கோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு !

கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தல் செய்திகள் ஊடகங்களில் கவனம் பெறவில்லை என ‘கண்ணீர் வடிக்கும்’ காலச்சுவடு பத்திரிகையின் கயமையை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.

4
“செய்திக்கு என்ன விலை?” – காலச்சுவடு ஆகஸ்டு 2018 இதழில் ஒரு கட்டுரையின் தலைப்பு. கோப்ராபோஸ்ட்டின் “ஆபரேஷன் – 136” புலனாய்வு அம்பலப்படுத்தலை ஹாங்காங்கில் வாழும் திருவாளர் மு.இராமநாதன் என்பவர் எழுதியிருக்கிறார்.

“செய்திக்கு என்ன விலை?” – காலச்சுவடு கட்டுரை இணைப்பு

M.Ramanathan
மு.இராமநாதன்

கோப்ராபோஸ்ட் இதழின் நடவடிக்கையை பெரிய ஊடகங்கள் எவையும் கண்டுகொள்ளவில்லை என்ற ’மாபெரும்’ உண்மையை கண்டுபிடித்த காலச்சுவடு எழுத்தாளர் பிறகு அதன் வரலாற்றை சுருங்கச் சொல்கிறார். எனினும் அச்சுருக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., மோடி போன்ற நாமங்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன.

மேலை நாடுகளில் இக்குற்றச்சாட்டு வெளியாகியிருந்தால் அவை தேசிய அளவில் விவாதமாகியிருக்கும் என்ற பி.பி.சி.யின் விமர்சனத்தைக் கூறும் இராமநாதன் எப்படியாவது தினமலர், சன் டிவி பக்கம் வருவார் என்று எதிர்பார்த்தால்?
அவர் வண்டியை வேறு எங்கோ ஓட்டுகிறார்.

ஹாங்காங்கில் டி.வி.பி. எனும் தொலைக்காட்சியின் நட்சத்திர அறிவிப்பாளர் ஸ்டீபன்சான், ஒரு வணிக மையத்தில் புத்தாண்டு நிகழ்ச்சியை நடத்தி அந்த வணிக மையம் வழங்கிய பணத்தை தனி வருமானமாக பெற்று கொண்டாராம். இலஞ்ச ஒழிப்புத் துறை தொடுத்த வழக்கில் ஹாங்காங் உயர்நீதிமன்றம் இந்த வருமானத்தை கையூட்டு, ஸ்டீபன்சான் குற்றவாளி என தீர்ப்பளித்ததாம். மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என விடுவித்ததாம்.

“ஆபரேஷன் 136” என்பது பா.ஜ.க.விற்கு ஆதரவாக செய்தி வெளியிட முடியுமா என கார்ப்பரேட் ஊடகங்களின் முதலாளிகள் அல்லது தலைமை நிர்வாகிகளை அம்பலப்படுத்திய கோப்ராபோஸ்ட்டின் நடவடிக்கை. இதில் நிறுவனங்களின் முதலாளிகளை கழட்டிவிட்டு சாமர்த்தியமாக நெறியாளர்களை இழுப்பது ஏன் மிஸ்டர் இராமநாதன்?

kalachuvadu kannan_CI
காலச்சுவடு ஆசிரியர் கண்ணன்

ஜெயலலிதாவை ஏ-ஒன் குற்றவாளியாக உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறதே என்று கேட்டால் அ.தி.மு.க. அடிமைகள் இறந்தவரை தண்டிக்க முடியாதென கோர்ட் கூறியதாக தொலைக்காட்சிகளில் ஜல்லியடிப்பதற்கும் இந்த சைனீஷ் ஃபிரைடு ரைஸ் தேசத்திலிருந்து இவர் அடிப்பதற்கும் என்ன வேறுபாடு?

