ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை பஞ்சாயத்து கூட்டத்தின்போது தரையில் அமரச் செய்தது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்ததைத் தொடர்ந்து அப்பிரச்சினை தற்போது பேசப்படுகிறது.
கடலூர் மாவட்டம் தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஸ்வரி மற்றும் வார்டு உறுப்பினர் சுகந்தி இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஊராட்சி மன்றத்தேர்தலில் தெற்குத் திட்டை ஊராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கான ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கபட்டது. அதில் போட்டியிட்டு ராஜேஷ்வரி பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி அன்று நடந்த ஊராட்சி மன்றக் கூட்டத்தில் சுகந்தி மற்றும் ராஜேஷ்வரியை தரையில் அமரச் செய்திருக்கிறார், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகன். நாற்காலியில் அமர்ந்திருந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி தரையில் அமரும் வரையில் கூட்டத்தை நடத்தவிடாமல் தடுத்துள்ளார் மோகன்.
படிக்க :
♦ கொரோனாவால் சரிவேற்படாத ஒன்று சாதிய படுகொலைகள் மட்டுமே !
♦ கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்
இந்த நிகழ்வு குறித்து கடந்த அக்டோபர் 10-ம் தேதியன்று புவனகிரி போலீசு நிலையத்தில் ராஜேஷ்வரி புகார் அளித்துள்ளார். அதில் பஞ்சாயத்து துணை தலைவர் மோகனின் சாதி வெறி நடவடிக்கைகளைக் குறுப்பிட்டுப் புகாரளித்துள்ளார். சாதிய ரீதியாக அவமானப்படுத்திய துணைத் தலைவர் மோகன் மீது, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரடியாக தலையிட்டதைத் தொடர்ந்து தேர்தல் நெருங்குவதையொட்டி, மாவட்ட ஆட்சியர் தலையிட்டுள்ளார். அதனையடுத்து ஊராட்சி மன்றச் செயலாளர் சிந்துஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஊராட்சித் துணைத்தலைவர் மோகன் தலைமறைவாகிவிட்டார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் ராஜேஷ்வரி ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றது முதல் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் அவரை ஊராட்சி துணைத் தலைவர் மோகன் அவமானப்படுத்தியிருக்கிறார். தனக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்த 5 வார்டு உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதைக் காட்டி மிரட்டியிருக்கிறார் மோகன்.
ஊராட்சி மன்றத்தில் பெரும்பான்மையினர் சாதி இந்துக்களே என்பதைக் காட்டி, தமக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அனைவரையும் திரட்டி நம்பிக்கையில்லாத் தீர்மானம் போட்டு பதவியிலிருந்து நீக்கப் போவதாகவும் மோகன் மிரட்டியுள்ளார்.
தான் சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்றும் தனது சொல்பேச்சைக் கேட்கவில்லை எனில் உயிருக்கு உத்தராவதம் இல்லை என்றும் ராஜேஷ்வரியை மோகன் மிரட்டியதாகவும் அதனையொட்டிதான் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் ராஜேஷ்வரியின் கணவர் சரவணக்குமார், தி நியூஸ்மினிட் இணையதளத்திடம் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து ஊராட்சி மன்றக் கூட்டங்களில் ராஜேஸ்வரியை நாற்காலியில் உட்கார அனுமதிப்பதில்லை. குடியரசு தினவிழாவிலும், சுதந்திர தினவிழாவிலும் கொடியேற்றவும் அவரை அனுமதிக்கவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் என்பவரை சுதந்திர தினத்தன்று கொடியேற்ற முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அவமானப்படுத்திய நிகழ்வு நினைவிருக்கலாம்.
