டெல்லியில் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டத்தில் டெல்லிக்குள் டிராக்டர் பேரணிக்காக நுழைய முயன்ற விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியிருக்கிறது டில்லி போலீசு. விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீசியிருக்கிறது.

இன்று அதிகாலை முதலே உற்சாகமாக டிராக்டர் பேரணிக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்ட விவசாயிகளை டெல்லியின் எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க பல்வேறு தடுப்பரண்களை வைத்து ஆயுதப்படை போலீசையும் எல்லையில் குவித்து வைத்துள்ளது மோடி அரசு.

டிக்ரி எல்லையில் உள்ளே நுழைந்த விவசாயிகள்

காலையில் 10.15 மணியளவில், சிங்கு எல்லையில் உள்ளே நுழைய முயன்ற விவசாயிகளின் பேரணியை தடுத்து நிறுத்த போலீசு போட்டிருந்த தடுப்பரண்களை போலீசு அகற்ற வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். அதற்கு 45 நிமிடங்கள் காலக் கெடுவும் கொடுத்திருந்தனர்.

டிக்ரி எல்லையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நிற்கும் டிராக்டர்கள்

45 நிமிடங்களாக போலீசு எந்த தடுப்பரண்களையும் அகற்றாத நிலையில், அங்கிருந்த தடுப்பரண்களை விவசாயிகள் அகற்றத் துவங்கினர்.

காசிபூர் எல்லையில் தடுப்பரண்களை அகற்றும் விவசாயிகள்

அதனைத் தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசு ஏவல் படை, விவசாயிகள் மீது தடியடி நடத்தத் துவங்கியது. அது மட்டுமல்லாமல், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியது.

தடுப்பரண்களை அகற்றும் விவசாயிகள் மீது போலீசு தடியடி நடத்தியது.

 

போலீசு வன்முறையைத் தூண்டினாலும், விவசாயிகள் பதட்டமின்றி தடுப்பரண்களை அகற்றிவிட்டு முன்னேறினர். சிங்கு எல்லையில் இருந்து முன்னேறிய விவசாயிகள் சிங்கு எல்லையை அடுத்த சஞ்சய் காந்தி போக்குவரத்து நகருக்கு வந்தடைந்தனர். அங்கும் போலீசு விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விவசாயிகளின் பேரணியை சீர்குலைக்கவும் அவர்களை விரட்டியடிக்கவும் முயற்சித்து வருகிறது.

தடையை தகர்த்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளை டெல்லி ஸ்வரூப் நகர் மக்கள் மலர்தூவி வரவேற்கின்றனர்.

கார்ப்பரேட்டுகளின் அடிமையான மோடி அரசுக்கும், கார்ப்பரேட்டுகளும் நேரெதிராக எழுந்து நிற்கின்றனர் விவசாயிகள். எப்படியாவது அவர்களை ஒடுக்கி கார்ப்பரேட்டுகளின் பாதங்களில் இந்திய விவசாய உணவுப் பொருள் உற்பத்தையை அடகு வைக்கத் துடிக்கிறது மோடி அரசு. அதனைச் செய்து முடிக்க எத்தகைய படு பாதகச் செயலையும் செய்யத் தயங்காது மோடி அரசு. விவசாயிகளுக்கு ஆதரவாக நம் குரல்களை எழுப்புவோம்.

கர்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க