அடுத்ததாக இராமநாதன் அய்யா கச்சிதமாக தி இந்துவின் நடுப்பக்க ஆசிரியர் திருவாளர் சமஸ் அவர்களை இறக்குகிறார். மேதகு சமஸ் பணியாற்றும் திவ்யமான தி இந்து பத்திரிகையும் கூட கோப்ராபோஸ்ட் குறித்து ஒரு கொட்டாவியைக் கூட விடவில்லை. இவ்வளவிற்கும் இந்துவைப் படிப்பவர்களின் அதி தீவிர அரசியல் நடவடிக்கையே சில பல கொட்டாவிகள் விடுவதுதான்.

“இந்திய ஊடகத்துறை பணக்கலாச்சாரத்தில் மூழ்கி வருடங்கள் பல ஆகிவிட்டன” என்று சமஸின் மேற்கோளை – இதுவும் ‘மாபெரும்’ கண்டுபிடிப்புதான் – காட்டி விட்டு அடுத்து மெயின் பிக்சருக்கு வருகிறார் காலச்சுவடு கட்டுரையாளர்.

“யாருடைய எலிகள் நாம்?” எனும் அவரது நூலில் திருவாளர் சமஸ் அய்யா அவர்கள் இப்படிக் கூறுகிறாராம்:

samas (4)
திருவாளர் சமஸ்

“நீங்கள் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய கிராமப்புறப்பகுதியில் வசிப்பவராக இருக்கலாம். முக்கியமான பொதுநிகழ்ச்சி ஒன்றை நீங்கள் நடத்தலாம். ஆனால், அது குறித்த செய்தி ஊடகங்களில் இடம்பெற வேண்டும் என்றால் கூட, உங்கள் பகுதிக்கான செய்தியாளருக்கு நூறோ இருநூறோ அடங்கிய உறையைக் கொடுத்தால்தான் அந்த நிகழ்வு செய்தியாக வெளிவரும். ‘கவர் கொடுத்தால்தான் கவரேஜ்’. இதுதான் பெரும்பாலான, குறிப்பாக பிராந்திய ஊடகங்களின் இன்றையநிலை.”

பிராந்திய ஊடகங்களின் இன்றைய நிலை என்ற குறிப்புதான் முக்கியமானது. தந்தி, மாலைமுரசு, தினகரன் இன்னபிற உள்ளூர் பத்திரிகைகளின் உள்ளூர் பத்திரிகையாளர்களை மாபெரும் ஊழல்வாதிகளாகக் காட்டி விட்டு தேசிய பத்திரிகையான தி இந்து, தினமணி, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பரிசுத்தவான்களை சமஸ் வேறுபடுத்துவதுதான் நமது இராமநாதன் அய்யாவுக்கு பிடித்திருக்கிறது. தொலையட்டும்.

அடுத்தபடியாக உள்ளூர் அளவில் செய்தி சேகரிப்பதற்கு வரும் பரிதாபமான உள்ளூர் பத்திரிகையாளர்களின் மாபெரும் பயங்கரமான ஸ்காண்டல்களில் இரண்டை எடுத்துக் காட்டாக கூறுகிறார் இராமநாதன்.

ஒன்று கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அறக்கட்டளை அமைப்பினர் சென்னையில் 2009-ஆம் ஆண்டிற்கான “இயல் விருது”களை வழங்கும் விழாவைப் பற்றியது. அந்த ஆண்டில் ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி இருவரும் விருது பெறுகின்றனர். இந்த விழாச் செய்தி ஊடகங்களில் வரவில்லையாம்.

காரணம் விழா முடிந்த பிறகு ஏற்பாட்டளர்கள் யாரும் வரிசையில் நின்ற பத்திரிகையாளர்களுக்கு “உறைகள்” கொடுக்கவில்லையாம். அப்படி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களுக்கு தெரியாது என்று எழுதுகிறார் அறங்காவலர்களில் ஒருவரான எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.

