சு மாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய அளவிலான “பசு மாட்டு அறிவியல்”-க்கான தேர்வை பசு மாட்டுக்கான தேசியக் குழு (ராஷ்ட்ரிய  காமதேனு ஆயோக்-RKA) என்ற மத்திய அரசினுடைய அமைப்பு வரும் பிப்ரவரி 25-ம் தேதி இந்தியா முழுவதும் நடத்த இருந்தது. இத்தேர்விற்கான அறிவிப்பை RKA கடந்த மாதமே வெளியிட்டிருந்தது.இந்நிலையில் இந்தக் குழுவின் தலைவரின் பதிவுக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, நடக்கவிருந்த தேர்வை எவ்வித காரணமும் சொல்லாமல், காலம் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது ராஷ்டிரிய காமதேனு ஆயோக்.

பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இத்தேர்வில் ஆர்வமுடன் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது.

UGC கடந்த வாரம் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “மாணவர்கள் இத்தேர்வுக்கு முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் இத்தேர்வு குறித்த அறிவிப்பினை இணைப்பு கல்லூரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும்” குறிப்பிட்டுள்ளது.

இத்தேர்வுக்கான பாடத்திட்டம், புத்தகங்கள், மாதிரித் தேர்வுகள் எனப் பலவற்றை ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. வேத சுலோகங்களில் பசுக்களைப்  பற்றி வரக்கூடிய குறிப்புகள், பசுவின் புனிதக் கதைகள், பசுவிலிருந்து பெறப்படும் மூத்திரம் உள்ளிட்ட பொருட்களின் மருத்துவக் குணங்கள் போன்றவற்றைப் பாடங்களாக வைத்துள்ளனர்.

படிக்க :
♦ சங்கிகளின் கண்டுபிடிப்பு : கதிர்வீச்சை குறைக்கும் மாட்டுச்சாண சிப் !

♦ ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

பசுவின் முக்கியத்துவத்தை உலகறிய செய்வதற்காக சங்கிகளால் 2019-ல் உருவாக்கப்பட்டதே ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்ற அமைப்பு. இது விலங்குகள் நலத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ராஷ்ட்ரிய  காமதேனு ஆயோக்கின் தலைவர் வல்லபாய் கத்திரியா, கைப்பேசியில் இருந்து வரும் மின்காந்தக் கதிர் வீச்சினைத் தடுக்கும் பண்பு பசுவின் சாணத்திற்கு இருப்பதாகவும் இது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பசுஞ் சாணத்திலான சிப்பை கைப்பேசியில் பொருத்துவதன் மூலம் மின்காந்தக் கதிர்வீச்சினால் வரக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க முடியும் என்றும் பேசியுள்ளார். ஆனால், கைப்பேசியிலிருந்து வரக்கூடிய மின்காந்த அலைகளினால் எவ்விதப் பாதிப்புகளும் இல்லை என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை.

மேலும் பசுவின் சாணத்திற்கு மின்காந்தக் கதிர்வீச்சினைத் தடுக்கும் பண்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்களை வெளியிடுமாறு  600-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் வல்லபாய் கத்திரியாவுக்கு கடிதம் எழுதினர். ஆனால், இதுவரை RKA தரப்பிலிருந்து எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. சங்கிகளின் அறிவு ஞானத்திற்கு இது ஒரு உதாரணம். பிரதமர் மோடியிலிருந்து RSS-ன் கடைக்கோடி ஆதரவாளர்கள் வரை அனைவரும் இதே பாணியில் தான் பேசி வருகின்றனர்.

பல பத்தாண்டுகளாக பசு அரசியலை சங்கப் பரிவாரங்கள் முன்னெடுத்து வருகின்றன. பசுவை பார்ப்பனிய மேலாதிக்கத்தின் குறியீடாகவே சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்துகின்றன. இதற்காக பல கொலைகள், கலவரங்கள், தலித்துகள்-முஸ்லீம்-மாணவர்கள் மீதான தாக்குதல்கள், பசு விற்பனையைத் தடுப்பதற்கான கடும் சட்டங்கள் இயற்றுதல் போன்ற பாசிச நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் தொடர்கின்றன.

ஏற்கெனவே கல்வி நிறுவனங்கள் பார்பனியக் கருத்துக்களைப் பரப்புவதற்கான பிரச்சாரத் தளங்களாக மோடி அரசால் பயன்படுத்தப்பட்டு வரும் தொடர்ச்சியில் தற்போது பசு மாடு அறிவியல் குறித்த தேர்விற்கான UGC-ன் சுற்றறிக்கையை இணைத்துப் பார்க்க வேண்டும்.

பசு மாடு அறிவியல் தேர்விற்கான அறிவிப்பு வெளிவந்த அதே வாரத்தில்தான், அறிவியல் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கொள்கை 2020 (Science Technology and innovation Policy 2020) க்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டது. அதில் 2030-க்குள் இந்தியாவை உலக அறிவியலில் சிறந்து விளங்குகின்ற முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உயர்த்துவதே இலக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடியின் ஐந்து டிரில்லியன் பொருளாதாரக் கனவு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கோரினாலும் இந்துராஷ்ட்ரா கனவோ மாட்டுச் சாணி பற்றிய ஆய்வையே ஊக்குவிக்கச் செய்கிறது.

ராஜன்
CCCE-TN