கஸ்டு 2-ஆம் தேதியன்று ஒன்றிய அரசால் பொது காப்பீட்டு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் 51 சதவீத பங்குகளை ஒன்றிய அரசு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற விதியை இந்த மசோதா ரத்து செய்கிறது. மேலும், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கும் வழிவகுக்கிறது.

கடந்த ஜூலை 30-ம் தேதியன்று மக்களவையில் வரைவறிக்கையாக இந்த காப்பீட்டு மசோதா முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் காப்பீட்டு துறையில் உள்ள அரசின் பங்குகளை தனியாருக்கு விற்கவும், காப்பீட்டுத் துறையில் தனியார் மூலதனத்தை கொண்டுவரவும் முயல்கிறது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு இந்த வரைவு சட்டத்தின் மூலம் அடிகோலுகிறது ஒன்றிய அரசு.

படிக்க :
♦ LIC தனியார்மயம் : பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் மத்திய அரசு
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

இந்த நிதியாண்டில் எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்று நிதிதிரட்டப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்ததன் ஒரு அங்கமாகவே இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

1956-ம் ஆண்டு மக்கள் சேவைக்காக பல்வேறு அரசு காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து, அரசு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி துவங்கப்பட்டது. அது மிகவும் குறைவான முதலீட்டு தொகையுடன் தான் செயல்படத் துவங்கியது.

எல்.ஐ.சி நிறுவனம் நாட்டின் பல்வேறு நகரங்கள், கிராமங்கள் என அதிகப்படியான கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது. இது தவிர வெளிநாடுகளில் தங்கள் கிளைகளை நேரடியாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் நிறுவியுள்ளது.

தற்போது 2019-2020 விவரத்தின்படி, இந்த நிறுவனத்தில், 13.23 லட்சம் பேர் நேரடியாக பணியில் இருக்கிறார்கள். காப்பீட்டுதாரர்களுக்கு உறுதியாக வழங்க பொறுப்பெடுத்துக் கொண்ட நிதி ரூ.58,86,035.01 கோடி ஆகும். 2019-2020-ம் ஆண்டுகளுக்கான ஆயுள் நிதியாக ரூ.31,14,496.05 கோடியை தன்னகத்தே கொண்டிருந்தது எல்.ஐ.சி.

இந்த நிறுவனம் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி முதலீடு செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வருவாயில் 5 சதவீதம் அரசுக்கு தரப்படுகிறது. மீதம் 95 சதவீதம் பாலிசி தாரர்களுக்கே வழங்கப்படுகிறது. இப்படி நாட்டின் இரண்டாவது முக்கிய நிதி நிறுவனமாக விளங்குகிறது எல்.ஐ.சி.

மத்திய, மாநில அரசுகளின் கடன் பத்திரங்கள், பல்வேறு நிறுவனங்களின் பங்குகள், அரசின் துறைகளுக்கான மேப்பாட்டுத் திட்டங்கள் என இதுவரை எல்.ஐ.சி நிறுவனம் ரூ.24,01,456.50 கோடி முதலீடு செய்துள்ளது.

ஒன்றிய அரசிடமிருந்த செயில் (SAIL) நிறுவனத்தின் 71 சதவீதம் பங்குகளையும், ஐ.டி.பி.ஐ நிறுவனத்திடமிருந்து 51 சதவீதம் பங்குகளையும் வாங்கி நிர்வகித்து வருகிறது எல்.ஐ.சி நிறுவனம்.

