என் சக தோழிகளுக்கும், தாய்மார்களுக்கும் ஒவ்வொரு முறையும் மாதவிடாய் உங்கள் வீட்டின் கதவுகளை தட்டும்போது உங்கள் கையில் இருக்கும் நாப்கின் அவ்வளவு எளிதாக உங்கள் கையில் வந்துவிடவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். நமது முன்னோர்கள், தங்களது மாதவிடாய் தருணங்களை மிகக் கடினமானதாகவே கடக்க வேண்டியிருந்தது.

மாதவிடாயின் கடினமான தருணங்களைக் கடக்க மரத்தூள்(தவிடு), புல், மணல், சாம்பல், கிழிந்த துணி என பலவற்றையும் பயன்படுத்தி வந்தனர். அதன் பின்னர் தான் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, சானிடரி நாப்கினை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

பண்டைய காலத்தில் பெண்களின் மாதவிடாய் பயன்பாட்டிற்கு கந்தலும் கிழசலும் (துணிகள்)  பயன்படுத்தப்பட்டது. மாதவிடாயின் போது கந்தல் துணி பயன்படுத்தப்பட்டதற்கான ஆவணப்படுத்தப்பட்ட முதல் சில சான்றுகளில் ஒன்றாக, கி.பி 4 ஆம் நூற்றாண்டில், பிரபல கிரேக்க சிந்தனையாளர் ஹைபதியா, ஒரு ஆண் அபிமானியை தடுத்து நிறுத்த  ஒரு பயன்படுத்தப்பட்ட, மாதவிடாய் இரத்தம் தோய்ந்த கந்தல் துணியை வீசினார் என்பது வரலாற்றில் பதியப்பட்டுள்ள செய்தி.

பல்லாண்டுகளுக்கு முன்னர்  சீனாவில், மணல் நிரப்பப்பட்ட துணியை சானிட்டரி பேடாகப் பெண்கள் பயன்படுத்தினர். துணி ஈரமாக இருக்கும்போது, அதில் இருக்கும் மணலினை அகற்றிவிட்டு, பின்னர் அந்த துணியை துவைத்து, அடுத்த முறை பயன்பாட்டிற்காக அதே துணியை பயன்படுத்தினார்கள்.

பண்டைய எகிப்தில் தண்ணீரில் ஊறவைத்த ‘பாப்பிரஸ்’ (ஒரு வகை கோரை புல்லால் ஆன தாள்) பயன்படுத்தப்பட்டது. பின்னர் பாசி மாதவிடாக்கான துணிக்குள் பயன்படுத்தப்பட்டது! பாசியை கொண்டுவந்து , அவற்றை ஒரு துணியுள்  மடித்து, பின்னர் தங்கள் உள்ளாடைகளுக்குள் அந்தத் துணியை பெண்கள் வைத்திருப்பர். .

ஆப்பிரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும், பெண்கள் புற்களை பேடுகளாகப் பயன்படுத்தினர். ஆனால் அது உதிரக் கசிவை தடுப்பதற்கான பாதுகாப்பான வழிமுறையல்ல. ஏனெனில் வறண்ட பகுதிகளில் கடினமானதாக புல் வளர்வதால்  சருமத்திற்கு எளிதில் காயங்களையும், தீங்கையும் விளைவித்தது.

ரோமானிய பெண்கள் ஆடுகளின் கம்பளியை உருட்டி பயன்படுத்தினார்கள். கம்பளி மிகவும் கனமானதாக இருப்பதோடு நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். இது அந்தப் பெண்களுக்கு நிச்சயமாக வேதனைக்குறியதே.

கிரேக்கர்கள் சிறிய மரத் துண்டுகளை பஞ்சு கொண்டு கட்டி பின்னர் அதை தங்கள் உடலில் செருகினர். உண்மையில் மரம் இரத்தத்தை உறிஞ்சவில்லை, ஆனால் பஞ்சு செய்தது. அதில் இருக்கும் மரத் துண்டுகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தின.

குளிர்ந்த காலநிலையில் வாழ்ந்த பெண்கள் அந்த நாட்களில் விலங்குகளின் ரோமங்களை நம்பியிருந்தனர். குளிர்ந்த பகுதிகள் பனியால் சபிக்கப்படுவதால், உயிர்வாழ்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மட்டுமே இருந்தது. ஆகவே, பெண்கள் தங்கள் உதிரப் போக்கை தடுக்க, கொல்லப்பட்ட விலங்குகளின் ரோமங்களைப் பயன்படுத்தினர்.

