ரலாறு முழுக்க பெண்களின் ஆடைகளில் பாக்கெட்டுக்கு ஏன் இடமில்லாமல் போனது என்பதற்கும் ஆண்கள் ஆடைகளில் ஏன் இடமிருந்து என்பதற்கும் பின்னால் ஓரு அரசியல் இருக்கிறது.

வீட்டிலிருந்து எப்போது புறப்பட்டாலும் வீட்டைப்பூட்டிய பின் சாவி அண்ணனின் கைக்கோ அல்லது அப்பாவின் கைகளுக்கோ தான் போகும். அப்படித்தான் கார் சாவியும். ஏனெனில் அவர்களிடம்தான் சட்டைப்பை இருக்கும். அப்போது நம்மிடம் கிட்டெ இல்ல. அன்று பெண்களிடம் கைப்பை பெருமளவில் இல்லையென்றாலும், இன்று பெண்களிடம் கைப்பை இருக்கும் காலத்திலும் சாவி இடம்பெருவது என்னமோ அந்த சொக்காயில் தான்.

படிக்க :
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
♦ லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !

அந்தக்காலத்தில் நமது பாட்டியெல்லாம் ஓரு சுருக்குப் பை தான் வைத்திருந்து பாத்திருப்போம். அவரவர்களுக்கு  தேவையானது எல்லாம் அந்த பைக்குள் தான் இருக்கும். ஆனால் தாத்தா எப்போவும் பட்டாப்பட்டி கால் டிரோசர் பையிலும்,  சட்டையிலும்தான் காசு வைத்திருப்பார். ஆனால் நமது பாட்டியிடம் நாம், “ஏன் பாட்டி நீயும் சட்டை பையில் வைக்காம சுருக்கு பைல வெச்சிருக்க?” என்று கேட்டதில்லை. ஏனெனில் அக்கேள்வி இயல்பாகவே நமக்குத் தோன்றுவதில்லை.

17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் எல்லாம், யாருடைய ஆடையிலும் பாக்கெட் இல்லை. எல்லாரும் பணத்தை இடுப்புத் துணியோடு சுற்றி முடிச்சு போட்டுதான் வைத்திருந்தார்கள். தொழில் புரட்சிவந்து தான் இந்த இடுப்புத்துணி முடிச்சை  சட்டைப்பையாக மாற்றியது. 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த சட்டைப்பை என்பது ஆடையில் ஓரு அடையாளத்தைப்  பெற்றது. அதுவும் ஆண்களுக்கு மட்டுமே.

ஏன் என்றால் ஆண் வேலை செய்து பணம் ஈட்டுபவர். பணத்தை வைக்க பாக்கெட் தேவை என்பதால் அவர்கள் உடையில் பாக்கெட் இடம்பெற்றது. அன்று பெண்களின் நிலைமை வீட்டு வேலையும், குழந்தைகளை பராமரிப்பது மட்டுமே என இருந்தது. அதற்குப் பிறகு தான் பெண்கள் தனது பொருட்களையும், தேவைகளையும் வைக்க துணியாலான ஓரு பையை தைத்தார்கள். அதில் அவர்களுக்கு தேவையான எல்லாம் வைத்துக்கொண்டார்கள்(இன்று பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது ஹான்டு பேக்  போன்று).

பொருளாதார ரீதியாக பெண்கள் ஆண்களைச் சார்ந்து இருப்பதையே, ஆண்களுக்கு மட்டும் ஆடைகளில் பாக்கெட்டுகள் வடிவமைக்கப்படுவது வெளிப்படுத்தியது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வு  ஆடைகளிலும் வெளிப்பட்டது.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘Suffragettes Suit’ என்ற அமைப்பும் அதன் ஆதரவாளர்களும் பெண்களின் ஆடைகளிலும் சட்டைப்பை வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். ஆனால் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு ஆண்களின் கைகளில் இருந்ததால் அவர்கள் அதை எதிர்த்தனர். அதன் பின் 1910-ல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து பெண்களின் ஆடையிலும் குறைந்தது 6 சட்டைப்பைகள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  ‘Suffragettes Suit’  இயக்கத்தின் மூலம் எல்லா இடங்களிலும் பேசப்பட்டது.

பிறகு 20-ம் நூற்றாண்டில், இரண்டாம் உலகப்போரின் மூலம் பெண்கள் இராணுவத்தில் ஈடுபட்டு போரை எதிர்கொண்டு பொருளும் ஈட்டினர். பெண்கள் போரை எதிர்கொள்ளவும்,  காயங்களை தடுப்பதற்கும், பணத்தை சேமிக்கவும் அவர்களின் ஆடையில் இடம் பிடித்தது பெரிய சட்டைப்பை. உலகப்போர்  1940ல் முடிவுற்ற பின் பெண்கள் ஆடையின் மேல் அதீத ஈர்ப்பும், உடலமைப்பிலும் கவனம் செலுத்தினர். அதன் பின் பெண்களின் கைப்பை நவநாகரிகம் என்று போர்வையில் மிண்டும் பிரபலமானது. திரும்பவும் சட்டைப்பை சடங்காக மாறியது.

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட அமெரிக்கப் பெண்கள்

தற்போது பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமடைவதற்கான சூழல் ஓரளவிற்கு சாத்தியமாகியிருக்கும் நிலைமையிலேயே,  இன்றைக்கும் பெண்களின் ஆடைகளில் பாக்கெட் என்பது போலியாக வடிவமைக்கப்பட்ட ஓரு அங்கமாகவோ அல்லது பயன்படாத நிலையிலோதான் இடம்பெறுகிறது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக உடுத்தும் ஜீன்ஸ் கூட பாக்கெட் அளவு சராசரி ஆண்களின் பாக்கெட்டைவிட 48% நீளம் குறைவாகவே வடிவமைக்கப்படுகிறது. பெண்களுக்கு இருக்கும் பொருளாதார சுதந்திரம் பெயரளவிலானதுதான் என்பதை அந்த பாக்கெட்டின் அளவே நமக்குப் பறைசாற்றப்படுகிறது.

இன்றும் பெண்கள் சட்டைப்பை புரட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் #ithaspockets என்ற “டேக்”-ல் பல ஆயிரம்  பேர் பாக்கெட் உள்ள பெண்களின் உடைகளை பதிவிட்டு பின்தொடர்கிறார்கள். பெண்கள் வாங்கும் ஆடைகளில் பாக்கெட் அவசியம் வேண்டும் என 78℅ பெண்கள் விரும்புகின்றனர்.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!

பெண்கள் தங்கள் மீதான சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஆடை வடிவமைப்பாளர்கள், “Perfect Pants answer this call. பெரிய, பயன்படுத்த கூடிய பைகள் கொண்ட உடை” என்று விளம்பரப்படுத்தும் காலம் விரைவில் வரும்.

வரலாறு முழுவதும், பெண்களின் உரிமைகளில் முன்னேற்ற காலங்களுடனும், பாலின சமத்துவத்துடனும் பாக்கெட்டுகள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. பாக்கெட்டுகள் சுயேட்சை மற்றும் பொருளாதார அதிகாரத்தை குறிக்கின்றன. அடுத்த முறை உங்கள் அலைபேசியை உங்கள் பேண்ட் பாக்கெட்டில் பொருத்த முயற்சிக்கும்போது, ​​தோல்வியுற்றால், நீங்கள் பல நூற்றாண்டுகள் நீடித்த போரின் ஒரு பகுதியாக இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்

சிந்துஜா 
சமூக ஆர்வலர்