டெல்லியில் நேற்று (26-01-2021) நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறது போலீசு. தீரமிக்க போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திவரும் விவசாயிகள், வன்முறையாளர்களாகவும் சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்களாகவும் காட்டப்பட்டு வருகின்றனர். இதன் விளைவாக இந்தப் போராட்டத்தில் இருந்து பின்வாங்குவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிலிருக்கும் இரண்டு முக்கிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மோடி அரசும், அதன் ஆதரவு ஊடகங்களும், நீதிமன்றமும் விரும்பியது இத்தகைய பிளவைத்தான். இந்தப் பிளவை இதற்கு முன்னரே நைச்சியமான முறையில் ஏற்படுத்த முயற்சித்த மத்திய அரசின் முயற்சிகளை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு முறியடித்தது. பெரும்பான்மை விவசாய சங்கங்களின் உறுதி, விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு மக்களிடையேயும் சர்வதேச அளவிலும் கிடைத்த ஆதரவு ஆகியவை இந்தப் பிளவு முயற்சிக்கு விவசாய சங்கங்களின் தலைமைகளே விரும்பினாலும் துணைபோக முடியாத வகையில் நெருக்கடியைக் கொடுத்து வந்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம்,  விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கமிட்டியை அமைப்பதாகவும் அதன் காரணமாக போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறும் விவசாயிகளிடம் மிகவும் இறங்கிப் பேசுவதாகக் காட்டிக் கொண்டே, விவசாயிகள் மீது “பேச்சுவார்த்தையை விரும்பாத வீம்பு பிடித்தவர்கள்” என்ற முத்திரையைக் குத்தியது.

படிக்க :
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

இந்நிலையில் நேற்று (26-01-2021) நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகள் அனுமதி வழங்கப்படாத செங்கோட்டை பகுதிக்குச் சென்றதையும் அங்கிருந்த தடுப்புகளை அகற்றி உள்ளே நுழைந்ததையும், தங்களைத் தாக்கிய போலீசுடன் மோதலில் ஈடுபட்டதையும் வன்முறை என்று சித்தரித்து விவசாயிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

போதாத குறைக்கு, செங்கோட்டையில் இந்தியக் கொடியை இறக்கி காலிஸ்தான் கொடியை ”காலிஸ்தான் தீவிரவாதிகள்” ஏற்றியதாகவும் மோடியின் அடிவருடி ஊடகங்கள் அலறத் துவங்கின. விவசாய சங்க கொடிதான் அது என்பதையும் இந்தியக் கொடியை விட உயரம் குறைவான கம்பத்தில்தான் ஏற்றப்பட்டது என்பதையும் பலரும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டும் சங்கிகளின் அவதூறுகளும் பொய்களும் குறையவில்லை.

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, பாசிசத்தின் கொடுங்கொன்மையின் கீழ் அரசியல் சாசனச் சட்டம் அவமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது என்பது உண்மையில் குடியரசு தினத்திற்குத் தான் அவமானம் என்பது ஒருபுறமிருக்க, எந்தக் கொடி உயரத்தில் ஏற்றப்பட்டிருந்தது என்பதா இப்போதைய பிரச்சினை?

இந்தப் பிரச்சினையில் விவசாயிகள் போராட்டத்தில் சீர்குலைவு சக்திகள் உள்ளே நுழைந்து பேரணிக்குத் தீர்மானிக்கப்பட்ட பாதையை விட்டு விலகியதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். மேலும் அனுமதி மறுக்கப்பட்ட பாதையில் செல்ல வழிகாட்டியதாக சில விவசாய சங்கங்கள் மீது சக விவசாய சங்கங்களும் குற்றம் சாட்டியிருக்கின்றன.

டெல்லியில் நேற்று நடந்த போலீசு – விவசாயிகள் மோதலை, “விவசாயிகளின் வன்முறை” என ஒட்டுமொத்த மோடி அடிவருடி ஊடகங்களும் கதற, தங்களை லிபரல் ஊடகங்கள் எனக் காட்டிக் கொள்ளும் என்.டி.டி.வி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ‘நடுநிலை’ ஊடகங்களும் அந்த அலறலுக்கு கோரஸ் பாடிக் கொண்டிருக்கின்றன.

