PP Letter headபத்திரிகை செய்தி

07-11-2020

கடலூர் மாவட்டம் செல்வமுருகன் படுகொலை!
கொலைகார போலீசை கொலை வழக்கில் கைது செய் !
மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய் !

கடலூர் மாவட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் திருட்டு வழக்கு ஒன்றிற்காக நெய்வேலி போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு லாட்ஜ் உட்பட பல இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகள் செய்யப்பட்டு இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இறந்திருக்கிறார்.

போலீசால் கொலைசெய்யப்பட்ட செல்வமுருகன்

கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடிய செல்வ முருகன் 10 பவுன் நகையை திருடினார் என்று கூறி, உடனே 10 பவுன் நகையை கொடுத்து விடு உன் கணவனை விட்டுவிடுகிறோம் என்று செல்வமுருகனின் மனைவியை மிரட்டியிருக்கிறது போலீசு.

உச்சநீதிமன்றம் ஒரு நபரை கைது செய்வதற்கு 11 கட்டளைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால் எங்கேயும் அந்த கட்டளைகள் பின்பற்றப்படுவதில்லை. ஏழு ஆண்டுகளுக்குள் தண்டனை இருக்கக்கூடிய குற்ற வழக்குகளில் ரிமாண்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் பெரும்பாலான மேஜிஸ்ட்ரேட்டுகள் அதை பின்பற்றுவதில்லை .

காவல் நிலைய கொட்டடி படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கையில், ஒருபுறம் காவல்துறை உங்கள் நண்பன் என்பது யாரை ஏமாற்றுவதற்காக?

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

♦ கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

சாத்தான்குளம் இரட்டை படுகொலைகளுக்கு எதிராக தமிழகமே கொதித்து எழுந்தது. ஆனாலும் இன்றுவரை போலீஸின் கொட்டடி படுகொலைகள் நின்றபாடில்லை என்பதைத்தான் செல்வமுருகனின் சித்திரவதைப் படுகொலை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ஒரு காவல் நிலையத்தில் சித்திரவதை – படுகொலை நடைபெறுகிறது என்றால் அந்தக் காவல் நிலையத்தில் பணி புரிந்த அனைத்து காவலர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய போலீஸ்காரர்கள் உடனே கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்து படுகொலை செய்த ஒரு போலீசை கைது செய்வதற்கே மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய மோசமான ஒரு சூழலில் தான் நாம் இருக்கிறோம் .

செல்வமுருகன் படுகொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு ஒப்புக் கொள்வதற்கு நான்கு நாட்கள் போராட வேண்டியதாகிறது.

பன்னாட்டு ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்ற போலீசு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

செல்வமுருகனை கொலை செய்த போலீஸ்காரர்கள் அனைவரும் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

குற்றுயிரும் குலையுயிருமாக வந்த செல்வமுருகனை பரிசோதிக்காமல் சிறைக்கு அனுப்பிய நீதித்துறை நடுவர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போலீஸின் அராஜகங்களுக்கு முடிவு கட்டாமல் மக்கள் ஒருபோதும் உயிர் வாழவே முடியாது! அதற்கான போராட்டங்களை முன்னைவிட இன்னும் தீவிரமாக நடத்த வேண்டும் என்பதுதான் இந்த காவல் கொட்டடி படுகொலையும் நமக்கு உணர்த்துகின்ற உண்மை.

தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க