ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மராட்டிய மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் உரிமை செயற்பாட்டாளரான காஞ்சன் நானாவரெ, இன்னும் விசாரணையே துவங்காத நிலையில், சிறையிலேயே மரணமடைந்துள்ளார்.
சமூகச் செயற்பாட்டாளரான காஞ்சன் நானாவரெ-யை மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டில் கைது செய்தது போலீசு. பிறவியிலேயே இதய நோயோடு பிறந்த காஞ்சன் நானாவரெ கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையில் நீதிமன்றக் காவலில் விசாரணைக் கைதியாக இருந்து வந்துள்ளார்.
படிக்க :
♦ “ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!
♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?
செயற்பாட்டாளர் நானாவரெ மற்றும் அவரது கணவர் அருண் பெல்கே ஆகிய இருவரையும் ஆறாண்டுகளுக்கு முன்னர் ஊபா சட்டத்தில் கைது செய்தது போலீசு. அவர்கள் இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததாகக் கூறி அவர்கள் இருவரையும் மாவோயிஸ்ட்டுகளின் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பல்வேறு வழக்குகளைத் தொடுத்தது போலீசு. செயற்பாட்டாளர்களை ஒடுக்க அவர்கள் முசுலீமாக இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது குற்றம்சுமத்த போலீசு வைத்திருக்கும் ஆயுதம் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு என்பதுதான்.
இந்த வகையில் நானாவரெ மீது மொத்தம் 9 வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளில் 6 வழக்குகளில் ஆதாரமில்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இன்னும் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது கட்சிரோலி தாக்குதல், புனே மற்றும் கொண்டியா வழக்குகள் விசாரணையில் உள்ளன.
கடந்த அறு ஆண்டுகளில் பல முறை பிணை கேட்டு விண்ணப்பித்துள்ளார் காஞ்சன் நானாவரே. ஒவ்வொரு முறையும் பிணை மறுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவரது வழக்கறிஞர் பார்த் ஷா. கடந்த அக்டோபர் மாதத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மோசமாகி வரும் நானாவரெவின் உடல்நிலையை முன் வைத்ததோடு கூடுதலாக அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவர்களின் பரிந்துரையையும் முன் வைத்து பிணை கேட்டுள்ளனர். ஆனால் அந்த முறையீடு இன்னும் முழுமையாக விசாரித்து முடிக்கப்படவில்லை.
மும்பை உயர்நீதிமன்றம் அவரது பிணை கோரிக்கை மனுவை கேட்பிற்கு எடுத்துக் கொண்ட போது, இருதய மாற்று அறுவை சிகிச்சை தான் அவர் உயிர் வாழ்வதற்கு ஒரே தீர்வு என்று வலியுறுத்தப்பட்டது. நீதிமன்றமும் அவரது உடல் நிலையை கண்காணிக்க ஒரு குழுவை நியமித்தது. ஆனால் அந்தக் குழு இதில் கவனத்தை செலுத்த பல மாதங்கள் எடுத்துக் கொண்டது. அச்சமயத்தில்தான் காஞ்சன் நானாவரே மரணமடைந்துள்ளார்.
ஜனவரி 24-ம் தேதிதான் அருண் பெல்கேயின் குடும்பத்தாருக்கு காஞ்சன் நானாவரேயின் உடல்நிலை மோசமாகி வருவது குறித்து சிறைத்துறை எழுதிய கடிதம் வந்து சேர்ந்தது. அதே நாளின் பிற்பகுதியில் அவரது குடும்பத்தினருக்கு வந்த தொலைபேசி அழைப்பு காஞ்சன் மரணித்த செய்தியைக் கூறியிருக்கிறது.
காஞ்சன் நானாவரெ கடந்த 2004- ம் ஆண்டு முதல் மாணவர்கள் உரிமைச் செயற்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். அவருடன் அன்று முதல் பணியாற்றி வந்த அம்ருதா சொனூலே தாங்கள் இருவரும், பிற நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் இணைந்து விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் தலித் சமூகத்தினரின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியதை நினைவு கூர்கிறார்.
