பெண்கள் வேலைக்கோ அல்லது வெளியில் செல்லும்போதோ அணிவதற்கு வசதியாக இருக்கும் காரணத்திற்காக முழுக் கால்சட்டை (பேண்ட்) அணிந்து சென்றால் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?
என்ன? பேண்ட் அணிந்தால் அபாரதமா?
இந்தக் கேள்வியை இன்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். ஆனால், நீண்ட காலத்திற்கு முன்பு இது ஆச்சரியப்படும் விசயம் அல்ல. லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் எப்படி அபராதம் என்பது இன்று இயல்பானதோ அப்படித்தான் அன்று பெண்கள் கால்சட்டை அணிந்து வெளியே சென்றால் அபராதம் விதிக்கப்பட்டது. எங்கு தெரியுமா ?
முன்னேறிய நாடு என பீற்றிக் கொள்ளப்படும் அமெரிக்காவில் 1938-ம் ஆண்டு வரை பெண்கள் பேண்ட் அணிந்ததற்காக அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு வரை பிரான்சில் “ஆண்களைப்போல உடை” அணிவது சட்டநுட்ப ரீதியாக சட்டவிரோதமானதே. (ஆனால் நடைமுறையில் அவ்விதிகள் அமல்படுத்தப்படவில்லை). எனவே, ஆடை சமத்துவத்திற்காக, பெண்கள் தங்களது வசதிக்காக உடை அணியப் போராடிய பெண்களைக் கௌரவிக்க சிறிதுநேரம் ஒதுக்குவோம்.
வரலாற்றுப் போக்கில், கால்சட்டைகள் பல பெயர்களில் – ஸ்லாக்ஸ் (Slacks), கால் சட்டை (Trousers), பாண்டலூன்கள் (Pantaloons), ப்ரீச்சர்கள் (Breechers) மற்றும் நிக்கர் போக்கர்ஸ் (Knickerbokers) – அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றன.
கால்சட்டை (பேண்ட்) முதலில் தோன்றியதன் காரணம் அதன் வசதிதான். அதனால்தான் அது இன்னமும் நடைமுறையில் நீடித்துக் கொண்டிருக்கிறது. கால்சட்டைகள், கால்களைப் பாதுகாப்பதோடு அல்லாமல் அணிந்திருப்பவர் தனது வேலையை தங்குதடையின்றி செய்ய உதவுகிறது.
தொழில் வளர்ச்சி ஏற்பட்ட பின்னர், பெண்கள் பணிக்குச் செல்லும் காலகட்டத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற இடங்களில் உள்ள பெண்களுக்கு ஆடை சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைக்கு வசதியான ஆடையாக பேண்ட் இருந்தது. அதை அணிவதற்கு இருந்த கட்டுப்பாடுகள், அவர்களது அதிகாரம், சமத்துவத்துக்கு எதிராகவும், உடல், சமூக மற்றும் தார்மீக ரீதியான கட்டுப்பாடுகளாகவும் இருந்தது.
படிக்க :
ரவிக்கையின் ‘பாரம்பரியமும்’ சாதிய வர்க்க பாகுபாட்டு வரலாறும் | சிந்துஜா
நைட்டி : தேசங்கள் கடந்த பெண்களின் பொது உடை || சிந்துஜா
கால் சட்டை அணிந்த பழங்கால பெண்கள்
பண்டைய சீனாவில் உழைக்கும் பிரிவு ஆண்களும், பெண்களும் பொதுவாக கால்சட்டை அல்லது லெக்கின்ஸ் போன்ற கால்சட்டைகள் அணிந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில், கி.மு. 400-களின் பிற்பகுதியில் வர்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்களின் மீது பெண் போர் வீரர்கள் கால்ச்சட்டை அணிந்திருப்பதைப் போன்ற சித்திரங்களைக் காண முடிகிறது.