மேலும், பெல் நிறுவனத்தில் ரூ.2,685 கோடி, கோல் இந்தியா நிறுவனத்தில் ரூ.7,000 கோடி, இண்டியன் ஆயின் நிறுவனத்தில் ரூ.8,000 கோடி, ஜிஐசி நிறுவனத்தில் ரூ.8,000 கோடி, நியூ இண்டியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 6,500 கோடி, ஹச் ஏ எல் நிறுவனத்தில் ரூ.2,900 கோடி, ஒ.என்.ஜி.சி நிறுவனத்தில் ரூ.6,000 கோடி, என்.எம்.டி.சி நிறுவனத்தில் ரூ.9,928 கோடி, என்.டி.பி நிறுவனத்தில் ரூ.8,480 கோடி மதிப்பிலான பங்குகளையும் வாங்கியுள்ளது எல்.ஐ.சி நிறுவனம்.

இவை அனைத்தும் அந்த நிறுவனங்கள் திவால் நிலைமைக்குச் செல்லவிடாமல் தடுக்க தனது இலாபத்தில் இருந்து எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதைத்தவிர நான்கு புதிய கிளை நிறுவனங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ரூ.2.10 லட்சம் கோடி வீட்டுக்கடன் நிதியை வழங்கியுள்ளது. எல்.ஐ.சி பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.3,01,184 கோடி பரஸ்பர நிதியையும் விற்பனை செய்துள்ளது. எல்.ஐ.சி கடன் அட்டை நிறுவனம் ரூ.3,24,057 நிதியையும், எல்.ஐ.சி ஓய்வூதிய நிதி நிறுவனம் ரூ.1,12,027.68 கோடி நிதியையும் நிர்வகித்து வருகிறது.

இப்படி நாட்டின் ஒட்டுமொத்த அரசின் நிதி தேவையை ஒப்பீட்டளவில் பூர்த்தி செய்துவரும் செல்வ வளம் நிறைந்த எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கிறது ஒன்றிய அரசு. இந்த நாட்டின் நிதியாதாரத்திற்கு என்றும் அள்ளிக் கொடுக்கும் “அமுத சுரபி”யாகவே செயல்பட்டு வந்துள்ளது எல்.ஐ.சி.

மொத்தத்தில் தங்க முட்டையிடும் வாத்தை அறுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விருந்து வைக்க எத்தனிக்கிறது அரசு. எல்.ஐ.சி விற்கப்படுவது என்பதற்கு அரசிற்கு ஆண்டுதோறும் எல்.ஐ.சி வழங்கி வரும் பல்லாயிரம் கோடி வருவாயை இழப்பது என்று பொருள்.

“பொதுமக்கள் மற்றும் எல்.ஐ.சி பணியாளர்களின் சம்மதம் இல்லாமல் எல்.ஐ.சி-யை தனியார்மயமாக்க அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது” என்கிறார் பொருளாதார நிபுணர் பி.எஸ்.எம்.ராவ்.

படிக்க :
♦ எல்.ஐ.சி தனியார்மயம் : 1 லட்சம் ஊழியர்கள் வெளிநடப்புப் போராட்டம் !
♦ LIC நிறுவனத்திற்கு 2000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய நீரவ் மோடி ! புதிய அதிர்ச்சி !

“எளிய மக்களுக்கும் அரசுக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த காப்பீட்டு நிறுவனங்களும் தனியார்மயப் படுத்தினால் அதன் சேவைகள் மக்களுக்கு கிடைப்பது நின்றுவிடும்” என்கிறார் தென் மண்டலப் பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆனந்த்.

அரசுக்கு வருமான இழப்பு என்பதைத் தாண்டி இனி பொதுமக்கள் எல்.ஐ.சி-யில் கட்டியிருக்கும் காப்புத் தொகைக்கு எந்த ஒரு அரசு உத்தரவாதமும் கிடையாது. தனியார் சிட் ஃபண்டுகளில் காப்பீட்டுத் தொகையை கட்டுவதற்குச் சமமானது.

கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கான கோடிக்கணக்கான மக்களின் காப்பீட்டு நிதியை சூறையாடக் களமிறங்கியுள்ளது பாசிச மோடி அரசு.


சந்துரு
செய்தி ஆதாரம் : தினமணி, தமிழ் இந்து