“தேசபக்தி யுவா மன்ச்” எனும் அமைப்பில் இணைந்து இப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பின்னாட்களில் “தேசபக்தி யுவா மன்ச்” அமைப்பு மாவோயிஸ்ட்களின் முன்னணி அமைப்பு என குற்றம் சாட்டப்பட்டது. நானாவரெயும் அவரது கணவர் அருண் பெல்கெயும் 2008-ம் ஆண்டில் முதன்முறையாக கைது செய்யப்பட்டனர். சுமார் 7 மாதங்கள் வரை ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களிருவரும் அதன் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சிறையில் காஞ்சன் நானாவரெயின் உடல்நிலை பாதிப்படைந்து அவர் சசூன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை ஒட்டி, அவரைச் சந்திக்க அம்ருத் சொனுலே மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். காஞ்சனை சந்திக்க அவரை அனுமதிக்கவில்லை. மாறாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பது குறித்து மட்டும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அடிக்கடி தலைவலி வந்தது குறித்து அவர் குறிப்பிட்டதாகவும், அவருக்கு இரத்த உறைவுகள் ஏற்பட்டது குறித்தும் தெரிவித்துள்ளனர். அருண் பெல்கேவுக்கும் காஞ்சன் நானாவரேயை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவில்லை. அருண் மரணப்படுக்கையிலிருக்கும் தனது துணைவர் காஞ்சனை சந்திக்கும் முன்னரே காஞ்சன் மரணித்துவிட்டார்.
இதுவரை போடப்பட்ட எந்த வழக்குகளிலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.
படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !
சரியாகச் சொல்வதானால், ஒரு நிரபராதியை சிறையில் அடைத்து அவருக்கான முறையான மருத்துவத்தை மறுத்து அவருக்கு மரண தண்டனையை வழங்கியிருக்கிறது போலீசு மற்றும் நீதிமன்றக் கூட்டணி. அவர் செய்த ஒரே “குற்றம்” மாணவரகள், பழங்குடியின, தலித் மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்தது மட்டுமதான். அதற்குப் பரிசுதான் ஊபா மற்றும் மருத்துவம் மறுக்கப்பட்டதன் விளைவாக நடத்தப்பட்ட படுகொலை.
சமூகச் செயற்பாட்டாளர்களான வரவர ராவ், ஆனந்த் தெல்தும்டே, ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ் உள்ளிட்டவர்களை பீமா கொரேகான் வழக்கில் ஜோடித்து இணைத்து அவர்களை ஊபா சட்டத்தில் கைது செய்து தற்போது பிணை மறுத்து வருகிறது. சிறைக்குள் விசாரணைக் கைதியாக பல்லாண்டுகள் அடைத்து வைத்து அவர்களது செயல்பாடுகளை முடக்குவதோடு, மன உளைச்சலாலும் உடல் நலிவாலும் அவர்கள் மரணிக்க வேண்டும் என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் !
கர்ணன்
செய்தி ஆதாரம் : The Wire
ஆட்சியாளர்களும் நீதித்துறையும் ஒன்றானால், நாட்டில் கொடுங்கோண்மை நிலவும். சமூகச் செயல்பாட்டாளர்கள் குறிவைக்கப் படுவதும், ஆர்னாப் போன்றோர் விடுவிக்கப் படுவதும் வலதுசாரி பார்ப்பனர்களிடம் ஆட்சி அதிகாரம் முழுமையாகச் சென்றால் என்ன நடக்கும் என்பதற்கான சான்று. அவர்களிடம் குற்ற உணர்வு இல்லை என்பதும், சமூகச் செயல்பாட்டாளர்கள் யாருக்காக போராடுகின்றார்களோ அம்மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதுவும் சிந்திக்கத்தக்கன.