னியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்து வந்துள்ளது. கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் சரிவடைந்த நிலையில், கட்டணக் கொள்ளையை நிறுத்தவில்லை. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை காரணமாகவும், இந்த கொரோனா கால பொருளாதார பாதிப்பின் காரணமாகவும் அரசு பள்ளிகளை நோக்கி நடுத்தர மக்கள் படையெடுக்கின்றனர்.

தமிழகத்தில் 12,600-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2019-2020 கல்வியாண்டில் நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தில் 75%-ஐ மட்டுமே பெருந்தொற்று காலத்தில் தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எந்த தனியார் பள்ளிகளும் பின்பற்றவில்லை.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்
♦ ஆன்லைன் கல்வி : 71% சாலையோரம் வசிக்கும் மாணவர்கள் பாதிப்பு

கடந்த மே மாதம் தி.மு.க ஆட்சியமைத்ததை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பெரும்தொற்றுக் காலத்தில் 75% கல்விக் கட்டணம் மட்டுமே வாங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

எனினும் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை நின்றதாக தெரியவில்லை.  பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து தனியார் பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே நடத்தி வருகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை, வாகனக் கட்டணம், சிறப்புக் கட்டணம், பாடப் புத்தகக் கட்டணம் என்று அனைத்தையும் சேர்த்து முழு கட்டணத்தையும் செலுத்துமாறு தனியார் பள்ளி நிர்வாகத்தால் பெற்றோர்கள் நிர்பந்திக்கப் படுகிறார்கள். கட்டணம் செலுத்தாவிட்டால், ஆன்லைன் வகுப்பில் இருந்து சம்மந்தப்பட்ட மாணவர்களை துண்டித்து விடுவது போன்ற செயல்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த கொரோனா காலத்தில் நாங்கள் மிகவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளோம். எங்களால் எப்படி முழுகட்டணத்தையும் செலுத்த முடியும் என்று பல பெற்றோர்கள் வேதனைக் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

“நான் மிகப் பெரிய தனியார் பள்ளிகள் என் குழந்தைகள் இருவரை சேர்த்து படிக்க வைத்து வருகிறேன். நான் சம்பாதிக்கும் பாதியை கல்விக் கட்டணத்தில்தான் செலுத்தி வருகிறேன். கொரோனா காலத்திற்கு முன்பாவது எனக்கு லாரி ஓட்டும் வேலைகள் அதிகம் இருக்கும் நான் கல்விக் கட்டணத்தை செலுத்தி விடுவேன். ஆனால், கொரோனா காலத்தில் எனக்கு அதிகமாக லாரி ஆடர்கள் வருவதில்லை. என்னால் கல்விக் கட்டணத்தையும் செலுத்த முடியவில்லை.

என் பிள்ளைகள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பில் படிப்பதால், கல்விக் கட்டணத்தை குறைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், முழுக்கட்டணத்தை செலுத்த சொல்கிறார்கள் ” என்கிறார் சென்னையை சேர்ந்த ஒரு லாரி உரிமையாளர்.

“அதிக கட்டணம் வசூலிப்பதாக எந்த தனியார் பள்ளிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான கையேடு கட்டாயம் இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். தாங்கள்  வாங்கும் கட்டணங்களின் விவரங்களை தங்கள் பள்ளிகளின் பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும். அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகிறார்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 281 சென்னை மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2018-2019 கல்வியாண்டில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் பயின்றுள்ளனர்.

சென்ற 2020-2021 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் மொத்தம் 27,843 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது இதற்கு முன் இருந்த கல்வியாண்டை விட 33 சதவீதம் அதிகம். இதில் தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இருந்து 14,763 மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

2021-2022 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் 14-ஆம் தேதிதான் துவங்கியது ; இது செப்டெம்பர் மாதம் வரை நடைபெரும். தற்போது ஜூன் 28-ஆம் தேதி விவரப்படி 15 நாட்களே முடிவடைந்த நிலையில் 14,161 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் 9,305 மாணவர்கள் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்தவர்கள் என்கிறார்கள் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள்.

சென்ற 2020-2021 கல்வி ஆண்டிலும் சரி, தற்போது துவங்கிய 2021-2022 கல்வி ஆண்டிலும் சரி அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்வதற்கான காரணம் அரசு பள்ளிகளில் தான் தன் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தினால் அல்ல; தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை மற்றும் கொரோனா உருவாக்கிய பொருளாதார பாதிப்பு ஆகிய காரணங்களாலேயே அரசு பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் வருகிறார்கள்.

எனவே, பெற்றோர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவில் பெற்றோர்கள் அளித்ததை கூடுதல் கட்டணங்களை தனியார் பள்ளி முதலாளிகளிடம் இருந்து வசூலித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு வழங்க வேண்டும். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும். அரசு, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி தரம் உயர்த்த வேண்டும்.

இவையே எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியை உறுதிபடுத்தும் தீர்வாக இருக்க முடியும்.


சந்துரு
செய்தி ஆதாரம் : தினமணி (1.7.2021)

1 மறுமொழி

  1. மக்களுக்கான அரசாக தன்னை முன்னிறுத்தும் திமுக நடவடிக்கை எடுக்குமா?

Leave a Reply to ashak பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க