இரண்டாவதிலும் கூட ஹாங்காங் ஆள்தான் வருகிறார். ஆனால் ஃபிரைடு ரைஸ் அல்ல! சுத்த சைவமான குஜராத் பனியா! அங்கே “ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷன்” (Help the Blind Foundation) எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை டி.கே.பட்டேல் என்பவர் நடத்தி வருகிறாராம். அன்னார் சர்வதேச வங்கி ஒன்றில் பதவி வகித்தவராம்.

Help the Blind Foundation இணைப்பு

HSBCஅந்த சர்வதேச வங்கி எது? ஹெச்.எஸ்.பி.சி. எனப்படும் HSBC – The Hongkong and Shanghai Banking Corporation Limited. இந்த வங்கியில்தான் அன்னார் பட்டேல் மூத்த பொருளாதார நிபுணராக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கிறார்.

இவரது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் அமைப்பு, கல்லூரிகளில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு உதவி வருகிறதாம். அவ்வகையில் திருவண்ணாமலை அருகே ஆரணி சூசை நகரில் பார்வையற்ற மாணவர்களுக்கு (பெண்கள்) விடுதி கட்டியதாம். ஒன்றரை கோடி ரூபாயில் 2015-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்விடுதியை திறக்கும் விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டனராம். எனினும் விழாவன்று எந்த நிருபரும் செய்தி சேகரிக்க வரவில்லையாம்.

நிருபர்களுக்கு அழைப்பிதழோடு “உறையும்” கொடுத்து கவனித்திருக்க வேண்டும், ஹாங்காங்கில் வசித்த அமைப்பாளருக்கு இந்த சூட்சுமம் தெரியவில்லை என்றாராம் ஒருவர்.

ஜெயமோகன்
சாருநிவேதிதா – ஜெயமோகன்

இந்த இரண்டு சான்றுகளில் ஒன்று இலக்கியம், மற்றொன்று தொண்டு. தமிழகத்தில் இலக்கியவாதிகளை யாரும் கவனிப்பதே இல்லை, அவர்களை கவனிக்காத சமூகம் உருப்படவே உருப்படாது என்பது காலஞ்சென்ற சுந்தர ராமசாமி முதல், கணந்தோறும் நினைவுபடுத்தும் ஜெயமோகன், சாருநிவேதிதா வரையிலும் அதிகம் பயன்படுத்தப்படும் தேய்ந்து போன அசட்டு வழக்கு.

பிறகு தொண்டு அதுவும் பார்வையற்ற மாணவர்களுக்கான உதவி என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் மனம் ‘ கனியச்’ செய்கின்ற தொண்டு. இந்த இரண்டிலும் தமிழக உள்ளூர் செய்தியாளர்கள் பணம் வாங்காததால் செய்தி வெளியிடவில்லை எனும் அளவுக்கு கொடூரமான மனம் படைத்தவர்கள்! இதை ஹாங்காங் பால்கனியில் நின்று அய்யா இராமநாதன் அவர்கள் நமக்காக அறம் பாடுகிறார்.

அந்த பாடலில் மெய்மறந்தால் அப்படியே அண்ணா ஹசாரே ஃபிளாஷ்பேக்கில் தலை காட்டுகிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊழல், வரி ஏய்ப்பு இன்ன பிற மோசடிகளை மறைத்து விட்டு கலெக்டர் ஆபிசின் சிப்பந்தி வாங்கும் நூறு இறுநூறுதான் இலஞ்சம், இந்தியாவின் நோய் என்று அண்ணா ஹசாரே துவங்கி ஆழ்வார்பேட்டை கமலஹாசன் வரைக்கும் பேசிக் கொன்றார்களே, அதே கொலையைத்தான் ஹாங்கிங்கில் இருந்து கொண்டு இராமநாதனும் நாகர்கோவிலில் இருந்து கொண்டு காலச்சுவடும் செய்கிறார்கள்.

