அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல: பிணை கோரிய மனுவில் இலட்சத்தீவைச் சேர்ந்த இயக்குநர்

சமீபத்தில் பாஜக அரசால் லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் பட்டேல் நியமிக்கப்பட்டார். நியமனம் செய்யப்பட்டபின் பிரபுல் பட்டேல், இலட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை, சமூக நடவடிக்கை எதிர்ப்பு ஒழுங்குமுறை, இலட்சத்தீவு தடுப்பு சட்டம் மற்றும் இலட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆகிய வரைவுகளை முன்மொழிந்தார்.

இவை தங்களுடைய கலாச்சார சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் பறிப்பதாக லட்சத்தீவு மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். நாடு தழுவிய அளவிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

படிக்க :
♦ இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்
♦ #Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !

இந்த நிலையில், உள்ளூர் செய்திச் சேனலில் பேசியதற்காக இலட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

பாஜகவின் இலட்சத்தீவு தலைவர் அப்துல் காதர் ஹாஜி அளித்த புகாரின் அடிப்படையில் சுல்தானாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. சுல்தானா தொலைக்காட்சி விவாதத்தின் போது தவறான செய்திகளைப் பரப்பியதாக பாஜக நிர்வாகி குற்றம்சாட்டியிருந்தார். இலட்சத்தீவின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேல், கட்டாயத் தனிமைப்படுத்தலை அகற்றியதால், கோவிட் தொற்றுகள் தீவில் அதிகரித்துவிட்டது, எனவே அவர் ஒரு உயிரி ஆயுதம் (Bio Weapon) என சுல்தானா பேசியிருந்தார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (தேசிய ஒருங்கிணைப்புக்கு எதிரான செயல்கள்) ஆகியவற்றின் கீழ் காவரட்டி போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க முன் பிணை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஆயிஷா சுல்தானா.

விசாரணைக்காக காவரட்டி போலீசு தலைமையகத்தில் ஆஜராகுமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார் சுல்தானா.

பிணை கோரிய மனுவில், ‘உயிரி ஆயுதம்’ (Bio Weapon) என்ற விமர்சனத்தை, கோவிட் 19 தொற்று நெறிமுறைகளை புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகி தளர்த்தி, தொற்று அதிகமாவதற்கு காரணமாக அமைந்ததாகவும், அந்த சூழலில்தான் இந்தக் கருத்து கூறப்பட்டதாகவும் சுல்தானா கூறியுள்ளார்.

அரசியல் பிரச்சினைகள் குறித்த விமர்சனம் பிரிவு 124 ஏ இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தேசத்துரோக குற்றமாகாது என உச்சநீதிமன்றத்தின் கேதார் நாத் சிங் தீர்ப்பை விண்ணப்பத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கேதார் நாத் சிங் வழக்கில் தேசத்துரோகத்தின் வரம்புகளை உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ளது, வன்முறைக்கு தூண்டாவிட்டால் அரசாங்கத்தை விமர்சிப்பது தேசத்துரோகமாகக் கருத முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீபத்தில் பத்திரிகையாளர் வினோத் துவாவுக்கு எதிரான தேசதுரோக வழக்கையும் மனுவில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் வினோத் துவாவுக்கு பிணை வழங்கிய உச்சநீதிமன்றம், பொது அமைதியை கெடுக்கும் வகையில் அவர் அரசாங்கத்துக்கு எதிரான வன்முறையை தூண்டாதவரை, அரசாங்கத்தையும் அதன் உறுப்புகளையும் ஒரு குடிமகன் விமர்சிக்கவோ கருத்து சொல்லவோ உரிமை உண்டு எனக் கூறியது.

தனது கருத்து அரசாங்கத்தின் மீது அதிருப்தியை உருவாக்கியதாகவோ அல்லது அது வன்முறையைத் தூண்டியது என்பதற்கு ஆதாரமாகவோ எந்த வழக்கும் இல்லை என தனது மனுவில் சுல்தானா கூறியுள்ளார்.

தனது கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், சுல்தானா சமூக ஊடகங்களில் ஒரு விளக்கத்தை வெளியிட்டார், “அரசாங்கத்தின் மீது அதிருப்தி அல்லது வெறுப்பைத் தூண்டுவதற்கான எந்த நோக்கமும் தனக்கு இல்லை” என மன்னிப்பு கோரியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 பி-ன் கீழ் விண்ணப்பதாரருக்கு எதிராக நிற்காது, ஏனெனில் அவரது கருத்து “தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கக்கூடியது” அல்ல, அவை வேற்றுமை அல்லது பகை உணர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை அல்ல எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம், காவரட்டி போலீசாரின் பதிலைக் கேட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

படிக்க :
♦ இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்
♦ மோடி அரசின் மிரட்டலால் பணிநீக்கம் செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் மஞ்சுள் !

மக்கள் விரோத சட்டங்களை ‘சீர்திருத்தம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்த பாஜக அரசு தனக்குச் சாதகமான பிரஃபுல் பட்டேலை பணித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய்த்தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் தீவு நிலத்தை கூறுபோடும் பணியில் ஈடுபட்டுள்ளார் பாஜக பணித்துள்ள நிர்வாகி.

இதை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்களை தேசத்துரோக வழக்கில் ஆண்டு கணக்கில் சிறையில் தள்ள அரசு நிர்வாகம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தேசத்துரோக வழக்கை எதிர்கொள்வதா அல்லது நிர்வாகத்தை எதிர்த்து போராடுவதா என செயல்பாட்டாளர்களை திணற வைப்பதை ஒரு வழிமுறையாகவே செய்து வருகிறது மோடி அரசு.


கலைமதி
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க