மோடியின் தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்கள் : தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதிகட்டப் போர் !

பாகம் 2

முதல் பாகம்

லைமூடல் அல்லது தற்காலிக பணிமுடக்கம் (லே ஆப்) செய்வதென்றால், 100 பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனங்கள் அரசின் முன்அனுமதியைப் பெற வேண்டும் என்கிற உச்சவரம்பை 300 ஆக உயர்த்தி இருக்கிறது. ஒரே நிறுவனம், ஒரே வளாகத்தில் தனித்தனியாக நிறுவனப் பதிவுகளை செய்து கொண்டு ஏமாற்றி வருவதை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதேபோல, இத்தகைய நிறுவனங்களுக்கு துவக்க காலத்தில் 5 ஆண்டுகளுக்கு அரசு வழங்கும் வரிச்சலுகைகளை பெற்றுக்கொண்டு, 5-வது ஆண்டில் ஆலையை மூடிவிட்டு இன்னொரு மாநிலத்துக்கு குடியேறுகின்ற கார்ப்பரேட் கயமைகளையும் பார்த்திருக்கிறோம். இந்த மோசடிகளை இன்னமும் தீவிரமாக்க வழிவகை செய்துள்ளது, மோடி அரசு. மற்றொருபுறத்தில், ஆலைமூடல் போன்ற தருணங்களிலும், தற்காலிக பணிநீக்கம் போன்ற தருணத்திலும் தரக்கூடிய இழப்பீடு அல்லது பிழைப்பூதியத் தொகையினை மிக அற்ப அளவுக்கு குறைக்கும் விதமாக “ஊதியம்” என்கிற வரையறையை குழப்பத்துடன் கூடியதாக மாற்றியுள்ளது.

எத்தனை அநீதிகள் நடந்தாலும் நம்மைப் பாதுகாக்க தொழிற்சங்கம் இருக்கிறது என்று இனிமேல் பேச்சளவில் கூட சொல்லிக் கொள்ள முடியாது. தொழிலாளர் துறை நமக்கு பாதுகாப்பு தரும் என்றெல்லாம் ‘மூடநம்பிக்கை’ வைத்திருக்கக்கூடாது. இவை எல்லாம் காலாவதியாக்கப்பட்டுவிட்டன. தொழிற்சங்கத்தின் முக்கிய, சட்டபூர்வ உரிமையாகக் கருதப்படுகின்ற கூட்டுப்பேர உரிமையை ஒரே அடியில் அடித்து காலியாக்கிவிட்டது, மோடி அரசு.  தொழிலாளர் உரிமை சார்ந்த எந்த பிரச்சினையையும் (தொழிற்தாவா – Industrial Dispute) தொழிற்சங்கம் கையாண்டு, தொழிலாளர்களை பாதுகாக்கும் வாய்ப்பெல்லாம் இனிமேல் தேவை இல்லை என்கிறது, மோடிஜியின் புதிய சட்டத் தொகுப்பு. 20 பேருக்கு மேல் பணிபுரியும் எந்த ஒரு நிறுவனத்திலும் நிர்வாகமே “குறை தீர்க்கும் குழு” (Grievanve Redressal Committee) ஒன்றை அமைக்கலாம். இந்த குறை தீர்க்கும் குழுவில் அதிகபட்சமாக 10 இருப்பார்கள். இந்த 10 பேரில் 5 பேர் தொழிலாளர்கள், ஏனைய 5 பேர் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருப்பார்கள். இந்த குழுவின் தலைவராக நிர்வாகத்தைச் சேர்ந்த 5 பேரில் ஒருவர் 6 மாதமும், தொழிலாளிகள் 5 பேரில் ஒருவர் இன்னொரு 6 மாதமும் பொறுப்பு வகிப்பார்கள். இந்த குழு எப்படி அமையும், அது எப்படி வேலை செய்யும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இன்றோ, நாளையோ வேலை பறிபோய்விடும் என்று நடுங்கிக்கொண்டிருக்கும் தொழிலாளி முதலாளியின் 5 பிரதிநிதிகளோடு எந்த தொனியில் பேச முடியும் என்பதையும், அந்த தொழிலாளி ஒரு 6 மாதத்துக்கு நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு தலைவராக இருக்க முடியும் என்றால் அவர்களை அந்த தொழிலாளி எப்படி ‘கட்டுப்படுத்த’  முடியும்? இதைவிட கேலிக்கூத்தான ஒன்று இருக்க முடியாது.

