சாதி பாகுபாடு இந்தியாவில் குழந்தை வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலைமையை எவ்வாறு பாதிக்கிறது?

லகில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. அதாவது, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப உயரம் உலகளாவிய வேறுபாட்டு விகிதத்தை விட (அதாவது ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்பிற்கு) கீழே உள்ளது. வளர்ச்சி குன்றுதல் என்பது “ஊட்டச்சத்து குறைபாடு, மீண்டும் மீண்டும் தொற்று மற்றும் பொறுத்தமற்ற உளவியல் தூண்டுதலால் குழந்தைகள் அனுபவிக்கும் பலவீனமான வளர்ச்சி” என வரையறுக்கப்படுகிறது.

இது ஏன் முக்கியமான விசயமாகிறது? ஏனெனில் குழந்தைப்பருவத்தின் தொடக்கத்தில் உள்ள மோசமான ஆரோக்கியத்தின் குறியீடுகள் டீனேஜ் மற்றும் பெரும்பாலும் இளமைப் பருவத்திலும் தொடர்கின்றன. நோஞ்சான் மற்றும் வளர்ச்சி குன்றிய தன்மை என்பது ஒருவரின் பிந்தைய வாழ்க்கையில் உடல்நலக்குறைவு மற்றும் இறப்பு, தொற்று அல்லாத நோய்கள், கற்றல் திறன் மற்றும் உற்பத்தித்திறன்  போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்  பாதகமான விளைவுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

உலகளவில் நான்கில் ஒரு குழுந்தை வளர்ச்சி குன்றியதாக உள்ளது என்று   வகைப்படுத்தப்பட்டிருக்க, இது ஒரு உலகளாவிய உடல் நலம் சார்ந்த சவாலாக கருதப்படுகிறது.

படிக்க :
♦ குழந்தை வளர்ப்பை முரணின்றி ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவது எப்படி ?
♦ உங்கள் குழந்தைகளின் புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன !

இது உடனடி நலன் சார்ந்த மூன்று முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, ஒரு வயது அல்லது ஐந்து வயதில் வளர்ச்சி குன்றியிருக்கும் ஒரு குழந்தை,  பருவ வயதில் வளர்ச்சி குன்றியிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வளர முடியும் என்பதற்கு என்ன வாய்ப்பு? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்த அளவிற்கு வளர்ச்சி குறைபாடு தொடர்ந்து நீடிக்கும்? இரண்டு, வளர்ச்சி குன்றல் என்பது உடல்நலக் குறைவுக்கான புறநிலை யதார்த்த  குறியீடாக இருந்தாலும், அதன் பிற விளைவுகள் என்ன?

குறிப்பாக, மனித மூலதனம் மற்றும் அகம் சார்ந்த நலனுக்கான தாக்கங்கள் என்ன? மூன்று, வளர்ச்சி குன்றலுடன் தொடர்புடைய காரணிகளின் தொகுப்பு என்ன? வளர்ச்சி குன்றலின் சாத்தியம் வெறுமனே செல்வம் மற்றும் வருமானத்தின் விளைவாக இருக்கிறதா அல்லது கொள்கை தலையீடுகளுக்கு மிகவும் பொருத்தமான மற்ற காரணிகளை அடையாளம் காண முடியுமா?

எங்கள் சமீபத்திய ஆராய்ச்சியில் இந்தக் கேள்விகள் அனைத்தையும் ஆராய்ந்தோம். குறுகிய விடைகளாவன: ஒன்று, ஐந்து வயதில் கடுமையாக வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்தியாவில் 15 வயதில் 74% அதிகமாக வளர்ச்சி குன்ற வாய்ப்புள்ளது. அதாவது ஆரம்பகால குழந்தைப்பருவ வளர்ச்சி குன்றல் மிகவும் தொடர்ந்து நீடிக்கிறது.

