கடந்த ஜூன் மாதத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலின் பின்னணி குறித்து கடந்த ஜூலை மாத புதிய ஜனநாயகம் இதழில் எழுதப்பட்ட தலையங்கக் கட்டுரை இது. முன்னாள் பொறுப்பாசிரியரால் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று !

0-0-0

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 தேதியன்று இந்திய துருப்புக்களுக்கிடையே நடந்த கைகலப்பு, உயிர்ப் பலிகளை அடுத்து நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்திய எல்லைக்குள் யாரையும் நுழையவிடவில்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவில்லை” என விளக்கமளித்தார், பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால், கைகலப்பும் மோதலும் ஏற்பட்டதேன்? 20 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதேன்?” என்ற கேள்விகளை எழுப்பின.

இக்கேள்விகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக விளக்கம் அளித்தது என்றால், சங்கிகளோ, பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கேள்வி கேட்பவர்களைத் தேசத்தை இழிவுபடுத்துபவர்களாக முத்திரை குத்தினர்.

மோடி அரசோ இன்னும் ஒருபடி மேலே போய், இக்கேள்விகளை எழுப்பிய காங்கிரசை சீனாவிடம் காசு வாங்கும் கைக்கூலியாக வசைபாடியதோடு, காந்தி குடும்பத்தாரால் நடத்தப்படும் மூன்று அறக்கட்டளைகள் சீனா உள்ளிட்ட அந்நிய நாடுகளிலிருந்து நிதி பெற்றதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்தி, அவற்றை விசாரிப்பதற்கு கமிட்டியொன்றை அமைத்திருக்கிறது.

மோடி அரசு உண்மைகளை மூடிமறைக்க என்னதான் முயன்றாலும், இந்தியா இடையேயான முறுகல் நிலையைத் தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை எடுத்துக்காட்டி வருகின்றன.

படிக்க :
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !
சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யியுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் செல்லும் உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டுப் (Line of Actual Control) பகுதியிலிருந்து இருநாட்டுப் படைகளும் பின்வாங்கிக் கொள்ளும் ஒப்பந்தம் முடிவாகியிருக்கிறது.

இந்த ஒப்பந்தப்படி, இந்தியப் படைகள் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 1.8 கி.மீ. தொலைவிற்குப் பின்வாங்கியிருப்பதோடு, அந்தப் பகுதியை இராணுவச் சிப்பாய்கள் ரோந்து வராத பஃவர் ஜோன் ஆகவும் அறிவித்திருக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதுமே தனக்குச் சொந்தமானது என சீனா உரிமை பாராட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், இவ்விரு முடிவுகளை இந்திய அரசும் இராணுவமும் எடுத்திருப்பதுதான் இங்கு கவனங்கொள்ளத்தக்கது.

லடாக்கிற்குத் திடீர் விஜயம் செய்து, இந்திய இராணுவச் சிப்பாய்களைச் சந்தித்து, அவர்கள் மத்தியில் சீனாவின் விரிவாக்கத்துக்கு எதிராக மோடி எச்சரிக்கை விடுத்த பத்து நாட்களுக்குள் இந்தியா கல்வான் பகுதியிலிருந்து பின்வாங்கியிருக்கிறது எனில், சீன ஆக்கிரமிப்பு என ஆர்.எஸ்.எஸ். கிளப்பிவிட்டு வரும் பூச்சாண்டியின் பொருள்தான் என்ன?

லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கிற்குச் சற்று கிழக்கே தொடங்கி மேற்கே நேபாள எல்லையையொட்டியுள்ள பாங்காங் டெஸ்ஸோ ஏரி வரையிலும் இந்திய  சீன இடையேயான எல்லை தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில், அப்பகுதியெங்கும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control  LAC) என்ற கற்பனைக் கோடுதான் இரண்டு நாடுகளையும் பிரிக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஜம்மு பகுதியில் எல்லையாக வரித்துக் கொள்ளப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு கோடு (Line of Control  LOC) போல, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு தெளிவாக வரையறுக்கப்பட்டு, இரு நாடுகளும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக அமையவில்லை.

