ரசும் ஆளும் வர்க்கங்களும் நெருக்கடிகளில் சிக்கி, மக்களிடம் அம்பலப்பட்டு அதிருப்திக்கு ஆளாகும் போதெல்லாம் அவர்கள் பின்பற்றும் முக்கியமான தந்திரம் முதன்மையான விசயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வேலைகளைச் செய்வதுதான். பொய் செய்திகளை பரப்புவது, தேசியவெறி – போர்வெறி ஊட்டுவது போன்ற நடவடிக்கைகள் மூலம், ஊடகங்களின் துணை கொண்டு ஆளும்வர்க்கம் திசைதிருப்புகிறது.

படிக்க :
சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்
வர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் !!

இத்தகைய ஆளும் வர்க்கச் சேவையில்,  நாங்கள்தான் “தமிழில் நம்பர் 01 நாளிதழ்” என்று பறைசாற்றுகிறது 04.06.2021 தேதி தினகரனில் வெளிவந்துள்ள “ராஜதந்திரம் தேவை” என்ற தலையங்கம்.

“கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றிய வைரஸ் இல்லை. சீனாவால் திட்டமிட்டு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது” என்ற அமெரிக்காவின் நிரூபிக்கப்படாத சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை உண்மை போல சொல்லும் வேலையைச் செய்திருக்கிறது தினகரன்.

“கொரோனா வைரஸ் இயற்கையாகத் தோன்றியதா அல்லது சீனா ஆய்வகத்தில் உருவானதா என்ற கேள்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது. உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது.” என்று எழுதி, கொரோனா குறித்து நிலவும் சந்தேகத்தில், கொரோனா இயற்கையான உருமாற்றத்தினால் வந்ததுதான் என்று தற்போதுவரை அங்கீகரிக்கப்பட்ட கூற்றை பொய் என்றே கூறிவிட்டது. அதாவது உண்மை மறைக்கப்பட்டிருக்கிறதாம். அது விரைவில் வெளி வந்துவிடுமாம்.

கொரோனா என்பது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாகத் தோன்றியதுதான் என்று சீனாவில் ஆய்வு மேற்க்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு விளக்கம் கொடுத்துவிட்டது. ஆனாலும், தற்போது வரை சீன எதிர்ப்பு பிரச்சாரம் தொடர்கிறது.

அதற்கு காரணம், தனது அரசியல்-பொருளாதார மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்துவதற்காகவும் கொரோனா பெருந்தொற்றை கையாளும் விசயத்தில் அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பவும் அமெரிக்காவிற்கு அது தேவைப்படுகிறது. இத்தகைய சீன வெறுப்புப் பிரச்சாரத்தில் டிரம்ப், பைடன் இருவரது நிர்வாகத்துக்கும் கொள்கை வேறுபாடில்லை.

சீனாவின் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாகியது என்ற கூற்றிலேயே இருபிரிவினர் இருக்கின்றன. சீனாவின் ஆய்வகத்தில், சீனா நடத்திய உயிரி ஆயுத பரிசோதனையில் இருந்து வெளியானதுதான் இந்தக் கொரோனா வைரஸ் என்று ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பினர், பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பாக நிதி வழங்கப்பட்டு, சீனாவின் ஆய்வகத்தில் அவுட்சோர்சிங் முறையில் அமெரிக்கக் குழுவினரால் நடத்தப்பட்ட உயிரி ஆயுத பரிசோதனையில் தான் இந்த வைரஸ் உருவானது என்று கூறப்படுகிறது. இவை எதுவும் ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்படாத சூழலில், சீனா தான் இந்த கொரோனா வைரஸை உருவாக்கி பரப்பியது என்று தீர்ப்பெழுதியிருக்கிறது தினகரன் நாளிதழ்.

அமெரிக்காவின் பரம விசுவாசியான மோடி அரசோ, கடந்த ஆண்டு ஊரடங்கை தீடீரென்று அறிவித்து புலம்பெயர் தொழிலாளர்களை பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடக்கவைத்து அவர்களை பட்டினியில் கொன்றது. ஊரடங்கு காலத்தில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், ஊரடங்கைக் கொண்டு மக்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தியது. கொரோனா ‘நிவாரணத் தொகுப்பு’ என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் கல்லா பெட்டியை நிரப்பியது.

இதுபோன்ற தனது மக்கள் விரோத – கார்ப்பரேட் ஆதரவு நடவக்கைகளின் விளைவாக வெடித்தெழும் மக்களின் கோபத்தைத் தடுப்பதற்காக “எல்லாவற்றுக்கும் சீனாதான் காரணம், அதுதான் கொரோனாவை பரப்பியது” என்று சங்க பரிவார கும்பல்களைக் கொண்டு பிரச்சாரம் செய்தது. அதற்குத் துணையாக பல ஆளும் வர்க்க செய்தி ஊடகங்களும் இருந்தன.

அதேபோலத்தான் தற்போது இரண்டாம் அலையிலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூசி ஏற்றுமதியை அதிகரித்து கார்ப்பரேட்டுகளுக்குச் சேவகம் செய்ததன் காரணமாக உள்நாட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

தடுப்பூசியிலும் பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் என்ற இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை ஏகபோகமாக வளரச் செய்வதற்கு தகுந்தாற் போல் தடுப்புசிக் கொள்கையை வடிவமைத்தது; ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை மாநில அரசுகளிடம் தள்ளிவிட்டுவிட்டு தான் தப்பித்துக் கொண்டது போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் எண்ணற்றோர் பலியாகியிருக்கிறார்கள்.

