பார்ப்பன எதிர்ப்பு கொண்ட தமிழகத்திலேயே பெண்ணடிமைத்தனமும், சடங்கு சம்பிராதயங்களும், மூடக்கருத்துக்களும் கோலாச்சுகிறது; குடும்பங்களிலிருந்து அகற்றுவது அப்படி ஒன்றும் எளிமையானது இல்லை என்கிறபோது, வட இந்தியாவின் நிலையைப் பற்றி தனியாக விளக்கத் தேவையில்லை. அதனால்தான் அங்கே இராமனின் பெயரால் இலட்சக்கணக்கானோர் கூடுகிறார்கள்; கொலைக்கருவிகளோடு தெருக்களில் வலம் வருகிறார்கள்.

வட இந்தியாவில் இராமன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட மதச் சார்பாக்கத்தை தமிழகத்தில் முருகனின் பெயரால் கொண்டுவர முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர்களின் மதச்சார்பற்ற பண்பாட்டை இந்துப் பண்பாடாக மாற்றிக் காட்டி நம்மையும் காட்டுமிராண்டிகளாக்கத் துடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர் பாரம்பரியம்  ‘இந்துப்’ பாரம்பரியம் அல்ல என்பதை நமக்கு ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல்..

நூலிலிருந்து சில பகுதிகள்:

அந்தணர்

“பண்டைத் தமிழர்களிடையே எவ்விதமான ஏற்றத்தாழ்வும், சாதிப் பாகுபாடும் கிடையாது. செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளே அவை.”

“சுருங்கக்கூறின், அனுபவ அறிவும், பொதுநல நாட்டமும் உடைய, இல்வாழ்க்கையை விட்டு பொதுத் தொண்டாற்ற முன்வந்த தமிழ்ப் பெரியவர்களே அந்தணர்கள். இவர்கள் தனிப் பிரிவினர் அல்ல.”

“இளஞ்சேட் சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் மகள் ஆவாள். அவனுடைய மகன் கரிகாலனின் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேள் ஒருவனின் மகள்.

எனவே, அந்தணர் என்பதும், அரசர் என்பதும், வணிகர் என்பதும், வேளாளர் என்பதும் தொழில் பிரிவுகளே! சாதிப் பிரிவுகள் அல்ல என்பதற்கு மேற்கண்ட திருமண உறவுகளே நல்ல சான்றுகளாகும். சாதிப் பிரிவுகளாக இருந்திருந்தால் திருமண உறவு ஏற்பட்டிருக்காது அல்லவா?”

தமிழர் காதல்

“பருவமடைந்த ஒரு ஆணும் பெண்ணும் தனியே சந்தித்து, பேசி, காதல் கொள்வது என்பது அன்று குற்றமாகக் கொள்ளப்படவில்லை. காதல் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவேக் கருதப்பட்டது.”

“… அக்கால தமிழ்க் காதலுக்கு சாதியில்லை, உறவு இல்லை; உறவுக்காரர்கள்தான் மணந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை; ஏற்றத்தாழ்வு இல்லை. அன்பு கொண்ட, பருவமடைந்த எந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டனர், இல்வாழ்வு நடத்தினர்.”

தமிழர் திருமணம்

“காதல் கொண்ட இருவரும் இறுதியில் இல்வாழ்க்கையை எந்தவித திருமணச் சடங்கும் இன்றி துவங்குவதே பண்டைத் தமிழர்களின் மரபாக இருந்தது…”

“பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், காதலியின் விருப்பத்தோடு அவளை ஒருவரும் அறியாமல் தன் ஊருக்கு அழைத்துச் சென்று இல்வாழ்வு நடத்துவான்.”

“இதைக்கண்ட பெரியவர்கள், இப்படிப்பட்ட மோசடிகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு பலரறிய திருமணம் செய்யும் முறையை ஏற்படுத்தினர்…..”

“…. பண்டைத் தமிழர்கள் திருமணத்தில், தாலி இல்லை, தரம்கெட்ட வேதம் இல்லை, எரிவளர்த்தல் இல்லை, ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பனர் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி பார்த்தல் இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.”

இல்லுறை தெய்வ வழிபாடு

“இறந்துபோன குடும்பப் பெரியவர்களை, பெற்றோர்களை வழிபாடு செய்வதே இல்லுறை தெய்வ வழிபாடு ஆகும்.”

“முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலத்து மக்கள் முறையே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத்தலைவர்களை வணங்கினர்.

மாயோன் என்றால் திருமால் என்றும், சேயோன் என்றால் முருகன் என்றும், வேந்தன் என்றால் இந்திரன் என்றும், வருணன் என்றால் கடற்கடவுள் என்றும் பல உரையாசிரியர்கள் இதற்குப் பொருள் கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.

தங்கள் கருத்துக்களை வலியுறுத்திக் கூற, தமிழர் வழக்கத்தையே திரித்துக் கூறுகின்ற பெருங்குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.” (நூலில் பக்கம் 8-19)

சிந்துவெளித் தமிழன் வழிபட்டது சிவலிங்மா?