இரண்டு, ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி குன்றல் கணிதம் மற்றும் சொல்லகராதி ஆகியவற்றில் தகுதி பெறுதல் மற்றும் அறிவாற்றல் திறன்களை பாதிக்கிறது. அதேபோல் 15 மற்றும் 22 வயதில் அகநிலை சார்ந்த நல்வாழ்வை பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளின் ஆராய்ச்சி, குழந்தை பருவ வளர்ச்சி குன்றல் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்களையும் பாதிக்கும் என்று காட்டுகிறது.

இந்த கட்டுரையில் மூன்றாவது கேள்விக்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் அதற்கு செல்வதற்கு முன், நாம் ஒரு சர்வதேச சூழலில் இப்பிரச்சினையை  முன்வைக்க வேண்டும்.

இந்திய புதிர்

இந்தியாவில் வளர்ச்சி குன்றல் அதிகமாக ஏற்படுவது மட்டுமல்லாமல், சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 30 நாடுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில், இந்திய வளர்ச்சி குன்றல் நிகழ்வுகளின் சராசரி அதிகமாக உள்ளது.

குழந்தையின் உயரம் பொதுவாக வறுமையுடன் எதிர்மறையாக தொடர்புடையது. ஏனெனில்  வளர்ச்சி குன்றல் – நோஞ்சான் குழந்தை என்பது நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ஆகையால், இந்தியா சப்-சஹாராவை விட ஒரு பணக்கார நாடு என்பதால், சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளை விட இந்திய குழந்தைகள் குட்டையாக இருப்பது எளிதில் புரிந்துகொள்ள முடியாது. இந்த புதிர், “இந்தியன் புதிர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிர் தீர்க்க முயற்சித்த குறிப்பிடத்தக்க கல்வியியல் ஆய்வு கட்டுரை ஆவணங்களின் வடிவத்தில் தீவிர ஆய்வுக்கு வழிவகுத்தது (பொருளாதார அறிஞர்,  டீடன், 2007).

இந்த நிகழ்வுக்கான மேலோங்கிய விளக்கங்கள் பிறப்பு வரிசை மற்றும் மகன் விருப்பமாக (ஆண் பிள்ளை மோகம்) உள்ளது. (ஜெயச்சந்திரன் மற்றும் பாண்டே 2017): முதலாவதாக பிறந்த குழந்தைகள் வளர்ச்சி குன்றியதாக இல்லை. ஆனால், உயர சாய்வு (குள்ளமாதல்), குறிப்பாக பெண் குழந்தையாக இருந்தால்  இரண்டாவது குழந்தையிலிருந்து வினையாற்றுகிறது. பரவலாக இருக்கும் திறந்தவெளி மலம் கழித்தல், அதாவது, நோய் சூழல் (ஸ்பியர்ஸ், 2018); மற்றும் மரபணு வேறுபாடுகள் (பனகரியா, 2013). ஜெயச்சந்திரன் மற்றும் பாண்டே மற்றும் டீன் ஸ்பியர்ஸ் ஆகியோரால் வழங்கப்பட்ட சான்றுகள் மரபணு சார்ந்த விளக்கத்திற்கு எதிராக ஒரு தீவிரமான கேள்விக்குறியை எழுப்புகின்றன.

குழந்தையின் உயரத் தரவைப் பற்றிய எங்கள் முதல் பார்வை யாரும் உணராத ஒரு சித்திரத்தை வெளிப்படுத்தியது. மற்ற பல கட்டுரைகளில் கவனிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

படம் – 1

படம் 1 : துணை சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 30 நாடுகளின் தரவை உள்ளடக்கியது, அவை அந்த நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 132 மில்லியன் மக்கள் தொகை மற்றும் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 121 மில்லியன் மக்கள் தொகையை உள்ளடக்கியதாக ஒருங்கிணைந்துள்ளது. இந்தத் தகவல்கள் சமீபத்திய மக்கள் தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் (DHS) சமீபத்திய சுற்றிலிருந்து பெறப்பட்டவை; 2015-2016-லிருந்து இந்தியாவுக்கும், 2010-க்குப் பிறகு துணை-சஹாரா ஆப்பிரிக்காவிலிருந்தும் பெறப்பட்டவை.

