ஏ.எஸ்.கே

முதல் மனிதன் சுகாரின் 1962ல் விண்வெளி – அகண்ட காஸ்மாசில் (cosmos) சென்றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி.ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்தில் மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்று பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டில் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை; கூறாமலே அது விளங்கும்!

… ஆகவேதான், சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தொழிலாளி வர்க்கம், பிற்போக்கு அமைப்பிற்கு இருப்பிடமாயுள்ள ஜாதி, சமயம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அறவே ஒழிக்க வேண்டும்.

” … இன்றைய சமூக அமைப்பு பல லட்சக்கணக்கான உழைப்பாளி, விவசாயி மக்களை அறியாமை இருள், மூடப்பழக்க வழக்கங்களில் அழுத்தி வைத்திருக்கிறது. இந்தப் பிடிப்புகளில் இருந்து இவர்களை விடுதலையடையச் செய்ய ஒரே வழி, தூய்மையான மார்க்சியக் கல்வியறிவைப் புகட்டுவதுதான் என்று ஒரு மார்க்சியவாதி நினைத்தால், இதைவிட மிகப்பெரிய இமாலயத் தவறு வேறெதுவும் இருக்க முடியாது. மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடக்கிற இந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நாம் நாத்திகப் பிரச்சாரத்தின் எளிமையான, அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய பல வழிகளையும் கடைபிடிக்க வேண்டும். அவர்களின் சொந்த வாழ்க்கையிலிருந்து பல நிகழ்ச்சிகளின் உதாரணங்களை எடுத்துக் காட்டி, மதத்தின் மாயையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். பல கோணங்களிலிருந்து பிரச்சாரம் செய்து அவர்களின் உள்ளத்தில் ஆர்வத்தை எழுப்பிட வேண்டும்.” (முன்னுரையிலிருந்து – பக்கம் 10, 11)

ஐரோப்பாவில் 17-18வது நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதம் தழைத்தோங்கி வளரத் தொடங்கியது. பேக்கன், கலிலியோ, ஹாப்ஸ், பினோசா, லாக் முதலியோர் பிரசித்தி பெற்ற பொருள்முதல்வாதிகளாக விளங்கினர். அப்போதுதான் இளம்பருவத்தில் இருந்த முதலாளித்துவத்தின் அஸ்திவாரத்தின் மீது பொருள்முதல்வாதம் வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி வளரத் தொடங்கியது. உற்பத்தி, இயந்திர வளர்ச்சி விஞ்ஞானத்தின் மீது பொருள்முதல்வாதம் ஆதாரப்பட்டு நின்றது. வளர்ந்துவரும் முற்போக்கு பூர்ஷுவா வார்க்கத்தின் நல உரிமைகளைப் பேணிக்காக்கும் முறையில், பொருள்முதல்வாதம் பழைய மூடப்பழக்க வழக்கங்களையும், மடாதிபதிகளின் அதிகாரத்தையும் எதிர்த்துப் போராடியது. மிக விரைவாக வளர்ந்துவரும் தொழிற்நுட்பவியலுடனும் (Mechanics) கணித சாஸ்திரத்துடனும் சேர்ந்து வளர்ந்த 17-18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் இயல்பாகவே யாந்திரீகமாக இருந்தது. அது இயற்கையை பல்வேறு பாகங்களாக்கி பிரிவு ஆராய்ச்சி செய்ததே தவிர, இவற்றை இவ்வாராய்ச்சிக்குப் பின் ஒன்றுசேர்ந்து ஒட்டுமொத்தமான நிகழ்ச்சியாகப் பார்க்கவில்லை. 18ம் நூற்றாண்டின் பிரெஞ்சு பொருள்முதல்வாதியான ஹால்பாக், ஹெல்வீடியஸ் ஆகியோர் அசைவு பொருளின் இன்றியமையாத குணம் என்றனர். இவ்வாறு கூறியதன் மூலம் 17ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதிகளின் பல முரண்பாடுகளையும் தகர்த்தெறிந்தனர். எல்லாவித பொருள்முதல்வாதத்திற்கும், நாஸ்திகத்திற்கும் உள்ள ஜீவ பிணைப்பை 18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதிகளிடம் காணலாம்.

புவர்பாக் (Feurebach) பொருள்முதல்வாதியாக இருந்தும் தியான சிந்தனையில் மூழ்கிப் பிரிந்து கிடந்தார்.

19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்ய நாட்டு பொருள்முதல்வாதிகள் புரட்சிகர ஜனநாயகவாதிகளாக காட்சி அளிக்கின்றனர் – பெலின்ஸ்கி, ஹெர்சான், செர்னிசாவஸ்கி முதலியோர். இவ்வாறிந்த பொருள்முதல்வாதம் பரிணாம வளர்ச்சியில் தர்க்க இயல் பொருள்முதல்வாதமாகக் காட்சியளிக்கிறது.

எனவே, நாஸ்திகம் பொருள்முதல்வாதத்திற்கு இனிறியமையாததாகும். (நூலில் பக்கம் 17)

“தர்க்க இயல் புரட்சியின் கணித சாத்திரம்” என்று அன்றே கூறப்பட்டது. ஆனால் ஹெகல் எண்ணம் (கருத்து) முதல்வாதியாக இருந்ததன் காரணமாக அவரது தத்துவம் மேற்கொண்டு முன்னே செல்ல முடியாமற் போய்விட்டது.