“அக்காலத்தில் மக்களைவிட விலங்குகளே அதிக அளவில் இருந்தன. மனிதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

எனவே அக்கால மக்களுக்கு தங்கள் இனத்தை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டிய அவசியம் அதிக அளவில் இருந்தன. மக்கள் எண்ணிக்கை அதிகம் பெருக வேண்டும் என்று அக்கால மக்கள் விரும்பினர்.”

“இக்காலத்தில், ஆயுத பூசை என்ற பெயரில் மக்கள் தங்களுக்குப் பயன்படக்கூடிய கருவிகளை வழிபடுவதைக் காணலாம்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின்
புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

தச்சன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், கொல்லன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், அவ்வாறே ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குப் பயன்படும் கருவிகளையும் வழிபடுதல் போலவே அக்கால மக்கள் தங்களுக்கு அவசியம் என்று கருதப்பட்ட ஆண் – பெண் உறுப்புகளை வழிபட்டனர்.

இவ்வாறு ஆன் – பெண் உறுப்புகளை பொருத்தி வழிபட்ட வழக்கம் சிந்துவெளி மக்களிடம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் அக்காலத்தில் இருந்தது.”

“வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும், சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் கதை கட்டியது போல; அக்கால மக்கள் வழிபட்ட ஆண், பெண் உறுப்பு இணைந்த உருவங்களைக் கண்ட ஆரியர்கள் அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர்.”

“அதாவது, சிவனின் ஆண் உறுப்பும், பார்வதியின் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்று ஒரு கதை கட்டினர். ஆதாரம் லிங்கபுராணம்.” (நூலில் பக்கம் 23–26)

ஆரியர்கள் பார்ப்பனர் ஆனது எப்படி?

பார்ப்பு என்ற சொல்லிலிருந்தே பார்ப்பனர் என்ற சொல் உருவாயிற்று. பார்ப்பு என்பதற்கு இளமை என்பது அர்த்தம்.”

“இளங்குழந்தைகளை “பாப்பா” என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்பது பார்ப்பா என்றாகி பின்னர் பாப்பா என்று வழக்கத்தில் ஆகியது.”

“தமிழ் மன்னர்களின் அரண்மனையிலும், பெருஞ்செல்வர்களின் வீடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த தமிழர்களே பார்ப்பனர் ஆவர்.

அதாவது, இளம்பருவத்தில் (பார்ப்பு பருவத்தில்) உள்ளவர்களுக்கு உதவியாளர் பணி செய்தவர்கள் என்பதால் அந்த உதவியாளர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பார்ப்பனர் என்பதற்கு இளைஞர்களின் துணைவன் என்று அர்த்தம். பார்ப்பனர் என்பது ஒரு வேலையின் (தொழிலின்) பெயரே ஆகும்.” (நூலில் பக்கம் 29, 30)

ஜாதிப் பிரிவினையை உருவாக்குதல்

“ஆரம்பத்தில் தமிழர்கள் செய்து வந்த பார்ப்புத் தொழிலை ஆரியர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் ஆனதுபோல, நாளடைவில் அந்தணப் பணியையும் மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தவர்கள், அந்தணர்கள் என்றாலே ஆரியர்கள்தான் என்றாகிவிட்டது.

தமிழர்கள் அந்தணர் பணி செய்யும்போது அவர்கள் சமுதாயப் பணியினை செய்தனர். ஆனால் ஆரியர்கள் அந்தணர் பணி செய்ய ஆரம்பித்தபின், அந்தணர் பணியை சமயப் பணியாக்கிவிட்டனர். கடவுள் பணி, கடவுள் கொள்கையைப் பரப்புதல், சடங்குகள் செய்தல், யாகங்கள் நடத்துதல் போன்றவை அந்தணர்களுக்கு உரியது என்று ஆக்கிவிட்டனர்.”

“அதாவது, ஆரியர்கள் செல்வாக்கடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 1.தமிழர், 2.ஆரியர் என்று இரு இனப்பிரிவும், தமிழர்களிடையே 1.அரசர், 2.வணிகர், 3.வேளாளர் என்ற தொழில் பிரிவும் காணப்பட்டன.

சாதியை உருவாக்கி தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தத் திட்டமிட்ட ஆரியர்கள், இந்த நான்கு பிரிவையும் (1.ஆரியர், 2.அரசர், 3.வணிகர், 4.வேளாளர்) நான்கு வருணங்களாக ஆக்கத் திட்டமிட்டனர்.” (நூலில் பக்கம் 39, 40)

இவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தியதை பல்வேறு சம்பவங்கள் மூலம் தக்க ஆதாரங்களுடன் சிறுசிறு தலைப்புகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் நூலாசிரியர். அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் : தமிழா, நீ ஓர் இந்துவா?
ஆசிரியர் : மஞ்சை வசந்தன்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை – 600 007.
தொலைபேசி எண்: 044 – 26618161

கிடைக்குமிடங்கள்: பெரியார் புத்தக நிலையம்
பெரியார் திடல், 84/1(50). ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007. தொ.பே. 044-26618163

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி – 620 017. தொ.பே. 0431-2771815
info@periyar.org | www.dravidianbookhouse.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க