பண்டைய கிரேக்கத்திற்கு அருகிலுள்ள ஆரம்பகால நாடோடிகள், கரையோர மக்கள் மற்றும் சித்தியன்ஸ் (Scythians) பழங்குடியினர் போன்றவர்கள் பொதுவான உடையாக பேண்ட் இருந்திருக்கிறது. சித்தியன்ஸ் என்பது பண்டைய நாடோடி பழங்குடியினரின் குழுவாகும். தற்போதைய தெற்கு சைபீரியா பகுதியில் அன்று அவர்கள் வாழ்ந்தனர். அதன் பிறகு கி.மு. 900 முதல் கி.மு. 200 வரை அவர்களின் கலாச்சாரம் செழித்தது; அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் செல்வாக்கை மத்திய ஆசியா முழுவதும் நிறுவி சீனாவின் வடக்குக் கருங்கடல் பகுதி வரை விரிவுபடுத்தினர்.
படம் 1 : 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதரால் குதிரைசவாரி செய்ய பயன்பட்ட முதல் பேண்ட் ; படம் 2 : பண்டைய கிரேக்க அட்டிக் ஒயிட்-கிரவுண்ட் அலபாஸ்ட்ரான் Attic white-ground alabastron, c.), கிமு 470, பிரிட்டிஷ் அருங்காட்சியகம், லண்டன்
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட கால்ச்சட்டைகளின் பழமையான ஜோடி, கி.மு. 1200 முதல் கி.மு. 900-க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. மேற்கு சீனாவின் டர்ஃபான் சோலைக்கு (Turfan oasis) அருகில் உள்ள யாங்காய் கல்லறையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதில் M21 மற்றும் M157 கல்லறைகளில் கம்பளி கால் சட்டையின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை கி.மு. 13 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் தெரியவருகிறது. இது சித்தியன்ஸ் நாகரிகத்திற்கு முந்தையது எனவும் மேய்ச்சல் நகர்வால் (Mobile pastoralism) கிழக்கு மத்திய ஆசியாவில் பரவிருக்கலாம் எனவும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1700-களில் ஹன்னா ஸ்னெல் (Hannah Snell) போன்ற மிக பிரபலமான பெண்கள் உட்பட பல கடற்சிப்பாய்கள் கால்சட்டை அணிந்து தங்களது அடையாளங்களை மறைத்து ஆண்களுடன் அவர்கள் போரிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெகு காலத்திற்குப் பிறகு, கி.பி. 1861 முதல் கி.பி. 1865 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுப் போரில் பங்கேற்ற பெண்கள் கால்சட்டை அணிவிக்கப்பட்டு ஆண்களாக காட்சிப்படுத்தப்பட்டனர்.
படம் : க்ரினோலின் வரலாறு, விக்டோரியன் பேஷன் ஆடை.The History of Crinoline, the Victorian fashion garment.
வரலாற்று ரீதியாக, அமெரிக்காவில் பெண்களின் ஆடைகள் அனைத்தும் உடல் கட்டமைப்பை வெளிக் காட்டுவதிலும், அவர்களைக் கட்டுப்படுத்துவதிலுமே இருந்ததால், பெண்கள் எந்தவித செயல்பாடுகளுடனும் தொடர்பற்றவர்களாக இருத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
கோர்செட்டுகள் (corsets), கிரினோலின்கள் (crinolines) மற்றும் எஃகு வளையங்களை (steel hoops) பற்றி நினைத்துப் பாருங்கள்.  நாகரிக ஆடைகளாக பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆடைகள் முற்றிலும் ஆபத்தானவை. பெண்களுக்காக உருவாக்கப்பட்ட  கோர்செட்டுகள் இடுப்பு வளைவுகளில் இறுக்கமாக இருக்கும். கிரினோலின்கள் மேலும் அதிக எரிச்சலை உண்டாக்கும். பெண்களின் கிரினோலின்கள் தீப்பிடித்தால் அவற்றை அகற்ற முடியாதபடி, பல அடுக்குகளுடன் ஓரங்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இப்படித்தான் பெண்களை முடக்கிவைக்கும் விதமான ஆடைகளே அமெரிக்காவில் பிரதானமாக வலம்வந்தன.
