நெல்லை மாவட்டம் விளாகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செம்புக் குட்டி. தனது மனைவியின் பெயரில் டவுன் தெற்கு ரத வீதியில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் கிளையில், நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தார். அதற்குரிய அசலையும் வட்டியையும் எந்த ஒரு தாமதமில்லாமல் முறையாக கட்டியும் வந்தார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த ஜனவரி 20-ம் தேதி அவரது மனைவி காலமாகிவிட்டார். உடனே இந்தத் தகவலை தனது மூத்த மகன் வேல்முருகன் மூலம் பைனான்ஸ் அலுவலகத்திற்கு நேரில் வந்தும் தகவல் தெரிவித்திருந்தார். அப்போதே ”கடனுக்கான அசலையும், வட்டியையும் செலுத்தி விடுகிறேன். அதன்பின்பு வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொடுத்துவிட்டு, நகைகளை பெற்றுக் கொள்கிறேன்” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். அந்தச் சமயத்திலேயே கடனுக்கான அசல் தொகையில் ரூபாய் ஒரு லட்சம் செலுத்திவிட்டும் வந்துள்ளார் வேல்முருகன்.

அதன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு அசலும் வட்டியும் செலுத்தி வந்துள்ளார். பின் கொரோனா ஊரடங்குக் காலத்தில் ஆன்லைன் மூலமாக அசல் வட்டியை செலுத்த முயற்சித்தபோது, சேவை முடக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு முடிந்த பின்பும் இதே நிலை தொடர்ந்ததால், நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த முத்தூட் பைனான்ஸ் கிளையை அணுகி அசலையும் வட்டியையும் செலுத்த முயற்சித்துள்ளார். அங்கும் “System” அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டபோது customer death என்று lock செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இது குறித்து முன்கூட்டியே எந்த தகவலையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை.

படிக்க :
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !
♦ பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !

பின் மறுநாள் வேல்முருகன் அவர்கள் டவுன் முத்தூட் மேனேஜர் ஞானசேகரனை சந்தித்து விபரம் கூறியுள்ளார். அதற்கு மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசி குறைகளை நிவர்த்தி செய்வதாக கூறி உள்ளார்.

”நகை கடனுக்கான தொகையை செலுத்த நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். உங்கள் பக்கம்தான் பிழை. எனவே லாக்டவுன் முடிகிற வரை வட்டி தொகையை கழிக்க வேண்டும்” என்று வேல்முருகன் கூறியுள்ளார். அதற்கும் மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசித்தான் முடிவு செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேச முயற்சித்தும் பலமுறை ஃபோன் எடுக்காமல் மேனேஜர் அலட்சியப்படுத்தி உள்ளார். பின்னர் வேல்முருகன் நேரில் சந்தித்து பேசியபோது, மேனேஜர் ஞானசேகரன் “நீங்கள் Legal document சமர்ப்பிக்கும் வரை அசலை செலுத்த முடியாது. ஆனால் வட்டி மட்டும் ஏறிக்கொண்டே இருக்கும் என்று ஈவிரக்கமின்றி பேசியுள்ளார். இதுதானே இவர்கள் ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் ஏமாற்றும் உத்தி.

பாதிக்கப்பட்ட தரப்பு அதே லாக்டவுன் சமயத்தில் கட்டிய அசல் தொகை ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்வதற்கு எந்த ரூல்சும் தடையாக இல்லை. அதையும் கணக்கில் ஏற்றாமல் ஏமாற்றி, பழைய தொகையின் அடிப்படையிலேயே வட்டியைப் போட்டு வந்துள்ளார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

வலது : நெல்லை டவுனில் உள்ள முத்துட் ஃபைனாஸ் அலுவலகம்
இடது : அலுவலகத்தின் முன் அமைப்புகள் போராட்டம்

வேல்முருகன் அவர்களின் பெரியம்மா (வயதானவர்) முத்தூட் பைனான்சுக்கு சென்று மேனேஜரிடம் வாரிசு சான்றிதழ் தாமதமாவது குறித்து பேசியபோது, மேனேஜர் எகத்தாளமாக “எல்லோருக்கும் வாரிசு சான்றிதழ் கிடைக்கிறது உங்களுக்கு மட்டும் கிடைக்கலையா” என்று இறந்த துயரத்தை கூட பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து முத்தூட் பைனான்ஸ் மேலதிகாரிகளிடம் பேசியும் எந்த பயனும் இல்லை. போனை எடுக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். வட்டி மட்டும் ஏறிக்கொண்டே வந்துள்ளது. உண்மையான கணக்கின்படி வெறும் 23 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே வட்டி கட்ட வேண்டிய நிலையில் ரூபாய் 95 ஆயிரம் வரை தாண்டியுள்ளதாகப் பேரிடியை இறக்கி உள்ளனர்.