படம் 1-இன் பேனல் A வயதிற்கான உயரத்தை குறிக்கிறது. *(HFA Z- ஸ்கோர்). இந்திய குழந்தைகள் HFA Z – மதிப்பெண் – 1.48 ஐக் கொண்டுள்ளனர், இது துணை – சஹாரா ஆப்பிரிக்காவின் சராசரி – 1.32-ஐ விட கூடுதலாக 0.16 நிலையான விலகல் அலகுகள் ஆகும். பேனல் பி-யில் வளர்ச்சி குன்றியத் தன்மையின் விகிதம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது: அதாவது, பி ஆனது உலக குறிப்பு சராசரிக்கு கீழே 2 நிலையான விலகல்களுக்கு மேல் உள்ள குழந்தைகளின் விகிதம். துணை சஹாரா ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தை பருவ வளர்ச்சி குன்றிய தன்மை 13% அதிகமாக இருப்பதை இந்த குழு காட்டுகிறது (36 எதிராக 31%). படத்தின் இந்த பகுதி முன்னர் பார்க்கப்பட்ட கட்டுரையால் நன்கு அறியப்பட்டதாகவும் மற்றும் பரவலாக பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் உள்ளது.

இது, உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி உயரத்திலிருந்து ஒரு குழந்தையின் உண்மையான உயரத்தின் நிலையான விலகல்களின்  எண்ணிக்கை..

காணாமல் போன  இணைப்பு: சாதிய சமூக அடையாளத்தின் பங்கு

இருப்பினும், இந்தியா-சப்-சஹாரா ஆப்பிரிக்காவின் ஒப்பீடு, இந்திய சமுதாயத்திற்குள் இருக்கும் முக்கியமான சமத்துவமின்மையை விவரிக்கிறது. படம் 1-இன் குழு C மற்றும் D-இல், துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய சமூக குழுக்களுக்கான சராசரி HFA Z-மதிப்பெண் மற்றும் வளர்ச்சி குன்றிய தன்மை விகிதங்களை நாங்கள் குறிப்பிடுகிறோம்: அதாவது, ஆதிக்க சாதி இந்துக்கள் (UC-இந்துக்கள்), பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி-எஸ்டி), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் ஆதிக்க சாதி முஸ்லிம்கள் (யுசி-முஸ்லீம்கள், அதாவது தங்களை எஸ்சி அல்லது ஓபிசி என அடையாளப்படுத்தாத முஸ்லிம்கள்).: இந்த நான்கு வழி வகைப்பாடு இந்திய சமூகத்தின் இரண்டு முக்கிய பிளவுகளுக்கு (சாதி மற்றும் மதம்) வடிவம் கொடுக்கிறது..

படம் 1-ன் குழு சி, வளர்ச்சி குன்றிய தன்மை தொடர்பான விவாதத்தில் இதுவரை தவறவிட்ட ஒரு முறையை வெளிப்படுத்துகிறது: மேல் சாதி (UC) இந்துக்களைத் தவிர அனைத்து குழுக்களுக்கும் உயரக் குறைபாடு, துணை-சஹாரா ஆப்பிரிக்க குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. குழு D அதே விஷயத்தை வித்தியாசமாக காட்டுகிறது: மேல்சாதி இந்து குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றியதன்மை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 31 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர். மேல்சாதி-இந்து குழந்தைகள் 26% வளர்ச்சி குன்றிய நிலையில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளை விட 5 சதவிகிதம் புள்ளிகள் குறைவாக இருப்பார்கள்.