நூலிழையில் ஊசலாடும் வேலையை காப்பாற்றிக் கொள்ள தவித்துக் கொண்டிருக்கும் தொழிலாளியை முதலாளிக்கு ‘உத்தரவு’ போடும் இடத்தில் நிறுத்தி வைப்பது சாத்தியமானதா? உண்மையில் என்ன நடக்கும் என்றால், நிர்வாகம் தனக்கு அடங்கிப்போகின்ற 5 பேரை வைத்து ஒரு குறை தீர்க்கும் குழுவை அமைப்பார். அந்த 5 பேரில் மிகுந்த அச்சத்தில் இருக்கும் தொழிலாளியை குழுவின் தலைவராகவும் போட்டு விடுவார். இப்படித்தான் தொழிலாளர்களது ‘குறைகள்’ தீர்க்கப்படும்.

குறை தீர்க்கும் குழு மட்டும்தான் வைத்துக் கொள்ள முடியுமா? இந்த குழு முதலாளியின் எடுபிடியாக இருப்பதால், நாங்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்கிறோம் என்று தொழிலாளர்கள் சொல்ல முடியாது. 90% தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இருந்தால் கூட அந்த சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டியதில்லை. முதலாளி தனக்குத் தானே அமைத்துக் கொள்கிற குறை தீர்க்கும் குழுவுடன் பேசி எந்த முடிவையும் எடுக்கலாம். இதை எதிர்த்து போராட எந்த சட்டமும் துணை நிற்காது.

தொழிலாளர் துறை என்கிற ஒன்று இருக்கிறதே; அது நம்மை பாதுகாக்காதா என்று சிலர் அப்பாவித்தனமாக நினைக்கலாம். ஏற்கனவே, தொழிலாளர் நலத்துறை என்கிற ஒன்று இருக்கிறதே, அதற்கு எந்த அதிகாரமாவது இருக்கிறதா? கொஞ்ச நஞ்ச அதிகாரமாவது இப்போது இருக்கிறது. அதை எந்த அதிகாரியும் பயன்படுத்திக் கொண்டதாக வரலாறு இல்லை. இந்த நிலையில் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கான பெயரளவிலான அதிகாரம் கூட பறிக்கப்பட்டுவிட்டது. இனிமேல், தொழிலாளர் துறை அதிகாரிகளது பெயர் பிரச்சினையை எளிதாக்கும் அதிகாரி (Facilitator). இந்த சூழலில் தொழிலாளியின் வேலை உத்தரவாதம், வேலைநிலைமை, உழைப்புக்கேற்ற ஊதியமும், விலைவாசிக்கேற்ற ஊதிய உயர்வும் பெறுகின்ற சட்டபூர்வ உரிமைகள் என்ன கதிக்கு ஆளாகும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? இவை எல்லாம் கடலுக்கடியில் மூழ்கி இருக்கும் மிகப்பெரிய பனிமலையின், வெளிப்புறத்தில் தெரிகின்ற ஒரு சின்னஞ்சிறு முனைதான். கடலுக்கடியில் மறைத்திருக்கும் பெரிய மலை அடுத்தடுத்து, ஏனைய இரண்டு சட்டத்தொகுப்புகளில் (சமூகப்பாதுகாப்பு குறித்த சட்டத் தொகுப்பு மற்றும் பணியிடப் பாதுகாப்பு; உடல்நலம் மற்றும் வேலைநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு  சமூகப்பாதுகாப்பு) ஆகியவற்றில் மறைந்திருக்கின்றன.

இதுவரை இந்திய தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளில் துளியளவு சட்டத்தின் வழியாகப் பெற்றிருந்தாலும் அதனை முதலாளி வர்க்கமோ, அரசோ பொருட்டாக மதித்ததில்லை. நாடு முழுவதும் பல ஆண்டுகளாக, இலட்சக்கணக்கில் தேங்கி இருக்கும் தொழிலாளர் வழக்குகளது பட்டியலே சான்று. அரசு போடுகின்ற அவசர சட்டங்களைக்கூட முதலாளிகள் மதிப்பதில்லை. உதாரணமாக, 2016 ஆம் ஆண்டில் போனஸ் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது, மோடி அரசு. போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பை உயர்த்தும் வகையில் அந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதை முதலாளிகள் ஏற்கவில்லை. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து முதலாளிகள் போட்ட வழக்கு இன்றுவரை உச்சநீதிமன்றத்தில் தூங்கிக்கிடக்கிறது.

படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

ஆக, அரசு, தப்பித்தவறி தொழிலாளர்களுக்கு சாதகமாக சிறிய சட்டத்திருத்தம் கொண்டுவந்தாலும் அதன் பலன்களை தொழிலாளர்கள் அடையவிடாமல் தடுக்கப்படுகின்றனர். மிகச்சமீபத்திய உதாரணமாக, கொரோனா முடக்க காலத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் போட்ட உத்தரவின் கதியைப் பார்க்கலாம். மார்ச் 25 முதல் மே 17 வரை எல்லா ஆலைகளும், எல்லா வகை தொழிலாளர்களுக்கும் முழு சம்பளம் தர வேண்டும் என்பது உள்துறை அமைச்சக உத்தரவு. இது மிகக் கடுமையான, முதலாளிகளை அழிக்கின்ற உத்தரவு என்று சொல்லி முதலாளிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். நாடு முழுவதும் பல கோடி தொழிலாளர்களை பட்டினியில் தள்ளிய முதலாளிகளை உச்சநீதி மன்றம் கண்டிக்கவில்லை. மாறாக, இந்த பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை தீராவிட்டால் (அதாவது முதலாளிகள் சம்பளம் தராவிட்டால்), முதலாளிகள் மீது வழக்கு போடக்கூடாது என்றெல்லாம் சொன்ன உச்சநீதிமன்றம் ஜூலை மாத இறுதியில் இறுதி தீர்ப்பு வழங்குவதாக ஜூன்12 அன்று அறிவித்தது. செப்டம்பரைக் கடந்தும் இறுதி தீர்ப்பு வரவில்லை. சம்பளம் வழங்குவதற்கு உத்தரவு போட்ட மத்திய உள்துறை அமைச்சகம் தனது உத்தரவை நிறைவேற்ற  எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான் சட்டப்பாதுகாப்பின் இலட்சணம்.

இந்தியத் தொழிலாளி வர்க்கம் காலனியாதிக்க காலத்தில் போராடிப்பெற்ற உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. அதேநேரத்தில், இந்த உரிமைகள் வெறும் புத்தகத்தில் இருக்கவும் அனுமதிக்க முடியாது. கூட்டுப்பேர உரிமை என்கிற சட்டப்பூர்வ உரிமையானது, தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச்சக்திக்கு விலை பேசப்படும் ஏற்பாடுதான். இது ஒரு சீர்த்திருத்தம் மட்டுமே. இந்த சீர்த்திருத்த வாய்ப்பை தொழிலாளி வர்க்கம் எந்த எல்லை வரையில் பயன்படுத்த வேண்டும்; எந்த நோக்கத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை ஆசான் லெனின் சொல்லித் தந்திருக்கிறார்.

கூலி அடிமைத்தனத்துக்கெதிரான போராட்டத்தில், தொழிலாளி வர்க்கம் தனது போராட்ட வலிமையை பாதுகாத்துக் கொள்ளவும், அந்த வலிமையை பலப்படுத்திக் கொள்ளவும்தான் இந்த சட்டபூர்வ உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கூலி அடிமை முறையை ஒழிப்பதே நமது இறுதி இலக்காக இருக்க வேண்டும். கூலியடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திய தொழிலாளி வர்க்கம் தன்னை பலப்படுத்திக் கொள்ள உதவி செய்யும் என எதிர்பார்த்த சட்டபூர்வ உரிமைகள் சட்டப் புத்தகத்தில் இருந்தபோதும் பலன் அளிக்கவில்லை. இப்போது புத்தகத்தில் கூட இந்த உரிமைகள் இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கையாலாகாத்தனமான சட்டபூர்வ உரிமைகளை, அதிகாரபூர்வ உரிமைகளாக நிலைஇனி ஏட்டிலும் காணமுடியாது சட்டபூர்வ உரிமைகள்நாட்ட தொழிலாளி வர்க்கத்துக்கு தெரிந்த ஒரே வழி சோசலிசம்தான். இதைத்தவிர மாற்றுவழியோ, குறுக்குவழியோ ஏதும் இல்லை.

(முற்றும்)

கட்டுரை ஆக்கம்: பா.விஜயகுமார்,
தலைமைக் குழு உறுப்பினர்
, பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு-புதுவை

முதல் பாகத்திற்கு செல்ல…

2 மறுமொழிகள்

  1. சட்ட பூர்வ உரிமைகள் தடைமுறையில் ஏற்கனவே இல்லை. இனிமேல் சட்டப்புத்தகத்திலும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

    இந்தோனிசியாவில் நடைபெற்ற கலகம் இந்தியாவில் ஏன் நடக்கவில்லை என்பதுதான் கேள்வி???

  2. மறுக்காலினி என்றால் இந்தியா சுதந்திரம் அடைந்து பின்னர் காலனியாதிக்கத்திற்க்கு போனாதா தோழரே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க