ஆறு மாதமாக அலைந்த அந்த குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளானது. இந்நிலையில்தான் வேல்முருகன் அவர்கள் நமது அமைப்புகளை நாடினார். உடனடியாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அம்பலப்படுத்தியும், மேனேஜர் ஞானசேகரனை கைது செய்யக்கோரியும் நெல்லை நகர்ப்புற பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டினோம். 12.11.2020 அன்று முத்தூட் பைனான்ஸை முற்றுகையிடுவது எனவும் (மக்கள் அதிகாரம், தமிழர் உரிமை மீட்புக் களம், திராவிடத் தமிழர் கட்சி, பூர்விக தமிழர் கட்சி) ஆகிய அமைப்புகள் அறிவித்தோம்.

பதறியடித்து 11.11.2020 அன்று இரவு வேல்முருகன் அவர்களுக்கு போன் செய்து “நேரில் வாருங்கள் கணக்கை சரி பார்த்து முடித்து விடலாம்” என்று மழுப்பி உள்ளார். அதற்கு வேல்முருகன் ஒத்துக் கொள்ளவில்லை. இப்போது எங்கிருந்து மேனேஜருக்கு ஞானம் பிறந்தது ?

அடுத்த நாள் நாம் முற்றுகை இடுவதற்கு முன்பே பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துகொண்ட போலீசு, முத்தூட் மேனேஜரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் முழுக்க முழுக்க முத்தூட் பைனான்ஸின் பித்தலாட்டம் என்ன என்பது அம்பலமானது. குடும்பத்தினரும் அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் மேல் அதிகாரிகள் மேலும் மூன்று பேர் வரவழைக்கப்பட்டனர். தவறை மறைக்க முடியாமல் மழுப்பலாக பதிலளித்தனர். கார்ப்பரேட் Law படிதான், ரிசர்வ் பேங்க் விதிமுறைகளின்படிதான் செயல்படுவதாக உண்மையையும் உடைத்தனர்.

படிக்க :
♦ கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!
♦ மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

உண்மையில் இந்த கிரிமினல் கும்பலை பாதுகாக்கும் வகையிலேயே ரிசர்வ் பேங்க் விதிமுறைகளை வகுத்துள்ளது. வசமாக அகப்பட்டுக் கொண்ட நிலையில் இரண்டு நாட்களில் கணக்கை சரி பார்த்து நகைகளை ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். ஆறு மாதமாக அலைந்து திரிந்துக் கேட்டபோது வராத புத்தி, போராட்டத்தில் இறங்கிய பின்புதான் வருகிறது என்பதை உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இது போன்ற நிறுவனங்களால் ஏமாற்றப்படுவது தெரிந்தும் எத்தனையோ பேர் சகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதுதான் உண்மை. நாம் நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு வீதியில் இறங்காமல், தட்டிக் கேட்காமல் எந்தத் தீர்வும் இல்லை.

மக்களின் உழைப்பில் உருவான செல்வங்களையெல்லாம் தனியாருக்கு அரசு தாரைவார்ப்பது போல், நிதித்துறையையும் ஒப்படைத்ததன் கொடூரமான விளைவுகள்தான் இது. முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற எண்ணற்ற ஒட்டுண்ணி, அட்டைகள் எல்லாம் இதனால் உருவானவையே. இன்று கோடானு கோடி ஏழை நடுத்தர மக்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, அதிகார வர்க்கத்தின் துணையோடு தப்பித்துக்கொள்ள முடியும் என்ற திமிர்தான் இதற்கெல்லாம் காரணம்.

மக்களின் வாழ்க்கையை அழிக்கும் தனியார்மயக் கொள்கைகளை, புதிய தாராளவாதக் கொள்கையை, இந்த கார்ப்பரேட் கும்பலைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் நமது துயரங்களுக்கு முடிவில்லை.

போராட்டக் களத்தில்…
மக்கள் அதிகாரம்
தமிழர் உரிமை மீட்புக் களம்
திராவிடத் தமிழர் கட்சி
பூர்வீகத் தமிழர் கட்சி


தகவல் :
மக்கள் அதிகாரம் – நெல்லை
தொடர்புக்கு :- 9385353605

1 மறுமொழி

  1. தமிழகத்தில்தான் நூற்று க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் உள்ளன. வட்டி 26@% வரை (Diminishing rate) பெண்கள் வாங்கிய கடனை திருப்பி கட்ட அவர்கள் படும் பாட்டை ஒரு திரைக்கதையாக எடுக்கலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க