மிகச்சில சம்பவங்களே வெளிவந்திருந்தாலும், இதுபோன்று வெளிவராத சம்பவங்கள் பல அன்றாடம் நடந்து வருகின்றன. இத்தகைய சாதியரீதியான ஒடுக்குமுறை மற்றும் அயோக்கியத்தனங்கள் அனைத்துமே அதிகபட்சமாக போலீசு நிலையத்தில் இருதரப்பு பஞ்சாயத்துகளோடு ‘முடித்து’ வைக்கப்பட்டு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இது குறித்து பிபிசி தமிழ் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மோகனிடம் கேட்டதற்குப் பதிலளித்த மோகன், தாங்கள் யாரும் அவர்கள் இருவரையும் (ராஜேஷ்வரி, சுகந்தி) தரையில் அமரச் சொல்வதில்லை என்றும், அவர்கள் இருவரும் தாங்களாகவே தரையில் அமர்ந்து கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இரண்டு மாதம் கழித்துக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் புகாரில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பிரச்சினைகளில், பொதுவாகவே ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களின் வாதம் இதுதான். “நாங்கள் அப்படிச் செய்யச் சொல்வதில்லை. அவர்களாகவே அவ்வாறு இருக்கின்றனர்; நாங்கள் அனைவரையும் சரிசமமாகவே பார்க்கிறோம்; நாங்களெல்லாம் ஊருக்குள் தாயாக பிள்ளையாக நடந்து கொள்கிறோம்” என்பது போன்ற வசனங்களுக்கு குறிப்பாக தமிழகத்தில் பஞ்சமில்லை.
கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப்பெற்ற சலுகைகளையும் தட்டிப் பறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாதிய சமூகக் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கான ஒரே வழிமுறையாக இருப்பது உழைக்கும் மக்களை விவசாயியாக, தொழிலாளியாக, மாணவர்களாக என வர்க்கங்களாக அணிதிரட்டுவது மட்டும்தான்.
அதனைச் சாதிக்காதவரை சாதியரீதியான இத்தகைய ஒடுக்குமுறைகளைத் தடுக்க முடியாது.
சரண்
செய்தி ஆதாரம் : தி நியூஸ்மினிட், பிபிசி தமிழ்
இன்றோ நேற்றோ நடப்பதில்லை இப்படியான விசயங்களின் போது நாம் வர்க்கமாக திரள்வது என்பதை மட்டும் முன்வைத்து விட்டு ஒளிந்து கொள்கிறோம் , சாதிய கட்டமைப்பை தகர்க்க இன்னும் நாம் திறம்பட மார்க்ஸிய ஆசான்களை ஆய்வுகளின் மூலம் கையாண்டு சில முடிவுகளை எடுக்க வேண்டும் வர்க்கமாக திரட்ட பெரும்பான்மையான பாட்டாளி வர்க்கத்தை திரட்ட செயல்தந்திரம் என்ன என்பதை கண்டறிந்து தீர்க்க முயல வேண்டும்
தொடர்ந்து தரையில் அமருங்கள் ராஜேஸ்வரி அவர்களே…”இனி ஒருபோதும் தரையில் அமரமாட்டேன்” எனும் போராட்டத்தை முன்னெடுத்து ஜனநாயக சக்திகளை இணைத்து…
சாதி வெறியன் மோகனின் வாக்குமூலமே சாதி வெறிக்கு சான்று. தலைவர் கீழே அமர்வதாகக் கூறினால் ஜனநாயக உணர்வு கொண்ட நபர்கள் என்ன செய்வார்கள்? என்ன செய்ய வேண்டும்? இயல்பாக நீங்கள்தான் தலைவர், தலைமையாக அமர்ந்து கூட்டத்தை நடத்துங்கள் என்பதுதான் பதிலாக, நடைமுறையாக இருக்கும். பார்ப்பன பாசிச நடைமுறை பார்ப்பனர்களிடம்தான் இருக்கும் என்பது பொருளற்றது. இடைநிலை சாதிகளிடமும் இருக்கிறது என்பதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. சாதி உணர்வை ஒவ்வொருவரும் ஒழித்துக் கட்ட வேண்டும். வர்க்கமாகத் திரள்வது ஒரு நடைமுறை.