இரண்டாம் அலையில் மாநில அரசாக உள்ள திமுக அரசு, முந்தைய அதிமுக அரசை ஒப்பிடுகையில் பல்வேறு முயற்சிகள் எடுத்துக் கட்டுப்படுத்தி வரும் நிலையிலும், மாநிலம் முழுவதும் பல்வேறு சிகிச்சைக் குளறுபடிகள் தொடர்கின்றன. அரசு மருத்துவமனைகளில் நிலவும் விட்டேத்திப் போக்குகள் முதல் தனியார் மருத்துவமனைகளில் நிலவும் கட்டணக் கொள்ளை வரை, அன்றாடம் நிகழும் நிகழ்வுகளாகிவிட்டிருகின்றன.

நோயாலும், பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்ததாலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசின் மீது நிலவும் எதார்த்தமான கோபத்தை மடைமாற்றும் வேலையைச் செய்ய போர் வெறியையும் தூண்டத் தயாராக இருக்கிறது தினகரன்.

“தனியாக நின்று சீனாவை எதிர்க்க முடியாது. அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து செயல்பட்டால் சீனாவுக்கு நிச்சயம் கடிவாளம் போட முடியும்” “சீனாவை எதிர்க்கவும் அடாவடியை தடுக்கவும் இதுவே சிறந்த தருணம்” என்று அமெரிக்க ஆளும் வர்க்கங்களுக்கு ஆலோசனை கூறும் தினகரன்  கடைசியாக மோடி அரசிடம் வைக்கும் வேண்டுகோள்தான் முக்கியமானது.

“இந்தியாவுக்கு சீனா எக்காலத்திலும் நண்பனாக இருக்க வாய்ப்பில்லை. எனவே சீனாவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும். இவ்விஷயத்தில் ராஜதந்திர முறையில் செயல்பட வேண்டியது பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது” என்று சொல்லி தனது தலையங்கத்தை நிறைவு செய்கிறது.

கொரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்பில் உள்ள  பிரச்சினைகளிலிருந்தும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலிருந்தும் மக்களுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மீது ஏற்படும் அதிருப்தியை தேசிய வெறி மூலம் மட்டுப்படுத்தும் வேலையைச் செய்வதில், சங்க பரிவார ஊடகங்களோடு இணைந்து பயணிக்கிறது தினகரன்.


பால்ராஜ்
செய்தி ஆதாரம்: தினகரன் (04.06.21)

3 மறுமொழிகள்

 1. தினகரனின் இந்தக் குறிப்பிட்ட தலையங்கத்தை மக்கள் யாருக்கும் படிக்க நேரமில்லை. மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கண்டு கொள்ளாத தலையங்கத்தை நாம் ஏன் விளம்பர படுத்த வேண்டும் ?
  – மருது பாண்டியன் –
  பத்திரிகையாளர் ( உசிலம்பட்டி )

 2. பத்திரிக்கை படிக்கும் ///மக்கள் பெரும்பாலானவர்கள் படிக்க நேரமில்லை/// என்பதை தாங்கள் எப்படி சொல்கிறீர்கள். இன்னொன்று இக்கட்டுரை இங்கே தினகரனை, அதன் தலையங்கத்தை விளம்பரப்படுத்தவில்லை. மாறாக, அதன் ஆளும் வர்க்க அடிவருடித்தனத்தை, மக்களிடையே தேசவெறியை கிளப்பிவிட்டு திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவதை தோலுரிக்கிறது.

  இன்னொன்று நீங்கள் சொல்வதுபோல, ஒருவேளை பெரும்பாலோர் கண்டுகொள்ளாதா தலையங்கமாகவே இது இருந்தாலும், இதன் மேற்கண்ட நடவடிக்கைகளை, நோக்கத்தை அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதுதானே.

  இதை அலட்சியமாகப் பார்ப்பது தவறு மருது பாண்டியன்.

 3. THINAKARAN PATHIRIKAI ROMBA MOSAM.THALAIYANGATHA PATHI PESALA INTHA PATHIRIKAI NAMMA TAMIL MOZHIYEI EVALAVU KEVALAMA ELUTHURANGANU SOLLA VAREN.DAMAALU DUMILOO NU SAGATTU MENIKU AANGILAM KALANTHA TAMIL SEITHIGALAI POTTU NAMMA SONTHA MOZHIYE MARANTHU VIDUM POLA ANTHA MATHIRI EZHUTHURANGA ROMBA MOSAM.ORU MOZHIKI ATHAN EZHUTHU VADIVA VARTHAIGAL ROMBAVE MUKIYAM ANA IVANGA AVLO KEVALAMA EZHUTHURANGA.IVANGA MATTUM ILLA IVANGA SUN NEWS UM ATHAITHAN PANRANGA.ORU VISAYTHAI AVANGA SOLRATHUTHAN NIJAMNU NAMMA NAMBURA ALAVUKU NEWS HIGH LIGHT PANNI PANNI NAMMALA NAMBA VAKIRATHULA THINAKARANAIYUM SUN NEWS YUM ADICHIKAVE MUDIYATHU.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க