உள்ளூர் செய்தியாளர்கள் காசு வாங்குகிறார்களா இல்லையா என்பதா இங்கு பேசுபொருள்? கோப்ராபோஸ்ட்டின் பத்திரிகையாளர் புஷ்ப ஷர்மா சந்தித்தவர்கள் யாரும் இந்த உள்ளூர் செய்தியாளர்கள் அல்ல.

வருடம் பத்தாயிரம் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்ட டைம்ஸ் குழுமத்தின் முதலாளி வினீத் ஜெயின் அவர்களில் முதன்மையானவர். இவரிடம் மோடி ஜால்ரா செய்தி போட 500 கோடி ரூபாய் டீல் பேசிய புஷ்ப ஷர்மா அதில் 50 கோடி பணத்தை ரொக்கமாக முதல் கட்டத்தில் தருவேன் என்று சொன்னதையும் கூட முதலாளி ஜெயின் ஏற்றிருக்கிறார். அதாவது கருப்பு பணமாக!

டால்மியா, அதானி, அம்பானி அல்லது எஸ்ஸார் குழுமத்திடம் பணமாகக் கொடுத்து விட்டால் அவர்கள் அதை டைம்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்து விடுவார்கள் என கோப்ராபோஸ்ட் செய்தியாளர் முன்வைக்கும் ஆலோசனையை ஜெயின் ஏற்றுக் கொள்கிறார்.

இவ்வளவிற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன் அன்னா ஹசாரேவும், பாபா ராம்தேவும் ஊழல் மற்றும் கருப்புப் பண பிரச்சினையை முன்வைத்து புழுதியைக் கிளப்பிக் கொண்டிருந்த போது அவர்கள் சார்பாக பிரச்சாரம் மேற்கொண்டது மட்டுமின்றி கருப்புப் பண மீட்பு என்பதை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்ததிலும் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டைம்ஸ் நௌ சேனலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இவ்வளவு பெரிய ஃபிராடுகளை காப்பாற்ற ஹாங்காங் ரேடியோ செட்டு எப்படி கோல்மால் செய்கிறது பாருங்கள்!

டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல ! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம் ! வினவு கட்டுரை இணைப்பு

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களின் தலைமை பீடங்களை பொறி வைத்துப் பிடித்த கோப்ராபோஸ்ட் பற்றி இந்திய ஊடகங்கள் எழுதவில்லை என்று பிலாக்கணம் வைக்கும் நமது ஹாங்காங் அங்கிளும், அங்கிளுக்கு ஆலோசனை கொடுத்த ஆசிரியர் கண்ணனும் கூட்டணி சேர்ந்து அதை காலச்சுவடில் எழுதி கடமையாற்ற வேண்டும் என எவர் அழுதார்? பகிரங்கமாக ஒரு நீதியைக் கொன்று போடும் உங்கள் கொடுமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

இப்படி முதலாளிகளின் ஊழலை மறைத்து அதுவும் காவி பயங்கரவாதிகளுக்கான சொம்பு வேலை பார்க்கும் மோசடியை ஏதோ தினத்தந்தியின் உசிலம்பட்டி நிருபர் கவர் வாங்குகிறார் என்று மடை மாற்றுவது நிச்சயமாக பார்ப்பனிய சூழ்ச்சியில்தான் வரும்! இல்லையென்றால் கோப்ராபோஸ்ட்டின் தமிழக அம்பலப்படுத்தல்களில் வரும் தினமலரை முன்னர் கண்ட பட்டியலில் அய்யா இராமநாதன் சேர்க்காததன் மர்மம் என்ன?

காலச்சுவடின் தோற்றம் தொட்டு இன்று வரை கடைசிப் பக்கங்களில் “உண்மையின் உரைகல்” தினமலரின் ‘கவர்’ விளம்பரத்தை தவறாது காணலாம். வேறு வேலையில்லாமல் “காலச்சுவடு” பத்தரிகையை அட்டை டு அட்டை படிக்கும் அப்பாவி இலக்கியவாதிகள் அனைவரும் தினமலர்தான் காலச்சுவடின் நிரந்தர புரவலர் என்பதறிவர்!

