குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் முஸ்லீம்களும், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, நகரத்தின் இயக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, மக்களின் போராட்ட உரிமையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. தங்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதை எதிர்த்துப் பொதுமக்களும், ஜனநாயக, புரட்சிகர இயக்கங்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குச் சட்டம்ஒழுங்கைக் காட்டி அதீதமான தடைகள், கட்டுப்பாடுகளை விதித்துவரும் அரசுக்கும், போலீசுக்கும் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பு மிகப்பெரும் சலுகையாகும்.

இத்தீர்ப்பை விமர்சித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி ஆசிரியராகப் பணியாற்றிவரும் ஆபூர்வானந்த் ஆங்கில இந்து நாளிதழில் (அக்.13, 2020) எழுதிய கட்டுரை பு.ஜ. வாசகர்களுக்காகச் சுருக்கி வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

*****

ஷாஹீன் பாக் போராட்டம் நமக்குக் கடந்த கால நிகழ்வு அன்று. டெல்லி − ஷாஹீன் பாக் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவானது, மக்களைச் சட்டபூர்வமாகவே மென்மேலும் அடிபணிய வைப்பதற்கு அரசுக்கு அல்லது அரசாங்கத்திற்கு உதவும். ‘‘சுயாதிபத்தியமிக்க ஜனநாயக ஆட்சியில் (Self−ruled democracy) நடக்கும் போராட்டங்களைக் காலனிய காலத்தில் அரசை எதிர்த்து நடந்த போராட்டபாணி மற்றும் வழிமுறைகளுடன் ஒருபோதும் சமப்படுத்த முடியாது’’ என்ற ஆபத்தான கருத்தைக் கூறியுள்ளது, உச்ச நீதிமன்றம்.

இங்கு சொல்லப்பட்டுள்ள சுயாட்சி (Self ruled) என்பது ஒரு கண்ணி.

பேராசிரியர் அபூர்வானந்த்.

காலனியாக்கும் சபலம் பிரிட்டிஷாருக்கு மட்டுமே உரித்தானதல்ல. அரசானது தன்னளவிலேயே அச்சுறுத்தி நிர்பந்தப்படுத்தக் கூடியதாக இருக்கும் போது, மக்கள் தங்களது இறையாண்மையைப் பறிகொடுத்து விடாமலிருக்க எந்நேரமும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டியுள்ளது. இந்த சுயாட்சியில், சுயம் என்பவர் யார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். இந்த சுயம் அல்லது சுயாட்சி நமது பன்முகத் தன்மையை உள்ளடக்கிய ஒன்றா?

சமத்துவத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சி

அதிகாரத்தை எதிர்த்து நிற்பது அல்லது போராடுவது என்பது குடியுரிமையின் அல்லது பொதுமக்கள் திரளின் உள்ளார்ந்த அம்சம். உத்தரவுகள் இடுவதற்காகப் போராட்டங்களைக் கட்டமைக்க முடியாது. போராட்டங்கள் என்பது பேச்சுரிமையின் செயல்வடிவம். என்ன பேச வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை நீங்களும், நானுமே முடிவு செய்ய முடியும். இவ்விடயங்களில் உங்களுக்கோ அல்லது எனக்கோ ஆணையிடுவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்க முடியாது. ஆனால், உச்ச நீதிமன்றமோ கெடுவாய்ப்பாக ஷாஹீன் பாக் போராட்டத்தின் சரியான தன்மை மீதான தனது தீர்ப்பின் மூலம் இதைத்தான் செய்ய முயற்சித்திருக்கிறது.

நீங்கள் பேசும்போது, அதனை மனதாரக் கேட்பவர் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள். ஆனால்,  உரையாடலுக்கான சூழல் இல்லாத நிலையின் காரணமாகவே போராட்டங்கள் நடைபெறுகின்றன. பேச்சுவார்த்தை சமத்துவத்தை முன்தேவையாகக் கோருகிறது. மக்கள், தாம் சமத்துவமற்ற சூழலுக்குள் தள்ளப்படுகிறோம் என உணருவதன் காரணமாகவே போராடுகிறார்கள். போராட்டங்கள்  சமத்துவத்தைப் பெறுவதற்கான அல்லது மீட்டெடுப்பதற்கான முயற்சியே!