1850 – 1920
1850-களின் மத்தியில், பெண்கள் உரிமை ஆர்வலர்கள் பலர் பிரபலமடைந்தனர். அமெலியா ஜென்க்ஸ் ப்ளூமர் (Amelia Jenks Bloomer) எனும் பெண்ணியவாதி தனது செய்தித்தாளில் ஆடையின் சுதந்திரத்தையும் வசதியையும் ஊக்குவித்து எழுதியுள்ளார்.
படம்1 : பால் பொய்ரெட் வடிவமைப்புகள் Paul Poiret’s designs படம் 2: மார்லின் டீட்ரிச் Marlene Dietrich
அமெலியா ப்ளூமர், தி லில்லி (The Lily) என்ற மாதமிருமுறை  பத்திரிகையை வெளியிட்டார். இதில், நிதானம் (Temperance) மற்றும் பெண்களின் பிரச்சினைகள் (women issues) குறித்த தனது கருத்துக்களை எழுதி வந்தார்.  அதோடு பெண்ணியவாதி மற்றும் வாக்குரிமையாளரான எலிசபெத் கேடி ஸ்டாண்டனும் (Elizabeth Cady Stanton) தி லில்லிக்கு கட்டுரைகளை எழுத தொடங்கினார். .
அமெலியா ப்ளூமர் தனது காலத்தில் வழக்கத்தில் இருந்த, பாரம்பரிய பாணி ஆடைகளைக் காட்டிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு ஆடை பாணியை ஆதரித்தார். கோர்செட்டுகள், உள் பாவாடைகள் மற்றும் தரை நீளப் பாவாடைகளை கேள்விக்கு உட்படுத்தினார். பெண்கள், தனது அன்றாட உடல் செயல்பாடுகளில் ஈடுபடவும், உடற்பயிற்சி செய்யவும் ஏற்ற சௌகரியமான ஆடையையே தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற இவரின் குரல் முக்கியமானது.
எலிசபெத் ஸ்மித் மில்லர் (Elizabeth Smith Miller), கால்சட்டை அணிந்த முதல் நவீன பெண்மணியாகக் கருதப்படுகிறார். மில்லர் வாக்குரிமை பெற்றவர். 1800-களில் அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பெற உதவுவதே அவரது குறிக்கோளாக இருந்தது.
ஆடை சீர்திருத்தம் ஆரம்பக் காலப் பெண்களின் உரிமை ஆர்வலர்களிடையே (women’s rights activists) குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தது. அன்றைய நாகரிகம் எனச் சொல்லப்பட்ட கட்டுப்பாடான ஆடைகளை பெண்கள் அணியவேண்டும் என்ற வரையறைக்கு எதிரான கிளர்ச்சி உருவானது. இது ஒரு நடைமுறை தேவையாகவும் சமூக சீர்திருத்தத்தின் மைய புள்ளியாகவும் இருந்தது. “புளூமர்” ஆடையை பெண்கள் உரிமைகள் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் சில காலம் அணிந்திருந்தனர். அது பலமுறை மாற்றப்பட்டது. இறுதியில், அவற்றின் மீதான விமர்சனத்திற்கு பிரபலமான பத்திரிகைகள் கவனம் செலுத்தியதால், அது கைவிடப்பட்டது.
நியூயார்க் பொது நூலகத்தின் எலிசபெத் ஸ்மித் மில்லர் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட, ஆடை சுதந்திரம் குறித்த அவரது விளக்கம் பின்வருமாறு :
“I am asked to give a statement of my experience in adopting wearing, and abandoning the short skirt.”; “’The question is no longer how do you look, but woman, how do you feel?”