அப்படி இருக்கும் போது கோப்ராபோஸ்ட்டில் இடம்பெற்ற தினமலரை நைசாக காலச்சுவடில் கட் பண்ணுவதன் நோக்கம் என்ன என்று…. நுண்ணுணர்வு வேண்டாம், சாதா உணர்வு இருப்போருக்கே புரியும் விசயம் அல்லவா?

கோப்ராபோஸ்ட் செய்தியாளர் சந்தித்த தினமலரின் ஆதிமூலம் லேசுப்பட்டவர் அல்ல. தினமலரின் நிறுவனர் ராமசுப்பையரின் பேரன். அந்த வகையில் முதலாளிக் குடும்பத்தின் முக்கியஸ்தர். தினமலரின் வர்த்தகப் பிரிவு இயக்குநராக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் புது தில்லி சென்று இந்தியப் பிரதமர் மோடியை தமிழக ஊடக முதலாளிகள் இரகசியமாக சந்தித்து ஆசி பெற்றார்கள் அல்லவா, அதில் தினமலர் சார்பாக மூன்று பேரும், அந்த மூன்றில் இந்த ஆதிமூலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம் : வினவு கட்டுரை இணைப்பு

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் மோடி ஆதரவு அலை அடிப்பதாக துணிந்து புளுகி வந்தது தினமலர். அந்தப் பச்சைப் பொய்களுக்குப் பின்னணி என்னவென்பதை ஆதிமூலம் தனது சொந்த வாயால் இரகசிய கேமரா முன் விவரிக்கிறார்.

கோப்ராபோஸ்டின் பத்திரிகையாளர் ‘ஆச்சார்ய அடல்’ முன்வைத்ததைப் போன்ற பிரச்சாரப் பணிகளை தமது பத்திரிகை முந்தைய காலங்களில் செய்திருப்பதாக குறிப்பிடுகிறார் ஆதிமூலம். சென்ற தேர்தலுக்கு முன் மோடியைச் சந்திக்க தெரிவு செய்யப்பட்ட வெகுசில பத்திரிகையாளர்களில் தாங்களும் இருந்ததாக பெருமையோடு குறிப்பிடுகிறார்.

ஆக இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கோப்ராபோஸ்டில் சிக்கிய முதலை ஏதோ ஒரு பத்திரிகை ஆசிரியர் இல்லை, சாட்சாத் முதலாளி என்பதால்தான் காலச்சுவடின் தலைமை, கோப்ராபோஸ்ட் கட்டுரையை எழுதுவதற்கு முன்வந்திருக்கும் என்பது உறுதி!

ஆகஸ்டு 15 தினமலரின் முதல் பக்கத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி குரூப் விளம்பரம் மின்னுகிறது. இந்த பாபா குரூப் விளம்பரம் யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது?

ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு : வினவு கட்டுரை இணைப்பு

ஏ.பி.பி. தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நெறியாளரான புன்ய பிரசூன் பாஜ்பாய் தனது நிகழ்ச்சியில் மோடியின் பிம்பத்திற்காக சட்டீஸ்கரைச் சேர்ந்த ஒரு பெண் தனது சீத்தாப்பழ விவசாயத்தில் இரட்டிப்பு இலாபம் வந்ததாக சொல்வது அதிகாரிகளின் நிர்ப்பந்தத்தால் என்பதை அம்பல்படுத்துகிறார். பிறகு அவரது வேலை போனது. அதற்கு முன்னர் என்ன நடந்தது?

இதே நேரத்தில் ஏ.பி.பி. சேனலின் மிகப்பெரிய விளம்பரதாரரான ‘பதஞ்சலி புராடக்ட்ஸ்’ நிறுவனம், தன்னுடைய அனைத்து விளம்பரங்களையும் திடீரென நிறுத்திக்கொண்டது.