எஸ்சி-எஸ்டி, ஓபிசி மற்றும் யுசி-முஸ்லீம் குழந்தைகளில் முறையே 40%, 36% மற்றும் 35% வளர்ச்சி குன்றியுள்ளது. இதனால், SC-ST, OBC-க்கள் மற்றும் UC- முஸ்லீம் குழந்தைகள் 14, 10 மற்றும் 9 சதவிகித புள்ளிகள் அல்லது 35-50%, UC- இந்து குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிக வளர்ச்சி குன்றியிருக்க வாய்ப்புள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் உள்ள சமூகக் குழுக்களிடையே குழந்தைகளின் உயரத்தில் உள்ள இடைவெளிகள் இந்தியா-சப்-சஹாரா ஆப்பிரிக்கா குழந்தை உயர இடைவெளியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம். முழு இந்தியா-துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் குழந்தை உயர இடைவெளியானது பின்தங்கிய குழுக்களின் குறைந்த குழந்தை உயரத்தால் கணக்கிடப்படுகிறது.

படம் 1-இல் காட்டப்பட்டுள்ள வடிவங்கள் “ஏன் இந்திய குழந்தைகள் ஆப்பிரிக்க குழந்தைகளை விட குறைவாக இருக்கிறார்கள்” என்ற கேள்வியானது” இந்தியாவிற்குள் உள்ள சமூக குழுக்களுக்கு இடையில் குழந்தையின் உயரத்தில் உள்ள இடைவெளிகள் ஏன் அதிகமாக உள்ளன?” என்ற கேள்வியால் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நாங்கள் எங்கள் சமீபத்திய ஆய்வில் இதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தரவு விவரணையில், இந்தியாவில் குழந்தைப்பருவ வளர்ச்சிக் குறைபாட்டில் சில முக்கிய அம்சங்களை நாங்கள் முன்வைக்கிறோம்.

மாவட்டங்கள் மற்றும் சமூக குழுக்கள் முழுவதும் வளர்ச்சி குன்றலில் மாறுபாடு

வளர்ச்சி குன்றிய தன்மை நிகழ்வுகளில் துணை தேசிய மாறுபாட்டை நாம் ஆராயும்போது, பிராந்திய மற்றும் சமூக குழு மாறுபாடுகளைக் காண்கிறோம். 2015-2016-க்கான தேசிய குடும்பம் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் மதிப்பீடுகளை நாங்கள் வழங்குகிறோம் (NFHS-4).

அட்டவணை 1 வளர்ச்சி குன்றியதன்மை நிகழ்வுகள் வாரியாக சமூக குழு வாரியாக மாவட்டங்களின்  வளர்ச்சி குன்றியதன்மை எண்ணிக்கை மற்றும் பங்கை  காட்டுகிறது. இவை படம் 2-ம் காட்டப்பட்டுள்ளன. இது வண்ண-குறியிடப்பட்ட வெப்ப வரைபடங்களை மாவட்ட மற்றும் சமூக குழுக்களின் சராசரி விகிதத்தின் இடஞ்சார்ந்து ஏற்படுவதை காட்டுகிறது. அங்கு மெல்லிய கருப்பு கோடுகள் மாவட்ட எல்லைகளையும் மற்றும் அடர்த்தியான கருப்பு கோடுகள் மாநில எல்லைகளையும் மற்றும் நிறத்தின் அடர்த்தி வளர்ச்சி குன்றிய தன்மையின் பரவல் அதிகரித்து வருவதையும் குறிக்கிறது.

அட்டவணை 1 SC-ST குழந்தைகளுக்கு, 15 மாவட்டங்களில் (2.65%), வளர்ச்சி குன்றிய தன்மையின் சராசரி நிகழ்வு 0 முதல் 20% வரை உள்ளது; 90 மாவட்டங்களில் (15.93%) இது 20-க்கும் அதிகமாகவும் 30%-க்கு சமமாகவும் அல்லது குறைவாக உள்ளது; 171 மாவட்டங்களில் (30.27%) இது 30-க்கும் அதிகமாகவும், 40%-க்கும் குறைவாகவும் உள்ளது; 157 மாவட்டங்களில் (27.79%), இது 40-க்கும் அதிகமாகவும், 50%-க்கும் சமமாகவும் அல்லது குறைவாகவும் உள்ளது; மற்றும் 132 மாவட்டங்களில் (23.36%), இது 50%-க்கும் அதிகமாக உள்ளது. பிற சமூகக் குழுக்களுக்கு வளர்ச்சி குன்றியத் தன்மை அடுக்கு வீதத்தில் இடஞ்சார்ந்த மாறுபாட்டைக் காட்டும் மாவட்டங்களின் தொடர்புடைய எண் மற்றும் பங்கை அட்டவணை 1-ல் காணலாம்.

