”ஆகஸ்ட் – 15 சுதந்திரமா? அடிமைத் தனமா?” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக அறைக்கூட்டம் 15.8.2021 மாலை 6 மணிக்கு பென்னாகரத்தில் நடைப்பெற்றது.

புமாஇமு மாவட்ட அமைப்பாளர், தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். அவர் உரையில், இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது. இந்த நாட்டை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், காவி பாசிஸ்டுகளுக்கும் சுதந்திரம் உள்ளது. மக்களுக்கு உரிமைகளை கேட்டு போராடுவதற்கும், விவசாயிகள் போராடுவதற்கும் சுதந்திரம் இல்லை.

கல்வியை காவிமயமாக மாற்றம் செய்து, நீட், புதியக் கல்வி கொள்கை ஆகியவற்றை மாணவர்கள் மீது கட்டாயமாக திணித்து வருகிறது மோடி அரசு. பொதுத்துறைகளை சூறையாடி நாட்டை கொள்ளையடித்து, சீரழித்து வருகிறது. நாடாளுமன்றங்களில் தொடங்கி நாடு முழுவதும் மதவெறியை தூண்டுவது, “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை வைத்து சிறுபாண்மை மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவது, எதிர்த்துப் போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைப்பது, கொடூரச் சட்டங்களை இயற்றி பொதுச் சொத்துகளை  கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவது என்கிற பாசிச வேலையை செய்து கொண்டே, இதுதான் தேசபக்தி என மக்களை பிளவுபடுத்தி வருகிறது மோடி கும்பல்.

நமக்கு இன்று ஒரே பாதைதான் இருக்கிறது. அது பகத்சிங் வழியிலான பாதை, இது கார்ப்பரேட்டுகளுக்கான சுதந்திரம், மக்களுக்கு போலி சுதந்திரம், அடிமைத்தனம் இதில் நமக்கென்ன கொண்டாட்டம்? என்பதை விளக்கி தலைமை உரையை நிறைவு செய்தார்.

This slideshow requires JavaScript.

அடுத்ததாக சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம், மண்டல குழு உறுப்பினர், தோழர் அருண், தனது உரையில், 1947-ல் நடைப்பெற்ற நாடகத்தைதான் சுதந்திரம் என்று கொண்டாடுகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது?

இந்தியாவில் புரட்சிகரமான மாற்றம் வந்துவிட்டால் நாம் கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தனக்கு ஏற்ற அடிமைகளை உருவாக்கி வைத்தனர். நேரு போன்ற தேர்ந்தெடுத்த அடிமைகளை கொண்டு புதிய வகையில் மாற்றம் கொண்டுவந்தது பிரிட்டிஷ். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற உழைக்கும் மக்கள் போராடி உயிர்நீத்துள்ளனர். பல ஆயிரம்பேர் சிறையில் அடைக்கபட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இப்படி பல ஆயிரம் பேரின் உயிர்த்தியாகத்திலும் இந்திய சுதந்திரத்தை சோசலிச கனவுகளோடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட பகத்சிங்கும் அவரது சகதோழர்களும் உயிர் தியாகம் செய்தனர்.

இப்படி பலரின் தியாகத்தை மறைத்து பிரிட்டிஷுக்கு எதிரான புரட்சிகர எழுச்சிகளை அகிம்சை என்ற பெயரில் முடக்கிய காந்தியை மட்டும் முன்நிறுத்தி இன்று கொடியேற்றி இனிப்பு கொடுக்கின்றனர். 1947-ல் நாம் பெற்றதாக சொல்வது சுதந்திரமே அல்ல, அது அதிகார மாற்றம், மற்றொரு அடிமைதனத்தை நம் மீது திணித்த நாள் என்பதை வரலாற்று பூர்வமாக விளக்கி பேசினார். இறுதியாக புமாஇமு தோழர் வினய் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்,
6384569228.