அப்பேற்பட்ட பதஞ்சலி புகழ் தினமலர் பா.ஜ.க. மோடி வகையறாக்களுக்கு காசு வாங்கிக் கொண்டு வேலை செய்வது மட்டுமா அதன் குற்றம்?

தமிழர்களை ‘டமிலர்கள்’ என விளித்துக் கிண்டல் செய்வதில் துவங்கி, மக்களின் உயிராதார போராட்டங்களைத் தீவிரவாதச் செயல்களாக சித்தரிப்பது வரை தினமலரில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தைகளிலும், வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியிலும் பொங்கி வழிவதன் பெயர் பார்ப்பனத் திமிர்.

பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளின் மீது மட்டுமில்லாமல் மொத்தமாக தமிழர்களின் மீதே ஆழ்ந்த வன்மம் தினமலருக்கு உண்டு. அந்த வன்மம் பார்ப்பனியம் தமிழகத்தின் பொது அரங்கில் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டதில் இருந்து முளைவிடுகிறது. இது தான் ஆர்.எஸ்.எஸ். – இந்துத்துவ கும்பலோடு தினமலர் கைகோர்க்கும் புள்ளி.

இப்பேற்பட்ட தினமலரிடம் காசு வாங்கிய காலச்சுவடு கோப்ராபோஸ்ட் நடவடிக்கையில் இந்திய ஊடகங்கள் குறித்து கவலைப்படுவதும், அதற்கான காரணமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதும் எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?

தினமலரிடம் காசு வாங்கி அதன் பேர் ரிப்பேர் ஆனதை மறைப்பதன் பெயர் “பெய்டு நியூசில்” வராதா? இதைத்தானே கார்ப்பரேட் ஊடகங்களும் செய்கின்றன? மேலதிகமாக உள்ளூர் செய்திகள் கூட நிர்வாகங்களின் முடிவுகளுக்கு ஏற்பவே வெளிவருமே அன்றி அவை முற்றிலும் உள்ளூர் செய்தியாளர்களின் கையில் இல்லை!

திருவாளர் சமஸ் பணிபுரியும் தி இந்து நிறுவனம் கூட மோடி மனங்கோணாத செய்திகளையே வெளியிடுகிறது. தினத்தந்தியின் ‘பிரத்யேக’ மோடி நேர்காணலை மாபெரும் செய்தியாக இந்துவும் வெளியிட்டது. மற்றபடி காற்று, நெருப்பு, குப்பை, பாலிதீன் மற்றும் மக்கள் மீது விமர்சனங்களைச் செய்யும் தி இந்து பத்திரிகை மோடி அரசின் மீது மட்டும் விமர்சனங்களை செய்யவே செய்யாது! காரணம் பயம் மட்டுமல்ல, விளம்பரம் மூலம் வரும் பணமும்தான்.

மீண்டும் நாம் ஹாங்காங்கிற்குத் திரும்புவோம்!

பார்வையற்ற மாணவர்களுக்கு சேவையாற்றும் ஹாங்கிங்கின் “ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேஷன்” Help the Blind Foundation எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஏற்கனவே பார்த்தோம் அல்லவா!

இந்த தொண்டு நிறுவனம் ஹாங்காங், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘சேவை’ செய்கின்றது. இந்நிறுவனத்தை உருவாக்கிய மகாத்மா திருவாளர் டி.கே.பட்டேல் குஜராத்தைச் சேர்ந்தவர். அதாவது 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலை புகழ் மோடி மற்றும் மோடியின் ஸ்பான்சர் அதானியின் குஜராத்தைச் சேர்ந்தவர்.

அன்னார் அவர்கள் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் மூத்த பொருளாதார நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சரி அந்த பொருளாதார பணி என்னவாக இருக்கும்? நமக்குத் தெரியவில்லை.