தொகுப்பாக, 40%-க்கும் அதிகமாக வளர்ச்சி குன்றும் தன்மை (அதாவது மிக அதிகமாக)  உள்ள மாவட்டங்களின் விகிதாச்சாரம் UC இந்துக்களுக்கு 15%; OBC-களுக்கு 37%; SC-ST-க்கு 51% மற்றும் UC முஸ்லீம்களுக்கு 57% ஆகும்.

படம் – 2

படம் 2, பிராந்திய வடிவங்களின் அடிப்படையில், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் எஸ்.சி-எஸ்.டி அதிகமாக உள்ள பகுதிகளில் மிகவும் தெளிவான வடிவத்தைக் காட்டுகிறது. வடக்கு மற்றும் மத்திய சமவெளிகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இன்னும் குறிப்பாக, BIMARU பிராந்தியத்தில் உள்ள SC-ST குழந்தைகளுக்கு, 195 அல்லது 84% மாவட்டங்களில், வளர்ச்சிகுன்றல் பாதிப்பு 40%-க்கும் அதிகமாக உள்ளது; மேலும் 105 அல்லது 44.49% மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்.

BIMARU பகுதி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டது; அனைத்து சாதி குழுக்களிலும் இத்தகைய தீவிர நிலை தடுமாற்றம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் சாதி குழுக்களில் உள்ள வேறுபாடுகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. ஆதிக்க சாதியினருக்கு, பிமாரு பிராந்தியத்தில், 38(16) சதவிகித மாவட்டங்களில் மட்டும், 40(50) சதவிகிதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி குன்றல் பாதிப்பு உள்ளது.

ஓபிசி மற்றும் ஆதிக்க சாதி முஸ்லீம்களுக்கு, பிமாரு பிராந்தியத்தில், முறையே 61% மற்றும் 71% மாவட்டங்களில் வளர்ச்சி குன்றும் பாதிப்பு 40%-க்கும் அதிகமாக உள்ளது.

சமூக குழுக்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான இடைவெளிகளுக்கு வடிவம் கொடுப்பது என்ன?

சாதி இடைவெளிகளாக நாங்கள் வகைப்படுத்துவது வெறுமனே சமூக-பொருளாதார  கூறுகளில் உள்ள வேறுபாடுகள்தானா என்று பல வாசகர்கள் கேட்டனர். இது உண்மையாக இருந்தால், சூழ்நிலைகளில் உள்ள வேறுபாடுகள் சாதி குழுக்களுக்கிடையேயான குழந்தையின் வளர்ச்சி இடைவெளிகளை விளக்க வேண்டும்.

எங்கள் ஆராய்ச்சியில், இந்த காரணிகளை முதலில் ஆராய்வதன் மூலம் தொடங்குகிறோம்.

குழந்தையின் உயரத்தை பாதிக்கும் ஐந்து முக்கிய காரணிகளை நாங்கள் அடையாளம் காண்கிறோம் :

(i) சுகாதாரம் கிடைக்கப் பெறாமை முக்கியமாக இரண்டு விவகாரங்களால் மாறுபடுகிறது : கழிப்பிட வசதி இன்றி வயலிலோ புதர்களிலோ மலம் கழிக்கும் நிலை. அடுத்ததாக திறந்த வெளியில் மலம் கழிக்கும் ஒரு சூழல், அதனால் பாதிப்புக்கு ஆளாவது;
(ii) தாயின் மனித வளம், இரண்டு குறியீடுகளால் அளவிடப்படுகிறது: பள்ளியில் படித்த காலம் மற்றும் வாசிக்கும் திறன்;  இது உண்மையான சோதனை மூலம் அளவிடப்படுகிறது;
(iii) HFA Z- மதிப்பெண், உயரத்திற்கு ஏற்ற எடை (WFH) – Z மதிப்பெண் மற்றும் வயது ஆகியவற்றால் கணக்கிடப்படுகிற தாயின் மானுடவியல் நிலை;
(iv) சொத்து குறியீட்டு காரணி மதிப்பெண்ணால் அளவிடப்படுகின்ற சொத்து வேறுபாடுகள்; மற்றும்
(v) வீட்டு சொத்தில் பாகம் ஒதுக்கீடு மற்றும் கருவுறுதல் முடிவுகள், பிறப்பு வரிசை மற்றும் உடன்பிறப்புக்களின்  எண்ணிக்கை  ஆகியவற்றால்  நடக்கக்கூடியது.