பிற அரசியல் கட்சித் தலைவர்களும் “அமைதி வழி“ குறித்து வகுப்பெடுக்கத் துவங்கினர். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட்ட கல்லூளி மங்கன்களின் தலைவரான அடிமை எடப்பாடியோ தமிழகத்தில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேரணி நடத்திய தமிழக விவசாயிகள் மீது போலீசை ஏவிக் கொண்டிருந்தார். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ”வன்முறை அரசின் திசை திருப்பல் முயற்சிக்கு வித்திடும்” என்று தனது “அட்வைசை” விவசாயிகளுக்குத் தெரிவித்திருக்கிறார்.

நடந்தது விவசாயிகளின் வன்முறை என்று இவ்வாறாக “நிரூபிக்கப்பட்ட” பின்னர், விவசாயிகள் வன்முறைக்கு எந்த விவசாயிகள் சங்கத்தினர் காரணம் என்பதாக கேள்வி முன்வைக்கப்பட்டது. இதுதான் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்படுவதற்கான அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்விக்கு விவசாய சங்கங்கள் நிதானமாக பதில் சொல்ல முடியாதபடிக்கு, “விவசாயிகள் வன்முறை” ஓலம் முதல் அனைத்து வகையான நெருக்கடிகளையும் இந்த கேடுகெட்ட ஊடகங்களும், “நடுநிலை” அரசியல் கட்சிகளும் ஏற்படுத்திவிட்டன.

தற்போது வரை இரு விவசாய சங்கங்கள், “இந்தப் போராட்டத்தில் கட்டுப்பாட்டுக்கு உட்படாதவர்க்ளுடன் இணைந்து பயணிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தில் சங்க பரிவாரக் கும்பலும், கார்ப்பரேட் கும்பலும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு பிளவை, ஒரு உடைப்பை, மேற்குறிப்பிட்டவர்களின் “வன்முறை” கோசங்கள் ஏற்படுத்தியுள்ளன.

விவசாயிகள் டெல்லியில் பேரணியை முடித்துவிட்டு, கண்டிப்பாக மீண்டும் டெல்லி எல்லைக்கு திரும்புவதாக உறுதியளித்துதான் இந்தப் பேரணியை விவசாயிகள் நடத்தினர். அப்படி இருக்கையில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவை மீறி சில சங்கங்களோ அல்லது அவற்றின் சிறு பிரிவினரோ செங்கோட்டை இருந்த பகுதிக்குள் சென்றாலும் அவர்கள் மீண்டும் மாலையில் சிங்கு, டிக்ரி, காசிப்பூர் எல்லைக்குத் திரும்புவதாகத் தானே கூறியிருக்கிறார்கள். பின்னர் எதற்கு அவர்கள் மீது தேவையில்லாமல் தடியடி நடத்தவேண்டும் ?

படிக்க:
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

செங்கோட்டை பகுதிக்குள் விவசாயிகள் பேரணி நுழைவதற்கு முன்னரே, வருமானவரித்துறை அலுவலகப் (ITO) பகுதிக்குள் பேரணி நுழைந்ததுமே தடியடியையும் கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசி, விவசாயிகளுடனான மோதலை உண்டாக்கியிருக்கிறது மோடியின் டெல்லி போலீசு.

வன்முறையை விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விட்டது போலீசு. அதற்குப் பதிலடி கொடுத்த விவசாயிகளை வன்முறையாளர்கள் என்று கதறும் ஊடகங்கள், கையில் தடிக்கம்புடனும் கண்ணீர்ப் புகை குண்டுகளுடனும் காத்துக் கிடந்த போலீசு வெறியர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிப்பதில்லை. ஏனெனில் போலீசின் கைகளில் இருக்கும் லத்திக் கம்புகள் அவர்களது “மூலதனத்தை”யும் காக்கின்றனவே.