காரல் மார்க்சும் (1818-1883), பிரடெரிக் எங்கெல்சும் (1820-1895) தலைகுப்புற இருந்த ஹெகலின் தத்துவத்தை எதிர்த்து தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தை வலியுறுத்தினர். “தத்துவ ஞானிகள் உலகத்தை வியாக்கியானம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றியமைப்பதே” என்று மார்க்ஸ் கூறினார். மார்க்சும், எங்கெல்சும் முதன் முதலாக தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தை முழுக்க உபயோகப்படுத்தினார்கள். ஆனால், தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தைப் பற்றி மார்க்சோ, எங்கெல்சோ விளக்க நூல் எதுவும் எழுதவில்லை. எங்கெல்ஸ் “டயலிக்டிக்ஸ் ஆப் நேச்சர் (Dialectics of Nature) இயற்கையின் தர்க்க இயல் என்றதோர் அரிய நூலை இயற்றி உள்ளார். ஆனால் மார்க்சும், எங்கெல்சும் அவர்கள் எழுதிய எண்ணற்ற நூல்களிலும் தர்க்க இயல் பொருள் முதல்வாதத்தை அஸ்திவாரமாகக் கொண்டு, பிரபஞ்சத்தையும் உலகத்தையும், மனித சமுதாயத்தையும் விளக்கிக் கூறி, மனித வர்க்கத்தின் தலையாய கடமை இவ்வுலகத்தை மாற்றியமைப்பதுதான், அதை எவ்வாறு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை பசுமரத்தில் பதிந்த ஆணி போல் கூறி உள்ளனர்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின்
நூல் அறிமுகம்: தமிழா! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்

தர்க்க இயல் பொருள்முதல்வாதம் என்பது மார்க்சிஸ சமுதாயத்தையும், இயற்கையையும் புரிந்து கொள்ள அது ஒரே வழியாகும். அதன் வெளிச்சத்தில் உலகில் உள்ள அநீதியையும், அக்கிரமத்தையும் நோக்கி, சுரண்டலற்ற உன்னதமானதோர் சமுதாயத்தைச் சமைக்க முடியும் என்பதை சரித்திரம் நிரூபித்துள்ளது.

… இயற்கையும், உலகமும் இயங்கி வருவதிலிருந்து தர்க்க இயல் விதிகளை உணர முடியும். இதற்கு நேர்மாறாக தர்க்க இயல் விதிகள் முதலில் ஏற்பட்டன என்றும் அதன்படி இயற்கையும் உலகமும்  இயங்கி வருகின்றன என்றும் ஹெகல் கூறுவது “எண்ணம் முதல்” வாதத்தை வலியுறுத்துவதுதான் என்று எங்கெல்ஸ் கூறுகிறார்.

ஒவ்வொரு பொருளிலும் முரண்பாடு உண்டு. இம்முரண்பாடுதான் பொருளுக்கு அசைவையும், உயிரையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தக் காரணமாக உள்ளது. முரண்பாடு இல்லையேல் அசைவில்லை, உயிரில்லை, வளர்ச்சியில்லை. இதற்கு நேர்மாறாக “கடவுள் ஒருவர் உண்டு, அவர்தான் எல்லா உயிருக்கும் உத்தரவாதமளிப்பவர், இவர் இன்றி ஓரணுவும் அசையாது” என்று எண்ணம் முதல்வாதிகள் கூறிவருகின்றனர். (நூலில் பக்கம் 19-20)

ஆகவே, தர்க்க இயல் பொருள்முதல்வாதத்தைக் கொண்டு, பொருள் என்றால் என்ன, உயிர் என்றால் என்ன, மனிதன் எவ்வாறு தோன்றினான், உலகம் எப்படித் தோன்றிற்று, அதன் அசைவு என்ன, அது மறையும் காலமுண்டா, மனிதன் மரணமடைந்தால் அதன் பொருள் என்ன. வேறு ஜன்மமுண்டா, கடவுள் உண்டா என்பன போன்ற எண்ணற்ற தத்துவ ஞானிகளின் பிரச்சினைகளுக்குத் தெளிவான பதிலை அறிய முடிகிறது. எனவேதான் மார்க்சிசம் உலக மக்களைக் கவரக்கூடிய தத்துவமாகக் காட்சியளிக்கின்றது. இவைகளைத்தாம் இக்கட்டுரையில் விளக்க விரும்புகிறோம். (நூலில் பக்கம் 21)

நூல் : கடவுள் கற்பனையே
ஆசிரியர் : ஏ.எஸ்.கே

வெளியீடு : எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002.
தொலைபேசி எண்: 04259 – 226 012, 98650 05084

பக்கங்கள்: 136
விலை: ரூ. 90.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

1 மறுமொழி

  1. தர்க்கவியல் பொருள்முதல் வாதம், இயற்கையின் தர்க்கவியல், கருத்துமுதல் வாதம் என்பதற்கு பதில் எண்ணமுதல் வாதம் என்று வேண்டாத குழப்படி வேலைகள் மொழிபெயர்ப்பில் தேவையா? ஆழமான பொருளுடைய சொல்லுக்கு பதில் வீண் மொழிமாற்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க