விசாரணைக் காலத்தில் சிறையில் இருக்கக் கூடியவர்களின் உரிமைகள் பற்றிய விவாதமானது பழங்குடியின மக்களின் உரிமை போராளியான பாதிரியார் ஸ்டான் சுவாமி நீதிமன்ற காவலில் மரணம் அடைந்ததன் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஊபா (UAPA) சட்டத்தின் கெடுபிடி தன்மையானது, இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் பிணை பெறுவதை மென்மேலும் கடினமாக்குகிறது. இப்படிப்பட்ட வழிமுறைகளே பாதிரியார் ஸ்டான் சுவாமி மருத்துவமனையில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் உள்ள  விசாரணை காலத்திலேயே இறந்து போனதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த துயரமிக்க இறப்பானது, இதுபோல சிறைப்படுத்தப்பட்ட ஏனையோரின் விடுதலையையும் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எல்கர் பரிஷத் வழக்கில் 15-க்கும் மேற்பட்டோர் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமாக கருதப்படும் ஊபா-வில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

படிக்க :
♦ ஊபா (UAPA) : செயற்பாட்டாளர்களை செயலிழக்க செய்வதற்கு தான் || அருந்ததி ராய்
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா ?

ஊபா-வின் தோற்றமும் ஆளுகையும்

1960-களில் கெடுபிடி நிறைந்த கருப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டிய அவசியம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டது. நக்சல்பாரி-யில் வெடித்த உழவர் எழுச்சியானது அதை மென்மேலும் விரிவுபடுத்தியது எனலாம். 1966-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி குடியரசுத் தலைவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் என்ற ஒரு அவசரச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது அச்சட்டமானது, சட்டவிரோத நடவடிக்கைகள், அமைப்புகள், தனிநபர்கள் மீது கடும் தடையை ஏற்படுத்தும் வகையில்   உருவாக்கப்பட்டிருந்தது. சுதந்திர நடவடிக்கையை பாதிக்கக் கூடிய அந்த சட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் அச்சட்டமானது திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.

1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம் என்ற ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இதற்கு முந்தைய முன்பு கொண்டு வந்த சட்டத்துடன் ஒத்தாக இல்லை என்றும் கூறப்பட்டது.

இச்சட்டத்தின் நோக்கமும் அதன் எல்லைகள் விரிவடைந்த விதமும்

இச்சட்டமானது ஒரு அமைப்போ அல்லது நிறுவனத்தின் தனிப்பட்ட நபர்களோ சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் பொழுது அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை நடைமுறைப்படுத்துகிறது. அதாவது எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும், கையெழுத்திடுவதன் மூலமும், ஆதரவளிப்பதன் மூலமும், இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிப்பவை என்று கருதும் பொழுது அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்பதை வலியுறுத்துகிறது.

ஊபா-விற்கு முன், குற்றவியல் நடைமுறை சட்டம் (திருத்தம்) 1952 ஆனது ஒரு அமைப்பை சட்டவிரோதமாக்குவது பற்றி கூறுகிறது. இச்சட்டத்தை கூர்ந்து நோக்கிய உச்ச நீதிமன்றமானது ஒரு அமைப்பை தடை செய்வதற்கு கூறப்பட்ட வழிமுறையானது நீதியின் பாற்பட்டதாக இல்லை என்று தனது கருத்தை தெரிவித்தது. எனவே, ஓர் அமைப்பை சட்டவிரோதமாக முதற்கட்டமாக அறிவித்து அதை உறுதிப்படுத்துவதற்கான காலத்தை ஆறு மாதங்களாக நிர்ணயித்து அதற்காக ஒரு தீர்ப்பாயமானது சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்டது.

சட்டவிரோத செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கான தண்டனைகள்,  நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தல், பொருளாதார பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தல் (நிதி பாதுகாப்பு, உணவு, வாழ்வாதாரம், ஆற்றல் சூழலியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு) மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல்,  சட்டவிரோத பண பரிவர்த்தனை ஆகிய குற்றங்களையும் உள்ளடக்கிய வகையில் 2004 மற்றும் 2013 ஆகிய சட்டத்திருத்தங்களுக்குப் பின்னர் ஊபா சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

ஒரு அமைப்பை முதல்கட்டமாக இரண்டு வருடம் தடை செய்யலாம் என்று இருந்த கால அளவானது 2013 சட்ட திருத்தத்துக்கு பிறகு  ஐந்து வருடங்களாக நீட்டிக்கப்பட்டது.  2002-ம் ஆண்டு பொடா திரும்பப் பெறப்பட்ட பின்னர், ஊபா-வின் எல்லையானது பயங்கரவாத நடவடிக்கைகளின் மீது பரந்த அளவில் விரிவுபடுத்தப்பட்டது. 2004-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானங்களை ஒட்டி பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கங்களுக்கு இடையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, நிதி நடவடிக்கை போன்ற பல தேவைகளுக்காக 2013-ம் ஆண்டு மீண்டும் திருத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, தனி நபர்களையும் பயங்கரவாதிகளாக அடையாளம் காண அரசுக்கு அதிகாரம் அளித்தது.

ஊபா-விற்கும் குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கும் உள்ள வேறுபாடு

போதைப்பொருள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள், சிறப்பு சட்டங்களோடு ஒப்பிடுகையில் ஊபா-வானது, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ரிமாண்டிற்கான கால அளவானது மற்ற சட்டங்களின் கீழ் 15 நாட்களாக இருக்கும் பொழுது ஊபா-வில் 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பானது 90 நாட்களில் இருந்து 180 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

போதுமான காரணங்களை அரசுத்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு ஏற்புடையதாக கூறும் பட்சத்தில் மேலும் 90 நாட்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு  நீட்டிக்கப்படலாம்.

மேற்கண்ட காரணங்களினால் குற்றம்சாட்டப்பட்டவர் பிணையில் வெளியே வருவது மிகவும் கடினமான ஒன்றாகி விடுகிறது.

படிக்க :
♦ ஊபா பிணை மறுப்பு : காஞ்சன் நானாவரெ சிறையில் மரணம்
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !

பிரிவு 43D(5) ஆனது, குற்றம்சாட்டப்பட்டவர் மீது குற்றச்சாட்டுக்கான முதன்மை முகாந்திரம் இருக்கும் பொழுது நீதிமன்றம் பிணை வழங்குவது இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், பிணை மனுக்களை பரிசீலிக்கும் போது சான்றுகளை அளவுக்கதிகமாக ஆராயத் தேவையில்லை. ஆனால், நிகழ் தகவுகளின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் என்று கூறியுள்ளது.

விசாரணை முடிவடையும் வரை எந்த ஒரு நபராலும் எளிதில் பிணையில் வெளியே வர முடியாது. ஊபா சட்டத்தின் இந்த கடும் வழிமுறைகள் காரணமாகவே இதனை மனித உரிமை ஆர்வலர்கள் கருப்புச் சட்டம் என்கிறார்கள்.


கட்டுரையாளர் : k.வெங்கடரமணன்
தமிழாக்கம் : மருது
செய்தி ஆதாரம் : The Hindu

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க