ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் மாவட்ட சிறையில் 2016-ம் ஆண்டில் 18 வயதாகும் அஜய் என்பவரிடம் ”நீ எந்த சாதியை சேர்ந்தவன்” என்று கேட்டு அவர் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று தெரிந்ததும் அவருக்கான வேலைகளை ஒதுக்குகிறார் சிறைக் காவலர். சிறையிலுள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும், வார்டின் வராண்டாவை துடைக்க வேண்டும், தண்ணீர் சேமித்தல் மற்றும் தோட்டக்கலை போன்ற பிற வேலைகளுக்கு உதவ வேண்டும். அவரது பணி விடியற்காலையில் தொடங்கி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி வரை தொடரும்.  “இது ஒவ்வொரு புதிய கைதியும் செய்ய வேண்டிய ஒன்றல்ல. கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே அவ்வேலைகளை செய்தனர்” என்று கூறுகிறார் அஜய்.

மேலும் அவர், “ஒருநாள் சிறை வார்டில் கழிப்பறைகள் இரவு முழுவதும் நிரம்பி வழிந்தது. சிறை அதிகாரிகள் அதை சுத்தம் செய்ய வெளியிலிருந்து யாரையும் அழைக்கவில்லை. அவர்கள், நீதான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்றனர். இந்த வேலை எனக்கு தெரியாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் மெல்லிய மற்றும் இளமையான யாரும் இங்கு இல்லை என்று கூறி செப்டிக் டேங்கின் உள்ளே இறங்க சொன்னார்கள். நான் கீழே இறக்கி தொட்டி மூடியை திறந்து மனித மலத்தின் உள்ளே சென்றேன். துர்நாற்றத்தால் இறந்து விடுவேன் என நினைத்து அலறித் துடித்தேன். மற்ற கைதிகளிடம் சொல்லி என்னை வெளியே இழுக்கச் சொன்னார் ஒரு சிறை காவலர். இச்சம்பவம் மிகவும் வேதனையளித்தது” என்கிறார் அஜய்.

படிக்க :
♦ சாதி உங்களுக்கு என்ன செய்தது ?
♦ ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !

மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை செய்யும் சட்டம் 2013-ம் ஆண்டில் திருத்தப்பட்ட பிறகு சிறை அதிகாரிகள் அஜய்யைச் செய்யுமாறு நிர்பந்தித்தது கிரிமினல் குற்றமாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான சிறை கையேடுகள் இருந்தாலும் பெரும்பாலும் அவை சிறைச்சாலை சட்டம்-1894 ஐ அடிப்படையாக கொண்டுள்ளது. அதன்படி, பிராமணர் மற்றும் உயர்சாதி இந்து கைதி சமையல்காரராக வேலை செய்யும் தகுதியுடையவர் ஆகிறார்.

கோவா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா போன்ற மாநில சிறைகளில் சாதி அடிப்படையிலான தொழில்கள் இருந்தன. 2010 முதல் 2017-ம் ஆண்டுக்கு இடையில் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல வழக்குகளை எதிர்கொண்ட லலிதா என்ற பெண் கைதி பைக்குல்லா பெண்கள் சிறையில், எழுதப்படாத சிறை நடைமுறை இருந்ததாக கூறுகிறார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டுவெடிப்பு மீதான வழக்கில் கைதான பிரக்யா தாகூருடன் லலிதாவும் இருந்துள்ளார்.

Pragya-thakur-NIAபிரக்யா கைது செய்யப்பட்டதும் சிறைச்சாலையிலும், சிறை அதிகாரிகளிடமும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். அவருக்கென ”வி.ஐ.பி செல்” என அழைக்கப்படும் மூன்று அறைகளை உடைய தனி அறை ஒதுக்கப்படுகிறது. புதிதாக சமைத்த வீட்டு உணவு விடியற்காலையில் சிறைச்சாலையை அடையும். ”ஜாட்” எனும் ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பெண் அவரது மெய்க் காப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரு உள்ளூர் தலித் பெண் அவரது கழிப்பறையை சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டார் என்று கூறினார் லலிதா.

இந்த பிரக்யாதான் 2017-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு போபால் தொகுதியில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பயங்கரவாத பெண்  ‘சாமியார்’ தான் சமீபத்தில், தங்களை சூத்திரர்கள் என்று அழைப்பதை பல சூத்திரர்கள் தவறாக நினைக்கிறார்கள். அவர்களிடம் போதுமான புரிதல் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், ஒரு சத்திரியரையோ, பிராமணரையோ, வைசியரையோ அப்படி வர்ணங்களின் அடிப்படையில் அழைத்தால் அவர்கள் தவறாக நினைப்பதில்லை என்றும் சூத்திரர்கள் மட்டும்தான் தவறாக நினைப்பதாகவும் கூறியிருக்கிறார்.

பிரக்யா கூறுவதைத் தான் அதாவது மனுநீதியைத் தானே இந்திய சிறைச்சாலைகள் இன்று நடைமுறைப்படுத்துகின்றன.

சிறைச்சாலை சாதிப் படிநிலைக்கு தமிழக சிறைச்சாலையும் விதிவிலக்கல்ல. 1994-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் குடும்ப சண்டை ஒன்று வன்முறையாக மாறியது. அந்த கொலைக்காரத் தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பேரில் செல்வம் என்ற 20 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்படுகிறார். அவர் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1998-ம் ஆண்டு செல்வம் குற்றவாளி என நிருபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. அந்த சமயம் சிறையில் தேவர்கள், நாடார்கள், பள்ளர்கள் என்று கைதிகள் சாதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு தனித்தனி அறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்கிறார் செல்வம்.

படிக்க :
♦ குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?
♦ இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?

மேலும் அவர், ”தேவர்கள் இருக்கும் சிறை கேண்டீன், நூலகம், மருத்துவமனைக்கு அருகில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதற்கு அருகில் நாடார் சமூகத்தை சேர்ந்த கைதிகள் இருந்தனர். தொலைத்தூரத்தில் கடைசியாக பள்ளர் சமூகத்தை சேர்ந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டனர்” என்று கூறினார்.

”இந்திய அரசு சிறைக்கு வெளியே பிரிவினை மற்றும் பாகுபாட்டை நியாயப்படுத்த முடியுமா? அப்படியானால் சிறைகளில் மட்டும் இது எப்படி நியாயமானது?” என்று கேள்வி எழுப்புகிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆர்.அழகுமணி.

மக்களை சாதிரீதியாகவும், மதரீதியாகவும் பிரிக்கும் மனுஸ்மிருதியை தீயிட்டு எரித்தார் அம்பேத்கர். அதை மீண்டும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு நிறைவேற்றத் துடிக்கிறது பாசிச மோடி கும்பல். ஆட்சி நாற்காலி முதல்  சிறைச்சாலை வரை சாதியால் கட்டமைக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த சாதிய கட்டமைப்பைத் தகர்க்க பார்ப்பனியத்தையும் அதைக் கட்டிக்காக்கும் சங்க பரிவாரக் கும்பலையும் ஒழிக்காமல் சாத்தியமில்லை.


மேகலை
நன்றி : The Wire

1 மறுமொழி

  1. எல்லா அதிகாரமும் அவாள் கையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவாள் நினைப்பதுதான் தீர்ப்பு.

Leave a Reply to இளங்கோவன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க