரும்பாலான முன்னணி வழக்கறிஞர்களும், சட்ட வல்லுனர்களும் இது நீதிமன்ற அவமதிப்பு எனும் வகைக்குள் வராது என்று தெரிவித்துள்ளனர். இத்தகைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நேர்மையான, தைரியமான சமூகச் செயற்பாட்டாளர்களுக்குப் புதிதல்ல.

இதற்கு முன்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடத்தைகளை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார் பிரசாந்த் பூஷன். அதே போல வரவர ராவ் உள்ளிட்ட பீமா கொரேகான் வழக்கு விசாரணைக் கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விமர்சித்து வந்துள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தெகல்கா பத்திரிகைக்கு பிரசாந்த் பூஷன் அளித்த நேர்காணலில் முன்னாள் மற்றும் அப்போது நடப்பிலிருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. 2012-ம் ஆண்டு மே மாதம் வரை விசாரிக்கப்படாத இந்த வழக்கை தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். எதிர்வரும் ஜூலை 24-ம் தேதியன்று அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இருந்து இன்றுவரையில் மோடி 2.0 ஆட்சியில், பல மக்கள் விரோத தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இப்போது உச்சநீதிமன்றத்தை விமரிசிப்பதே தவறு என்ற அச்சத்தை பொது வெளியில் ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்காக போராடிய வரவர ராவ் உள்ளிட்ட செயல்பாட்டாளர்களை முடக்குவதற்கு ஆளும் வர்க்கத்திற்கும், இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கும் இந்தியாவின் நீதித் துறை துணை நின்றுள்ளது. இன்று கொரோனா பெருந்தொற்று சூழலிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட பாதுகாக்காமல் பரிதவிக்க விட்டதும் இதே உச்சநீதிமன்றம் தான்.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கவுதம் பாட்டியா உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தை மீறும் தருணங்களிலும், அதன் நீதிபதிகளின் சார்புத் தன்மையையும் அவ்வப்போது அம்பலப்படுத்தியும் விமர்சித்தும் வருகின்றனர். இந்நிலையில், அவர்களை மிரட்டி முடக்குவதற்கும், அவர்களைப் போன்ற செயல்பாட்டாளர்களும், அறிவுஜீவிகளும் உச்சநீதிமன்றத்தை விமர்சிப்பதை டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தன்னியல்பாகவே முடக்குவதற்கும் ஏற்ற வகையில்தான் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது உச்சநீதிமன்றம்.

தன் மீதான விமர்சனத்தை ஒடுக்க நினைக்கும் இந்த உச்சநீதிமன்றம்தான் நமக்கு நீதியை வழங்கி ஜனநாயகத்தை காக்கப் போகிறதா ?


– நந்தன்
செய்தி ஆதாரம் : த வயர்.

1 மறுமொழி

  1. இந்த சட்டம் தெரியாத — தான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள என்றால்… ஜனநாயக அவலம் ,இனி இங்கு நடக்கும் வழக்கு வக்காளத்துகளை உலக கோர்ட் தான் சரிபார்க்க வேண்டும்,ஒரு நாட்டில் 90 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கக்கூடாது ,அப்படி தொடரும் ஆட்சி யை 356 ன் கீழ் எவ்விசாரணையுமின்றி களைத்து விட்டு, குடியரசு தலைவரின் பிரகடனப்படி தேர்தல் ஆணையம் மறுத்தேர்தலுக்கான உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும், சட்டத்தின் படி இவர் களை ——– சரி…!!!???

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க