10.5.2021

தோழர் சம்புகனிடம் கற்போம் !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சம்புகன் தனது 66-வது வயதில் 10/05/2021 இன்று காலையில் கோவை அரசு மருத்துவமனையில் மூச்சுத் தினறல் காரணமாக உயிர் நீத்தார்.

மே நாள் ஆர்ப்பாட்டம், மே-5 ஆசான் மார்க்ஸ் பிறந்த நாள் நிகழ்வுகள் வரை உற்சாகத்தோடு ஒரு இளைஞரைப் போல பங்கு கொண்டவர் தோழர் சம்புகன்.

இரண்டு நாட்களுக்கு முன் மூச்சுத் தினறலால் பாதிக்கப்பட்ட தோழரை, கொரோனா தொற்றாக இருக்கலாம் என கருதி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், கொரோனா தோழரை தொற்றவில்லை. ஆனால், மூச்சுத் தினறல் தோழரை வீழ்த்தி விட்டது.

பார்ப்பன பாசிச சக்திகளுக்கு எதிராகவும், நாட்டை மறுகாலனியாக்கும் கார்ப்பரேட் சதிகளுக்கு எதிராகவும் கருத்திலும் களத்திலும் உறுதியாக நின்றவர் தோழர் சம்புகன்.

பாட்டாளி வர்க்கத்தின் பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் அமைப்பின் பல்வேறு போராட்டங்களிலும் உற்சாகத்தோடு பங்கேற்று பலமுறை சிறை சென்றவர், பல வழக்குகளை எதிர்கொண்டவர் தோழர் சம்புகன்.

சாதி, மதவெறிப் பண்பாடு, சீரழிவுக் கலாச்சாரத்தின் நடுவே அமைப்பின் பத்திரிக்கைகளையும் துண்டறிக்கைகளையும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பல இளம் கம்யூனிசப் போராளிகளை உருவாக்கியவர் தோழர் சம்புகன்.

தோழர்கள் இழைக்கும் தவறுகளைக் கறாராகவும் தன்மையாகவும் சுட்டிக்காட்டி, அந்தத் தவறுகளைக் களைந்து கொண்டு தோழர்கள் வளர உதவியவர் தோழர் சம்புகன்.

தான் மட்டுமல்லாமல், தனது குடும்பத்தையும் அமைப்போடும், அரசியலோடும், பாட்டாளி வர்க்கப் பண்பாட்டோடும் வளர்த்தவர் தோழர் சம்புகன்.

தனது 66 வயதிலும் ஒரு இளைஞருக்கே உரிய உற்சாகத்தோடு அமைப்புப் பணிகளை மேற்கொண்டவர் தோழர் சம்புகன். உடல் நிலையைக் காரணம் காட்டி வீட்டில் ஓய்வாக இருக்க மருத்துவர்கள் வலியுறுத்திய போதும், பெரும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட, இரத்தம் வழியும் காலோடு அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்றவர் தோழர் சம்புகன்.

அமைப்பையும் அமைப்பின் கொள்கையையும் எங்கும் எப்போதும் உயர்த்திப் பிடித்தவர் தோழர் சம்புகன்.

அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தனக்குள் இரகசியமாக வளர்த்துக் கொண்டும், அதை அமைப்பிலும் தோழர்களிடமும் வெளிப்படையாக பேசாமல் மறைத்து விட்டும், அமைப்பையும் தோழர்களையும் காட்டிக் கொடுப்பது போல துரோகத்தனமாக பொதுவெளியில் பேசி அமைப்பில் இருந்து முன்னணியாளர்கள் வெளியேறிய போதும்,  அந்தத் துரோகிகளுடன் இரகசியமாக கோஷ்டி கட்டி, துரோகிகளை மீண்டும் அமைப்பிற்குள் கொண்டுவர அமைப்பில் இருந்து கொண்டே சிலர் சதித்தனமாக அமைப்பை சீர்குலைக்க முயன்ற போதும் கலங்காது நின்று, அமைப்பு முறைகளையும், அமைப்பின் கொள்கையையும் பின்பற்றி துரோகத்தையும் சதிகளையும் அம்பலப்படுத்தி மீண்டும் எஃகுறுதி மிக்க அமைப்பை கட்டி எழுப்பப் போராடியவர் தோழர் சம்புகன்.

நக்சல்பாரி புரட்சிகர பாரம்பரியத்தையும், விட்டுக் கொடுக்காமல், மக்களுக்காகவும் புரட்சிகர கொள்கைகளுக்காகவும் என்றும் வாழ்ந்தவர் தோழர் சம்புகன்.

தோழர் சம்புகனின் இழப்பு அமைப்பிற்கும் மக்களுக்கும் புரட்சிக்கும் பேரிழப்பு.
விடை கொடுங்கள் தோழர் சம்புகன்!
நீங்கள் காட்டிய வழியில், இறுதிவரை போராட உறுதி ஏற்கிறோம்!
சிவப்பு அஞ்சலிகள்!

மாநில ஒருங்கிணைப்புக் குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தமிழ்நாடு.
9791653200

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க