ஆனால் அன்னார் பணியாற்றிய வங்கி உலகறிந்த ஒன்று. ஆம். உலகிலேயே மோசடி வங்கி என்று ஒரு பட்டியல் போட்டால் அதில் முதல் ஐந்தில் இடம் பிடிக்கும் பெருமை இந்த வங்கிக்கு நிச்சயமாக உண்டு.

ஹெச்.எஸ்.பி.சி. வங்கியின் ஊழல்கள் வரிஏய்ப்பு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள், கருப்புப் பண பதுக்கல் இன்னபிற மோசடிகளின் சிறு பட்டியல்:

2017-ஆம் ஆண்டில் ஹாங்காங்கின் அமைச்சர் பேட்ரிக் ஹோ (Patrick Ho Chi-ping) என்பவர் எண்ணைக் கிணறுகளின் உரிமம் பெறுவதற்காக ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்களுக்கு இலஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அந்த சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகளுக்கு ஹெச்.எஸ்.பி.சி. வங்கி மிக உதவிகரமாக இருந்துள்ளது.

Patrick Ho challenges six of eight charges against him in US$2.9 million corruption scandal
Former Hong Kong minister Patrick Ho fails to have corruption charges against him thrown out of court
China’s gift to Europe is a new version of crony capitalism

ஹெச்.எஸ்.பி.சி-யின் சுவிஸ் துணை நிறுவனம் தனது அதிஉயர் பணக்கார வாடிக்கையாளர்களுக்கு பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பின் மூலம் கருப்புப் பணம் சேர்க்கவும், கருப்பை வெள்ளையாக்கவும் உதவிவந்தது 2015-ஆம் ஆண்டு அம்பலமானது.

HSBC files timeline: from Swiss bank leak to fallout
The HSBC files: what we know so far
இந்திய முதலாளிகளின் சுவிஸ் வங்கி ரகசியங்கள்

2016-ம் ஆண்டில் ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனத்தின் அந்நிய செலவாணி வர்த்தகத்தின் தலைவர் மார்க் ஜான்சனும் அவருடைய சக ஊழியர் ஸ்டூவர்ட் ஸ்காட்டும் வங்கியின் வாடிக்கையாளர்களை மோசடி செய்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு எ.ஃபி.ஐ. FBI கைது செய்தது. தங்களது சொந்த நலனுக்காகவும், வங்கியின் வர்த்தக நலன்களுக்காகவும் அந்நிய செலவாணி சந்தையை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

FBI arrests senior HSBC banker accused of rigging multibillion-dollar deal

2012-ம் ஆண்டு சட்டவிரோத போதைப் பொருள் பரிவர்த்தனைகளுக்கும், தீவிரவாதிகளின் பணப்பரிவர்த்தனைகளுக்கும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி உதவிகரமாக இருந்தது ஆதாரப்பூர்வமாக அம்பலப்பட்டதையடுத்து அமெரிக்க அரசு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்தது.

HSBC to pay $1.9 billion U.S. fine in money-laundering case

ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணப்படம்:

Netflix documentary re-examines HSBC’s $881 million money-laundering scandal

இந்தோனேசியாவில் பாமாயில் உற்பத்தியாளர்களுக்கு நிதியளித்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிவதற்கு ஹெச்.எஸ்.பி.சி. வங்கி காரணமாக இருப்பதாக கிரீன்பீஸ் அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

HSBC funding destruction of vast areas of Indonesian rainforest, new report claims

மேலும் ஹெச்.எஸ்.பி.சி. வங்கி குறித்த இதர ஊழல்கள்:

HSBC ‘sorry’ for aiding Mexican drugs lords, rogue states and terrorists
Make informed decisions. Become an FT Subscriber.
HSBC to pay $1.9bn in US money laundering penalties
Gupta money scandal: HSBC accused of ‘possible criminal complicity’

மேற்கண்ட இணைப்புக்களை பொறுமையாக நீங்கள் படித்தால் திருவாளர் பட்டேல் பணிபுரிந்த வங்கியின் வரலாற்றை படித்தறியலாம்.

