நாள்:10.01.2021

பத்திரிகை செய்தி

மிழகத்தில் உள்ள கோயில் ஊழியர்களுக்கு பொங்கலை முன்னிட்டு 1000 ரூபாய் ஊக்கத் தொகையாக தமிழக அரசு 07.01.2021 அன்று அறிவித்தது. இதனை வரவேற்று சமூக ஊடகங்களில் அதிமுகவினர் எடப்பாடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களின் பின்னணியில் போஸ்டர் ஒன்றினை வடிவமைத்து பகிர்ந்து வருகின்றனர்.

அதில் தீபாராதனை காட்டும் விதமாக தலைவர்களின் படங்களுடன் இருப்பவர் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோயில் அர்ச்சகர் மாரிச்சாமி. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை சேர்ந்த இவர், 2006-ம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டத்தின் படியிலான அர்ச்சகர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர். 26.02.2018 அன்று இந்து அறநிலைத்துறையால் தமிழகத்தின் பார்ப்பனரல்லாத முதல் அர்ச்சராக நிரந்தர பணியிடத்தில் நியமிக்கப்பட்டவர்.

படிக்க :
♦ வாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு !
♦ மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !

இது பிரம்மாண்டமான தங்களது சாதனையாக ஆட்சியாளர்களால் அன்று ஏன் கொண்டாடப்படவில்லை என்பது அவர்களுக்கே வெளிச்சம். இது போன்று தப்பித் தவறி நிகழ்பவை கூட இனி நடக்கக் கூடாது என்பதற்காக தான் கோயில்களை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தங்களைப் போன்ற பக்தர்களிடம்ஒப்படைக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ், பிஜேபி, இந்து முன்னணி, ஜக்கி வாசுதேவ் போன்றோர் கூக்குரல் விடுக்கின்றனர்.

மாரிச்சாமியை போன்று அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாத 203 அர்ச்சக மாணவர்கள் 13 ஆண்டுகளாக அர்ச்சகர் பணியிடங்களில் நிரப்பப்படாமல் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 36,000 கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் உள்ளன. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் தனி ஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்வழி கல்வியில் பயின்றோருக்கு அரசு பணியிட தேர்வில் தனி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனால் சமூக நீதி தமிழகத்தில்பார்ப்பனரல்லாத அர்ச்சக பயிற்சி முடித்த மாணவர்கள் மட்டும் ஆண்டுக்கணக்கில் கேட்பாரின்றி புறக்கணிக்கப் பட்டுள்ளனர். மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறோம் அர்ச்சகராகி நாங்கள் கருவறைக்குள் நுழைவது கடவுளுக்கு பூசை செய்யும் எங்களது ஏக்கத்தினை மட்டும் நிறைவேற்றப் போவதில்லை; கருவறையில் நிலவும் தீண்டாமையை அகற்றும் அரும்பணியின் அங்கமாகவும் அமைந்திடப்போகிறது.

பொதுமக்கள் எங்களை அர்ச்சகராக ஏற்பதில் எவ்வித பிரச்சினையும் இருக்கப் போவதில்லை என்பதற்கு சான்று மாரிச்சாமி குறித்து பிபிசி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆவணப்படம்.

இது சட்டமன்ற தேர்தல் காலக்கட்டம். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வரும் நேரம்.

தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற கோயில்களில், பெரிய கோவில்களில் உள்ள அர்ச்சகர் பணியிடங்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.

அர்ச்சகர் மாரிச்சாமியின் படத்தினை தங்களது விளம்பரத்திற்கு பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் இதற்கெல்லாம் செவிமெடுக்க வேண்டும்!

தமிழக மக்களை போல் நாங்களும் காத்திருக்கிறோம்

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க