த்ம சேஷாத்திரி பள்ளியின் ஆசிரியர்களான ராஜகோபால், கெவின் ராஜ் ஆகிய பாலியல் பொறுக்கிகளை பள்ளியில் படிக்கும் இன்னாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அம்பலப்படுத்தத் துவங்கிய நாள் முதல் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளிலும் நடந்து வந்த இத்தகைய பாலியல் பொறுக்கித்தனங்கள் அனைத்தும் அம்பலமாகத் துவங்கின.

சிவசங்கர் பாபா எனும் ஆன்மிகக் கிரிமினல், தாம் நடத்தும் பள்ளியின் ஆசிரியர்களின் உதவியுடனே மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் அம்பலமானது. இச்சம்பவம் இதுவரை அந்தக் கிரிமினலை கடவுளாக நம்பிவந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படிக்க :
♦ PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !
♦ பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்

இந்தப் ‘பெரிய இடத்து’ ஆதரவு பெற்ற கிரிமினல்கள், அம்பலமாகும்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டாலும், பெண்களுக்கு எதிராக அன்றாடம் நடத்தப்படும் இணையவழி பாலியல் துன்புறுத்தல்களும், நேரடி பாலியல் வன்முறைகளும் செய்தித் தாள்களில் வந்து கொண்டே இருக்கின்றன.

ஜூலை 7, 2021 அன்றைய செய்தித்தாளில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் குறித்த செய்திகள் வந்துள்ளன.

திருச்சியை சார்ந்த ஒரு இளைஞன் இன்ஸ்டாகிராம் செயலியின் மூலமாக நடிகை ஒருவருக்கு ஆபாச குருஞ்செய்திகள் அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளான். இன்ஸ்டாகிராம் செயலியின் மூலம் அறிமுகமான பள்ளி மாணவியை படவாய்ப்பு தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்முறை செய்த இயக்குனர் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு கோவளம் அருகே உள்ள ரிசாட்டிற்கு நண்பர்களை அழைத்து சென்று, அங்கு வந்த பள்ளி மாணவிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்தச் செய்திகள் எல்லாம் ஒரே நாளில் வெளிவந்த செய்திகள். ஆனால், வெளிவராத செய்திகளின் எண்ணிக்கை இதை விட அதிகம் என்கிறது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் கணக்கு.

000

இந்தியாவில் நாளுக்குநாள் பாலியல் சீரழிவுக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இத்தகைய பாலியல் குற்றங்கள் அதிகரிக்க, கையடக்க அலைபேசியிலேயே காணக் கிடைக்கும் ஆபாச வலைத்தளங்களும் காணொலிகளும் முக்கியப் பங்காற்றுகின்றன.

அரசு ஆபாச வலைத் தளங்களுக்குத் தடை விதித்தாலும், புதிய புதிய தளங்களின் மூலமாகவும், மொபைல் வி.பி.என். மூலமாகவும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் எளிதாக எட்டக் கூடியதாகவே இன்னமும் ஆபாச வலைத்தளங்கள் இருக்கின்றன.

போர்னோ தளங்கள், நிர்வாண ஆபாச காணொலிகளை ஒருபுறம் வழங்கிக் கொண்டிருக்க மற்றொருபுறம், ஆன்லைன் மெய்நிகர் பாலியல் களியாட்டங்களை பணம் கட்டி பார்க்கும் வகையில் பல்வேறு ஆபாச இணையதளங்களும், செயலிகளும் வந்துள்ளன.

இவையெல்லாம் திரைமறைவில் நடந்து வரும் பாலியல் சீர்கேடுகள் எனில், வெளிப்படையாக பல்வேறு பாலியல் சீரழிவுகளும் பெறுகிவருகின்றன. டிக்டாக் போன்ற செயலிகள் மூலம், இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது, ஆபாச உடல் அசைவுகள், நடனங்கள் ஆகியவற்றின் மூலம் தங்களது பார்வையாளர்களை அதிகரித்துக் கொள்வது, அதனை யூடியூப் சேனல்களில் ஏற்றி அதன் மூலம் வருவாய் பெருக்கும் கூட்டம் தனியாக இருக்கிறது. இத்தகைய காணொலிகள், மிகவும் இயல்பானதாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலம் வருகின்றன.

இதைத் தவிர்த்து யூடியூப் சேனல்கள் கல்லூரி மாணவர்கள், மாணவிகளிடம் (பணம் கொடுத்து செட்டப் செய்யப்பட்ட நடிகர்களிடமும்) ஆபாச கேள்விகளைக் கேட்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த வகையான காணொலிகளும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பைப் பெறுகின்றன. அவர்கள் மத்தியில் பிரபலமாக ட்ரெண்ட் ஆகின்றன. இவை அனைத்தும் பெண்களைப் பண்டமாக்குவதன் மூலம், பெண் ஒரு நுகரப்பட வேண்டிய பாலியல் பண்டம் என்ற கருத்தையே மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கின்றன.

000

இப்படி முழுக்க முழுக்க பெண்களை போகப் பொருளாகவும், நுகர்வுக்கான அழகுப் பதுமைகளாகவும் காட்டுவதும் காலங்காலமாக நடந்தாலும், தற்போது கையடக்க செல்போன்கள் வந்த நிலையில் அது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது.

கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் பல மாதங்களாக இயங்காத சூழலில், பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன், கணினி, இணையம் ஆகியவற்றை பயன்படுத்துவது தவிர்க்கவியலாததாக மாறிவிட்டது.

இத்தகைய ஆபாச தளங்கள், யூடியூப் சேனல்கள் விடலைப் பருவ பள்ளி, கல்லூரி மாணவர்களை வெகுவாக ஈர்க்கின்றன. மேலும், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்புள்ள நடுத்தரவர்க்க இளைஞர்களுக்கும் இத்தகைய தளங்கள் சரணாலயமாக இருக்கின்றன.

இவை, அவர்களின் சமூக உணர்வை மழுங்கடித்து அவர்களை பாலியல் வெறியுணர்வு கொண்டவர்களாக மாற்றுகின்றன. இதிலிருந்து இளைஞர்களை மீட்பதுதான் அரசினுடைய மிகவும் முக்கியமான கடமையாகும்.

இத்தகைய பாலியல் சீர்கேடுகளுக்கு ஆளாகும் இளைஞர்களுக்கு பணி மூலமாகவோ, பணவசதி மூலமாகவோ ஒரு தனிச்சிறப்பான அந்தஸ்த்து கிடைக்கும் போது அவர்கள் தான் ராஜகோபாலனாகவும், கெவினாகவும், சிவசங்கர் பாபாவாகவும் உருவாகிறார்கள். அப்படி அந்தஸ்து கிடைக்காதவர்கள், ‘ஹாசினிகளைக்’ குறிவைக்கும் ‘தஷ்வந்த்களாக’ மாறுகின்றனர்.

படிக்க :
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
♦ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

பாலியல் சீர்கேடுகளை சரளமாக சமூகத்தில் அனுமதித்துவிட்டு, அதன் விளைவுகளுக்கு மட்டும் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்குத் தொடுத்து நடவடிக்கை எடுப்பது ஒருபோதும் பயனளிக்கப் போவதில்லை.

இளம் மாணவர்கள், இளைஞர்களின் மனதில் ஆபாச கருத்துக்களையும், சிந்தனையையும் தூண்டிவிடும் அனைத்து தளங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்குவதில் அரசு அதிக அக்கறை காட்டத் தவறினால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


சந்துரு
செய்தி ஆதாரம் : தினகரன் நாளிதழ் – ஜூலை 7, 2021