இந்த உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடும் கடந்த அறுபது ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. 1959, 1960, 1962 ஆகிய ஆண்டுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடும், 1993 ஆண்டில் இந்தியா எல்லை அமைதி ஒப்பந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடும் ஒன்றல்ல. மேலும், 1993 ஆண்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் 23 இடங்கள் சர்ச்சைக்குரியவையாக உள்ளன. அப்பகுதிகளை இரு நாடுகளுமே தத்தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளாகக் கூறி வருகின்றன.

இப்படி எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சீனாவை ஆக்கிரமிப்பாளனாக இந்திய அரசும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசியக் கட்சிகளும் குற்றஞ்சுமத்துவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. எனினும், சர்ச்சைக்குரிய கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங் டெஸ்ஸோ ஏரி ஆகிய இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகத் தனது படை எண்ணிக்கையை சீனா அதிகப்படுத்தியதற்கு அந்நாட்டை மட்டுமே குற்றஞ்சுமத்திவிட முடியாது. சீனாவின் இந்த தன்னிச்சையான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னே இந்தியாவின் “ஆக்கிரமிப்பு” நோக்கங்களுக்கும் இடமுண்டு.

லடாக்கிலுள்ள லே நகரிலிருந்து 255 கி.மீ. தொலைவிலுள்ள தௌலத் பேக் ஓல்டி பகுதி வரையிலும் இந்தியத் துருப்புக்களை விரைந்து அனுப்பும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் சாலை ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. 2014 மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, இந்தச் சாலையை விரைந்து முடிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு இணையாகச் செல்லும் இந்தச் சாலை, இந்தியப் பகுதிக்குள் அமைகிறதென இந்திய அரசால் நியாயப்படுத்தப்பட்டாலும், எல்லைத் தகராறு இருந்துவரும் நிலையில் இந்தச் சாலை அமைக்கப்படுவதை சீனா எதிர்த்தே வந்திருக்கிறது.

இந்தச் சாலை தொடர்பான முரண்பாடுகளுக்கு அப்பால், ஜம்மு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு உரிமையையும் அதனின் மாநிலத் தகுதியையையும் ரத்து செய்து, அதனை இரண்டாக உடைத்து, லடாக் நிர்வாகத்தை டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் சென்றதையும் சீனா சந்தேகக் கண்ணோடு அணுகி எதிர்த்து வருகிறது.

ஜம்மு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமையை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நான் ஜம்மு எனக் குறிப்பிடும்போதெல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரையும், சீனா வசமுள்ள அக்சாய் சின் பகுதியையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என உரையாற்றி, ஆர்.எஸ்.எஸ். அகண்ட பாரதக் கனவை உறுதிப்படுத்தினார்.

ஜம்மு சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு செப்டெம்பர் மாதத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்றில்லாவிட்டாலும், ஒருநாள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா எடுத்துக் கொள்ளும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த உரைகள் எல்லாம் பாகிஸ்தானிற்கு எதிராக மட்டுமல்ல, சீனாவையும் சீண்டும் நோக்கிலும் கூறப்பட்டவை தான்.

இவற்றுக்கு அப்பால், மோடியின் கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புதிய நெருக்கமும், அமெரிக்காவின் சீன எதிர்ப்பு ஜோதியில் மோடி கலந்துவிட்டதும் உலகமே அறிந்த உண்மையாகும். இந்தோ பகுதியில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா என்ற நான்கு நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. மேலும், இந்தியாவின் கடற்படை மற்றும் விமானத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஏற்ப தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தாகியிருக்கிறது.