படம் – 3

குழந்தைகளின் உயரத்தை பாதிக்கும் உப வேறுபாடுகளை பெரிய குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் காண்கிறோம். குறிப்பாக ஆதிக்கசாதி  இந்துக்களுக்கும் SC-ST-க்கும் இடையில் வேறுபாடுகளை காண்கிறோம். 23% ஆதிக்கசாதி இந்துக்களுடன் ஒப்பிடும்போது ஒரு சிலரை முதன்மைபடுத்தி முன்னிறுத்த, 58% எஸ்சி-எஸ்டி குடும்பங்கள் கழிப்பறை வசதி கிடைக்கப்பெறாமல் ஒரு புதர் அல்லது வயலில் திறந்தவெளியில் மலம் கழிக்க தள்ளப்படுகின்றன; யூசி-ஹிந்துக்களுக்கு தாய்வழி கல்வியறிவு 83%, SC-ST-க்கு 51%; எஸ்சி-எஸ்டி தாய்மார்கள் 5.26 ஆண்டுகள் பள்ளிப் படிப்புடன் ஒப்பிடுகையில் யுசி-ஹிந்து தாய்மார்களுக்கு 9.47; மற்றும் SC-ST தாய்மார்களின்  HFA Z-மதிப்பெண் -2.15 உடன் ஒப்பிடும்போது, UC – இந்து தாய்மார்களின் சராசரி HFA Z – மதிப்பெண் – 1.82 ஆக உள்ளது.

வளரும் சூழ்நிலைகள் தலித் மற்றும் ஆதிவாசி (SC-ST) குழந்தைகளுக்கு மிகவும் பாதகமானவையாக இருக்க, ஆதிக்க சாதி மற்றும் தலித் குழந்தைகள் வளரும் சூழலில் தெளிவாக பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. சமூக-பொருளாதார  கூறுகளில் உள்ள இந்த வேறுபாடுகள் சமூக குழுக்களுக்கிடையேயான குழந்தையின் உயர இடைவெளியை விளக்குகிறதா?

ஒத்ததை ஒத்ததுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒரு வழிமுறையான எண்ட்ரோபி பேலன்சிங்கைப் பயன்படுத்தி, ஆதிக்க சாதி மற்றும் தலித் குழந்தைகளின் “பொருந்திய” மாதிரிகளில் வளர்ச்சி குன்றியதன்மையில் உள்ள வேறுபாடுகளை நாங்கள் ஆராய்கிறோம். அதாவது பல்வேறு பெரிய பரிணாமங்கள் நெடுக தங்களுடைய அரசியல் பொருளாதார பண்பு கூறுகள் பொருந்துகின்ற குழந்தைகள். BIMARU மாநிலங்களில் எங்கள் பொருந்திய மாதிரியில், SC-ST மற்றும் OBC குழந்தைகள் மேல்-சாதி குழந்தைகளை விட வளர்ச்சி குன்றி இருப்பதைக் காண்கிறோம். தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகளிடையே அதிக வளர்ச்சி குன்றியிருப்பது ஒப்பீட்டளவில் அவர்களின் மிகவும் பின்தங்கிய சூழ்நிலைகளால் மட்டுமல்ல என்று இது அறிவுறுத்துகிறது.