”உடைகள் அணிவது மற்றும் குட்டைப்பாவாடைகளைக் கைவிடுவது ஆகியவை குறித்த எனது பார்வையைக் கூறுமாறு கேட்கின்றனர்.”; “பெண்களே, கேள்வி நீங்கள் எப்படிக் காட்சியளிக்கிறீர்கள் என்பது பற்றியல்ல ! ஆனால். நீங்கள்  எவ்வாறு உணர்கிறீர்கள்? என்பதைப் பற்றியது” என்றார்.
1851-ல் ஒரு நாள் தோட்டத்தில் வேலை செய்யும் போது, தனது துருக்கிய பாணி பேண்ட்-ஐ முதலில் உருவாக்கியதாகக் கூறுகிறார், எலிசபெத் மில்லர். அவை பாவாடையின் கீழ் கணுக்காலில் குறுகி, அணிந்திருந்த நீண்ட பேக்கி பேண்ட்டுகள்.
இந்த ஆரம்பகாலக் காலுறைகள் ‘விக்டோரியன்’ உடையில் எதிர்பார்க்கப்படும் ‘கண்ணியத்தைப்’ பாதுகாக்கும் அதேவேளையில் பெண்களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையிலும்  வடிவமைக்கப்பட்டுள்ளன. மில்லர் இந்த பாணியிலான கால்சட்டையை அறிமுகப்படுத்திய பிறகு அவர், இவ்வகை கால்சட்டையை தனது உறவினரான எலிசபெத் கேடிஸ்டாண்டனுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் அவர் தனது அண்டைவீட்டாரான அமெலியா ஜென்க்ஸ் ப்ளூமருடன் பகிர்ந்து கொண்டார்.
முக்கிய ஊடகங்களில் இவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அக்காலகட்டத்தில் பெண்கள் உரிமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட பெண்கள் பெரும்பாலானோர் கால்ச்சட்டை அணிந்திருந்தனர்..
மில்லர் தனது நடவடிக்கைகளால் கவனத்தைப் பெற்றார் என்றாலும்கூட கால் சட்டை அணிந்த முதல் நவீன மேற்கத்திய பெண் ஃபேனி ரைட் (Fanny Wright) என்பவரே ஆவார்.
படம் : ஃபிரான்சஸ் கிளேட்டன் உள்நாட்டுப் போரில் போரிடுவதற்காக தன்னை “பிரான்ஸ் கிளாலின்” போல் மாறுவேடமிட்டுக் கொண்டார். (காங்கிரஸ் நூலகம்)
ஃபேனி ரைட் ஒரு ஸ்காட்லாந்துப் பெண். அவர் 1825-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். அவர் ஒரு எழுத்தாளர், பெண்ணியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக அறியப்படுகிறார். ரைட், ஃப்ரீ இன்க்வைரர் (Free Inquirer) என்ற செய்தித்தாளின் இணை நிறுவனர் ஆவார். அவர் சமூகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை அதில் பகிர்ந்து கொண்டார்.
1820-களில் அவரது இளம்வயதில் ரைட், நியூ ஹார்மனி என்ற சோசலிச கம்யூனில் வாழ்ந்தார். அங்கு அவர் தளர்வான ரவிக்கைகள் மற்றும் முழங்கால்கள் வெட்டப்பட்ட ஆடைகளுடன் கணுக்கால் நீளமுள்ள பாண்டலூன்களை அணிந்தார்.
ரைட், மில்லர் மற்றும் ப்ளூமர் போன்ற பெண்கள் பெண்களின் உரிமைகளுக்காக தமது வலுவான கருத்துக்களால், சமத்துவ இயக்கத்தை முன்னெடுத்தனர். இருப்பினும், பெண்கள் கால்சட்டை அணிந்திருப்பது, பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாகவே இருந்தது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சைக்கிள் உலகம் முழுக்க பிரபலமடைய தொடங்கியது. அப்போது அங்கு பெண்கள் சைக்கிள் ஓட்டத் தடை செய்யப்பட்டு இருந்தது. அதுவும் அது பெண்ணின் உடல் சார்ந்த இலக்கணமாக மதப் போதனைகளாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதிலும் மதப்போதனையில் சைக்கிள் பற்றி பல இடங்களில் “Bicycle run for Satan”  “the bicycle is the devil’s advocate agent morally and physically ” என கூறப்பட்டது. அதாவது, “சைக்கிள் சைத்தானுக்கான வாகனம்”, “தார்மீகரீதியிலும், எதார்த்தத்திலும் சைக்கிள் ஒரு எதிர்நிலை சக்தி” என்று கூறப்பட்டது.
