PP Letter headபத்திரிகைச் செய்தி

27.01.2021

தில்லி விவசாயிகள் மீதான தாக்குதல் !
டிராக்டர் பேரணிக்கு அனுமதியளித்துவிட்டு நயவஞ்சகமாக தாக்குதல் நடத்திய பாசிச மோடி அரசு !

மாணவர்கள் – தொழிலாளர்கள் – விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முறியடிப்போம் !
பாசிச மோடி அரசை வீழ்த்துவோம் !

னவரி 26-ம் தேதி “குடியரசு நாளன்று” விவசாயிகள் மீது கட்டவிழ்த்து வன்முறையை விட்டிருக்கிறார் மோடி. அறுபது நாட்களுக்கு மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தையே அழிக்கும் மூன்று வேளாண் திருத்தச்சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கடும் குளிரிலும் விபத்துக்களிலும் தன்னை மாய்த்துக் கொண்டும் இறந்து போனவர்களின் எண்ணிக்கை நூற்று அறுபதைத் தாண்டி விட்டது.

வேளாண் திருத்தச்சட்டங்களை திரும்பப்பெறு என்பதுதான் விவசாயிகளின் ஒற்றை முழக்கம். அதை நிறைவேற்றாமல் சதித்தனமாக, புரோக்கர்கள்தான் போராடுகிறார்கள்; தீவிரவாதிகள்தான் போராடுகிறார்கள் என்று அரசும் ஊடகங்களும் விவசாயிகள் மீது அவதூறுகளை அள்ளிவீசினர். ஆனாலும் உறுதியாக விவசாயிகள் களத்தில் இருந்தனர். நாட்டு மக்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். மோடி அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கையை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கம் இல்லாததால்தான் திட்டமிட்டே விவசாயிகளை அலைக்கழித்து தாமதப்படுத்தி அவமானப்படுத்தியும் வந்தது.

சனவரி 26 டிராக்டர் பேரணிக்கு அனுமதியும் கொடுத்து விட்டு விவசாயிகள் மீது போலீசை ஏவிவிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தி அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்ட இச்செயல் கழுத்தறுப்பு, மாபெரும் நம்பிக்கை துரோகம். அரசே ஒரு வன்முறைக்கருவி என்பதை அரசின் செயல்பாடுகள் எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.

மெரீனாவில் ஜல்லிக்கட்டு என்ற ஒற்றைக் கோரிக்கைக்காக ஒன்று திரண்ட மக்கள் மீது திட்டமிட்டே வன்முறையை ஏவி பல பெண்களை மானபங்கம் செய்தும் மீனவர் குடியிருப்புக்களை எரித்து நாசம் செய்தும் பல இளைஞர்களை கொடுங்காயப்படுத்தியும்தான் அப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, பேச்சுவார்த்தை மூலம் அல்ல. அப்போதும் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று தனது பயங்கரவாத செயல்களை எல்லாம் நியாயப்படுத்தியது அரசு.

சி...-க்கு எதிரான மக்கள் போராட்டத்திலும் கூட ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் போலீசோடு இணைந்து தாக்குதல் நடத்தி முசுலீம் மக்களின் குடியிருப்புக்களை எரித்தார்கள்.

படிக்க :
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
♦ கிரிமினல்களின் கூடாரமாகும் சங்கபரிவாரம் !

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக அமைதியாக நூறு நாட்கள்வரை போராடி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை துடிதுடிக்கக் கொன்றும் நூற்றுக் கணக்கானவர்களை முடமாக்கியும் போட்டது இந்த அரசுதான். அப்போதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர் என்று அரசும் ஊடகங்களும் அவதூறு செய்தனர்.

அதே அரசும் ஊடகங்களும்தான் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டனர் என்கின்றன. எல்லாவிதமான அமைதிவழிப் போராட்டங்களையும் மக்கள் கோரிக்கைகளையும் வன்முறை மூலம் நசுக்கி மக்களின் உரிமைகளை அழித்தொழிப்பதே பாசிச மோடி அரசின் ஒரே நோக்கம்.

நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் போராடுகிறார்கள். தொழிலாளர் நல திருத்தச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் போராடுகிறார்கள். மறுகாலனியாக்கக் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட சிறுமுதலாளிகளும் வியாபாரிகளும் போராடுகிறார்கள். ஆனாலும் நமது கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

தனித்தனியாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் வன்முறை மூலமாக ஒடுக்குகிறது பாசிச மோடியின் அரசு. உண்மையான மக்கள் பிரச்சினையை மறைக்க தேசத்துரோகம் என்ற முத்திரையை குத்தி ஒடுக்குகிறது. நேற்றைய தினம் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட பாசிச மோடி அரசின் அரச பயங்கவாத நடவடிக்கையை கண்டிப்பதுடன் வேளாண் திருத்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.

மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சிறுமுதலாளிகள் என பாதிக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்று திரளவேண்டும். அரசை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துச் செய்வது மட்டுமல்ல, நாட்டின் பெரும்பான்மை மக்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு காவு கொடுக்கும் பாசிச மோடி அரசினை வீழ்த்தவும் முடியும்.

தோழமையுடன்
சி.
வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க