பத்திரிகை செய்தி

14.06.2021

மோடி அரசின் ரூபாய் 50 ஆயிரம் மாத நிதி பிற்போக்கு இலக்கியவாதிகளை ஊக்குவிப்பதற்காகவா !

முதல்கட்ட கொரோனா ஊரடங்கின் போது நடன, நாடக கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் மிகவும் பொருளாதார ரீதியில் துன்புற்றனர். தற்போது இரண்டாம் கட்ட கொரோனா அலையில் அவர்கள் தங்களின் துயரங்களை அரசுக்கு தெரிவிக்கும் வண்ணம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி பல இடங்களில் போராட்டம் செய்தனர்.

நிவாரண நிதியாக மாதம் ரூபாய் 10,000 என வருடம் முழுவதும் கொடுக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக முன்வைத்தனர். ஆனால் இதுவரையில் அவர்களது கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

படிக்க :
♦ கொரோனா பேரிடியால் வாழ்விழந்த நாடக, நாட்டுப்புற கலைஞர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள் || ம.க.இ.க. செய்தி !!
♦ வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!

தற்போது மோடி அறிவித்திருக்கும் இலக்கியவாதிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பது இந்துத்துவத்தை ஆதரிக்கின்ற இலக்கியவாதிகளை மட்டுமே வாழச் செய்யும் வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிற இலக்கியவாதிகளை அங்கீகரிக்காமல் புறந்தள்ளி அவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா இரண்டாம் அலையில் உலகமே உயிரிழப்பில் அதிர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் திருவாளர் மோடியின் ஆசிபெற்ற பார்ப்பனியத்தின் அடிவருடியான யோகி ஆதித்யநாத்தின் உ.பி-யில், கொரோனாவுக்கு யாரும் பயப்பட வேண்டாம். ஆங்கில மருந்துகளை யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக மாட்டு கோமியத்தை குடித்துக் கொண்டு உடல் முழுவதும் மாட்டுச் சாணத்தை தடவிக்கொண்டால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என அறிவியலுக்கு புறம்பான காரியங்களை செய்தது யோகி அரசு.

கொரோனா பேரிடர் காலத்திலும் இந்துமதவெறியர்கள், மக்களிடம் இந்துத்துவத்தை திணிக்கும் வேலையைத்தான் செய்கின்றனர். இதனை கண்டு உலகமே சிரித்தது. வெளிநாட்டுப் பத்திரிகைகள் கூட இம்மாதிரியான செயல்களை கண்டித்து அவற்றால் மக்கள் கொத்துக்கொத்தாக சாவதை மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது என சாடினர்.

இப்படிப்பட்டவர்கள் தான் இலக்கியவாதிகளுக்கு முகாம் அமைத்து அவர்களுக்கு பயிற்றுவித்து இலக்கியத் தேர்வு வைப்பார்களாம். இலக்கியவாதிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தி அதன் மூலம் சிறந்த இலக்கியவாதிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பரிசும் அளிப்பார்களாம்.

தேசிய புத்தக அறக்கட்டளை (NBT) குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கியவாதிகளின் படைப்புகளை இலக்கிய விழாக்கள், புத்தகக் கண்காட்சிகள், மெய்நிகர் புத்தகக் கண்காட்சிகள், கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் போன்ற பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில், இவை தான் சிறந்த இலக்கிய நூல்கள் என பரப்புரை செய்வார்களாம்.

சனாதனக் கும்பல் தேர்ந்தெடுக்கும் இலக்கியவாதிகள், சனாதனிகளாகத் தானே இருப்பார்கள். அதுதானே நாம் கடந்த ஏழாண்டுகளில் கண்கூடாகப் பார்த்தவை. தற்போதைய இந்த நடவடிக்கை மூலம், இந்து சனாதன மனுதர்ம அழுக்கு மூட்டையை கலையாகவும் கலாச்சார பண்பாடாகவும் இலக்கிய பாணியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குத் துடிக்கிறது மோடி அரசு.

“நீ உனது முன்னோர்களின் சமத்துவ நெறிமுறைகளையும், சமதர்ம அறநெறி நூல்களையும் சான்றோர்களின் அறிவுறுத்தல் ஆகியவை மூலம் தானே நீ சனாதனத்தை எதிர்க்கிறாய்; அப்படி உருவாக்கப்பட்ட உன் இலக்கியவாதிகளை எனக்கு சாதகமானவனாக மாற்றி, உனக்கு எதிராக திருப்புகிறேன், பார்” என்பது போல் இருக்கிறது இவர்களின் இலக்கிய தேர்வு.