இதில் இன்னொரு விஷயம் மேலும் பெண்களைக் கேலிக் கூத்தாக்கிறது. திருமணமான பெண்கள் குறிப்பாக தாய்மை விரும்பும் பெண்கள் சைக்கிள் ஓட்டக் கூடாது என்பது போன்ற கட்டுக்கதைகளையும் மத நிறுவனங்கள் பரப்பின.  இப்படியாக பெண்கள் கைக்கு சைக்கிள் சென்றால் அவர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதில் மதகுருமார்கள் தெளிவாக இருந்தனர்.
ஆண்களுக்கான வகையில்  இடைக்கம்பியுடன் வடிவமைக்கபப்ட்ட சைக்கிளை பெண்கள் ஓட்டுவதற்குத் தடையாக அவர்களது உடை இருந்தது. பாவாடை வகையிலான உடைகள் சைக்கிளை ஓட்டுவதற்குத் தடையாக இருந்தன. இதனைத் தகர்த்தெறியும் வகையில் ஆடைப் புரட்சி (Rational Dress Reform) சைக்கிள் ஓட்டுவதற்கு ஏற்ற உடையை பெண்களுக்கு வழங்கியது. முழுக் கால்ச்சட்டையின் வரவு பெண்களுக்கு சைக்கிளைப் பயன்படுத்து வாய்ப்பை வழங்கியது. அதன் மூலம் அவர்களை சுதந்திரமாக உணரச் செய்தது.
1911-ஆம் ஆண்டில், பால் பொய்ரெட் (Paul Poiret) என்ற ஒரு பிரெஞ்சு ஆடை வடிவமைப்பாளர், “ஜூப் குலோட் (jupe culotte)” என்ற ஆடையை அறிமுகப்படுத்தினார். 1918-ல், லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) என்பவர் ஃப்ரீடம் – ஆல்ஸ் (Freedom-Alls) என்ற ஆடையை உருவாக்கினார்.
முதலாம் உலகப் போரிலிருந்து பெண்களுக்கு தனது ஆடை சுதந்திரத்தை தேர்ந்தெடுக்க உரிமை இருந்தது. இந்த நடைமுறை உலகில் வெற்றியும் பெற்றது. 1920-களில், லெவி ஸ்ட்ராஸ் (Levi Strauss) பெண்களுக்கு தனித் தனியாக கால் சட்டைகளை அறிமுகப்படுத்தினார்.
1930 – 1970
1930-களில், மார்லின் டீட்ரிச் (Marlene Dietrich) மற்றும் கேத்தரின் ஹெப்பர்ன் (Katharine Hepburn) போன்ற திரை நட்சத்திரங்கள் பெண்கள் பேண்ட் அணிவதை யதார்த்தமாக்க முயன்றனர். இருந்தும் கூட, சமூகம் அதை ஏற்றுக்கொள்வதில் இருந்து வெகுதொலைவில் இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பணிபுரியும் பெண்கள் உடுத்திய கால்சட்டை உடை, பின்னர்  ஃபேஷனாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1950-களில் கால்ச்சட்டை இயக்கம் (trouser movement) மீண்டும் தனது அடையாளங்களை இழக்கத் தொடங்கியது. கிறிஸ்டியன் டியரின் (Christian Dior’s) நிறுவனம் ‘நியூலுக் (New Look)’ என்ற பெயரில் பெண்களுக்கான பாவாடைகளை மீண்டும் பிரபலப்படுத்தியது. அதன்பின் பெண்கள் இந்த ஆடம்பரமான ஆடையை நோக்கி செல்லத் தொடங்கினர். அதன் விளைவாக இளம் பெண்களிடம் இருந்த பேண்ட், பழைய நாகரிகமாக (Old Fashion) மாறியது.