அமைதியான முறையில் முடிந்திருக்க வேண்டிய விவசாயிகளின் பேரணியை திட்டமிட்டு சீர்குலைத்து, விவசாயிகளின் மீது “வன்முறையாளர்கள்” முத்திரையை குத்தியிருப்பதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு போராட்டத்திற்கான முடிவுரையை எழுதத் துவங்கியிருக்கிறது கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசு !

திட்டமிட்ட வகையில் துவக்கப்பட்டு, கட்டுக்கோப்பான முறையில் நடத்தப்பட்ட விவசாயிகளின் போராட்டம் ஒரு அவலமான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதை அனுமதிக்கப் போகிறோமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை துவக்கத்தில் இருந்தே உதாசீனப்படுத்தி வந்த மோடி அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்க முடியாது என்பதில் உறுதியாக நிற்கின்றது. தனக்குப் படியளக்கும் கார்ப்பரேட் கடவுளர்களான அம்பானி, அதானியின் நலன்தான் தனக்கு முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லி வந்திருக்கிறது மோடி அரசு.

எஜமானன் சுட்டிக் காட்டும் நபர்களைப் பாய்ந்து தாக்கும் விசுவாசமான ஏவல் நாயைப் போல, போராடும் விவசாயிகளின் கழுத்தில் தாவிக் கடிக்கச் சாதகமான தருணத்துக்காக காத்திருந்த மோடி அரசுக்கு இந்த ”வன்முறை” தருணம் பொன்னான வாய்ப்பாக இருக்கிறது.

இதை முறியடிக்க வேண்டுமெனில், விவசாயிகளைக் காக்க வேண்டுமெனில், விவசாயிகளின் இந்தப் போராட்டம் முடிவுறாமல் தடுக்கப்பட வேண்டுமெனில், மோடி அரசு எனும் ஏவலாளியைச் சாடுவதோடு நின்றுவிடாமல் அதனை ஏவிய எஜமானர்களின் “கைகளை” முறிக்க வேண்டும். அதாவது வேளாண் சட்டத்தை நிறைவேற்றுவதால் பலனடையப் போகும் கார்ப்பரேட் கும்பலின் மூலதன நலன்களைப் பதம் பார்க்க வேண்டும். அந்நிறுவனங்களின் பொருட்களை நிராகரிக்க வேண்டும்.

இதை ஏற்கெனவே தங்களது “ஜியோ” எதிர்ப்பு மூலமாகச் செய்து காட்டியிருக்கின்றனர் விவசாயிகள். முகேஷ் அம்பானி வெளிப்படையாகவே கதறியதும், நீதிமன்றத்தில் வேளாண் சந்தையில் தாம் மூலதனமிடவில்லை எனப் பச்சையாகப் புளுகியதும் அதன் விளைவு தான்.

விவசாயிகளுக்கு எதிராக கிளப்பிவிடப்பட்டிருக்கும் “வன்முறை” எனும் ஓலங்களை புறக்கணித்து, அவர்களுக்கு ஆதரவாக அனைத்துப் பிரிவு மக்களும் களமிறங்குவதோடு, அம்பானி, அதானி உள்ளிட்ட வேளாண் சட்டத்தால் பயன்பெறப் போகும் கார்ப்பரேட்டுகளை நேரடியாக காரணத்தைக் குறிப்பிட்டு புறக்கணிப்பதன் மூலம் மட்டுமே வேளாண் சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறச்செய்ய முடியும் !

இது விவசாயிகளின் போராட்டம் மட்டுமல்ல.. நமக்குமான போராட்டம்தான். கார்ப்பரேட்டுகளின் கைகளில் கொடுக்கப்பட்ட பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது 92 ரூபாய்க்கு வந்து நிற்கும் பெட்ரோல் விலையைப் போல அரிசியின் விலை ஏறிக் கொண்டே போவதை அனுமதிக்கப் போகிறோமா ? பெட்ரோல் இல்லையெனில் நடந்து கூடப் போகலாம்! உணவின்றி வாழ முடியுமா?


சரண்