பாசிசம் என்றுமே தமது செயல்திட்டங்களை எவ்வித ஈவிரக்கமின்றியும் நடைமுறைப்படுத்துபவர்களையே அதிகாரத்தில் அமர வைக்கும். அந்த வகையில் இந்திய அளவிலான பாசிச சக்தியான ஆர்.எஸ்.எஸ்.-ஸால் பிரதமர் பதவிக்கு அமர வைக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி.

இந்திய ஒன்றியத்தின் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கபரிவாரக் கும்பலின் கார்ப்பரேட் ஆதரவு இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தும்வகையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதற்குப் பொருத்தமான அதிகாரிகளின் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ இலட்சத்தீவு மக்களின் சட்ட உரிமைகளை முடக்க மோடி அரசின் சதி !
♦ இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !

அந்த வகையில் இலட்சத் தீவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரஃபுல் படேல் எனும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது மோடி அரசு. பிரஃபுல் படேலை அந்தப் பதவிக்கு மோடி அரசு தேர்ந்தெடுத்தது ஏன்? அவரது பின்னணி என்ன ? என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

யார் இந்த பிரஃபுல் படேல்?

குஜராத்தில் மோடியின் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர், இந்த பிரஃபுல் படேல். இவர் மந்திரியான மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு ஒன்பது கோடியாக உயர்ந்தது.

அடுத்து நடந்த தேர்தலில் மக்களிடம் மதிப்பிழந்து தோற்றுப் போனார் இந்த பிரஃபுல் படேல். மோடி மாநில அரசியலிலிருந்து விலகி தேசிய அரசியலில் புகுந்து 2014-ல் பிரதமர் ஆனதும் மக்களால் விரட்டப்பட்டு பதவியில் இல்லாதவர்கள் கவர்னர்கள் ஆக்கப்பட்டனர்.

இப்படியாக டிசம்பர், 2016-ல் தத்ரா – நாகர் ஹவேலி பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் இந்த பிரஃபுல் படேல். இங்கு பதவிக்கு வந்ததும் ஜனநாயக உரிமைகள் ஒன்று பாக்கியில்லாமல் ஒழிக்கப்பட்டு, தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டம் போட்டார் படேல். இதற்குப் பரிசு போல புதிய யூனியன் பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதியின் நிர்வாகி மற்றும் லெப்டினண்ட் கவர்னராக ஜனவரி 2020-ல் நியமிக்கப்பட்டார்.

டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதி வளம் மிக்க தொழில் பகுதியாக மட்டுமின்றி பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. ரிலையன்ஸ், ஸ்டெர்லைட் உட்பட பல பகாசுர பன்னாட்டுக் கம்பனிகள் இங்கு தொழில் செய்து வருகின்றன. இராசயன நிறுவனங்கள், உயிர் காக்கும் மருந்துக் கம்பனிகள் உட்பட பல நிறுவனங்களின் உற்பத்திகள் இங்கு நடக்கின்றன. சுற்றுலா மையம் என்ற பெயரில் குடி, கூத்து, கும்மாளம் என சீரழிவுக் கலாச்சாரம் இங்கு சகஜமாக நடக்கிறது.

2% வரி குறைப்பு கூட பல கோடிகளை இங்கு மிச்சம் பிடிக்கும். இந்த யூனியன் பகுதியில் தாதாக்கள் வைத்ததே சட்டம் என மாஃபியா கும்பலின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. சிறு நிறுவனங்களிடம் மிரட்டிக் காசு பறிப்பது ஒரு வகை வசூல். உள்ளூர் ஆட்களிடம் மிரட்டி குறைந்த விலையில் நிலங்களைப் பறித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் விலையில் விற்கும் ரியல் எஸ்டேட் இன்னொரு வகை வசூல் என எல்லா இடங்களிலும் நடப்பதைப் போலவே இங்கும் நடந்து கொண்டிருந்தது.

பிரஃபுல் நிர்வாகியாக, லெப்டினண்ட் கவர்னராக பொறுப்பேற்றதும்,  வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வரிகள் விசம் போல ஏறின. ஒன்றிரண்டு மடங்கல்ல, அதிகபட்சமாக 1000% வரை வரி உயர்வு. சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டது என்றால் மிகையல்ல. அப்பாவி மக்களுக்கு வரி உயர்வு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என மோடியின் வழியில் தப்பாமல் நடந்தார் படேல்.

இதுவும் போதாது என்று ஹோட்டல்களில் உள்ள பார்களின் அனுமதியை மீண்டும் பரிசீலிப்பதாகக் கூறி ஏற்கெனவே அங்கு பார்கள் வைத்திருந்த மண்ணின் மைந்தர்களிடம் இருந்து அனுமதியை மறுத்து, தனக்கு வேண்டிய குஜராத் பணியாக்களுக்கு புதியதாக அனுமதி வழங்கினார்.