இவை அனைத்துமே பெண்களுக்கு சுகாதார சிக்கல்களையும், பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துபவையாகவே இருந்தன. அவை உதிரப் போக்கை ஓரளவிற்குத் தடுத்தாலும். கடுமையான அசௌகரியங்களோடு தான் அவர்களது மாதவிடாய் நாட்கள் கடந்தன.

வர்க்க சமூகத்தில் சுரண்டப்படும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் எதையும் பயன்படுத்தவில்லை. உதிரப் போக்கை மறைக்கவும் அவர்கள் கவலைப்படவில்லை. அவர்களுக்கு அதற்கான வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லை. அவர்களுக்கு மிக மோசமான சூழலே  நிலவியது.

1800-களில் பருத்தி மற்றும் கம்பளி பெருமளவில் பெண்கள் பயன்பாட்டிற்கு வந்ததன் விளைவாக, அது குறித்து சிந்திக்க அவர்களைத் தூண்டியது. 1850-களின் முற்பகுதியில் மக்கள் வணிக ரீதியாக பல்வேறு வகையான மாதவிடாய் தயாரிப்புகளை பரிசோதிக்கத் தொடங்கினர். இரத்த கசிவை உறிஞ்ச உள்ளாடைகளுக்கும் வெளிப்புற ஆடைக்கும் இடையில் ஒரு மெல்லிய அடுக்கு ரப்பரை வைக்கும் யோசனை எழுந்தது.

முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பாண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களில் உண்டாகும்  ரத்த போக்கை நிறுத்த பாண்டேஜ்களை பயன்படுத்தினர். இது இரத்தத்தை உறிஞ்சுவதால், செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தின் உதிரப் போக்கை உறிஞ்சுவதற்கு ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தார்கள். இதுவே நாம் இன்று பயன்படுத்தும் சானிடரி நப்கின்கான தொடக்கம்.

நாம் தற்போது பயன்படுத்தும் சானிட்டரி பெல்ட்டுகளுக்கு முன்னோடியாக எலாஸ்டிக் பெல்ட்டில் பஞ்சு அடைத்து இருபக்கமும் இறுக்கி பிடிக்க ஒரு கிளிப்பை அக்காலகட்டங்களில் பயன்படுத்தினர். இந்த வகையான சானிடரி பேடனது 1800-களில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 1970-ம் ஆண்டு வரை புழக்கத்தில் இருந்தது . இந்த சானிடரி பெல்டை கண்டுபிடித்தவர் ஒரு பெண் என்பது கூடுதல் சிறப்பு. அவரது பெயர் மேரி பீட்டிரிஸ் டேவிட்சன்.

இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண். சிறுவயது முதல் விளையாட்டாக இவர் கண்டுபிடித்தவை பல. இன்று நாம் எதார்த்தமாக கதவுகளில் சத்தம் வராமல் இருக்க, எண்ணெய் விடும் நடைமுறையும் இவரது கண்டுபிடிப்புகளில் ஒன்று. மேரி பீட்டிரிஸ் பெண்களின் மேம்பாட்டிற்காக  அவர்களின்  பிரச்சனையை கூர்ந்து ஆய்ந்து கண்டுபிடித்த கண்டுபிடிப்பாக சானிடரி பெல்ட் இருந்தது.

சானிடரி பெல்ட் மற்றும்  டிஷ்யூ ஹோல்டருக்கான காப்புரிமையை முதன் முதலில் பெற்றவரும் இவரே. பெல்ட்டுடன் இணைக்கப்பட்ட ஈரப்பதம் இல்லாத ஒரு துணி பையை சேர்த்து ஒரு பை போன்ற வடிவத்தில் உருவாக்கினார்.  ஆனால் சானிடரி நாப்கினில் பெஞ்சமின் பிராங்க்ளினுக்கு வரலாறு கொடுத்த இடம் மேரி பீட்டிரிஸ்சுக்கு ஏன் கொடுக்கவில்லை?

