ந்திய நாட்டின் மிகப் பெரும் பொருளாதாரத்தைக் கையாளும் திறன் கொண்ட இந்திய காப்பீட்டுக் கழகத்தை (LIC) காவு கொடுக்க நடப்பு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தீர்மானித்து விட்டது.

அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவிகிதம் வரை உயர்த்தும் தீர்மானகரமான முடிவை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்க வழிவகை செய்துள்ளனர்.

இந்திய காப்பீட்டுத் துறையின் வரலாறு நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்கது. துவக்கநிலை தொழில்துறை முதலாளித்துவம் மூலதனத் திரட்சிக்காக காப்பீடு செய்யும் முறையை உருவாக்கியது. 1819-ம் ஆண்டுதான் முதன்முதலாக இங்கிலாந்து மூலமாக இந்த காப்பீடு திட்டம் காலனிய இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி என்கின்ற நிறுவனம் கல்கத்தாவில் முதன்முதலில் துவக்கப்பட்டது. 1956-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி காப்பீட்டுக் கழகத்தை தேசியமயமாக்கும் முடிவு அன்றைய மத்திய அரசால் எடுக்கப்பட்டது. இந்திய பாராளுமன்றத்தில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கான சட்டம் உருவாக்கப்பட்டது.

படிக்க :
♦ எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !
♦ பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !

கடந்த 1990-ம் ஆண்டுகளில் இந்திய ஆட்சியாளர்கள் காட் (GATT), காட்ஸ் (GATS) உலக வர்த்தக கழகம் (WTO) ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். பன்னாட்டு தேசங்கடந்த தொழில் கழகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கைகள் புயல் வேகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. காப்பீட்டுக் துறையை தாராளமயமாக்கும் நோக்கத்தோடு கடந்த 2000-ம் ஆண்டு, “இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளர்ச்சி சட்டம்” நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின் விளைவாக காப்பீட்டுத் துறையில், தனியார் மற்றும் அந்நிய நிறுவனங்கள் கடை விரிக்கத் துவங்கின. சமூக-பொருளாதார அடித்தளத்திற்கு முக்கியமான பங்களிப்பை செய்து வந்த அரசு பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. தேசிய மயமாக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை நடுத்தர மக்களுடைய முதல், காப்பீட்டு தேர்வு இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மட்டுமே .

31 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட (LIC உண்மையான சந்தை மதிப்பு இன்னும் அதிகம்) மிகப்பெரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 40 கோடிக்கு மேற்பட்ட பாலிசிதாரர்கள் உள்ளனர். 2.85 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். ஆண்டுதோறும் பாலிசிதாரர்களிடமிருந்து பிரீமியமாக 2 லட்சம் கோடி ரூபாய் பெற்று வருகிறது.

நாடெங்கிலும் 2048 கணினிமயமாக்கப்பட்ட கிளைகளையும், 113 கோட்ட அலுவலகங்களையும், 8 மண்டல அலுவலகங்களையும் உள்ளடக்கிய பெரிய  நிறுவனமாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை உருவாக்கும்போது அரசு போட்ட மூலதனம் வெறும் 5 கோடி மட்டுமே. கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு டிவிடெண்ட்டாக அளித்துள்ளது.

இந்திய அரசுக்கு எப்பொழுதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் வாரி வழங்கி உள்ளது எல்.ஐ.சி. சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி நிதியை அரசுக்கு அளித்துள்ளது. மேலும், நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை வாங்கி அதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களையும், நாட்டின் சொத்தையும் காப்பாற்றும் முதல் ஆளாக நின்றது எல்.ஐ.சி தான்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தொழில்துறை மூலதனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடனாகப் பெற்று நாட்டின் பொதுத்துறை வங்கிகளை திவாலாக்கி விட்டனர். பல்லாயிரம் கோடியை கடனாகப் பெற்ற தொழில்துறை முதலாளிகள் அரசின் ஆசியோடு வெளிநாட்டில் உல்லாசமாக உலா வருகின்றனர்.

பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் வராக்கடன் என்ற பெயரில் அம்பானி அதானி கும்பலுக்கு தாரைவார்க்க பட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள், பொருளாதார கிரிமினல் குற்றக் கும்பல்கள், நாட்டு மக்களின் சேமிப்பு பணத்தை விழுங்கி ஏப்பம்விட்டுவிட்டனர். நீரவ் மோடியின் திருவிளையாடலால் பஞ்சாப் நேஷனல் வங்கி கேள்விக்குறியாய் நிற்கிறது.இப்படி சூறையாடப்பட்ட பொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற எல்.ஐ.சி.-யின் பணம் வாரியிரைக்கப்படுகிறது. அந்த வகையிலேயே இழப்பைச் சந்தித்த ஐ.டி.பி.ஐ வங்கியில் எல்.ஐ.சி மூலதனமிட நிர்பந்திக்கபட்டது.

மத்திய அரசின் தாராளமய தனியார்மய கொள்கைகளின் விளைவாக ஏற்பட்ட நட்டத்தைச் சரிக்கட்ட இப்படி எல்.ஐ.சி.யின் நிதி சூறையாடப்பட்டதன் விளைவாக, சமீப ஆண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் 2.1 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்காக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். எல்.ஐ.சி, ஐ.டி.பி.ஐ வங்கி ஆகியவற்றின் பங்குகளை விற்பதன் மூலம் 90 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்ற போதும், மொத்த காப்பீட்டு சந்தையில் 76 விழுக்காடு தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனமாக திகழ்கிறது எல்.ஐ.சி. மத்திய அரசின் தற்போதைய அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவிகிதமாக உயர்த்தும் அறிவிப்பானது LIC பாலிசிதாரர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தை சர்வதேச மூலதனத்தை சார்ந்திருக்கும் நாடாக மாற்றும் வகையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளில் அமல்படுத்தி வருகின்றனர். மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசோ அதை தீவிரப்படுத்தியிருப்பதோடு அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்கிவருகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண வைக்கும் வகையில் கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்க்கத் துணிந்து விட்டனர்.

படிக்க :
♦ தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?
♦ வாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு !

மக்களின் சொத்தான பொதுத்துறைகளை அழித்து, அதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை வளப்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத் துறைகளை அழிப்பது என்பது இட ஒதுக்கீடு சமூகநீதி கொள்கையின் மீதான நேரடி தாக்குதலாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, கார்ப்பரேட் காவி பாசிச ஆட்சி அமைப்பு முறையை நிறுவுவதற்கான தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளனர். கார்ப்பரேட் குழும முதலாளிகளின் சர்வாதிகாரமும், காவிப் பாசிசமும் இணைந்து ஒரு புதிய வகை கொடுங்கோல் ஆட்சியை இம்மண்ணில் நிறுவ முயலுகின்றனர்.

நாட்டு மக்களின் சொத்தை – ‘பொன் முட்டையிடும் வாத்தை’ – கொல்லத் துணிந்து விட்டனர் என்று கூறுகிறார் காப்பீட்டுக் கழக அதிகாரிகளின் சங்க தலைவர் ராஜ்குமார். மூன்று முக்கிய தொழிற் சங்கங்களும் போராட்டக் களத்திற்கு தயாராகி வருகின்றன. இந்திய அரசியல் அரங்கில் உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை போல், இந்திய காப்பீட்டு கழகத்தை காப்பதற்கான போராட்டக் களம் கட்டமைக்கப்பட வேண்டும். அத்தகைய போராட்டத்தில் போராடும் ஊழியர்களுக்கு ஆதரவாக கரங்கோர்த்து நிற்க வேண்டிய கடமை நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது.


இரணியன்

நன்றி :
முகப்பு கருத்துப்படத்திற்கான மூல கேலிச் சித்திரம் – சதிஷ் ஆச்சார்யா