போராட்டங்கள் நெருக்கடியை உருவாக்குவதில்லை. அரசாங்கங்கள் சட்டப்பூர்வமாகவே பாரபட்சமான சட்டங்களை நிறைவேற்றுவதன் வழியாக நெருக்கடியை உருவாக்குவதால்தான், போராட்டங்கள் எழுகின்றன. போராட்டங்கள் சமூகத்தின் சமநிலையைக் குலைப்பதில்லை. மாறாக, சமநிலை குலைக்கப்பட்டதால்தான் போராட்டங்கள் வெடிக்கின்றன. சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும் வண்ணம் குடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019 உருவாக்கப்பட்டிருப்பது உண்மையில்லையா? அச்சட்டத்தின் உள்ளார்ந்து இருக்கும் தீவிரமான பாரபட்ச உணர்வுதான் முஸ்லிம்களை மட்டுமல்ல, இதர பிரிவினரையும் வீதிக்குக் கொண்டு வந்தது.

போலீசின் செயல்பாடு

இந்தச் சட்டம் முஸ்லிம்களை மட்டும் சிறுமைபடுத்தவில்லை. பாரபட்சத்தையும், அசமத்துவத்தையும் சட்டபூர்வமாக்கியதன் மூலம் இந்தியாவை இழிவுபடுத்துகிறது. அங்கிருந்த போராட்டக்காரார்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை, அனைவரின் நலன் என்ற உலகு தழுவிய கொள்கைக்காகவும் போராடினார்கள்.

முஸ்லிம்களும், சமத்துவமுள்ள குடியுரிமை என்ற கோட்பாட்டில் நம்பிக்கையுள்ளவர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய வீதியில் இறங்கியபோது, போலீசால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டார்கள். இப்பிரச்சினையைக் கூர்ந்து கவனிப்பவர்கள்,போலீசின் இரக்கமற்ற கொடூரத்தை உத்திரப் பிரதேசத்திலும், ஜாமியா மிலியா இஸ்லாமியாவிலும் மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்திலும் கண்டனர். சட்ட ஒழுங்கைப் பேணுவதற்காக அல்லாமல், போராட்டக்கார்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கிலேயே போலீசு நடவடிக்கை எடுக்கப்பட்டது.   உத்தரப்பிரதேச மாநில முதல்வர்  யோகி ஆதித்யநாத், போராடியவர்களைப் பொறுக்கிகளைப் போல் நடத்தியதோடு, ‘வன்முறை’யில் ஈடுபட்டோரைப் பழிவாங்குவேன் என வன்மத்தையும் கக்கினார்.

டெல்லியில் நடந்த தொடர் போராட்டத்தின் போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழங்கும் மூதாட்டி.

மூத்த வழக்குரைஞர்கள் இந்திரா ஜெய்சிங்கும் காலின் கன்ஸால்வஸும் போராட்டக்காரர்கள் மீதான போலீசு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது, ‘‘தெருவில் நடக்கும் வன்முறைகள் முதலில் நிறுத்தப்பட வேண்டும்’’ என்றது அந்நீதிமன்றம்.  இதன் மூலம் நீதிமன்றம் மக்களின் போராடும் உரிமையை நிராகரித்ததோடு, மக்களையும் கைவிட்டது.

இத்தகைய சாத்தியமற்ற சூழல்தான் கற்பனைத் திறன்மிக்கதான ஷாஹீன் பாக் போராட்டத்தை வழிநடத்தியது. போராட்டக்காரர்கள், தலைநகரின் மையத்தில் அமையாத புறநகர்ப்பகுதியில் ஓர் இடத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது பற்றி நீதிமன்றம் எண்ணியிருக்க வேண்டும் என மிகச் சரியாகவே அவதானிக்கப்பட்டிருக்கிறது.

நாடெங்கிலும் நடந்த பல ஷாஹீன் பாக் போராட்டங்கள் கொண்டாடப்பட்ட அதேசமயம், இந்திய சமூகத்தின் மற்ற பிரிவினர் போராடக்கூடிய இடங்கள், இந்திய முஸ்லிம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக, வசதியற்றதாக இருக்கும் சூழலைப் பற்றி உச்ச நீதிமன்றம் சிந்தித்திருக்க வேண்டாமா? சமூகத்தில் மிகப்பெரும் நம்பிக்கையின்மை நிலவி வருவதோடு, அந்த நம்பிக்கையின்மையை இந்த இந்துப் பெரும்பான்மை அரசு மென்மேலும் தீவிரப்படுத்தி வருவதுதான் ஷாஹீன் பாக் தேர்வானதற்குக் காரணமாகும்.