கரோனா தொற்றுப் பரவலுக்கு சீனாதான் காரணமென்று குற்றஞ்சுமத்திவரும் அமெரிக்கா, அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தென் சீனக் கடல் பகுதியில் அணு ஆயுதங்களைச் செலுத்தக்கூடிய எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களையும் மூன்று விமானந்தாங்கி கப்பல்களையும் அனுப்பிவைத்து, சீனாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

படிக்க :
♦ அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
♦ பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

கரோனா தொற்றைப் பரவலைப் பயன்படுத்திக் கொண்டு சீனாவை அரசியல் மற்றும் பொருளாதாரரீதியாகத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்துவது, அதனை அச்சுறுத்திப் பணியவைப்பது என்ற இரு நோக்கங்களின் அடிப்படையில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் காய்களை நகர்த்தி வருவதற்கு மோடி அரசும் துணை நிற்கிறது.

சீனா, உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தனது படை எண்ணிக்கையை அதிகரித்து வருவதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். சீனாவை உலகின் புதிய எதிரியாகச் சித்தரிக்க முயலும் அமெரிக்காவின் வல்லாதிக்க நோக்கத்திற்கு அடியாள் வேலை பார்க்கும் நப்பாசையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் சீன எதிர்ப்பு தேசிய வெறியில் மறைந்திருக்கிறது.

எனினும், ஆர்.எஸ்.எஸ். இந்த சீன எதிர்ப்பு தேசிய வெறி, வெறுங்குடம்தான் அதிகம் சத்தம் போடும் என்ற கதையாகவே நடைமுறையில் உள்ளது. ஏனென்றால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் பொருளாதார வல்லமை மோடி அரசுக்கு இல்லை. சீனாவைப் போல இந்தியாவை உலகின் ஏற்றுமதி மையமாக மாற்றக்கூடிய உற்பத்திக் கட்டமைப்புகளை உருவாக்க மோடி அரசும் தயாராக இல்லை; இந்தியத் தரகு முதலாளிகளும் தயாராக இல்லை.

இன்னொருபுறத்திலோ, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை இராணுவரீதியாகத் தீர்த்துக் கொள்ளும் நிலைமையிலும் மோடி அரசு இல்லை. வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் எல்லையில் ஐந்து இலட்சத்திற்கும் மேலான துருப்புக்களைக் குவித்து முண்டா தட்டினார். பின்னர் அமெரிக்க நிர்பந்தத்தால், ஒரு ரவையைக்கூடச் சுடாமல் படைகளைப் பின்வாங்கிக் கொண்டார். அப்படிப்பட்ட நாடகத்தன்மை கொண்ட முஸ்தீபுகளைக் காட்டும் நிலையில்கூட இன்று மோடி அரசு இல்லை.

இந்த நிலையில், பாம்பும் சாகக்கூடாது தடியும் நோகக்கூடாது என்ற கதையாக, டிக்டாக் உள்ளிட்ட சீனா நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளைத் தேசப் பாதுகாப்பைக் காட்டித் தடை செய்திருக்கிறது, மோடி அரசு. மேலும், அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் துறைமுகத்திலிருந்து வெளிச் செல்லுவதைத் தாமதப்படுத்தும் குசும்புத்தனத்திலும் ஈடுபட்டு வருகிறது.

இந்தச் சில்லுண்டி நடவடிக்கைகளை இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கம்கூட ஆதரிக்க மறுக்கிறது. அதனைவிட முக்கியமாக, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் செல்லும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 1.8 கி.மீ. தூரம் இந்திய இராணுவம் பின்வாங்க ஒப்புக்கொண்டிருப்பதை சீனாவிற்குக் கிடைத்த வெற்றியாகவே முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட பலரும் கருதுகின்றனர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களோ சீனாவிற்கு எதிராக மோடி அரசு ஒரு மாபெரும் வர்த்தகப் போரைத் தொடங்கிவிட்டது போலவும், சீனாவை வெற்றிகரமாகப் பின்வாங்கச் செய்துவிட்டது போலவும் சவுண்டுவிட்டு, மோடி அரசின் சரணாகதியை, அதனின் பல்முனைத் தோல்விகளை மூடிமறைத்துவிட முயலுகின்றன.

புதிய ஜனநாயகம்