இவை பற்றி உள்ளூர் தலைவர்கள் கேள்வி எழுப்பலாம், போராடலாம் என்பதாலேயே குஜராத் மாநிலத்தின் 1985-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சமூக விரோத செயல் தடுப்புச் சட்டம் டையூ-டாமன் யூனியன் பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. யூனியன் பகுதியின் மொத்த ஜனநாயக உரிமைகளும் ஒழித்துக் கட்டப்பட்டன. அதன்பின் படேலின் ஆட்டம் தொடங்கியது.

ஏற்கனவே இங்கு சட்டமன்றம் இல்லாததால் வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசாங்கம் இயங்கி வந்தது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்து தனக்கு வேண்டிய அதிகாரிகளின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தார் படேல். அவர்களின் உத்தரவுப்படி ஆட்சி நடக்கத் தொடங்கியது.

டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதி

இங்கிருந்து ஒரு எம்.பி தேர்வு செய்யப்படுவார். அவரும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருப்பார். படேல் அதிகாரத்திற்கு வந்ததும் இந்த எம்.பி.-யும் ஓரம் கட்டப்பட்டார். கடைசியாக எம்.பி.-யாக இருந்த 58 வயதான மோகன் டெல்கர், இதற்கு முன்னர் 7 முறை எம்.பி.-யாக இருந்தவர். சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்ற மக்கள் செல்வாக்குள்ளவர். இவர் மும்பையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 15 பக்க கடிதம் மூலம் நிர்வாகி பிரஃபுல் படேல், எஸ்.பி, கலெக்டர் ஆகியோர்தான் தனது தற்கொலைக்குக் காரணம் என விலாவரியாக எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துயுள்ளனர். அவர் நடத்தி வந்த மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியை ‘நமோ’ என்ற மற்றொரு மருத்துவக் கல்லூரிக்கு தானமாகத் தர நிர்ப்பந்தித்து, தானமாகத் தந்தவுடன் எம்.பி-யின் மருத்துவக் கல்லூரியை படேலும் அவரது அதிகாரிகளும் புல்டோசர் கொண்டு வந்து தகர்த்துத் தரைமட்டமாக்குகிறார்கள். இந்த எம்.பி கட்டிய ‘ஆதிவாசி கல்யாண் பவன்’ என்ற கட்டிடத்தையும் தகர்த்தெறிகின்றனர்.

இந்த பகுதியில் உள்ளூர் மக்கள் நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிக அரசு ஊழியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் பகுதி மக்களின் வேலையைப் பாதுகாக்க எம்.பி முயல, பிரஃபுல் படேலோ அவர்களை வேலையிலிருந்து துரத்தவே முயல்கிறார். எம்.பி தமது பூர்வகுடி மக்களுக்கு சேவை செய்ய அனுமதி மறுத்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரை அவமானப் படுத்துகிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசு விழாவுக்கு எதிர்க் கட்சி எம்.பி.யை அழைக்காவிட்டால் அதை மிகப்பெரும் பிரச்சனை ஆக்குவதோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அந்த தீவின் ஒரே ஒரு எம்.பி.க்கு எந்த அளவு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

எம்.பி-யின் கடிதப்படி பிரஃபுல் படேல் மற்றும் பிற அதிகாரிகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று வரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த டாமன் பகுதியின் எல்லா ஒப்பந்தங்களும் படேல் பதவியேற்ற நாள் முதல் சில குஜராத் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே போகிறது. குறிப்பாக குஜராத்தின் கோத்ராவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கமலேஷ்குமார், நவீன் சந்த்ரா ஷா என்பவரது ’ஆர்கேசி இன்ஃப்ரா பில்ட்’ என்ற நிறுவனத்திற்கே பெரிய ஒப்பந்தப் பணிகள் செல்கின்றன. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இரண்டு பெரிய ஒப்பந்தங்கள் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச டெண்டர் தொகையை விட 41.8% மற்றும் 33% அதிகப்படியான டெண்டருக்கு இந்த நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளது.

அரசு விதிகளின்படி அரசு நிர்ணயித்த தொகையை விட 30%க்கு அதிகமாக டெண்டர் கோரப்பட்டால் அவை மறு டெண்டர் விடப்பட வேண்டும். இந்த விதி மீறல் பற்றி படேலிடம் கேட்டதற்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. இந்த விதி மீறலில் சம்பத்தப்பட்ட ’ஆர்கேசி இன்ஃப்ரா பில்ட்’ நிறுவனத்திடம் கேட்டதற்கும் இப்போது வரை பதில் இல்லை. இங்கும் குஜராத் போலவே வேறு யாரும் டெண்டர் கேட்கக் கூடாது என வாய் வழி உத்தரவு போடப்பட்டதாக செய்தி. இது பற்றி படேலிடம் கேட்டதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்தப் பின்னணியில்தான் இலட்சத் தீவில் நடப்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

இப்படி குஜராத் பணியா கும்பலுக்கு விசுவாசமாக சேவை செய்ததால்தான் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய இந்த படேலுக்கு இலட்சத் தீவு யூனியன் பகுதியின் லெப்டினண்ட் கவர்னர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது.