இரு உரிமைகளின் சமன் நிலை

ஷாஹீன் பாக் போராட்டத்தாலும், அப்போராட்டத்தால் அப்பகுதி சாலைகளைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதாலும், தனது நடமாடும் உரிமை முடக்கப்பட்டதாக மூக்கைச் சிந்திய யாரோ ஒரு குடிமகன் தாக்கல் செய்த மனுவைத்தான் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. நடமாடும் உரிமையையும் போராடும் உரிமையையும் சமப்படுத்திய உச்ச நீதிமன்றம், அவையிரண்டுக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டுமெனக் கருதியது. நீண்ட நாள் போராட்டம் போக்குவரத்து நெரிசல்களை உருவாக்குவதோடு, மக்களின் நடமாடும் உரிமையை மீறுவதாக உள்ளது என நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டது.

போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து  தடைப்பட்டதா அல்லது டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச போலீசார் தலைநகருக்குச் செல்லும் மாற்றுப் பாதைகளை முற்றிலும் முடக்கியதால் போக்குவரத்து நெரிசல் உருவானதா என்பதைக் கண்டறிய வேண்டிய தேவையை நீதிமன்றம் உணரவில்லை. குறிப்பிட்ட சாலைகளை முடக்கி, பாதசாரிகளுக்கு ஏன் அசௌகரியத்தை உருவாக்குகிறீர்கள் என்ற கேள்வியை நீதிமன்றம் போலீசிடம் கேட்கவில்லை. போராட்டம் நடந்துவந்த சமயத்தில் இக்கேள்வி கேட்கப்பட்டபோது, இக்கேள்விக்குப் ‘‘பாதுகாப்பு நடவடிக்கை’’ என போலீசு பதில் அளித்திருந்தது.

படிக்க :
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !
♦ டெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

போராட்டக்காரர்களுக்கு எதிரான பகைமை உணர்வைப் பிறரிடம் உருவாக்குவதற்காக இப்பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? போராடுபவர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதற்கான புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இது கையாளப்படவில்லையா? சமுகத்தின் ஒரு பிரிவினருக்கு எதிராக இன்னொரு பிரிவினரை போலீசு ஏன் திருப்பி விடவேண்டும்?

போராட்டத்தைக் கைவிடுவதற்குப் போராட்டக்காரர்களை இணங்கச் செய்ய மத்தியஸ்தர்களை அனுப்பி வைப்பதுதான் சரியானது என முடிவு செய்த உச்ச நீதிமன்றம், ‘‘நீங்கள் போராட்டக்காரர்களுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, உங்களின் அமைச்சர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஏன் விஷத்தைக் கக்குகிறார்கள், அவர்களுக்கு எதிராக ஏன் வன்முறையைத் தூண்டிவிடுகிறார்கள்?’’ என்ற சாதாரண கேள்விகளைக் கூட அரசாங்கத்திடம் கேட்கவில்லை.

கருத்து மாறுபாடுகளை அனுமதிக்காத ஜனநாயகம், ஜனநாயகமே இல்லை என நீதிமன்றம் ஏற்றுக் கொண்டாலும், போராட்டங்கள் கால வரம்பற்றதாக இருக்கக் கூடாது என்றும், ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. போராட்டங்கள் இன்பம் தரக்கூடிய பொழுதுபோக்கிற்காக நடத்தப்படுவதில்லை. மாறாக, அநீதியான கட்சி அல்லது அதிகாரத்தை தங்களுடன் உரையாடல் நடத்துமாறு பணிய வைக்க வேண்டும் என்பதற்காக பல இன்னல்களை அமைதிவழியில் போராடுபவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்தறிய வேண்டும்.

போராட்டங்கள் கால வரம்பைக் கொண்டிருக்க முடியாது. அநீதி வரம்பற்றதாக இருக்கும் போது, போராட்டங்களும் கால வரம்பற்றதாகவே இருக்கும்.


தமிழாக்கம் : பாவெல்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க