யூசி மற்றும் தலித் (எஸ்சி) குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளிகள் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப்படுவதாக நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது சட்டவிரோதமான ஆனால், பரவலான தீண்டாமை நடைமுறையில் வெளிப்படுகிறது. தீண்டாமையின் சுய-அறிக்கை நடைமுறை அதிகமாக உள்ள மாவட்டங்களில் தலித் குழந்தைகளின் உயரம் குறைபாடு அதிகரிக்கிறது. தீண்டாமை மற்றும் குழந்தை உயரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை மதிப்பிடுவதற்கு இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பின் (IHDS 2012) தரவை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

படிக்க :
♦ NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்
♦ சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்

தீண்டாமை நடைமுறையில் உள்ள பகுதிகளில் தலித் குழந்தைகளின் HFA Z-மதிப்பெண் கடுமையாக குறைகிறது என்பதை படம் 3 காட்டுகிறது. மாறாக, உயரம்/நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு நிலைகளுக்கும், தீண்டாமையை எதிர்கொள்ளும் குடும்பங்களின் விகிதாச்சாரத்திற்கும், ஆதிக்க சாதி குழந்தைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை.

மேலும், குழந்தை முன்னேற்றத்தின் முழுப் பாதையிலும் உள்ள தீண்டாமை நடைமுறையின் தாக்கத்தையும் நாங்கள் ஆராய்கிறோம். எங்களது முடிவுகள், தீண்டாமை கடைபிடிக்கும் குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதிகள்தான் தாழ்த்தப்பட்ட சமூக  தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் முழு அளவிலான பிரசவ கால மற்றும் பிரசவத்திற்கு  பிந்தய சுகாதார வசதிகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ வாய்ப்பில்லாத பகுதிகளாக உள்ளன.

முடிவுரை

குழந்தை உயரத்தில் சாதிய இடைவெளிகள் (யாரும் குறித்து சொல்லவில்லை) முற்றிலும் வர்க்கம் அல்லது சமூக பொருளாதார நிலைகளின் ஒரு பிரதிபலிப்பு இல்லை என்று எங்களது ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. சாதிய குழுக்கள் குழந்தைகளின் உயரத்தை நிர்ணயிக்கிற விரிவான மாறிகளின் தொகுப்பில் வேறுபடுகையில், அதே கோவாரியட்டுகளின் சமநிலையில் இருக்கும் மாதிரிகளை ஒப்பிடும்போதும் கணிசமான இடைவெளிகள் இருப்பதை நாங்கள் காட்டுகிறோம்.

ஆதிக்க மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (தலித்) குழந்தைகளுக்கிடையிலான உயர இடைவெளியோடு தீண்டாமை நடைமுறை தொடர்புடையது என்பதை ஆதாரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, தீண்டாமை நடைமுறையில் உள்ள வேறுபாடு ஆதிக்கசாதி குழந்தைகளின் உயரத்தை பாதிப்பதில்லை.

ஆனால், தீண்டாமை தொடர்பான நடைமுறைகள் அதிகமாக பரவுவது தலித் குழந்தைகளின் குறைந்த உயரத்துடன் தொடர்புடையது. முடிவுகள், இன்னும் கூடுதலாக, தாழ்தப்பட்ட சாதிய குழுக்களில் இருந்து வரும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சேவை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரபட்சமான நடைமுறைகளுக்கான பங்கை குறிப்பிடுகிறது. இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

குறிப்பு: இக்கட்டுரை பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்வு மையத்திற்காக (CEDA) எழுதப்பட்ட தரவு விவரணையை அடிப்படையாகக் கொண்டது. CEDA  வெளியிடப்பட்ட பிறகு வாசகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு உரையாற்ற அசல் பகுதி மாற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு : அஷ்வினி தேஷ்பாண்டே அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார். ராஜேஷ் ராமச்சந்திரன் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர்.


கட்டுரையாளர் : அஷ்வினி தேஷ்பாண்டே
தமிழாக்கம் : முத்துக்குமார்
செய்தி ஆதாரம் : The Wire