ராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கபீர் கலா மஞ்ச் இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களுமான சாகர் கார்க்கே மற்றும் ரமேஷ் கய்ச்சோர் ஆகிய இருவரையும் எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்திருந்தது தேசிய புலனாய்வு முகமை(NIA). அவர்களிருவரது பிணை மனுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்திருந்த மனுவில், அவர்கள் பிரதமர் மோடியை பகடி செய்து பாடிய பாடல்களை அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கிறது.

தங்களது பகடிப் பாடல்கள் மூலம் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் இசைக் குழுவினர்தான் கபீர் கலா மஞ்ச். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், போராட்டங்கள் என அனைத்துக்குமாகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

படிக்க :
♦ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?
♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !

கலையின் மூலம், சாதாரண மக்களுக்கு எதிரான அரசின் ஒடுக்குமுறைகளையும் சுரண்டலையும் அம்பலப்படுத்தி வரும் இந்தச் செயற்பாட்டாளர்களைக் கண்டு அஞ்சுகிறது மோடி அரசு. சமூகச் செயற்பாட்டாளர்களான வரவர ராவ், கவுதம் நவ்லகா உள்ளிட்ட பலரையும் எல்கார் பரிஷத் வழக்கை முகாந்திரமாக வைத்து கைது செய்தது போல கபீர் கலா மஞ்ச்-ன் இவ்விரு தோழர்களையும் இவ்வழக்கில் கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ.

கைது செய்யப்பட்ட அவ்விரு தோழர்களும் பிணை வழங்கக் கோரி மனு செய்ததைத் தொடர்ந்து, தனது பதில் மனுவை என்.ஐ.ஏ தாக்கல் செய்தது. பிணையை மறுப்பதற்காக வழங்கப்பட்ட அந்த பதில் மனுவில், மோடியை விமர்சித்தும், நையாண்டி செய்தும் இவர்கள் பாடிய பாடல்களை மொழிபெயர்த்து சுட்டிக் காட்டி, பிணை வழங்கக் கூடாது என்று கூறியிருக்கிறது.

ஒரு நாட்டில் அரசியல் நிலைமைகளையும், மக்களின் துயரங்களையும் கலையின் வாயிலாகவும், பேச்சு, எழுத்தின் வாயிலாகவும் பரந்துபட்ட மக்களுக்குக் கொண்டு செல்ல அனுமதிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம். ஆனால் உலகின் மிகப்பெரிய “ஜனநாயக நாடாக” அறியப்படும் இந்தியாவில்தான் பிரதமர் மீதான விமர்சனப் பாடலை பிணை மறுப்பதற்கான காரணமாக முன் வைக்கப்படுகிறது. இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.

தனது மனுவில் கபீர் கலா மஞ்ச்-சின்பாடல்களை மொழிபெயர்த்துச் சேர்த்திருக்கிறது என்.ஐ.ஏ. கபீர் கலா மஞ்சின் அந்தப் பாடல்கள் மோடியை பகடி செய்வதோடு மட்டுமால்லாமல். பசுப்பாதுக்காப்புக் கும்பல், ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவின் அரசியல், பிராமணியப் படிநிலை ஆகியவைக் குறித்தும் நறுக்குத் தெறிக்கும் வகையிலான விமர்சனங்களைக் கொண்டிருக்கின்றன.

என்.ஐ.ஏ தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களின் வரிகளில் சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

”என் பெயர் பக்தேந்திர மோடி. எனது பேச்சு எளிமையானது.  என் வாழ்க்கை எளிமையானது. எனது மேலங்கியும் லட்சக்கணக்கான மதிப்பு கொண்டது.  ஏய் ! யார் இங்கிருப்பது ? எதிர்க்கட்சிகளுக்கு  செவிசாய்க்காதீர்கள்… ஆகவே, எனது பேச்சு எளிமையானது, என் வாழ்க்கை எளிமையானது. ஆனால் யாரேனும் என்னை குற்றம்கண்டுபிடிக்க வந்தால் அவர்கள் இல்லாமல் போவது உறுதி”

மோடியின் மாதாந்திர மான்கி மாத் நிகழ்ச்சியை கிண்டல் செய்து பாடியிருக்கும் கபீர் கலா மஞ்ச்சின் மற்றொரு பாடலில் மோடியை பின்தொடர்பவர்களை தாகம் எடுக்கையில் மாட்டு மூத்திரத்தைக் குடிக்குமாறும், பசியைப் போக்க பசுஞ் சாணத்தை உண்ணுமாறும் பாடியிருப்பதை சுட்டிக்காட்டியிருகிறது, என்.ஐ.ஏ.

கபீர்கலா மஞ்சின் இந்தப் பாடல்கள் அனைத்தும் மராத்தி மொழியில் பாடப்பட்டவையாகும். என்.ஐ.ஏ மொழிபெயர்த்த அதே தொனியில்தான் அந்தப் பாடல் வரிகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே
♦ நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்

தலைமறைவான நக்சல் தலைவர் மிலிந்த் தெல்தும்ப்டேயுடன் கடந்த 2011-ம் ஆண்டு மற்றும் 2012 ஆண்டில் கபீர் கலா மஞ்ச் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் இருந்தாகக் கூறி மராட்டிய அரசின் தீவிரவாத எதிர்ப்புப் படை (ATS) பதிவு செய்த வழக்கின் கீழ், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில்,  இந்தப் பழைய குற்றச்சாட்டையே முகாந்திரமாகக் காட்டி  என்.ஐ.ஏ-வும் எல்கார் பரிஷத் வழக்கில் இவர்களைக் கடந்த செப்டெம்பர் மாதத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது. குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்யப்பட்ட இதே காரணத்தை பிணை மறுப்பு மனுவிலும் குறிப்பிட்டிருக்கிறது என்.ஐ.ஏ.

சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை முடக்கிவிட்டால், எளிமையாக மக்களை திசை மாற்றி தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்பதில் சங்க பரிவாரக் கும்பல் தெளிவாக இருக்கிறது. முற்போக்காளர்களை முடக்கும் செயல்களில் தற்போது அது தீவிரமாக செயல்பட்டுவருவதோடு, முற்போக்காளர்களின் ஜனநாயகரீதியான எதிர்ப்புகளையே குற்றமாக சித்தரிப்பதன் மூலம், ஜனநாயக மறுப்பை சமூக எதார்த்தமாக எத்தனிக்கிறது.

கர்ணன்

நன்றி : The Wire