ஓரளவு ஜனநாயகமாகச் செயல்படும் பகுதிகளையும் மக்களையும் கண்டாலே இந்த பாசிச கும்பலுக்கு ஆகவே ஆகாது. தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் அன்றாடம் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்டாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு இலட்சத் தீவு பற்றி இதுவரை பெரிய அளவு எதுவும் தெரியாது. இந்தியாவிலேயே குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடக்கும் பகுதி இந்த இலட்சத் தீவு யூனியன் பகுதிதான். இந்தப் பகுதி மக்கள் மீன் பிடித்தலும், சுற்றுலாவுமே தீவின் முதன்மை தொழில்கள்.

ஆனால், பிரஃபுல் படேல் பொறுப்பேற்றதும் முதலில் செய்த வேலை இப்பகுதியில் குண்டர் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது தான். கிரிமினல் குற்றம் இல்லாத பகுதிக்கு குண்டர் சட்டத்தின் தேவை என்ன? தன்னைப் போலவே பிறரையும் நேசி என்பது இதுதானோ? போகட்டும் ! தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தினால் மக்கள் போராடுவார்கள் எனத் தெரிந்தே குண்டர் சட்டம் போடப்பட்டது. அதுதான் இப்போது அங்கு நடந்து கொண்டிருப்பதும் கூட. மாடுக்கறிக்கு தடை, 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்கத் தடை, உள்ளூர் மக்களின் மீன்பிடித் தொழிலை ஒழிப்பது என அடுத்தடுத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

தீவின் சுற்றுச்சூழல், ஜனநாயக – சமூக வாழ்வியலை ஒழித்துக் கட்டும் அதே வேலையில் டையூ-டாமன், தத்ரா-நாகர் ஹவேலியில் செய்தது போலவே வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு கட்டுமானப் பணிகள், சேவைகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே, இருந்த பல பழைய ஒப்பந்தங்கள் – அமுல் பால் வினியோகம், கப்பல் போக்குவரத்து என பலவும் – புதிய நிறுவனங்களுக்கு மாற்றி விடப்பட்டன. உள்ளூர் மக்களின் நிரந்தரமற்ற அரசு வேலைகள் ஒழிக்கப்பட்டன. 150 கோடிக்கு புதிய கட்டுமான, கட்டிடப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

டையூ-டாமன், தத்ரா-நாகர் ஹவேலி தீவுகளில் இறக்கி விடப்பட்ட நிர்வாகிகள் தற்போது இலட்சத் தீவுகளுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கு செய்தது போலவே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர். தீவின் பூர்வகுடிகளின் உணவு, வேலை, பொருளாதாரம் என அனைத்தும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. பாசிச கும்பலின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் வேகமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.

கொரோனா முதல் அலையில் இங்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. பிரஃபுல் படேல் பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகளால் 65,000 மக்கள் தொகை கொண்ட இங்கு இன்று தினமும் 1,000 பேருக்கு மேல் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று தொடங்கியதும் சாவு எண்ணிக்கை கூடிக் கொண்டுள்ளது.

படிக்க :
♦ #Savelakshadweep : ஒன்றிய அரசின் புதிய வரைவுச் சட்டங்களை எதிர்த்து இலட்சத்தீவு மக்கள் போராட்டம் !
♦ இலட்சத் தீவை அபகரிக்கத் துடிக்கும் மோடி அரசு || பு.மா.இ.மு கண்டனம்

அமைதியான அந்தத் தீவு மக்கள் தமது தீவின் சுற்றுச் சூழலைக் காப்பாற்ற மட்டுமல்ல, தமது வாழ்வை, வாழ்வாதாரத்தைக் காக்கவும் போராடி வருகின்றனர். வழக்கம் போல மக்கள் வாழ்வைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கான சேவைகளை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளது பார்ப்பன இந்து மதவெறி பாசிச கும்பல்.

மக்களின் போராட்டத்தைக் கண்டு கேரள உயர் நீதிமன்றம் தனது 22-06-’21 தேதிய தீர்ப்பு மூலம் பிரஃபுல் படேலின் அவசர சட்டங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதை மட்டும் நம்பி இருக்காமல் மக்கள் தமது விடாப்பிடியான உறுதியான போராட்டத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்!


நாகராசு
செய்தி ஆதாரம் : The Wire, Countercurrents.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க