மேரி முதலில் சானிடரி பெல்ட்க்கு காப்புரிமை பெற்றபோது, ஒரு நிறுவனம் அவருடன் பேச ஒரு பிரதிநிதியை அனுப்பியது. அவர் கருப்பினத்தவர் என்பது தெரிந்ததும், அதை புறக்கணித்தது. ஆனால் மேரி துவளவில்லை. அவரின் கண்டுபிடிப்பு அவருக்கு பொருள் ஈட்டிதரவில்லை என்றாலும், யாரும் காப்புரிமையை எடுத்து நாப்கின்  உற்பத்தியை தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே இதை கண்டுபிடித்த பெருமைக்கு உரியவர். முதன் முதலில் ஐந்து கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோரி தாக்கல் செய்த கறுப்பின பெண்ணும் இவரே.

மேரி பீட்ரைஸ் டேவிட்சன் முதல் தலைமுறை பயன்படுத்தும் இந்த சானிட்டரி பெல்ட்டை  கண்டுபிடித்தது பெண்களின் தேவையில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. இந்த பெல்ட்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை உலகளவில் பயன்பாட்டில் இருந்தாலும் அது ஏழை எளியவர்களின் கைக்கு கிடைக்காது போனது.

“சேனிட்டரி பேட்”களை வணிகமயமாக்குவதற்கான முயற்சிகளை 1888-ம் ஆண்டில் சவுதல் பேட்(Southall Pad) என்ற தயாரிப்பு  நிறுவனம் மேற்கொண்டது. இதேபோல், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 1890-களில் லிஸ்டரின் டவல் (Lister’s Towel): லேடிஸ் சானிட்டரி டவல்ஸ் என்ற ஒன்றை உருவாக்கியது. இந்நிறுவனங்கள் மேற்குலக நாடுகளை மட்டுமே கவனம் செலுத்தினர். இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்கால சானிட்டரி பேட்களுக்கு மிக நெருக்கமான முன்மாதிரி 1921-ம் ஆண்டில் காட்-டெக்ஸ் பேடு அமெரிக்க சந்தைகளில் நுழைந்தது.  முதலாம் உலக போரில் காயமடைந்த வீரர்களுக்குப் பயன்படுத்தப்படும் பருத்தி-அக்ரிலிக் கலவையுடன் உறிஞ்சக்கூடிய கட்டுகள், அவர்களின் மாதவிடாய் ஓட்டத்தை சமாளிக்க உதவும் என்பதை செவிலியர்கள் உணர்ந்தபோது அதே உபகரணம் பின்னர், காட்-டெக்ஸ் (Cotton-Texture) – (COT-TEX) என அறிமுகப்படுத்தப்பட்டது,

நீண்ட காலமாக, பேடுகள் சில்லறை விற்பனை என்றாலும் அது ஒரு  உயர் வர்க்க பெண்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஏனென்றால் மற்றவர்கள் அவற்றை வாங்க முடியாத நிலை. காரணம் அதன் விலை அதிகமாக இருந்தது. 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் நிலை  இப்படித்தான் இருந்தது.

இந்தியாவிலும் இன்றளவும் இதே நிலைமை தான்.  இந்தியாவில், 12  சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி பேட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஏ.சி. நீல்சனின் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இன்றும் மணல் மற்றும் இலைகள் போன்ற பாதுகாப்பற்ற பொருட்களைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை இந்தியாவில் இன்றும்  உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, அமிர்தசரஸில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மணல் நிரப்பப்பட்ட சாக்ஸை பேட்களாகப் பயன்படுத்துகின்றனர் என்பதும் இது பெரும்பாலும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற மருத்துவ பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் தெரியவருகிறது.

படிக்க :
♦ ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
♦ பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

இன்றும் இந்திய குடும்பங்களில்  மாதவிடாய்  பேசுபொருளாக இருப்பது இல்லை. அது எதோ தீட்டாக பார்ப்பது அல்லது பெண்களின் பிரச்சினை என்று மட்டுமே அணுகும் போக்கு தான் நிலவுகிறது. நவ நாகரீகப் பெண்ணாக இருந்தாலும் நாம் பயன்படுத்தும்  நாப்கின், கருப்பு பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டுதானே கடைகளில் தரப்படுகிறது ?

அடுத்த முறை கடைக்கு செல்லும் போது கருப்பு பிளாஸ்டிக் கவர் இல்லாமல் வாங்குங்கள். அது மறைக்கும் பொருளும் அல்ல; மறைக்க வேண்டிய தேவையுமில்லை.

சிந்துஜா 

சமூக ஆர்வலர்.