இன்று கால்ச்சட்டை அணியும் பெண்கள், அதை இயல்பானதாகப் பார்க்கின்றனர். ஆனால் இயல்பைத் தாண்டி கால்ச்சட்டை அணிவது என்பது பெண்ணுக்கான அதிகாரம், சக்தி, இன்னும் சொல்லப்போனால் அது ஒரு அரசியல். நாம் ஒரு உடை என்ற வகையில் கால்ச்சட்டையை அணிவதை விட நாம் எதற்காக அணிகின்றோம், எதற்காகக் கொண்டாடுகிறோம் என்பதில்தான் நமது புரிதல் மட்டம் அடங்கியிருக்கிறது. இங்கு ஆணின் ஆடை மிடுக்குத்தனம், மரியாதை, தைரியம் ஆகியவற்றின் அடையாளமாகக் காட்டப்படுகிறது.
பெண்களுக்கான கலாச்சார உடைகளாகக் கூறப்படுபவை அவர்களின் செயல்பாட்டை ஒடுக்குபவைகளாக இருக்கின்றன.
படிக்க :
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
புடவை கடந்து வந்த பாதையும் அது சார்ந்த போராட்டங்களும் ! || சிந்துஜா
அடுத்தமுறை, பெண்கள் பேண்ட் அணியும்போது நினைவில் கொள்ள வேண்டியது, இதற்காக இங்கு எத்தனைப் பெண்கள் போராடி இருக்கிறார்கள் என்பதையும் அவர்களது போராட்டத்தையும் ஆகும். அடிப்படை உரிமையான ஆடையை அணிந்ததற்காக கைது செய்யப்படுவது, இன்று கேலிக்குரியதாகத் தெரியலாம். ஆனால், வரலாற்றில் அவ்வளவு சாதாரணமாக இந்த பேண்ட் நம்மிடம் வந்துவிடவில்லை.
ஆடைகள் என்பது நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம், உலகம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும், நமக்கு எந்த அளவிற்கு வசதியாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக வேண்டும். எனவே, அடுத்தமுறை நீங்கள் ஒரு ஜோடி பேண்ட்டை அணியும் போது, அதன் முக்கியத்துவத்தையும், தனித்தன்மையும் கருத்தில் கொள்ளுங்கள். அதனை அணியும் உரிமைக்காக போராடிய பல பெண் போராளிகளை நினைவில்கொள்ளுங்கள்..
சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

3 மறுமொழிகள்

  1. ஆசிரியர் அவர்களுக்கு,

    //வெகு காலத்திற்குப் பிறகு, கி.பி.400 முதல் கி.பி.750 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க உள்நாட்டுப் போரில் பங்கேற்ற பெண்கள் கால்சட்டை அணிவிக்கப்பட்டு ஆண்களாக காட்சிப்படுத்தப்பட்டனர்//

    இப்படி ஒரு வாக்கிய தொடர் வருகிறது இதில் காலத்தை சொல்லும் போது கி.பி 400 முதல் 750 வரை என்று வருகிறதே இது சரியான காலம் தானா?…

    • சுட்டிக் காட்டியமைக்கு நன்றி அப்துல் காதிர். கட்டுரையில் குறிப்பிடப்படும் காலம் தவறானது தான். தவறுக்கு வருந்துகிறோம். இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்கிறோம். இந்தத் தவறையும் திருத்தி விட்டோம் நன்றி !

  2. தவறுக்கு வருந்துகிறேன் அப்துல் காதர் . கண்டிப்பாக இனிமேல் தவறுகளை தவிர்க்க முயல்கிறேன். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க