இந்துத்துவ கும்பலின் சாதி மத ரீதியான சதிச் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தும் சமூக செயல்பாட்டாளர்களும், இலக்கியவாதிகளுமான நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்றவர்களை சங்பரிவார கும்பல் சுட்டுக் கொன்றது. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே, வரவர ராவ், சுதா பரத்வாஜ் போன்றோர்களை இன்னும் பிணையில் கூட விடாமல் சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறது மோடி அரசு.

தமது 70 வயதுகளின் இறுதியில் இருக்கும், வரவர ராவ், ஆனந்த் தெல்தும்டே போன்றவர்களை வயது மூப்பின் காரணமாக அவர்களை பிணையில் விடலாம். ஆனால் மோடி அரசு இவர்களை மிகவும் சிறையில் வைத்து சித்திரவதை செய்தது. இவர்கள் கலையை மக்களுக்காக படைத்த இலக்கியவாதிகள் இல்லையா?

படிக்க :
♦ மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார் ?
♦ கோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு !

இப்படிப்பட்ட மோடி அரசுதான் இலக்கியவாதிகளுக்கு ரூபாய் 50,000 பணமும் பரிசு பொருளும் தருவதாகச் சொல்கிறது. அவர்கள் சொல்லக்கூடிய இலக்கியவாதிகள் என்பது வேறு. இந்துத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது சாதி மத ரீதியான, பாலியல் ரீதியான தாக்குதலை மக்கள் மீது தொடுக்கும் போது அதனை நியாயப்படுத்துகின்ற இலக்கியவாதிகளுக்கு தான் இந்த பணமும், இதில் யார் கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார்களோ அவர்களுக்கு கூடுதலாக சிறப்பு பரிசும் என அறிவித்திருக்கிறார் திருவாளர் மோடி.

நமக்குத் தேவை எத்தகைய இலக்கியவாதி?

நம்முடன் சமூகத்தில் சக மனிதனாக வாழ்ந்து நம்முடைய உரிமைகள் நசுக்கப்படும் போது நமக்கு ஆதரவாகவும் மதம், சாதி, பாலியல் ரீதியான அடக்கு முறை நேரும்போது அதற்கு எதிராக, கலை வடிவின் மூலமாகவும் பேனா முனையின் மூலமாகவும், களத்தில் நின்றும் உலகம் முழுவதற்கும் இதனை கொண்டு செல்லும்  இலக்கியவாதிகள் அல்லவா நமக்கு தேவை.

உழைக்கும் மக்களே !

  • இந்து சனாதன மனுதர்மத்தை ஆதரிக்கின்ற பிற்போக்கு இலக்கியவாதிகளை புறந்தள்ளுவோம் !
  • உழைக்கின்ற மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி சிறை சென்ற நமது இலக்கியவாதிகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோம் !

இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.

2 மறுமொழிகள்

  1. .என்று தணியும் எங்கள் இலக்கிய தாகம்
    என்று மடியும் இந்த முட்டாள்களின் ஆட்சி ?

    இந்திய சமூகம், முன்னேற்றப் பாதைக்கு வந்து சேரும் போதெல்லாம் , இந்த மாதிரி பிற்போக்கு வாதிகள் தலையெடுத்து , நம் சுவடுகளை அழிக்க தலைப்படுவார்கள். முற்போக்கு இலக்கியங்களை பாரபட்சம் இல்லாமல் கொண்டாடுவதும் , பிற்போக்கு இலக்கியவாதிகளை தூக்கி எறிவதும் மட்டுமே நம் இலக்கியத் தரத்தை உலக இலக்கியங்களில் உயர்த்திக் காட்டும் – என்பதை தெளிவாக விளக்கியுள்ளது இந்தக் கட்டுரை.

    – மருது பாண்டியன் –
    பத்திரிகையாளர் ( உசிலம்பட்டி )

  2. வரவர ராவ் பிணையில் வந்துள்ளார் என்று அறிகிறேன்.

Leave a Reply to Maruthu pandian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க