சரி, இந்த வங்கியில் பணியாற்றும் ஒரு மூத்த பொருளாதார நிபுணர் என்ன பணிகளைச் செய்து வரவேண்டும்? எந்த நாட்டிற்கு கடன் கொடுக்க வேண்டும், எப்படி கடனை மீட்க வேண்டும், கடன் வாங்க வைக்க யாருக்கு கையூட்டு கொடுக்க வேண்டும், கருப்புபண முதலைகளின் பணத்தை பாதுகாப்பாக வைப்போம் என எப்படி நம்ப வைக்க வேண்டும்……இவற்றைத் தவிர இங்கே பொருளாதரப் பணி என்னவாக இருக்க முடியும்?

அல்லது அய்யா பட்டேல் நடத்தும் பார்வையற்ற தொண்டிற்கு படியளக்கும் பெருமகன்கள் யார்? அவர்களுக்கும் இந்த வங்கிக்கும் தொடர்பு உண்டா இல்லையா? பட்டேல் அவர்களின் தனிப்பட்ட சொத்து விவரம் என்ன? டிரஸ்டின் அறங்காவலர்கள் யார்? அவர்களின் சொத்து என்ன?

ஆக இத்தனை மகோன்னதமான வங்கியில் அதுவும் உயர் பணியில் பணிபுரிந்த ‘நல்லவர்’ திருவண்ணாமலையில் வந்து ஒரு விடுதியைக் கட்டி அந்த விடுதி திறப்பு விழாவிற்கு செய்தியாளர்களை வரவழைத்து ‘உறை’ கொடுக்கவில்லை, அப்படி கவர்கொடுக்கும் கலாச்சாரம் இருப்பதே அவருக்கோ அவரது நிறுவனத்திற்கோ தெரியவில்லை என்று ஹாங்காங் அங்கிளும், காலச்சுவடு ஓனரும் நமக்கு அறம் பற்றிய வகுப்பு எடுக்கின்றனர்!

அந்த வகுப்பின் பெயர் “செய்திக்கு என்ன விலை?”. பதிலுக்கு நாம் என்ன செய்யலாம்? நீங்களே கூறுங்கள்!

  •  இளநம்பி
    (வினவு புலனாய்வு குழு உதவியுடன்)

4 மறுமொழிகள்

  1. தமிழ் ஊடகங்களில் பிறவற்றைவிட தினமலர்தான் கயவாளித்தனத்தில் முதலிடத்தில் உள்ளது.
    பார்ப்ப்பனீய பாசம்+கார்ப்பரேடிசம்=”தினமலம்”.

  2. கட்டுரை அட்டகாசம். மிக நேர்த்தியான முறையில் இன்வெஸ்டிகேட் செய்து காலச்சுவடு முகத்தை அடையாளம் காட்டி விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் பணி வினவு
    நன்றி நண்பா!

  3. இந்த தொண்டு நிறுவனம் ஹாங்காங், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ‘சேவை’ செய்கின்றது. இந்நிறுவனத்தை உருவாக்கிய மகாத்மா திருவாளர் டி.கே.பட்டேல் குஜராத்தைச் சேர்ந்தவர். அதாவது 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலை புகழ் மோடி மற்றும் மோடியின் ஸ்பான்சர் அதானியின் குஜராத்தைச் சேர்ந்தவர்./////////////////

    ஏம்பா ஏன்,,,, குஜராத்துன்னு எழுதினா போதாதா? பிஜேபி காரன் போல நீங்களும் மக்கள் அடிச்சிகிட்டு சாவணும்கிறதுக்காகவே திட்டமிட்டு இதுபோல எழுதுறீங்களா? திருந்துங்கப்பா,,,, திருந்துங்க,,,,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க